தி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம்

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

மலர் மன்னன்


ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1966 நவராத்திரி சமயம் தமிழ் நாடு திரும்பியிருந்தேன். தமிழில் உருப்படியாக எழுதுவது, தமிழ் நாட்டிலேயே ஏதேனும் பத்திரிகை அல்லது செய்தி நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்வது என்றெல்லாம் எண்ணமிருந்தது. அந்தச் சமயத்தில் ஆனந்த விகடனில் எனது சில சிறுகதைகள் முத்திரைக் கதைகளாக வந்துவிட்டிருந்தன. 1966 செப்டம்பர் மாத விகடன் இதழ் ஒன்றில்தான் என்று ஞாபகம்: மாறுதல் என்கிற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை முத்திரைக் கதையாக வெளியாகி, அதற்கு ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் வந்துள்ளன என்றும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியனுப்புமாறும் மணியனிடமிருந்து ஒரு ஊக்குவிப்புக் கடிதம் வந்திருந்த உற்சாகத்தில்தான் நான் துணிந்து தமிழ் நாட்டிற்குப் புறப்பட்டு வந்திருந்தேன்.

அப்போதெல்லாம் லா.ச.ரா. வின் எழுத்திலொரு மயக்கமே ஏற்பட்டிருந்தது. அவரது சிறுகதைத் தொகுதிகளை கலைஞன் பதிப்பகம் என்ற நிறுவனம் வெளியிடுவதோடு அவற்றுக் கிணையான வேறு தரமான படைப்புகளையும் வெளியிட்டு வந்ததாலும் அந்த நிறுவனத்தின் மீது எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது. ஒருநாள் நானாகவே அப்போது தியாகராய நகர் பாண்டி பஜாரில் இருந்த ஒரு புராதன கட்டிடத்தில் இயங்கி வந்த கலைஞன் பதிப்பகத்திற்குச் சென்றேன். பதிப்பக உரிமையாளர் மாசிலாமணி மிகவும் எளிமையாகத் தோற்றமளித்தார். ஒரு வியாபாரியாக அல்லாமல் ரசிகராகத்தான் அவர் இருந்தாக வேண்டும் என்று முன்னரே முடிவு செய்திருந்தேன். ஏனெனில் இருந்திருந்து லா.ச. ரா. வின் சிறுகதைகளின் தொகுப்பை ஒரு புத்தக வெளியீட்டாளர் வியாபார நிமித்தமாகத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருப்பாரா? நான் எதிர்பார்த்தவாறே தரமான ரசனையுள்ள வாசகராகத்தான் இருந்தார், மாசிலாமணி.

மாசிலாமணியிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சமீபத்தில் விகடனில் வந்திருந்த எனது மாறுதல் சிறுகதையைப் பற்றியும் சொன்னேன். படித்த நினைவு இருக்கிறது; அது நல்ல சிறுகதை என்று சொன்னார், மாசிலாமணி. தமிழில் நெடுங்கதை அல்லது நாவலாக எழுத விருப்பமுள்ளது என்று அவரிடம் தெரிவித்தேன். எழுதிக் கொடுங்களேன், நானே வெளியிட்டுவிடுகிறேன் என்றார்.

பிரேமா பிரசுரம் அரு ராமநாதன் அவர்களிடம் முன்னதாகவே அறிமுகம் இருந்தது. அவர் நடத்தி வந்த காதல் மாத இதழ் 1957ல் ஓர் அட்டைப் படச் சிறுகதைப் போட்டி வைத்தது. விளையாட்டாக அதற்கு ஒரு சிறுகதை எழுதியனுப்பினேன். வாஸ்தவத்தில் அது மிகவும் சாதாரணமான காதல் தோல்விக் கதை. அதனை முதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்துப் பிரசுரம் செய்தார், ராமநாதன். அது முதல் அவரது கவனிப்பிற்கு உரியவனாகியிருந்தேன்.

அந்தத் தொடர்பில்தான் பிரேமா பிரசுரத்திற்காக சிந்தனையாளர் வரிசையில் முதலில் நீட்சே பற்றி எழுதினேன். நீட்சேயின் எழுத்து நடையும் அவர் எடுத்து வைக்கும் தத்துவமும் புரிந்துகொள்ள மிகவும் சிரமம் என்று யாருமே எழுத முன்வரமாட்டேன் என்கிறார்கள்: நீங்கள் முயற்சி செய்து பார்க்கிறீர்களா என்று ராமநாதன் என்னிடம் கேட்கப் போய்த்தான் அதனை எழுத முற்பட்டேன். அப்போது நான் வயதில் மிகவும் இளையவன்; நீட்சேயை எழுதுமாறு என்னிடம் கேட்க எப்படி அவர் துணிந்தார் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இன்று என் மரியாதைக்குரிய அரு ராமநாதன் இல்லை. ஆனால் அவர் மகன் ரவி இருக்கிறார். தம் தந்தைக்குச் சமமான பரிவோடு, மரியாதையையும் இணைத்து, மிகவும் கரிசனமாக என் உடல்நலன் பற்றி விசாரித்தவாறே சிந்தனையாளர் வரிசையில் வெளியிட நிறைய எழுதித் தருகிறீர்களா என்று கேட்டபடி இருக்கிறார். பிரேமா பிரசுரம் சிந்தனையாளர் வரிசைக்காக சிந்தனையாளர் ஸாவர்கர் எழுதத் தொடங்கியிருக்கிறேன். திடீரென நிகழ்காலத்திற்கு வந்துவிட்டேன். இனி திரும்பவும் 1966க்கு:

மரியாதை நிமித்தமாக அரு ராம நாதன் அவர்களையும் சந்தித்தேன். நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடமாட்டீர்கள் என்றால் நல்லது. தொடர்ந்து சிந்தனையாளர் வரிசைக்கு எழுதிக் கொடுத்துக் கொண்டிருங்கள். தேர்தல் நெருங்குகிறது; அனேகமாக தி முக தான் ஜயிக்கும் போல் தெரிகிறது. நம் அண்ணா முதலமைச்சராகப் போவது உறுதி. அண்ணாவுக்குத்தான் உங்கள் மீது பிரியம் உண்டே. நீங்கள் விரும்பினால் தி முக அரசின் செய்தித் துறையிலேயேகூட உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கலாம் என்று சொன்னார் ராம நாதன்.

அரு ராமநாதன் அவர்களுக்கும் அண்ணாவின் மீது அதிக ஈடுபாடும் அன்பும் இருந்தன. அண்ணா ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்கு முன்பே அண்ணாவுடன் ஒரு நாள் என காதல் தீபாவளி மலருக்கென காஞ்சி எம் கல்யாண சுந்தரத்தைவிட்டு சிறப்புக் கட்டுரை எழுதச் செய்து வெளியிட்டவர், ராம நாதன்.

எதிர் காலத்தில் செய்தித் துறையில் வேலைக்கு முனையாவிட்டாலும் தற்போதே வேறு எங்காவது வேலை தேடிக்கொண்டு இங்கேதான் இருக்கப் போகிறேன் என்று சொன்னேன்.

காதல் வெறும் கதைகளே பிரதானமாக இடம் பெறும் பத்திரிகை. பிரேமா பிரசுரத்தில் அதிகம் வெளிவருவது மர்ம நாவல்கள். இங்கே உங்களுக்கு தினசரி வேலை எதுவும் சரிப்படாது. ஆனால் நான் மாதா மாதம் ஒரு சுமாரான தொகையைச் சம்பளம்போல் கொடுத்துவிடுகிறேன். அது நீங்கள் வெறுத்துப் போய் தமிழ் நாட்டைவிட்டுப் போய்விடாமல் இருப்பதற்காகத்தான். சிந்தனையாளர் வரிசைக்குத் தனியாக ஒவ்வொரு புத்தகத்திற்கும் இவ்வளவு என்று தந்துவிடுகிறேன். சரியா? என்றார் ராம நாதன். ஒப்புக் கொண்டேன். சிந்தனையாளர் ஷோபன்ஹார், எபிகூரஸ், சுவாமி விவேகானந்தர் என்று வரிசையாக எழுதிக் கொடுத்தேன். அவையெல்லாம் பின்னர் வெளியாகின. சில தொடர்ந்து பதிப்பாகிக் கொண்டே இருக்கின்றன. 1964ல் வெளியான சிந்தனையாளர் நீட்சே, இதுவரை பதினை ந்து பதிப்புகளுக்கும் கூடுதலாகவே வந்திருக்கும் என்று மகிழ்ச்சியுடன் சொல்லும் ரவி ராம நாதன், என் விஷயத்தில் பணம் என்று வருகிற போது மிகவும் தாராளமாகவே நடந்துகொள்கிறார்!

1966ல் தமிழகம் திரும்பியபோதுதான் நீண்ட இடைவெளிக்குப்பின் மயிலை மாங்கொல்லை பொதுக்கூட்டத்தின்போது அண்ணாவைச் சந்தித்ததும். போய்விடாதே, பக்கத்தில் செயல்வீரர் கூட்டம் நடக்கிறது, வந்துவிடு என்று சொல்லிவிட்டுப் போனார். அரங்கண்ணல்தான் மயிலைத் தொகுதி வேட்பாளர். அவரோடு சேர்ந்து அந்தக் கூட்டத்திற்குப் போனேன். அண்ணா அப்போது சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது:

இப்பொழுதெல்லாம் நான் சொல்வதை தலை நரைத்தவர்களும் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். அடடே, பரவாயில்லையே என்று திருப்திப்பட்டுக் கொள்கிறேன். அதற்கப்புறந்தான் அட, நமக்குந்தானே வயதாகிறது என்கிற நினைப்பு வருகிறது! என்றார், அண்ணா.

அண்ணா என்றுமே தம்மைப் பற்றிப் பெரிதுபடுத்திப் பேசிக்கொண்டதில்லை என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். வ்வளவுக்கும் மெரீனா கடற்கரையில் திரண்டிருந்த லட்சக் கணக்கான மக்களைப் பார்த்து எழுந்து நில்லுங்கள் என்று அண்ணா சொன்னதும், மொத்த ஜனக் கூட்டமும் எழுந்து நின்ற தருணம். அத்தனை பேரும் எழுந்து நின்றதும், இப்போது இவர்களிடம் புறப்படுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும்? ஆனால் நான் அப்படிச் சொல்ல மாட்டேன் என்று பொறுப்புணர்வுடன் சொன்னவர் அண்ணா.

தமிழ் நாட்டில் தேர்தல் நிலவரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நானும் மற்றவர்களும் பேசுகிற கூட்டங்களுக்கு வந்து தேர்தல் களம் பற்றித் தனிப்பட்ட முறையில் பத்திரிகைகளுக்கு எழுதலாமே என்றார், அண்ணா. அதுவும் வருமானத்திற்கொரு வழியென ஒப்புக் கொண்டு கல்கத்தா ஸ்டேட்ஸ்மன், ப்ரீ பிரஸ் ஜர்னல் போன்ற பத்திரிகைகளுக்கு மூன்றாவது பார்வை என்ற தலைப்பில் தமிழ் நாட்டுத் தேர்தல் நிலவரங்கள் பற்றி எழுதலானேன் (அரசின் உளவுத் துறையினது ஒரு பார்வை, சம்பந்தப்பட்ட பத்திரிகையின் அதிகாரப் பூர்வ செய்தியாளர் தருவது இரண்டாவது பார்வை, பொது நிலையில் என் போன்ற பார்வையாளனுடையது மூன்றாவது பார்வை).

இத்தனைக்கும் இடையில் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணிக்காக சறுக்கு மரம் என்ற தலைப்பில் ஒரு சிறு நாவலும் எழுதிக் கொடுத்தேன். மாசிலாமணி அதை 196970 வாக்கில் வெளியிட்டார். 1970 டிசம்பர் மாதம் என்று நினைக்கிறேன்; நான் மிகவும் விரும்பி வாங்கி வாசிக்கும் மஞ்சரி மாத இதழை வாங்கிப் புரட்டியபோது, இறுதிப் பக்கங்களில் எப்போதும் வரும் புத்தகச் சுருக்கம் பகுதியில் நான் எழுதி கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட சறுக்கு மரம் பிரசுரமாகியிருந்தது! மஞ்சரியில் சறுக்கு மரம் புத்தகச் சுருக்கத்தைப் பார்த்துவிட்டு, கனையாழியில் கி கஸ்தூரி ரங்கன் அதுபற்றிக் குறிப்பிட்டு, இந்த நாவலுக்குக் கணையாழியின் சிபாரிசு உண்டு என்று எழுதியிருந்தார். அவருடைய ஒரு சிறுகதையை வெளியிட்டதற்காகப் பச்சை, பச்சையான பத்திரிகை என்று கணையாழிக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த மலர்மன்னன் எழுதிய நாவல்தான் சறுக்கு மரம் என்று வேறு அறிமுகப் படலத்தை விவரித்திருந்தார், கஸ்தூரி ரங்கன் (அதற்கு முன் கணையாழியில் பிரதிக்ஞை என்கிற தலைப்பில் வெளிவந்திருந்த எனது சிறுகதை ஏகக் களேபரத்தை உண்டாக்கிவிட்டிருந்தது )!

மஞ்சரியில் சறுக்கு மரம் புத்தகச் சுருக்கமாக வந்திருப்பது பற்றி மாசிலாமணியிடம் வியப்புடன் விசாரித்தேன். தி ஜ ர வந்திருந்தார். புதிதாக என்ன போட்டிருக்கிறாய் என்று கேட்டார். சில புத்தகங்களோடு சறுக்கு மரத்தையும் கொடுத்தேன். அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது போலிருக்கிறது; அதுதான் புத்தகச் சுருக்கமாகப் பிரசுரித்திருக்கிறார் என்று சொன்னார் மாசிலாமணி.

அந்த நிமிடம் வரை எனக்கு தி ஜ ர என்கிற திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன் அவர்களுடன் நேரடிப் பரிச்சயம் இல்லை. ஆனால் அவரது மேன்மையை நன்கு அறிந்திருந்தேன். ரீடர்ஸ் டைஜஸ்டுக்கு இணையாகத் தமிழில் மஞ்சரி மாத இதழைக் கொண்டு வந்தவர் அவர். கலைமகள் நிர்வாகம் அவரை வைத்துத்தான் அப்படியொரு மாத இதழைத் தமிழில் வெளியிடும் துணிவைப் பெற்றது எனலாம். ஏனெனில் அதற்கு முன்னோடியாக வை. கோவிந்தன் நடத்திய சக்தி மாத இதழுக்குப் பொறுப்பேற்றிருந்தவர் தி ஜ ர தான். தமிழில் மிக அரிதாக வந்த தரமான பத்திரிகை சக்தி. தமிழ் வாசகர்களிடையே முறையான வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க முற்பட்ட பத்திரிகை.

தி ஜ ர சிறந்தவற்றைத் தேடிப் பிடித்துப் பிறருக்குப் படிக்கத்தரும் பத்திரிகை ஆசிரியர் மட்டுமல்ல, அருமையான சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளருங்கூட. ஆழ்ந்த படிப்பாளி, தேர்ந்த அறிவாளி, நுண்ணிய சிந்தனையாளர். முறையான பள்ளிக் கல்வி பெறாமல் தாமாகவே சுயமுனைப்பில் கற்றுயர்ந்த சான்றோன்.

மஞ்சரியில் புத்தகச் சுருக்கமாக சறுக்கும் மரத்தை வெளியிட்டு அதற்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக தி ஜ ர அவர்களுக்கு நேரில் நன்றி சொல்லும் பொருட்டு கலைமகள் காரியாலயம் சென்றேன். அது உணவு இடைவேளைக்குப் பிறகான ஒரு பிற்பகல் நேரம்.

அங்கே போனால் ஆசிரியர்களுக்கான பகுதி என்று ஒரு நீண்ட ஹாலைக் காட்டினார்கள். நடு நாயகமாக கலைமகள் ஆசிரியர் கி வா ஜகந்நாதன் அமர்ந்திருக்க, இரு பக்கங்களிலும் துணை ஆசிரியர்களாகச் சிலர் உட்கார்ந்திருந்தனர். மஞ்சரி ஆசிரியர் தி ஜ ர எங்கே என்று கேட்டேன். அதோ அங்கே போய்ப் பாருங்கள் என்று ஒரு காலியான மேஜையைக் காட்டினார்கள். குழப்பத்துடன் அதன் அருகில் சென்றேன். பக்கத்து மேஜைக்காரர், தி ஜ ர சார், உங்களைத் தேடி யாரோ வந்திருக்கிறார்கள் பாருங்கள், என்றார். உடனே காலி மேஜைக்கு அடியிலிருந்து எழுந்துகொண்டார், தரையில் துண்டு விரித்துப் படுத்திருந்த ஒரு பெரியவர். பழுப்பேறிய அரைக்கைச் சட்டை, அதேமாதிரி பழுப்பேறிய நான்கு முழ வேட்டி, இரண்டும் கதரில். புகைப்படத்தில் முன்பே பார்த்திருந்ததால் அவர்தான் தி ஜ ர என உடனே தெரிந்து கொண்டேன். பழங்கள் நிறைந்த பையை அவரிடம் கொடுத்தபோது எதற்கு இதெல்லாம் என்றவாறு வாங்கி அங்கேயே எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டார்.

எனது நாவலை மஞ்சரியில் புத்தகச் சுருக்கமாக வெளியிட்டமைக்காக அவரிடம் நன்றி தெரிவித்ததும், படித்தபோது அது ஒரு நல்ல நாவல் என்று பட்டது. உடனே போட்டு விட்டேன். இதற்கெல்லாம் நன்றி எதற்கு என்று மிகவும் சகஜமாகச் சொன்னார். அதன் பிறகு அடிக்கடி அவரைச் சந்திக்கலானேன். அவரது உத்தரவுக்கு இணங்க மஞ்சரிக்காகச் சில மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், சிறுகதைகள் செய்து கொடுத்தேன். சிந்தனையாளர் நீட்சேயைப் படித்துவிட்டு, எனது மொழியாக்கமான இவ்வாறு உரைத்தான் ஜராதுஷ்டிரன் (Thus Spake Zaratushtra) என்கிற நூலின் ஒரு அத்தியாயத்தையும் மஞ்சரியில் வெளியிட்டார், தி ஜ ர. நீட்சேயைப் பற்றித் தமிழில் இதுவரை இவ்வளவு விரிவாக வந்ததேயில்லை; ப. கோதண்டராமன்தான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்; அது ஒரு கட்டுரைத் தொகுப்பில் உள்ளது. அதன் பிறகு ஒரு புத்தக அளவுக்கு வருகிற மாதிரி விரிவாக நீங்கள்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று அவ்வப்போது என்னிடம் கூறிக்கொண்டே இருப்பார், தி ஜ ர.

தமிழுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களில் குறிப்பிடத் தக்கவரான தி ஜ ர, மிக மிக எளிமையானவராக இருந்தார் என்பதற்காகக் கலைமகள் நிர்வாகமும் அவரை எளிய நிலையில் வைத்திருந்ததைப் பார்த்தபோது மிகவும் உறுத்தலாக இருந்தது. ஆனால் அவருக்கு அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. கலைமகள் நிர்வாகம் அவருடைய தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கவில்லை என்பதை அறிந்தபோது மனதில் வேதனை மிகுந்தது. ஆனால் அதையும் அவர் பெரிது படுத்தவில்லைதான்.

போதிய வருமானமின்றி மிகவும் சிரம தசையிலேயேதான் தி ஜ ர வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார். ஆனால் தமது வறிய நிலையினை அவர் வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை. அவரது எளிமை கண்டு பழகிப் போனதால் அவரது வறுமை எமது கண்களுக்குப் புலப்படாமலே போயிற்று.

1974ல் ப சிதம்பரம், அனந்த நாயகி, ஏ கே சண்முக சுந்தரம், ரங்கராஜன் குமாரமங்கலம், டி சுதர்சனம் முதலானவர்கள் எல்லாரும் சேர்ந்து அன்னை நாடு என்கிற பெயரில் ஒரு தினசரியைத் தொடங்கினார்கள். அந்தச் சமயத்தில் சிதம்பரத்தைச் சந்தித்தபோது, அன்னை நாடு இதழில் செய்தி ஆசிரியர் பொறுப்பை ஏற்குமாறு சிதம்பரம் என்னிடம் சொன்னார். ஒப்புக்கொண்டு பணியாற்றுகையில்தான் நெய்வேலியில் தி ஜ ர காலமாகிவிட்டதாக மிகவும் காலதாமதமாகச் செய்தி கிடைத்துத் திடுக்கிட்டேன். கலைமகள் காரியாலயம் சென்று விசாரித்தபோது தி ஜ ர சில ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் மந்தைவெளி பஸ் நிலையத்திற்குப் பின்புறம் ஆண்டி மானியம் என வழங்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில்தான் அவர் வசித்து வந்தார் எனவும் சொன்னார்கள். அங்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கே உரிய சீர்கேடுகளுடனும் சிதிலமாகவும் காட்சியளித்த கட்டிடத்தில் தி ஜ ர வின் குடும்பத்தார் மிகவும் வறுமையில் உழல்வதைக் கண்டு வருந்தி, அந்தச் சமயத்தில் சாத்தியமானதை நண்பர்கள் உதவியுடன் செய்தேன். நெருக்கடி நிலை, காமராஜர் மறைவு, தி மு க அரசு நீக்கம் என்றெல்லாம் பரபரப்பாக நாட்கள் விரைந்து கொண்டிருந்ததால் கவனம் முழுவதும் திசை திரும்பிப் போயிற்று. பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்கிற நிலையில் நான் இருந்தேன். என் மீது சந்தேகம் வராது என்பதால் நெருக்கடி நிலை எதிர்ப்பாளர்கள் பலரும் எனது வீட்டை நன்கு பயன் படுத்திக் கொள்ள முடிந்தது. நெருக்கடி நிலை கண்டனப் பிரசாரப் பிரசுரங்களை வயது முதிர்ந்த நிலையிலும் ஒய்வின்றி உழைக்கத் தயங்காத ஆர் எஸ் எஸ் ஊழியர் சிவராம்ஜி மூட்டை, மூட்டையாகக் கொணர்ந்து என் வீட்டில்தான் பதுக்கிவைப்பார்!

என் கவனம் இப்படிச் சிதறிப் போய்விட, தி ஜ ர குடும்பத்தாரும் அடக்கம் கருதி என்னோடு தொடர்பு கொள்வதைத் தவிர்த்துவிட்டனர். கால வெள்ளத்தின் ஓட்டத்தில் சிக்கிய சருகென எங்கெல்லாமோ அலைந்து சிக்கி முடங்கி, மீண்டும் எங்கெல்லாமோ விரைந்து, எதில் எல்லாமோ சிக்குண்டு கடைசியில் தற்செயலாக வந்து பார்த்தால் தி ஜ ரவின் எஞ்சியுள்ள குடும்பத்தார் இன்னும் வறிய நிலையிலிருந்து மீளவில்லை!

அமுதசுரபியின் செப்டம்பர் 2006 மாத இதழில் தி ஜ ரவின் மகள் பாப்பாவும், அவருடைய மகள்களும் மிகவும் சிரம தசையில் வாழ்ந்து வருவது பற்றிய கட்டுரையைப் படித்ததும் அவர்களைக் காண விரைந்தேன். அதே ஆண்டிமானியம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு. 1970 களில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அரங்கண்ணல் குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்தபோது கருணை அடிப்படையில் தி ஜ ர வுக்கு வழங்கப்பட்ட குடிசைக்கு மாற்றான கான்கிரீட் குச்சு!

தி ஜ ரவின் மகள் பாப்பா ஒரு வீட்டில் சமையல் வேலை செய்துதான் வாழ்க்கை நடத்தவேண்டியதாயிற்று என அறிந்தேன். இன்று பாப்பாவுக்கு வயது எழுபத்து மூன்றாகிவிட்டது. மூப்பிற்கே இயல்பானதாக மட்டுமின்றி கடுமையாக உழைக்கவும் நேரிட்டமையால் பலவாறான உடல் உபாதைகளுடன் பாப்பா நாட்களைக் கழித்து வருகிறார். அவருடைய மகள் நிர்மலாவும் (தி ஜ ரவின் பேத்தி) சமையல் வேலைக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறார். நல்ல வேளையாக நிர்மலா தன் மகள் அர்ச்சனாவைப் பலருடைய உதவியுடன் கல்லூரியில் படிக்கிற அளவுக்கு முன்னேற்றிவிட்டார், பல சிரமங்களுக்கிடையிலும்!

தி ஜ ரவின் கொள்ளுப் பேத்தியான அர்ச்சனா தன் திறமையின் காரணமாகவே பலரின் உதவியைப் பெற்றுக் கல்வியைத் தொடர முடிந்துள்ளது. அர்ச்சனா இளங்கலை கணிதவியல் இறுதியாண்டில் இருக்கிறாள். ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் அவள் படிப்பு முடிந்ததும் அவளுக்கு வேலை வாய்ப்பளிக்க முன்வந்துள்ளது. ஆனால் அர்ச்சனா அந்த வேலைக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்வதற்காகக் கணினி பயன்பாடு பற்றி உரிய பயிற்சி பெறவேண்டியுள்ளது. இதற்கென அவள் தொண்ணூற்றைந்தாயிரம் செலவிட வேண்டியிருக்கும். இருபத்தைந்தாயிரம் திரட்டப்பட்டுள்ளது. ஆனால் மிகுதித் தொகையையும் தன்னால் திரட்ட முடியும் என்பது நிச்சயமானால்தான் பயிற்சியில் சேருவது என்று அர்ச்சனா கருதுகிறாள். தன் பாட்டி (தி ஜ ர வின் மகள் பாப்பா) க்கான நிரந்தர மருத்துவச் செலவுகள் வேறு அவளைத் தயங்கச் செய்கிறது.

தி ஜ ர வின் நூற்றாண்டு நாம் யாரும் கண்டுகொள்ளாமலேயே 20001 ல் வந்துபோய் விட்டது. அவர் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகியும்கூட. ஆனால் அதற்கான சலுகை எதனையும் அவர் பெற்றதில்லை. அதுபற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டோம்.
அறிவாளிகளையும் தேசத் தொண்டர்களையும் மதியாத சமூகம் தலையெடுக்காது என்பது பாரதியின் வாசகம்.

தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறந்த தொண்டாற்றிய ஒரு பெருமனை உரிய முறையில் கவுரவிக்கத் தவறிவிட்டோம் என்பது மட்டுமின்றி அவரை மிகவும் இரங்கத் தக்க அளவுக்கு அடித்தளத்தில் வாழச் செய்த பழியையும் சுமக்கவேண்டியவர்களாயிருக்கிறோம். இன்னமும் வறிய நிலையிலேயே உள்ள அவரது சந்ததியாருக்கு உரிய உதவியையேனும் இயன்றவரை அளித்துப் பரிகாரம் தேட அனைவரையும் அழைக்கிறேன்.

தி ஜ ர எழுதிய நூல்கள் நாற்பதுக்கும் கூடுதலாகவே இருக்கும். அவை தவிர மஞ்சரியில் அவர் எழுதிய கட்டுரைகளும் நிரம்ப இருக்கும். அவரது நூல்களை நாட்டுடைமையாக்கக் கோரும் மனு ஒன்று தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றிய அரசின் முடிவு எவ்வாறாக இருக்கும் என்றோ, எப்போது முடிவு தெரியவரும் என்றோ இப்போது சொல்வதற்கில்லை. அதற்காகக் காத்திராமல் நம்மால் ஆனதைச் செய்யலாம் அல்லவா?


malarmannan79@rediffmail.com

Series Navigation