தீர்வு

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

கௌரிகிருபானந்தன்


தன்னுடைய கோபத்தையும், எரிச்சலையும் பாத்திரங்கள் மீது காட்டியபடி வேகமாக தேய்த்துக் கொண்டிருந்தாள் ராக்காயி. கணவனை நினைத்தால் அவளுக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது. இந்த வயதில், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து கொண்டு இவனுக்கு இதென்ன பாழ்புத்தி? எல்லாம் தன்னுடைய தலையெழுத்து! பாவம் ஒண்டியாக ·பாக்டரியில் கஷ்டப்படுகிறானே என்று நாலு வீடுகளில் பற்றுப் பாத்திரங்களைத் தேய்த்து, எப்படியோ வீட்டை சமாளித்துக் கொண்டு வந்தாள். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததும், ஆபரேஷன் செய்து கொண்டுவிட்டாள், மகன் வேண்டும் என்று கணவன் புலம்பிக் கொண்டிருந்த போதும்.
தான் வேலைக்கு போகும் சமயத்தில் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக தங்கையை வரவழைத்து வீட்டோடு வைத்துக் கொண்டாள். அதுதான் வினையாகிவிட்டது. தங்கையை அவனே கல்யாணம் செய்து கொள்வானாம். அதற்கு அவளை சம்மதிக்க வைக்கணுமாம். அப்படி செய்யவில்லை என்றால் தன்னை வீட்டை விட்டு துரத்தி விடுவானாம். ஒரு வாரமாக இதே சண்டைதான். அவனுக்குச் சமாதானம் சொல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள். உடலில் வலு இல்லையே தவிர, அவனை இழுத்து அறைய வேண்டும் என்ற அளவுக்கு ஆத்திரமாக இருந்தது அவளுக்கு.
கணவனுக்காக, குழந்தைகளுக்காக கடுமையாக உழைத்து வருகிறாள். இன்னும் உழைக்கவும் தயாராக இருந்தாள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். அதற்குள் நிலைமை இப்படியாகி விட்டது. எப்படி போனாலும் இழப்பு தனக்குத்தான் நேரும் போல் இருந்தது. இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால், தினமும் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டு தன்னால் வாழ முடியுமா? எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று அவனை விட்டு விட்டு போய்விட்டால்? தன் ஒருத்தியால் குழந்தைகளின் பொறுப்புகளை சமாளிக்க முடியுமா? பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்காகத்தான் இப்படிப் பேசுகிறானோ? தங்களுடைய குப்பத்தில் எல்லா ஆண்களும் பெண்டாட்டி, பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாமல் இஷ்டம் வந்தது போல் வாழ்கிறவர்கள்தான்.
போகட்டும். குழந்தைகளை அவனிடமே விட்டுவிட்டு போய் விட்டால்? குழுந்தைகளைப் பிரிந்து தன்னால் வாழ முடியுமா? நினைக்கும் போதே கண்களில் நீர் சுழன்றது. போகட்டும். அவன் கேட்டபடியே திருமணத்திற்கு சம்மதித்துவிட்டால்? உடம்பில் கம்பளிப் பூச்சி ஊருவது போல் அருவருப்பாக இருந்தது.
என்னதான் செய்வது? அவளுக்குத் தெரியாது. இதைத்தான் “லூஸ் பின்” என்பார்கள் என்று. அவள் யோசித்துக் கொண்டே இருந்தாள். பாத்திரங்களை வேகமாக தேய்த்துக் கொண்டே இருந்தாள்.
***** ***** ***** ***** ******
மனம் முழுவதும் சிடுக்கு விழுந்த நூல் கண்டு போல் குழப்பமாக இருந்தது ரமாவுக்கு. எப்படி தெளிவு காண்பது என்று புரியவில்லை. இது போன்ற பிரச்னை தனக்கு வரும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஓரிருவர் தன்னிடம் பேச்சுவாக்கில் சொன்ன போதும், கணவன் மீது இருந்த அபாரமான நம்பிகையினால் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்ட ராஜேஷ், இன்று வேறொரு பெண்ணுடன் ஊர் சுற்றுகிறான் என்ற உண்மை உறுதியாக தெரிந்துவிட்டது. இப்போ என்ன செய்வது? வாயை மூடிக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் சும்மா இருப்பதா? உண்டு இல்லை என்று அவனை உலுக்கி எடுப்பதா? குழப்பமாக இருந்தது.
“மேடம்!உங்களை மேனேஜர் வரச் சொன்னார்.” அடெண்டரின் குரலை கேட்டு இந்த உலதிற்கு மீண்டு வந்தவளாக உள்ளே போனாள் ரமா. மேனேஜரிடம் பேசி விட்டு வந்த பிறகு அவள் எண்ணங்களுக்கு ஒரு ஆதாரம் கிடைத்தாற் போல் இருந்தது.
ராக்காயிக்கு ஒரு பக்கம் பயமாகவும், இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. தான் நினைத்தது போலவே நடக்கப் போகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பிறந்த வீட்டுக்கப் போயிருந்த போது குழந்தைகளுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை தந்தையிடம் கொடுத்துவிட்டாள், தங்கைக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லி. இன்னும் பத்து நாட்களில் திருமணம். தன்னுடைய கணவனிடம் சொல்லவில்லை. தங்கைக்கு திருமணம் முடிந்து அவள் போய் விட்டால் இனி அவனால் என்ன செய்ய முடியும்? எந்த ரகளையும் இல்லாமல் தங்கையின் திருமணம் முடிந்துவிட்டால், பிறகு எப்படியாவது அவனை வழிக்குக் கொண்டு வந்து விடலாம். எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற ஆசை அவள் மனதில் துளிர் விட்டது.
அவள் அதிகமாக படிக்கவில்லை. ஆழ்ந்து யோசிக்கும் திறமையும் இல்லை, தான் தேர்ந்தெடுத்த தீர்வில் இருக்கும் குறை என்னவென்று புரிந்து கொள்வதற்கு.
பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ராஜேஷ் தபாலில் வந்த இரண்டு கடிதங்களைப் பார்த்தான். பத்து நாட்களுக்கு முன்னால் ஊருக்குப் போன ரமாவிடமிருந்து வந்த கடிதம் அதில் ஒன்று. இவ்வளவு அவசரமாக கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்துக் கொண்டே பிரித்து படிக்கத் தொடங்கினான்.
ராஜேஷ்!
உங்களுக்கு இது போன்ற கடிதம் எழுத வேண்டிய நிலைமை வரும் என்று கனவிலும் ஊகிக்கவில்லை. கண்ணெதிரில் என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு முட்டாளாக என்னை எப்படி எடை போட்டீங்க? கடந்த ஒரு வருடமாக நீங்க என்ன செய்யறீங்களோ, யாரைப் பற்றி யோசிக்கிறீங்களோ எல்லாமே எனக்குத் தெரியும். நீங்க அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் எனக்குத் தெரியும்.
மன்னிக்கணும். அந்த விஷயம் எனக்கு எந்த விதத்திலேயும் சந்தோஷத்தைத் தரவில்லை. எனக்கு டைவோர்ஸ் கொடுத்துவிட்டு அவளைத் திருமணம் செய்து கொள்வதாக சொல்லியிருந்தால், கோபம் வந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமலேயே ஒரு இளம் பெண்ணை காதல் என்ற பெயரில் புதைகுழியில் தள்ளும் ஆணை என்னால் மன்னிக்கவே முடியாது.
உங்கள் மனதில் நான் இருந்ததால், உங்கள் வாழ்க்கையிலும் நான் இருந்தேன். அவ்வளவுதானே தவிர உங்கள் மனதில் வேறு யாரோ இருக்கும் போது மனைவியாக நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
வேடிக்கையான சூழ்நிலை! இப்போ நான் என்ன செய்தாலும் நஷ்டம் எனக்குதான். பத்து வருட நம் திருமண வாழ்க்கையில் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், உங்கள் வீட்டாருடன் ஒத்துப் போவதற்காகவும் நான் என் சக்தியை, திறமைகளை செலவு செய்திருக்கிறேன். இப்போ நான் மறுபடியும் புதிய வாழ்க்கையைத் தொடங்க நினைத்தால் நான் பட்ட கஷ்டம், உழைப்பு எல்லாம் வீண்தான். போகட்டும். பழசை மறந்துவிட்டு உங்களுடன் சமாதானமாக போய் விடலாம் என்றால் அதற்கு என் தன்மானம் இடம் தரவில்லை. எப்படியோ ஒரு முடிவுக்கு வந்தேன்.
மேலிடத்தில் கேட்டு மாற்றல் வாங்கிக் கொண்டேன். குழந்தைகளை கொஞ்ச காலம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் எனக்கு அன்பு இருக்கா, இல்லை ஒரு பெண் இப்படி செய்வாளா போன்ற கேள்விகள் அனாவசியம். முதலில் எங்க அம்மா வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்தேன். ஆனால் உங்க வீட்டில் “உங்களிடமோ”, எங்கள் பெற்றோர் வீட்டிலேயோ நான் எதற்காக இருக்கணும்? தனியாக ஏன் இருக்கக் கூடாது? மனைவி, தாய் என்று இல்லாமல் சில நாட்களாவது நான் நானாக வாழணும் என்று நினைத்தேன்.
தாய் வேண்டுமா தந்தை வேண்டுமா என்று தேர்ந்தெடுக்கும் நிலைமை உருவானது குழந்தைகளின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம்தான். அது போன்ற நிலைக்கு அவர்களைத் தள்ளியது யாரென்று உங்களுக்கே தெரியும்.
நானேதோ சினிமா ஹீரோயின் போல் உங்களுக்காக தியாகம் செய்துவிட்டு போகிறேன் என்று பைத்தியக்காரத்தனமாக யோசிக்க வேண்டாம். ஒருக்கால் நீங்க திரும்பி வந்து “இன்னொரு தடவை இப்படி நடக்காது. வீட்டுக்கு வா” என்று சொன்னால் என்ன செய்வேனோ எனக்கே தெரியாது. எது எப்படி இருந்தாலும் நம் இருவருக்குமிடையே பழைய சூழ்நிலை திரும்ப வாய்ப்பு இல்லை. நீங்க என்னை சாசுவதமாக இழந்துவிட்டீர்கள்.
இப்படிக்கு,
ரமா
தலை சுற்றுவது போல் இருந்தது ராஜேஷ¤க்கு. பதற்றத்துடன் இரண்டாவது கடிதத்தைப் பிரித்தான்.
டியர் ராஜேஷ்!
உங்கள் மனைவி வந்து என்னைச் சந்தித்தாள். குற்ற உணர்வு என்னை தகித்தது. மற்றவர்களை போல் அவள் என்னைத் தூற்றவில்லை. இழிவாக பேசவில்லை.
என் கணவனை எனக்கு விட்டுக் கொடுத்துவிட்டு எங்கேயாவது போய் விடு என்று கெஞ்சவும் இல்லை. என் முகத்தில் பணத்தை விட்டெறியவும் இல்லை. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எனக்கு தெளிவு படுத்தினாள்.
இருவரும் ஒரே பெண் இனமாக இருந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம். பூனையும், குரங்கும் கதையில் வருவது போல் நீங்க பயன் அடையறீங்க. யு ஹேவ் தி பெஸ்ட் ஆ·ப் தி போத்!
நான் செய்தது தவறு என்று ரொம்ப தாமதமாக புரிந்து கொண்டேன். திருமணமான ஒரு ஆண் என்னை விரும்புவதை ஒரு காம்ப்ளிமென்டாக எடுத்துக் கொண்டேனே ஒழிய என்றாவது ஒரு நாள் எனக்கும் அந்த நிலை ஏற்படக் கூடும் என்று யோசித்துப் பார்க்கவில்லை. என்னை இப்படி புதைகுழியில் சிக்க வைத்தது உங்களுடைய தவறு என்றால், கண்களைத் திறந்து கொண்டே அதில் இறங்கியது நான் செய்த மாபெரும் தவறு. நான் வேறு வேலை தேடிக் கொண்டு போகிறேன். இந்த எமோஷனல் டிராமாவிலிருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு எனக்கு ரொம்ப நாள் தேவைப் படும். குட்லக்!
லதா
கடிதங்களில் எழுதப் பட்டிருப்பதை முழுவதுமாக புரிந்து கொள்வதற்கு ராஜேஷ¤க்கு ரொம்ப நேரம் பிடித்தது. பாவம்! பழைய சினிமாக்களில் வரும் ஹீரோயின்களைப் போல் “அவன் உன்னுடையவன்தான்” என்று மாறி மாறி பாட்டு பாடுவார்கள் என்று நினைத்தான். குறைந்த பட்சம் இந்தக் கால ஹீரோயின்களைப் போல் “கண்ணா! அவள் ராதை என்றால் நான் ருக்மிணி” என்று தன்னைப் புகழ்ந்து கொண்டு சமாதானமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி ஆளுக்கொரு முடிவை சுதந்திரமாக எடுத்து விட்டார்களே. இப்போ குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்வது? நினைக்கும் போதே அவனுக்கு நினைவு தப்பி விடும் போல் இருந்தது.

தெலுங்கு மூலம் சாரதா (ஆஸ்ட்ரேலியா)
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


email tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்