துறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

மது


====

அழகிய சிறு கிராமம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் நிரம்பி வழிகிறது. பாதிரிப் பயிற்சி முடித்த இளம் பாதிரி அமாரோ தேவாலயத்தில் பணியாற்ற வருகிறான். வந்து சேர்ந்த சில தினங்களுக்குள் அங்குள்ள தலைமைப் பாதிரியைப் பற்றித் தெரிந்துகொள்கிறான். தலைமைப் பாதிர,ி அவ்வூரில் சிற்றுண்டி நடத்திக் கொண்டிருக்கும் ஒரு விதவையை வைத்துக் கொண்டிருக்கிறார், போதை மருந்து வியாபாரிகளிடம் நட்பு பாராட்டுகிறார், நேர்மையாக நடக்க நினைக்கும் மற்ற பாதிரியாரை கவிழ்க்கப் பார்க்கிறார்.

கிராமத்திற்கு வந்த சிறிது நாட்களுக்குள்ளே இளம் பாதிரிக்கு ஒரு பெண்ணுடன் (சிற்றுண்டி விடுதி விதவையின் பெண்) ஆழ்ந்த காதல் ஏற்பட்டு விடுகிறது. காதல் காமமாகிறது. காமக்காதல் தொடர்கிறது. தன் முன்னேற்றத்தில் குறுக்கே நிற்பதால், காதலை வெளியே சொல்ல முடியாத நிலை. காதல், காமம், சுய முன்னேற்றம், தன் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய சில சூதுகள் எல்லாவற்றிற்குமிடையே இழுபடுகிறான் அமாரோ. .

பெரிய பாதிரி செய்வதை கண்டு கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதா ? பெரிய பாதிரியை பகைத்துக் கொண்டு தன்னுடைய தொழிலுக்கு உலைவைத்துக் கொள்வதா ? பெரிய பாதிரிக்கு துணை நின்று தன் எதிர்காலத்தை வளப் படுத்திக் கொள்வதா ? தன் காதல் சரியா ? காமம் சரியா ? – அமாரொவிற்குள் எழும் குழப்பமான எண்ணங்கள். அமாரோ எடுக்கும் முடிவுகளை நியாயப்படுத்தாமல் மிக அழகாக காட்டியிருக்கிறது ‘பாதிரி அமாரோவின் குற்றம் ‘ (The Crime of Padre Amaro – 2002). அமாரோவாக தன் மிகைப் படுத்ததாத நடிப்பால் நம்மைக் கவர்கிறார் கைல் கார்ஸியா பெர்னால் (Gael Garcia Bernal). பெர்னால் மெக்ஸிக சினிமாவின் குறிப்பிடத் தகுந்த முக்கிய நடிகர்.

புதிதாக எந்தவொரு தொழிலுக்கும் வரும் இளைஞர்களிடம் ஒரு வேகம் காணப்படும். தன்னால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என்ற தீவிர தன்னம்பிக்கை இருக்கும். அல்லதை அழித்து நல்லதை நிலை நாட்டுவதே தன் கடமை என்ற உத்வேகம் இருக்கும். (இங்கு நிறுத்திவிட்டால் – நூறு பேரை தனியாளாக அடிக்கும் மசாலாப் படம்). கால ஒட்டத்தில், பெரும்பாலான இளைஞர்கள் சமுதாயத்தோடு சமரசம் செய்து கொண்டு விடுகிறார்கள்.சமரசம் செய்து கொள்ளாதவர்களைப் பார்த்து ஒருவிதப் பொறாமைப் பட்டு, தங்கள் சமரசப்பட்ட வாழ்க்கையைத் தொடருகிறார்கள். இப்படி சமரசம் செய்து கொண்ட இளைஞனை நன்றாக படம் பிடித்துக் காட்டுகிறது ‘பாதிரி அமாரோவின் குற்றம் ‘.

பெரிய பாதிரியின் கதாபாத்திரமும் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். சிற்றுண்டி விடுதி விதவையுடன் வைத்திருக்கும் குற்ற உணர்ச்சி அவரை அரிக்கிறது, நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்தப் படும் போதை மருந்துப் பணம் நல்ல பணமாகப் படுகிறது, தன் சீடனை கண்டிக்க முடியாத நிலைமை. பாதிரியாக நடிக்கும் சான்சொ க்ராசியாவிடம் (Sancho Gracia) சிறந்த நடிப்பை காண முடிகிறது.

நான் பார்த்த மெக்ஸிக திரைப்படங்களில் காணப்படும் ஒரு முக்கிய அம்சம், திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பார்வையாளரிடம் ஒரு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. படத்தின் கதாநாயகனிலிருந்து ஒரிரு காட்சிகளே தோன்றும் மன வளர்ச்சி குன்றிய இளம் பெண் வரை எல்லா கதாபாத்திரங்களும் நம்முள் ஒரு பதிவை ஏற்படுத்துகின்றன.

கத்தோலிக்க பாதிரியார்களைச் சுற்றிய கதை, படம் வந்த புதிதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சில வசனங்களும் மிகச் சூடாக இருக்கிறது, குறிப்பாக தன் காம உணர்ச்சிகளுக்காக கதாநாயகி இளம் பாதிரியிடம் பாவ மன்னிப்பு கேட்கும் காட்சி தெய்வக்குற்றம் (blasphemy) என்று கருதப்பட்டிருக்கலாம்.

நிஜ வாழ்க்கையில் உண்மையான வில்லன்கள் இல்லை – கதாநாயகர்களும் இல்லை. மிகைப் படுத்தப்பட்ட குணாதிசயங்களையே திரைப் படங்களில்

கதாநாயகர்களாகவும் வில்லன்களாகவும் பெரும்பான்மையான திரைப்படங்களில் கண்டு மகிழ்கிறோம். மிகக் குறைந்த திரைப்படங்களே கடவுளும் மிருகமும்

கலந்த கலவைகளே நாம் என்பதை தெளிவாகக் காண்பிக்கின்றன. அப்படிப்பட்ட படங்களுள் ‘பாதிரி அமாரோவின் குற்றமு ‘ம் ஒன்று.

****

அழகிய பெரு ஏரி.

ஏரியின் நடுவே சிறிய புத்த மடம். புத்த பிட்சுவிடம் ஒரு இளம் குழந்தை வளர்கிறது. வெளி உலகக் கலப்படமில்லாமல் வளரும் இயற்கையான வளர்ச்சி. தாவரங்களும், சிறு மிருகங்களும், நீர் நிலையும், மலையும் நண்பர்கள். பயமறியாத வளர்ச்சி. குருவிடமிருந்து மூலிகை மருந்து தயாரித்தலிலிருந்து கொல்லாமை வரை செயல்முறைப் பாடங்கள்.

குழந்தை இளைஞனாகிறான். புணரும் பாம்புகள் பரபரப்பேற்றும் பருவம். வியாதிக்காக சிகிச்சை பெற மடத்திற்கு வருகிறாள் ஒர் இளம் பெண். இயற்கை தன் வேலையைச் செய்கிறது. காதல் காமமாகிறது. இளம் பெண் குணமாகிறாள். காதலியியைப் பிரிய மனமில்லாத சீடன் குருவைப் பிரிகிறான். கொலை செய்கிறான். தண்டனையை அனுபவிக்கிறான். திரும்பி வருகிறான். குருவாகிறான். ஒரு குழந்தையை சீடனாகப் பெருகிறான்.

ஒரு ஜென் கவிதையைப் போல் படமாக்கப் பட்டிருக்கிறது ‘வசந்தம், கோடை, இலையுதிர், குளிர்…வசந்தம் ‘ (Spring, Summer, Fall, Winter….and Spring – 2003). ஒவ்வொரு பருவமாக குழந்தை வளர்ந்து மறுபடி குழந்தையாக மாறுவது ‘புனரபி ஜனனம் புனரபி மரணத் ‘தை நினைவு படுத்துகிறது. குறைந்த அளவிலான ஆனால் ஆழமான வசனங்கள் – ‘….இந்த கல்லை முதுகிலிருந்து இறக்கி வைத்து விட்டாலும், இறக்கும் வரை சுமந்து கொண்டிருப்பாய் ‘, ‘….படகு நழுவுகிறது ‘, (சீடன் கையும் களவுமாக பிடிபட்டவுடன், குரு இளம் பெண்ணிடம்) ‘….உடம்பு சரியாகிவிட்டதா ? ‘ – ‘சரியாகிவிட்டது ‘ – ‘அப்போது அதுதான் (உடலுறவு) சரியான மருந்து, இனி நீ கிளம்பலாம் ‘, ‘காமம் கையகப் படுத்துவதற்கு வழி வகுக்கிறது, கையகப் படுத்துதல் கொலையுணர்ச்சிக்கு வித்தாகிறது ‘.

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு தங்கத்தால் கண் செய்து போடலாம். ஏரி, படகு, பூனை, பனி, மேகம், அருவி, மீன் என தன் கருவியில் பட்ட எல்லாவற்றையும் கதையின் பாத்திரங்களாக்கியிருக்கிறார். ஒளியாலும் தத்துவம் சொல்ல முயன்றிருக்கிறார்.

ஒரு அமைதியான் ஜென் அனுபவம் ‘வசந்தம், கோடை, இலையுதிர், குளிர்…வசந்தம் ‘.

****

இரு படங்களுமே, இயற்கை உணர்வுகளால் உந்தப்பட்டு (துறவிகளுக்கென்று வகுக்கப்பட்ட) நெறி தவறி ‘குற்றம் ‘ புரியும் துறவிகளைப் பற்றியது. குற்றங்கள் யாருடையவை – துறவியின் குற்றமா ? துறவின் குற்றமா ?

—-

tamilmaadhoo@yahoo.com

Series Navigation

மது

மது