தீயவனாக இரு!

This entry is part [part not set] of 17 in the series 20010629_Issue

சுஜல்
இமைகள் துடிக்க இதயம் படக்க,கூடத்தில்,கூட்டத்தின் இடையே,
யாரும் அறியாமல், நான் உன்னை முதலில் பார்த்த அந்த நாணப் பார்வை,
சுற்றம் போற்ற உற்றம் வாழ்த்த நான் உனக்கே உாியவளாகி போன
அந்த உன்னத வினாடி,
புதிய சூழலின் தாக்கத்தில் நான் பயந்து தடுமாறிய பொழுது
என் கை மெல்ல அழுத்தி நீ தந்த நம்பிக்கை காதல்,
எண்ணி எண்ணி நான் மகிழ இருக்கும் நாழிகளே போதாமல் இருக்க,
இன்னும் பல இன்ப கணங்களை வாிசையில் அடுக்கி கொண்டு போகிறாய்.

காலம் எத்தனை வேகமாக விரைகிறது.
உன்னோடு நான் வாழும் காலக் கணக்கு தீர்ந்து கொண்டே போகிறதே.
நாளேட்டை நான் கிழித்து பல வருடங்கள் ஆயிற்று.
மார்கண்டேயனாக இருந்து விடத்தான் ஆசை.
என்றும் உன் மடியில் தஞ்சம் கிடைத்தால்.
‘இன்னும் சிறு பிள்ளை ‘ என்று என் தலை நரையை தட்டி சிாிக்கிறாய்.

சிாிப்பும் அன்பும் தவிர வேறு என்ன தொியும் உனக்கு
நல்லோருக்கு எல்லாம் ஜென்மம் ஒன்று தானாமே.
அடுத்த பிறவியிலும் நான் உன்னை சேர
நீ கொஞ்சமேனும் தீயவனாக இரேன்.Series Navigation

சுஜல்

சுஜல்