துவம்சம்” அல்லது நினைவறா நாள்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

மா.சித்திவினாயகம்


KUMUTHINI-குமுதினி
சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம் நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து 15-05-2008 இன்றுடன் 23 வருடங்களாகின்றன. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு கிடப்பிலே போடப்பட்டிருக்கும் இக்கோர மரணங்களின் மர்மங்களை இன்னமும் உலகம் கண்டு கொள்ளவில்லை. மனதை விட்டகலாத் துயரோடு எம் மண்ணின் மலர்களுக்கு கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்.

துவம்சம்” அல்லது நினைவறா நாள்.
( 15-05-1985 )

குமுதினி ………
இந்தப் பெயரை,
உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட
துக்கத்தால் ஒரு கணம்
ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!!

காகம் கத்தித் துயிலெழும் – என்
இனிய தீவினை ……..
பட்டணத்தோடு இணைத்த
பாலம் அவள்!

அவள் மடிமீது ஏறிய பின்புதான்,
எங்களின் பனாட்டும், பாயும்…….
ஓலையும், ஒடியலும் ………
பண நோட்டுக்களாக மாறின !!

பிரபஞ்ச உருண்டைக்குள் தான்,
எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும்
அந்தப் பாவைமீது காலை வைத்த – பின்புதான்
நாம் கண்டுணர முடிந்தது !!!

ஆயிரம் பேதம் சொல்லி,
பனம்கிழங்குக் கூறுகளாய்……..
கிழிபட்டுக் கிடந்த என் மக்களை
“மனிதமே, நேயமென்று”
தன் மடிமீது சுமந்து ……
பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய
புண்ணியவதி அவள் !

பலனை எதிர்பாராமல்,
கடமையை மட்டும் செய்த
கீதை படிக்காத கோதை !

என் கையில் சுமந்த புத்தகங்கள் …..
காலில் நசிபடும் செருப்பு ……..
தீபாவளிப் புத்தாடை …..
பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை …….
அப்புவையும்,ஆச்சியையும்,
கிடத்திவைத்த சவப்பெட்டிகள் …….
எல்லாமே …… எல்லாமே ……….
அவள் சுமந்தவை !

கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும்
கல்தாக் கொடுத்துவிட்டுக்
கடும் வேகக் கப்பலாய் – என்
துறைமுகத்தில் மிதந்த அழகுராணி !

புள்ளிமானாய் துள்ளிக் குதித்து – அவள்
ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது …….
மலைபோல் உயரும் அலைகளும் – அவளிடம்
கைகட்டிப் பணிந்து,
மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !!

அதிகாலையின் பனிச்சிதறலோடு ……
அன்றும் அவள் – தன் அரும்புத்திரர்களோடு
புறப்பட்டுப் போனாள் !!

பிரளயம் என்பதை அறியா – அவளையே
பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !!

வெடித்து வீசியெறிந்த பட்டாசுத்
துண்டுகளாய் ……….
காலறுபட்டு ……..கையறுபட்டு ……..
துடிக்கத் துடிக்க ………
அவ்ள் மடியில் உயிர் போன,
என்னுயிர்த் தங்கைகளின்
அழகான கனவுகள் பற்றி …….
இன்னமும் ……. அவர்கள் ……..
வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி …….
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி
கணப்பொழுதில் கருவுடனேயே ……..
சிதையில் எரிந்த என் நண்பனின்,
மனைவி பற்றி ……..
பதைக்கப்,பதைக்க
கொலையுண்டு கிடந்த
பச்சை மழலை பற்றி …..

மரணிக்கும் போதும்,
எதிரியிடம் மண்டியிடாது
உயிர் விட்ட என்னூர்- வீர
அன்னைகள் பற்றி ……
என்னினிய உணர்வில்
தமிழைக் கலந்து,
தன்னுயிரைக் கூலிப்படைக்கு
காவு கொடுத்திட்ட
தமிழாசிரியன் பற்றி …….
எவரைப்பற்றி …….
எவரைப்பற்றி ……..
நான் புலம்பி அழ ?????

வெல்லை, பெருந்துறை …….
குடவிலி, குவிந்தா …….
எத்திசை நோக்கினும்
எங்கும் அழுகுரல் !!

கீழ்த்திசையிருந்து ……..
பெருந்துறையீறாய்………
ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.

என்னூர்க் கொண்டைச் சேவலும்,
காக்கையும், கூட மார்பில்
அடித்த மரண நாளது !!

வீகாமனும்,வெடியரசனும்,
ஆண்ட திருத்தீவு
விம்மல்களால் நிறைந்த நாளது !

பூதத்தைக் கொண்டு பொழிந்த – கிணறுகளில்
நன்னமுத நன்னீர் குடித்த – மனிதர்களின்
கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .

இந்து மாக்கன்னியின்,
பொட்டெனப் போற்றிடும் …….
நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி – கேவலம்
காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ??

ஈழதேசத்து மூளையாய்த் திகழும் – அழகிய
தமிழின் இலக்கணத்தீவு ……..
அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???

கூவியெழும் அலைகளின் கூக்குரல் – இக்
காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.
மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !!
மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள்.

ஆழ்கடலிருந்து …..
அலைகடலின் மடியிருந்து ……
வெட்டத் தளைக்கும் மரங்களாய் …..-நீங்கள்
விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!!


elamraji@yahoo.ca

Series Navigation

மா.சித்திவினாயகம்

மா.சித்திவினாயகம்