திருடன்

This entry is part [part not set] of 14 in the series 20010415_Issue

பாரி பூபாலன்


வெளியே சோவென்று பெய்யும் மழைச் சத்தம் காதில் தெளிவாய்க் கேட்டது. நேரத்தைப் பார்த்தால் அதிகாலை 4 மணி. விழிப்பு வந்துவிட்டது. இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாய் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாலும், தூக்கம் வரவில்லை. சரி, வெளியே மழை எந்த அளவுக்குப் பெய்திருக்கிறது என்று பார்க்கலாம் என ஜன்னல் வழியே வெளி நோக்கினால், விடாது பெய்யும் அந்த மழையினிடையே கண்ட காட்சி எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

வீடு ரோட்டை ஒட்டியபடி அமைந்திருந்ததால், ஜன்னலின் வெளியே பார்த்தால், ரோடும், அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கார்களும், நடந்து செல்லும் மக்களும், விரைந்து செல்லும் கார்களும் நன்றாகத் தெரியும். அதிகாலைப் பொழுதில், அந்த கொட்டும் மழையில், அங்கு எந்தவித நடமாட்டத்தையும் எதிர் பார்க்கவில்லை. அப்படி எதிர்பார்க்காமல் வெளி நோக்குகையில், அங்கு ஒருவன் ஒரு காரை மிகவும் சிரமப்பட்டு திறந்து கொண்டிருக்கும் காட்சி ஆச்சரியத்தை அளித்தது. அப்படி ஆவென்று பார்த்து கொண்டிருப்பதற்குள், பின்னிருக்கை ஜன்னலை திறந்து, அதன் வழி உள் குதித்து, உள்ளிருந்து டிக்கியைத் திறந்து, சுலபமாய் வெளி வந்து, டிக்கியிலுள்ள பெரிய பெட்டியொன்றை எடுத்துக் கொண்டு சர்வ சாதாரணமாய் ஆனாலும் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்த காட்சி அதிர்ச்சியை அளித்தது.

என்ன அநியாயம் இது, கண்ணுக்கெதிரே இப்படி திருட்டு நடக்கிறதே! பார்த்துகொண்டு நாம் இருக்கிறோமே

என்று நொந்தபடி, என்ன செய்யலாம் என யோசித்தேன். என்ன செய்யலாம் என்பதை விட என்ன செய்திருக்கலாம் என யோசித்தால், ‘திருடன்! திருடன்! ‘ என சத்தமிட்டிருக்கலாமோ ? போலீசுக்கு டெலிபோன் செய்து கூப்பிட்டிருக்கலாமோ ? உடனே வீட்டை விட்டு வெளியே ஓடி அவனைப் பிடிக்க முயற்சித்திருக்கலாமோ ? என்றெல்லாம் தோன்றியது. என்ன செய்திருக்கமுடியும் ? அதுதான் கணநேரத்திற்குள் அவன் திருடி கிளம்பி விட்டானே ! இன்னதுதான் நடக்கிறது என்று யோசித்து கிரகிப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டதே ! அப்படித் துரிதமாய் என்ன செய்திருக்க முடியும் ? அப்படிக் கத்தியிருந்தால், அந்த மழைச் சத்தத்தில் யாருக்கும் கேட்டிருக்குமோ என்னவோ ? போலீசைக் கூப்பிட்டால் அதில் நமக்கென்ன பிரச்னைகள் வருமோ ? அவன் கையில் கத்தி கித்தி வைத்திருந்தால் அவனை எப்படி ஓடிப்போய்ப் பிடிப்பது ? என்றெல்லாம் எண்ணலானேன். இந்தத் திருட்டைக் கண்ணால் பார்த்த எனது பொறுப்பை எண்ணிப் பார்த்தேன். ஒரு சமூக பொறுப்புணர்வுடன் (:-)), சாதுர்யத்துடன், சமயோசிதத்துடன், நான் என்ன செய்ய வேண்டும் என யோசித்துப் பார்த்தால், பேசாமல் இருப்பதே சரி எனத் தோன்றியது. நம்முடைய காரில் எதுவும் வைக்காமலும், முடிந்தால் தெருவில் நிறுத்தாமல், ஏதாவது தனியார் இடத்தில் நிறுத்துவதே நல்லது எனத் தோன்றியது.

அந்த திருடனைப் பற்றி எண்ணிப் பார்த்தேன். பார்த்தால், அவனுக்கு சுமார் பதினைந்து பதினாறு வயதிருக்கலாம். அவன் மேல் வெறுப்பும் எரிச்சலும் இருந்தாலும், சிறிது பரிதாபமாகக்கூட இருந்தது. அவன் ஏன் இப்படி திருட வேண்டும் ? அதுவும் இந்த நேரத்தில், இப்படிக் கொட்டுப் மழையில் எதற்கு இந்தக் கஷ்டம் ? ஒருவேளை சாப்பாட்டிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்குமோ ? ஒருவேளை வீட்டில் வயதான நோய்வாய்ப் பட்ட தாய் அல்லது தந்தையை வைத்துக் காப்பாற்ற வேண்டிய நிலையோ ? அல்லது வீடென்று ஒன்று இல்லாத அநாதையோ ? ஒருவேளை சோம்பேரியாக ஊரைச் சுற்றி, பிறர் பொருளைத் திருடித் தின்றே வளர்ந்தவனோ ? அல்லது அப்படி வளர்க்கப் பட்டவனோ ? சிறு வயதிலேயே போக்கிரிகளுடன் சேர்ந்து கஞ்சா சூது என்று வீணாய்ப் போனவனோ ? ஏன் அவனுக்கு இந்த நிலை, அதுவும் பள்ளி செல்லும் இந்த வயதில் ? அந்த பெயர் தெரியாத திருடன் மேல் ஏற்பட்ட வெறுப்பை விட அவனது நிலை கண்டு தோன்றிய பரிதாபமே அதிகமாய்த் தெரிந்தது எனக்கு.

இதற்கிடையே, பெட்டி திருடப்பட்டது தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் உரிமையாளரைப் பற்றியும் எண்ணிப் பார்த்தேன். என்ன பாவம் செய்தாரோ அவர், இப்படி இந்தப் பெட்டி அவரிடம் ஒட்டாமல் போவதற்கு ? ஒரு வேளை முட்டாளாய் இருப்பாரோ(னோ)(ளோ) ? எதற்கு இந்தப் பெட்டியை காரிலேயே வைத்துச் செல்ல வேண்டும் ? வீட்டிலே கொண்டு வைத்தால் என்ன ? எதுவும் முக்கியமான பத்திரங்கள் இருந்திருக்குமோ ? ஊரில் உள்ள அனைவரும் யோக்கியர்கள் என்றெண்ணமோ அவருக்கு ? திருடன் மேல் பரிதாபம் ஏற்பட்டாலும், பொருளைப் பறிகொடுத்தவர் மேல் அதனினும் மேல் பரிதாபம் ஏற்பட்டது. அவரது நிலையில் எண்ணி, திருட்டுப் போனதைப் பற்றி அவர் படப் போகும் வருத்தத்தை உணர்ந்து பார்த்தால் திருடன் மேல் இன்னும் வெறுப்பு அதிகரிக்கிறது. தனக்கு சொந்தமான பொருள் திருட்டுப் போனது தெரிந்தபின் அவரது மனம் என்ன பாடு படுமோ ? நமக்குத் தெரியாதா என்ன ? கல்லூரி விடுதியில் பணம், பொருள், துணிமணி என திருட்டுக் கொடுத்துவிட்டு பட்ட மனக் கஷ்டமும், பஸ்ஸில் போகையில் பணத்தைப் பரி கொடுக்கும் போது அடையும் அதிர்ச்சியும் வேதனையும் கோபமும் நமக்குத் தெரியாதா என்ன ? திருட்டுக் கொடுத்தவரை எண்ணி பாவம் படத்தான் முடிந்தது.

இப்படி தன்னைப்பற்றியும், அந்த திருடனைப் பற்றியும், திருட்டுக் கொடுத்தவரைப் பற்றியும் பல்வேறு சிந்தனைகளாய் அந்த காலைப் பொழுது விடிந்தது. இத்தனை எண்ணங்களுக்குமிடையில், மனதில் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்தது. ‘அடடா ! கேம்காடரை எடுத்து திருட்டினைப் படம் பிடித்திருக்கலாமே ! விட்டு விட்டோமே ! ‘.

**

Series Navigation