தீவிரவாதத்திற்கான தீர்வு!

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

இப்னு பஷீர்இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம் மார்க்கமோ பிற முஸ்லிம்களோ எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும், அவ்வாறு தவறான வழியில் செல்பவர்களை நேர்வழிப் படுத்தும் பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறதா, இல்லையா? இந்தப் பொறுப்பை அவர்கள் எவ்வழியில் நிறைவேற்ற இயலும்?
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமுதாயத்தவர் எதிர்நோக்கும் கேள்விதான் இது! இக்கேள்விக்கு விடை காண முற்படுமுன், இப்பிரச்னையின் மூல காரணிகளையும் அவற்றின் பிண்ணனியைப் பற்றியும் சிறிது ஞாபகப் படுத்திக் கொள்வது அவசியமாகிறது.

2001 செப்டம்பர் 11-க்கு முன் ஒசாமா பின்லேடன் என்ற சவுதி அரேபியரைப் பற்றி உலக முஸ்லிம்களிலேயே பெரும்பான்மையினர் அறிந்திருக்கவில்லை. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே இவரைக் குறிப்பிட்டு அமெரிக்கா குற்றம் சுமத்தியபோதுதான் இவரது பெயரை முழு உலகமும் அறிந்தது. ஆனால் இந்நிகழ்வுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவரை நன்கு அறிந்து, இவரது நடவடிக்கைகளை கண்காணித்து, ஊக்கமூட்டி, நிதி உதவி செய்து, ரஷ்யாவிற்கு எதிராக கொம்புசீவி இவரை வளர்த்து விட்டது, வேறு யாருமல்ல, அதே அமெரிக்காதான். அவர்கள் ‘வளர்த்த கடா’ தான் அவர்கள் மார்பை பதம் பார்த்தது.

இத்தாக்குதல் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும், ‘அமெரிக்க அரசு வேண்டு மென்றே தாக்குதல் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்தது’ என்று முகத்தில் அறைந்தாற் போல் சொல்கிறது ‘Confronting the Evidences’ என்ற டாக்குமென்ட்டரி படம். இந்தப் படத்தை தயாரித்து, ‘வலி நிறைந்த கேள்விகள் – செப்டம்பர் 11 தாக்குதல் – ஓர் ஆய்வு’ (Painful Questions: An analysis of the September 11th Attack) என்கிற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டவர் எரிக் ஹஃப்ஸ்மித் (Eric Hufschmid) என்கிற அமெரிக்க புலனாய்வுச் செய்தியாளர்.

ஒசாமா பின்லாடனை அரசியல் காரணங்களுக்காக ஒரு போராளியாக வளர்த்து விட்ட அமெரிக்காதான், அவர் தங்களையே திருப்பி தாக்கியதும் அவரை ஒரு பயங்கரவாதியாக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. அதன் பிறகு நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும்தான் உலக முஸ்லிம் சமுதாயத்தின் மீது இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாக இருக்கும். செப்-11 தாக்குதலுக்கு முன்பு வரை பெரும்பான்மை முஸ்லிம்களால் யாரென்றே அறியப்பட்டிராத ஒசாமா, ஏதோ உலக முஸ்லிம்களின் தலைவர் போலவும், அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பிரதிநிதி போலவும், உலக முஸ்லிம்கள் அனைவரின் நலனை பாதுகாப்பதற்காகவே அவர் இந்த தாக்குதலை நடத்தியது போலவும் ஊடகங்களில் சித்தரிக்கப் பட்டார். அந்தத் தாக்குதல், அமெரிக்காவின் முந்தைய அரசியல் செயல்பாடுகளின் பின்விளைவுதான் என்ற உண்மை மறைக்கப்பட்டு, ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற சொல்லாடலின் மூலம் அனைத்திற்கும் காரணம் இஸ்லாம் தான் என்ற மாயை உருவாக்கப் பட்டது. உலகெங்கிலும் முஸ்லிம்கள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப் பட்டனர். முஸ்லிம்கள் மீதான தேவையற்ற அச்சமும், வெறுப்புணர்வும், துவேஷமும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் தூபமிட்டு வளர்க்கப் பட்டன. ஊடகங்களும் இதற்கு பெருமளவில் துணை புரிந்தன. யார் யாருடைய சதிச் செயலுக்காகவோ இஸ்லாம் மார்க்கமும் உலக முஸ்லிம் சமுதாயமும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப் பட்டனர். சுருக்கமாக சொல்வதென்றால், இஸ்லாமோஃபோபியா முழுவீச்சில் பெருகியது.

இந்த நிகழ்வுகளால் உலகெங்கிலும் அப்பாவி முஸ்லிம்கள் அல்லல் படுவது ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் சிறிதும் பெரிதுமாக தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும் யாரும் மறுக்கவியலாது. சரி, இதற்கு தீர்வுதான் என்ன?

மிகச் சிக்கலாக வளர்ந்துவிட்ட இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, சிலர் எண்ணுவது போல இதற்கு தீர்வு காணும் பொறுப்பு இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமே உள்ள கடமை அல்ல. பல தரப்பினரின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் மட்டுமே இதை சாதிக்க முடியும். வன்முறைச் செயல்களுக்கு ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ எனப் பெயர் சூட்டி, பிரச்சினைகளுக்கான பழியை இஸ்லாம் மீது தூக்கிப் போடுவது எந்த வித தீர்வையும் தராது என்பதோடு, அத்தகைய அணுகுமுறை மேலும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு மதச்சாயம் பூசுவதை நிறுத்தி அவற்றின் உண்மைக் காரணங்களை பாரபட்சமின்றி அலசி ஆராய்ந்து தீர்வு காண முயலுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

வித்தியாசமானதொரு அணுகுமுறையைக் கையாண்டு யெமன் நாடு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. ஒசாமா பின்லாடனின் மூதாதையர்களின் நாடான இது, பல ஆண்டுகளாகவே தீவிரவாதத்தின் மற்றொரு பெயராக இருந்தது. தீவிரவாதிகளின் தலைமையகமாக இந்நாடு உருவாகக் கூடிய அறிகுறிகள் இருந்தன. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

நீதிபதி ஹிதார் என்பவரது தலைமையில் இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு, தீவிரவாத செயல்களில் பங்கு பெற்று சிறையிலிருந்த இளைஞர்களை சந்தித்தது. “உங்கள் கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் குர்ஆனிலிருந்து நீங்கள் ஆதாரம் காட்டுவீர்களெனில், உங்களது போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம். அப்படி இல்லாமல், நாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை நாங்கள் ஆதாரபூர்வமான நிரூபித்து விட்டால், நீங்கள் அனைவரும் வன்முறையை விட்டொழித்து விட வேண்டும்” என ஒரு ஒப்பந்தம் வைத்துக் கொண்டு, அவர்களுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியது இக்குழு.

இரண்டு வருடங்கள் கழித்து, இரு தரப்பினருக்குமே வெற்றி கிடைத்தது. ஆம்.. நீதிபதி ஹிதார் குழுவினர் முன்வைத்த கருத்துக்களை ஒப்புக் கொண்டதன் வாயிலாக 364 இளைஞர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டு நேர்வழிக்கு திரும்பினர். “டிசம்பர் 2002-க்கு பிறகு இங்கு எந்த தீவிரவாத சம்பவங்களும் நடக்கவில்லை.” என்கிறார் நீதிபதி ஹிதார். இவர்களில் யாருமே சண்டையிடுவதற்காக வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை என்றும் அவர் அறிவிக்கிறார்.

யெமன் நாட்டின் இந்த அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், மார்க்கம் குறித்த தவறான புரிதல்கள் மற்றும் தவறான வழிகாட்டுதல்களால் வன்முறைப் பாதையில் பயணிக்கும் இளைஞர்களை, பொறுப்புணர்வுள்ள மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை கொண்டு நேர்வழிக்கு திருப்பிவிட முடியும் என்பதுதான்.

இந்தியா போன்ற நாடுகளிலுள்ள முஸ்லிம்கள், தம் இளைய சமுதாயத்தினரின் மனதில் தீவிரவாத எண்ணங்கள் தலைதூக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கித்தர வேண்டிய பொறுப்பு அந்தந்த நாட்டு பெரும்பான்மை சமுதாயத்தினருக்கு இருக்கிறது.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் தீயச் செயல்களில் ஈடுபடுகிறான் என்றால் அவனைத் திருத்தும் நடவடிக்கைகளில் அந்தக் குடும்பத்தினருக்கு அவர்களின் அக்கம்பக்கத்தவரும் உதவ வேண்டும். மாறாக, அந்த ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து, அந்த இளைஞனின் செயல்களுக்காக அவனது குடும்பம் முழுவதையும் குற்றம் சுமத்தி அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் என்றால் பிரச்சினைக்கு எந்த வித தீர்வும் ஏற்படாது. இக்குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராட முற்படுவார்களேயல்லாது, தம் குடும்பத்து இளைஞனை நேர்வழிப்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்த இயலாமல் போகும்.

சிறுபான்மை முஸ்லிம்கள் தம் சமுதாய இளைஞர்களில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதை தடுத்து அவர்களை நேர்வழிக்கு சொண்டு வரும் முயற்சியில் பெரும்பான்மைச் சமுதாயம் தமது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிரிவினை சக்திகள் அடையாளம் காணப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையினரின் புரிந்துணர்வுடனான பங்களிப்பு இருந்தால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் தமது பங்கை சரிவர நிறைவேற்ற முடியும்.

இத்தகைய நல்லிணக்கமான சூழலை உருவாக்குவதில், அரசாங்கத்தின் பங்கும் இன்றியமையாதது. அரசாங்கம் இதில் எவ்வாறு பங்காற்றலாம் என்பதற்கு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் ரவிசங்கர் சுக்லாவிற்கு 20 மார்ச் 1954-ல் எழுதிய இக்கடிதம் விளக்கமளிக்கிறது.

என் அன்பான சுக்லாஜி,

மத்தியப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் நடவடிக்கைகள் குறித்து நீங்கள் எழுதியுள்ள ஜனவரி 27 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. உடனடியாக பதில் எழுதாமைக்கு வருந்துகிறேன்.

இந்திய முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு விதமான போக்குகள் இருக்கின்றன. அவற்றில் சில கண்டிக்கத் தக்கவையாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. எனினும் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது என நான் நினைக்கிறேன். பலதரப்பட்ட சூழல்களையும் நாம் ரொம்பவும் புறவயமாக மதிப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பொதுவில் மகிழ்ச்சியற்றும் திருப்தியற்றும் இருக்கிறார்கள் என்றால் தவறு நம் தரப்பில்தானே ஒழிய அவர்கள் தரப்பில் இல்லை. எந்த ஒரு பெருங்குழுவிற்கும் இது பொருந்தும். நாட்டுப் பிரிவினையாலும் அதன் பின்விளைவுகளாலும் இந்திய முஸ்லிம்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாதான் அவர்களின் சொந்த நாடு, அவர்களின் நலன்கள் இங்குதான் உள்ளன என்கிற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவது முழுக்க முழுக்க நம்முடைய பொறுப்பு. அதை நாம் செய்யத் தவறும்போது, முஸ்லிம்கள் அவர்களின் தலைவர்கள் சிலரால் தவறாக வழி நடத்திச் செல்லப்படுகிறார்கள் என நாம் சொல்வதில் அர்த்தம் இல்லை.

இந்திய முஸ்லிம்களின் சிந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கு விரக்தி குடிகொண்டுள்ளது என்பது உண்மைதான். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பவர்களைப் பற்றி நான் பேசவில்லை. அவ்வாறு நிறையப் பேரும் இல்லை. ஆனால் பல்வேறு வழிகளில் முஸ்லிம்கள் மீது அழுத்தம் தொடர்ந்து ஏற்படுகிற மாதிரியான சூழல் இங்கு உருவாகியுள்ளது. அகில இந்திய அளவிலும், மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய இடமளிப்பது குறித்த பிரச்னை உள்ளது. கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவது குறித்த பிரச்சினை கூட உள்ளது. வணிகம் செய்வதிலும் அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. எனவே எதிர்காலம் குறித்த பாதுகாப்பின்மையை அவர்கள் உணர்வதில் வியப்பில்லை.

உருது மொழி குறித்த முஸ்லிம்களின் கோரிக்கை பற்றியும் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இது ரொம்பவும் முக்கியமான விசயம். வேறெதையும் விட முஸ்லிம்களை உளவியல் ரீதியில் பாதிக்கக் கூடிய விசயம். நமது கல்விக் கொள்கையின்படி உருது மொழியைக் கற்றுக் கொள்வதற்கான முழு வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்தித் தரவேண்டும். இப்படிச் செய்வது இந்தி மொழிக்கு எதிரானது அல்ல. தேசிய மொழி என்கிற வகையில் இந்திக்கு உறுதியான இடம் கொடுக்கப் பட்டுள்ளது. நமது நடைமுறைக் கொள்கை நாம் அறிவித்துள்ள கல்விக் கொள்கையுடன் பொருந்தாமலிருப்பதன் விளைவுதான் முஸ்லிம்கள் மனதில் ஆழமான விரக்தியுணர்வை ஏற்படுத்தியிருக்குமோ என நான் அஞ்சுகிறேன்.

இந்த நாட்டு மக்களில் முஸ்லிம்கள் ஒரு பெருந்தொகையினர் என்பதையும், அவர்களின் நல்லெண்ணத்தை நாம் எவ்வாறு பெறுவது என்பது ஒரு பெரிய பிரச்சினை என்பதையும் நாம் மறந்து விட்டது போலத் தோன்றுகிறது. பெரிய அளவில் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் எதிர்வினையைப் பொறுத்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்றுள்ள தேர்தல் ஒரு புதிய சூழலைப் பாகிஸ்தானில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் உறவுகள் மேம்படுவதற்கு வழிவகுப்பதாக அது உள்ளது. பாகிஸ்தான் மக்களின் பொதுவான உணர்வுகள் இந்தியாவுடன் நட்பு பாரட்டுவதாகவே உள்ளன. இந்தியாவில் உள்ள முஸ்லிம் குடிமக்களை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தே எல்லாம் உள்ளது.

உங்கள் உண்மையுள்ள
ஜவஹர்லால் நேரு

தீவிரவாதம் மதங்களை கடந்த ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதை கவனத்தில் கொண்டு, அதை ஒழிப்பதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வுடன் தங்கள் பங்கை செலுத்த முன்வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

http://ibnubasheer.blogsome.com/

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்