தீராக் கடன்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

நவநீ“என்னப்பா தமிழு சுகமா இருக்கியா? இப்பத்தான் வாரியா? பிள்ளகுட்டியெல்லாம் எப்படி இருக்குக?” பேருந்தை விட்டு இறங்கிய தமிழ்ச்செல்வனை, பேருந்துக்காகக் காத்திருந்த சுந்தரம் நலம் விசாரித்தார்.

“நல்லாருக்கேன் சித்தப்பு, நீங்க எப்படி இருக்கிய? குமரேசனுக்குக் கல்யாணம் ஆயிருச்சாம்ல, எனக்கு தாக்கல் சொல்லவே இல்ல, எப்படியோ நல்லபடியா முடிஞ்சதுல சந்தோசம்” தமிழ்ச்செல்வன்.

“ஆமா! முடிஞ்சிருச்சு, அந்தப்புள்ள மாசமா இருக்கு, அவகள்லாம் சந்தோசமாத்தேன் இருக்காக, நானும் ஒங்க சின்னத்தாளுந்தேன் இப்ப நடுரோட்டுக்கு வந்துட்டோம் தமிழு. சரி …ந்தா…பஸ் திரும்பிருச்சு, நான் நெறய ஒங்கிட்ட தாக்கப் பேசணும், சிவசங்கை வரைக்கும் பொய்ட்டு வந்துர்றேன்…ரெண்டு நாளைக்காவது ஊர்ல இருப்பேல்ல?”

“இருப்பேன் சித்தப்பு, நீங்க பொய்ட்டு வாங்க, பேசிக்கலாம்”

தமிழ்ச்செல்வன் அந்த ஊர் தலைவரின் முதல்பிள்ளை. சென்னையில் உயர்ந்த பதவியில் இருந்தாலும், ஒவ்வொருமுறையும் சிவகங்கைக்கு அருகிலுள்ள தன் கிராமத்துக்குச் செல்லும்போது, கிராமத்து மக்களோடு சேர்ந்து வளர்ந்த, அசல் வட்டார வழக்கு மாறாமல் பேச்சும், பழக்க வழக்கமும் மாறிவிடும். அனைவருக்குமே செல்லப்பிள்ளை. அவனும் சுந்தரத்தின் மகன் குமரேசனும் ஒரே வயது இளைஞர்கள், நண்பர்களும்கூட. ஆனால் குமரேசன் ஒரே பிள்ளை என்பதால் கிராமத்திலேயே விவசாயங்களைக் கவனிப்பதற்காக, பள்ளிப்படிப்போடு, மேற்கொண்டு படிக்கவில்லை. சமீபத்தில் திருமணமாகியிருந்ததையும், வெகுவிரைவில் தந்தையாகப்போவதையும் தமிழ்ச்செல்வன் அறிந்திருந்தான். அந்த ஊரைப்பொருத்தவரை தமிழ்ச்செல்வனின் தந்தைதான் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கக்கூடிய நல்ல மனிதர். ஒரு கட்டுக்கோப்பான கிராமம். எந்தப் பிரச்சினைக்காகவும் காவல் நிலையம் செல்வதற்கு தேவை ஏற்பட்டதில்லை. தமிழ்ச்செல்வனும் குமரேசனும் வேறு வேறு சாதியினர் என்றாலும் அனைவரும் மாமன், மச்சான், சித்தப்பு என்று முறை வைத்துப் பழகும் கிராமத்திற்கே உரிய பாசப்பிணைப்பு இன்றுவரை நடைமுறையில் உள்ளது. கடந்த வருடம் தமிழ்ச்செல்வனின் தந்தை இறந்துவிட்டதால், பல குடும்பப் பிரச்சினைகள் தீர்வுக்காகவும், பைசலுக்காகவும் தமிழ்ச்செல்வனின் வரவை நோக்கிக் காத்துக்கிடப்பது அந்த ஊரைப்பொருத்தவரை எழுதப்படாத சட்டம்.

குமரேசா! நீ இப்படி நடந்துக்கக்கூடாது. பொறுத்துப்போகணும். வயசான காலத்துல சித்தப்பும், சின்னத்தாளும் எங்கே போவாக சொல்லு. நீ ஒரே புள்ளன்னு எம்புட்டு கஷ்டப்பட்டு ஒன்னெ வளத்தாக, படிக்க வச்சாக. சொத்துப் பத்து எல்லாத்தயும் ஒம்பேருல எழுதிவச்சதுக்கப்பறம் நீ இப்படி அவகள வீட்ட விட்டு எங்கயாச்சும் போயிருங்கன்னு சொல்லலாமா? பாக்கறவக நாளைக்கி என்ன சொல்லுவாக. சித்தப்பு மனசு வேதனைப்பட்டு எங்கிட்ட சொல்லிட்டு கண் கலங்குறாரு. அவக வயசுக்கு இம்புட்டு வேதனைப்படக்கூடாது. அது நம்ம புள்ளகுட்டியளுக்கு நல்லதில்ல குமரேசா. ஒம்பொண்டாட்டியும் கூடக்கொறையப் பேசுறாதாச் சொல்றாக. அவகளுக்கு ஒன்னைய விட்டா யாரு இருக்கா? ம்ம்…” தனிமையில் அழைத்து விசாரித்தான் தமிழ்ச்செல்வன்.

“தமிழு! அவரு ஒங்கிட்ட கொறை சொன்னாருன்னு நீ எங்கிட்ட கேக்கறயே! நான் சொல்ல ஆரம்பிச்சா நீ தாங்கமாட்ட. சொத்து என்ன பெரிய சொத்து? அத அவகளயே எடுத்துக்கறச் சொல்லு. ஒண்ணு… நாங்க எங்கயாச்சம் போய்றோம், இல்ல சொத்தோட அவக போகட்டும். ஆனா இந்த வீடு அப்பத்தா வீடு. “தமிழு! நாங்க எது செஞ்சாலும் குத்தம். அந்தப்புள்ள மாசமா இருக்குனுகூடப் பாக்காம எங்கப்பனும், ஆத்தாளும் சேந்து கொடுமைப் படுத்துறாக. அவக ரெண்டு பேருக்கும் குளிக்க சுடுதண்ணி வச்சுக் குடுக்கலயாம். வாய்க்கி ருசியா சமைச்சு குடுக்கலயாம். எம்பொண்டாட்டி எனக்கு மருந்து வச்சுட்டாளாம். எப்பவுமே படுத்துக்கெடக்காளாம். மசக்கையா இருக்கற புள்ள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். இவக ரெண்டு பேரும் நல்லா நடமாட்டமா இருக்கறப்பவே இப்படிக் கொறை சொல்றாகளே! இன்னும் எங்க அப்பத்தா மாதிரி கம்பு ஊண்டி, கண்ணுகிண்ணு தெரியாம தள்ளாடி நடக்கற நெலமை வந்த அம்புட்டுத்தாம்பா. பாவம் எம்பொண்டாட்டி தாயில்லாப் புள்ள, அவளுக்கும் என்னெ விட்டா யாரு இருக்கா? ‘என்னாலதானெ பெரச்சனை! நீங்க ஒங்க அம்மா அப்பாவோட சந்தோசமா இருங்க, நான் எங்கயோ போயி நான்டுகிட்டு சாகுறேன்’ அப்படீங்கிறா. நான் யாரப் பாக்குறது நீயே சொல்லு…ம்ம்……?”

“சரி தமிழு! நான் எப்படி ஒரே ஆம்பளப்புள்ளயோ, அதே மாதிரிதானே எங்க அப்பத்தாளுக்கும் இவரு ஒரே ஆம்பளப்புள்ள. இவரு என்னென்ன கொடுமையெல்லாம் எங்க அப்பத்தாளுக்குச் செஞ்சாருன்னு ஒனக்குத் தெரியாதா தமிழு? பாவம் அதுக்கு, சோறு தண்ணிகூடப் போடாம ஒங்க வீட்டுத் திண்ணையில வந்து படுத்துக் கெடந்தத நான் மறக்கல. அடை மழையில குளுருதுன்னு அடுப்பாங்கரையில ஒண்டுனது, வயசான காலத்துல அடக்கமுடியாம, வெளில எந்திரிச்சுப் போறதுக்குள்ள, அங்கன கொஞ்சம் மூத்திரம் போயிருச்சுன்னு, எங்கப்பன் ஆத்தா ரெண்டு பேருமே இடி, மின்னல்னுகூடப் பாக்காம வெளிய தள்ளிவிட்டத நான் எப்படி மறப்பேன் தமிழு? பாவம் நாதியத்துப்போயி, முடியாமப் படுத்துகிட்டா பாக்க யாருமில்லேன்னு தூக்கத்துலயே மாட்டுக்கொட்டத்துல செத்துக்கெடந்துச்சே! நம்ம ரெண்டுபேருந்தானே தூங்குதுன்னு போயி எழுப்புனோம். அத நீ எப்படி தமிழு மறந்தே?”

“நான் சின்ன வயசா இருக்கும்போது குடிக்கத் தண்ணிகூட மோந்து குடுக்க மாட்டேன். பொங்க வைக்கிற முட்டியில சர்க்காரு கெணத்துலருந்து நீ தண்ணி புடிச்சு கொண்டுவந்து குடுப்பியே அத நீ மறந்துட்டியா? நீ தண்ணி மோந்து குடுக்கறதால ஒங்கிட்ட பேசக்கூடாதுனு எங்கம்மா என்னை கட்டுப்படுத்துச்சு அது தெரியுமா ஒனக்கு? அப்போ அம்புட்டு செஞ்சதாலதான் இவக இன்னிக்கி இம்புட்டு அனுபவிக்கிறாக. அத இப்ப நெனச்சாலும் அழுகயா வருது. இதெல்லாம் சொல்றதுனால நானும் அந்த மாதிரி எங்கப்பன் ஆத்தாள கொடுமைப்படுத்துறேன்னு தயவு செஞ்சு நெனச்சுப்புறாத தமிழு. எங்கப்பன் ஆத்தா புத்தி எனக்கு சுட்டுப்போட்டாளும் வராது. எந்தத் தொந்தரவும் குடுக்காமலே, எங்கப்பத்தா ரொம்பக் கஷ்டப்பட்டுச்சு. ஆனா எங்க ரெண்டு பேருக்கும், இவக குடுக்கற தொந்தரவு இருக்கே!..அடேங்கப்பா! நான் யாருகிட்டப் போயி சொல்றது தமிழு? இந்தத் தண்டனைய நாங்க குடுக்கல. அவகளா அனுபவிச்சுக்கறாக. எங்க அப்பத்தா இவகள சும்மா விடாது தமிழு” அவ்வளவையும் ஒரே மூச்சில் இறக்கி வைத்தான் குமரேசன்.

தமிழ்ச்செல்வனால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாய்ப் புரிந்தது. “இது தீர்க்கவேண்டிய பிரச்சினை இல்லை, கொடுக்கவேண்டிய கடன்”

Series Navigation

நவநீ

நவநீ