திராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

மலர் மன்னன்


இன்றைக்குத் தமிழ் நாட்டில் கிராமப்புறங்களில்கூடப் பெண்பிள்ளைகள் வட பாரதத்து உடையான சல்வார் கமீஸை அணிந்துகொண்டு செல்வதை சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. தென் மாநிலங்கள் எல்லாவற்றிலுமே நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் சௌகரியம் கருதியும், முழு உடம்பையும் அது வடிவத்தைக் கெடுக்காமலே மறைப்பதாலும் தங்களுக்கு ஏற்ற உடையென அதனைத் தேர்ந்து கொண்டுவிட்டனர்.

ஆக, பாரதத்துப் பெண்கள், தாம் உடுத்தும் உடையின் வாயிலாõக தேச ஒருமைப்பாட்டை நிறுவிவிட்டார்கள்! இந்த வட நாட்டு உடையை யார் அவர்கள் மீது திணித்தார்கள்? திராவிட இயக்கத்து முன்னணியினர் என்று பேசப்படுபவர்களின் வீடுகளிலும், ஈ வே ரா அவர்களின் ஈரோட்டுப் பாதையில் தடுமாறாமல் நடந்துவருவதாக இன்னமுங் கூடக் கூறி வருபவர்கள் குடும்பத்திலுங் கூட இதுதான் நிலைமை!

இதே மாதிரி தமிழ்நாட்டில் பிள்ளைகள் பலரும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் தாமாகவே ஹிந்தியைக் கற்றுவருவதைப் பார்க்கிறேன். சென்னை, கோவை போன்ற நகரங்களில் தமிழ் இளைஞர்கள் பலர் சர்வ சாதாரணமக ஹிந்தியில் உரையாடக் காண் கிறேன்.

அதேபோல் ஆன்மிக உரைகள், ஹிந்து சமயம் சார்ந்த தத்துவ விளக்கக் கூட்டங்கள், சமயம் சார்ந்த வழிபாடுகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் மிகவும் அதிகரித்திருக்கக் காண்கிறேன். அதிலும் குறிப்பாக இளம் வயதினர் இங்கு அதிக எண்ணிக்கையில் நிறைந்திருக்கக் காண்கிறேன்.

இன்னும், தமிழ்க் குடும்பங்களில் வட பாரத தேசத்துச் சாயலில் ஆண்களுக்கும் பென்களுக்கும் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கக் காண்கிறேன். நம்ம வீடுங்கள்ளயே நம்ம பேரப் பசங்க பேரு என்னன்னு கேட்டா, ரமேஷ், கிஷோருங்கறாங்களே என்று ஒருமுறை நெடுஞ்செழியன்கூடச் சலித்துக்கொண்டார். குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடலாகாது என்பதல்ல எனது குறிப்பு. வடக்கு தெற்கு, நாம் வேறு அவர்கள் வேறு என்றெல்லாம் தீவிர உணர்வுடன் எதனையும் அணுகும் மனப்பான்மை இன்று இல்லை என்பதைத்தான் கவனப்படுத்துகிறேன். அதாவது எனது இளமைக் காலத்தில் மிகவும் பரவலாக வேர் விட்டிருந்த திராவிட மாயை இப்போது இல்லை!

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பது தொடங்கி அறுபதுகளின் இடைப் பகுதி வரை தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் பேரொலி எழுப்பி ஒரு சூறாவளி மாதிரிச் சுழன்று வந்தது. இன்று அது வந்துபோனதன் தடையத்தையே காணவில்லை! நான் சொல்வது எவ்வளவு தூரம் சரி என்பதைத் தமிழ் நாட்டில் வசித்துவரும் ஐம்பத்தைந்து, அறுபது வயதைக் கடந்தவர்களால்தான் புரிந்துகொள்ளகொள்ள முடியும்.

அன்று சிறிதளவும் சலித்துக் கொள்ளாமல் பிடிவாதமாக, விடாது வயிற்றுப் போக்கானாலும் அடாது ஹிந்துக்களிடையே பிளவை ஏற்படுத்தப் பாடுபடுவேன் என்று சுற்றிச் சுற்றிவந்த ஈ வே ரா அவர்களுக்குப் பின்னால் அவரது எண்ணங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அவற்றைப் பிரதிபலிப்பதிலும் கூடுதலான சப்தத்துடன் எதிரொலிப்பதிலும் சோர்வின்றி உழைத்த பெரும்படையே இருந்தது. சவுந்தர பாண்டியன், பன்னீர்செல்வம், கஸ்தூரிப் பிள்ளை (க. ராஜாராம் அவர்களின் தந்தையார்) போன்ற கனவான்கள் மட்டுமின்றி, திராவிட இயக்கக் கருத்துகளைப் பரப்புவதற்கு அண்ணா, குருசாமி, ஜனார்த்தனம், சிற்றரசு, அழகிரிசாமி, தங்கராசு என்றெல்லாம் மத்தியதர, கீழ் மத்தியதர இளைஞர் கூட்டணியும் ஈ வே ரா அவர்களுக்குத் துணையாக இருந்தது. ஒவ்வொருவரும் சமுதாயத்தின் ஒவ்வொரு தரத்தினருக்கு ஏற்பப் பேசுவதில் வல்லவர்கள்! நமக்கு இருப்பதெல்லாம் நாக்கு ஒன்றுதான் என்பார் அண்ணா. அந்த நாக்கை வைத்துக் கொண்டு பெரும் புழுதிப்படலத்தையே கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் எதேனும் ஒருவிதத்திலாவது திராவிட இயக்கத்தின் தாக்கம் இல்லாதவர்களை இளைஞர் மத்தியில் காணமுடியாது என்கிற நிலைமை இருந்தது. முக்கியமாகக் கல்லூரிகளில் அதன் ஊடுருவல் மிக அதிகம்!

இப்படி வெள்ளம்போல் புரண்டு வந்த திராவிட இயக்கத்தைத் தடுத்து நிறுத்தி, தமிழ் உணர்வு தேசிய உணர்வுக்கு முரண் அல்ல என்று முட்டுக் கொடுத்து நின்றவர்கள் அன்று வெகு சொற்பமாகவே இருந்தனர். ம. பொ. சிவஞனம், அவருடைய சீடர்களான சின்ன அண்ணாமலை, கா. மு. ஷரீப், கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் எனச் சிலர். அணையின் வலிமை போதாமையால் திராவிட இயக்கம் கட்டுடைத்துக்கொண்டு எங்கும் பாய்ந்து பரவியது. இவ்வளவுக்கும் மக்களிடையே கருத்துருவாக்கும் சாதனம் எனப் போற்றப்படுகிற பொது பத்திரிகை உலகம் திராவிட இயக்கத்தின் தாக்கத்தைக் கண்டுகொள்ளவேயில்லை. படிப்பறிவு குறைவாக இருந்த காலம். ஆகவே அது ஒரு பெரிய இழப்பல்ல, திராவிட இயக்கத்திற்கு. ஆனால் பாமரரையும் செய்தித்தாள் படிக்க வைத்த, கொச்சை நீக்கி, பேசும் மொழி நடையில் செய்திகளை எழுதவேண்டும் என்கிற கோட்பாட்டுடன் வெளிவந்த ஆதித்தனாரின் தினத்தந்தி கூட திராவிட இயக்கத்திற்குச் சார்பாகவோ சாதகமாகவோ செய்திகளை வெளியிட்டதில்லை.

அண்ணா ஒருமுறை தி மு க வைப் பருவ மங்கை எனவும் அவள் தமிழக மக்ககளின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் மேடையில் பேசப்போக, தி மு க வை எப்போதும் ஆண்களைக் கவர முற்படும் ஒரு பருவ மங்கையைப் போலவே கார்ட்டூன் போட்டு கேலி செய்து வந்த பத்திரிகைதான், தினத்தந்தி.

திராவிடர் கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தம் தம்பிமார்களின் துணையுடன் ஸ்தாபித்த அண்ணா அவர்கள், தொடக்கத்திலேயே திராவிட இயக்கத்தின் நாத்திக அடித்தளத்தைப் பெயர்த்துப் போட்டார். ஒன்றே குலம், ஒருவனே தேவனும் என்கிற திருமூலர் வாசகமே தி மு க வின் கடவுட் கொள்கை என்று அறிவித்துவிட்டார். அதிலும் முக்கியமாக இது திராவிடர் முன்னேற்றக் கழகம் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் என்று தெளிவு படுத்தி, அந்தப் பதப் பிரயோகத்திற்குப் புவியியல் ரீதியான ஸ்தலத்தைச் சுட்டும் குறிப்பை உணர்த்தினார். மேலும் முக்கியமாக, ஆரியம், அதாவது பார்ப்பனீயம், அனந்தாச்சாரியிடம் மட்டுமில்லை, அரங்கநாத முதலியரிடமும் இருக்கிறது என்று சொல்லி, பார்ப்பனர் என்கிற ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மீது வளர்த்துவிடப்பட்டிருந்த துவேஷத்தை மட்டுப்படுத்த முற்பட்டார்.

இன்றைக்கும் கருணாநிதி சமயம் வரும்போதெல்லாம் நான் சூத்திரன் என்று சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் அண்ணா அவர்கள் தம்மைச் சாமானியன் என்று சொல்லிக் கொள்வாரேயன்றி சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் சொற் பிரயோகமான சூத்திரன் என்ற வார்த்தையால் தம்மை முன்னிறுத்திக் கொண்டதில்லை. அண்ணா அவர்களும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தான். ஆனால் தமது தம்பிமார்களில் யார் யார் என்ன என்ன சாதி என்பதை அவர் ஆராய முற்பட்டதில்லை. ஆனால், எனது கட்சியின் மீது படிந்துள்ள சாயம் களையப் பட வேண்டும்; ஆகையால் பிராமண இளைஞர்கள் அதிக அளவில் எனது கட்சியில் சேர வேண்டும் என ஒரு குறிப்பிட்ட சாதியினரின் வரவை அவசியம் கருதி அவர் பிரத்தியேகமாகச் சொன்னதுண்டு. மற்றபடி சாதி என்கிற பிரக்ஞையே அண்ணாவிடம் இருந்ததில்லை. எம் ஜி ஆர் முதல் முதலில் அவரைச் சந்தித்தபோது அவர் பிராமணராயிருக்கக் கூடுமோ என்று நினைத்தார். அவ்வாறிருப்பின் அதற்காக மகிழ்ச்சியும் அடைந்தார். ஆனால் இங்கிதமின்றி என்ன சாதியென்று கேட்கவில்லை.

ஆரம்பத்தில் தி மு க ஒரு அரசியல் கட்சியாகத் தன்னை அறிவித்துக் கொள்ளாவிடினும், அரசியலில் அக்கரை உள்ள கட்சியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. அரசியலில் சமயச் சார்பிற்கு இடமில்லை என்பதை உணர்த்துவதற்காக, நான் காவி கட்டாத இந்து, குல்லாய் வைக்காத முகமதியன், சிலுவை அணியாத கிறிஸ்துவன் என்று சொன்னார், தி மு க வின் ஸ்தாபகர் அண்ணா. மதச் சார்பின்மை என்பது மதங்களை மறுப்பதல்ல; மாறாக, எல்லாச் சமயத்தவரையும் சம பாவனையில் பார்ப்பது என்பதை அதன் மூலம் அறிவித்தார்.

எனது தொடக்க காலம் தமிழக எல்லைக்கு வடக்கேதான் கழிந்தது. பள்ளியில் எனது தாய்மொழியான தமிழைக் கற்க வாய்ப்பில்லை. தமிழ் என்பதாக ஒரு மொழி இருக்கிறது என்கிற பிரக்ஞை கூடச் சுற்றுப்புறத்தில் இல்லை. இன்றுபோல் அன்று மொழிவழி மாநிலங்கள் இல்லை. விந்தியத்திற்குத் தெற்கே மதராஸ் என்பதாகச் சுமாரான ஒரு பட்டினம் உள்ளது; அதிலும் அதனைச் சுற்றிலும் வசிப்பவர்கள் மதராஸிகள் என்பதுதான் அன்று பொதுவாக தென்னாட்டவரல்லாத மக்களிடையே இருந்துவந்த அபிப்பிராயம். ஓரளவு பொது அறிவுள்ள படித்தவர்கள் மத்தியிலுங்கூட விந்தியத்திற்குத் தெற்கே நான்கு வளமான மொழிகளும் இலக்கண இலக்கிய நயங்களும், அவற்றையொட்டிய இணக்கமான கலாசாரக் கூறுகளும் உள்ளன என்கிற புரிதல் இருந்ததில்லை. தமிழ் என்கிற மிகத் தொன்மையான ஆனால் வியக்கத்தக்க முறையில் புத்திளமை குன்றாத ஒரு மொழி தெற்கே மொத்த பாரத தேசத்திற்கும் பெருமை சேர்க்கிற விதத்தில் அமையப் பெற்றுள்ளது என்கிற விவரணையே இல்லாத ஜன சமூகம் அது! இன்றுகூடத் தென்னாட்டு மொழிச் சிறப்பும் பண்பாட்டு மேன்மையும் வடக்கில் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லையெனினும்
நிலைமை முன்பிருந்த அளவுக்கு மோசமில்லை.

இவ்வளவுக்கும் காங்கிரஸ் மகாசபையில் தென்னாட்டுத் தலைவர்களுக்குப் பஞ்சமிருக்கவில்லை. வடக்கிலிருந்து ராமேஸ்வரத்திற்குப் புனித யாத்திரை வந்து செல்லும் வடக்கத்தியாருக்கும் குறைவில்லை. அதேபோல் காசி உள்ளிட்ட புண்ணியத் தலங்களிலும் பம்பாய், கல்கத்தா, தில்லி முதலான வட நாட்டு நகரங்களிலிலும் ஏராளமான தென்னாட்டவர் பல நிலைகளிலும் இருக்கத்தான் செய்தனர். தமது மொழி, கலாசார அடையாளங்களையும் வரலாற்றுச் சிறப்பினையும் அறிவுத்தளங்களில் வலியுறுத்த வேண்டும் என்கிற அக்கரை தென்னாட்டவருக்கு இல்லை. தங்களுக்குள் தொழிற் சங்கம் போல் தமிழ்ச்ச் சங்கம் என்றெல்லாம் வைத்துக்கொண்டு ஏதேனும் பண்டிகைக் காலங்களில் அந்தந்த மா நிலப் பிரமுகர்களை அழைத்து கவுரவித்து கட்டிடம், பள்ளிக்கூடம் என்றெல்லாம் மனு அளித்துக் கொண்டிருந்தார்களேயன்றி தங்கள் மொழி, கலைகள், கலாசாரம் போன்றவைகளைப் பரப்ப வலுவான இயக்கம்போல் செயல்படவில்லை. வட நாட்டுத் தலைவர்களில் தெற்கின் மேன்மைகள் குறித்து ஓரளவு அறிந்திருந்தவர்களும் உபசாரம்போல் பாராட்டுவார்களேயன்றி தென்னாட்டு மொழி, கலாசாரம் அகியவை குறித்து அறிவதில் தீவிரம் காட்டியதில்லை. விடுதலைப் போரில் தென் மாநிலங்களின் பங்களிப்பு கணிசமானதுதான் என்றாலும் அதற்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததில்லை. முதல் உலகப் போரின்போதே ஆங்கிலேய ஏகாதிபத்தயத்தை எதிர்க்க ராணுவம் திரட்டிய சண்பகராமன், ஆங்கிலேயப் பொருளாதார மேலாதிக்கத்தை முறியடிக்கும் பொருட்டுக் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரம், சுதந்திர ஆவேசத்தைத் தூண்டிவிட்ட சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, காங்கிரஸ் இயக்கம் தெற்கில் வேரூன்றக் காரணமாக இருந்த ஈ. வே. ரா., வீரேசலிங்கம் பந்துலு, தொழிற் சங்க முன்னோடிகளான திரு வி க, சிங்காரவேலர், சக்கரை செட்டியார் இன்னும் ஏராளமான தென்னாட்டவர் பற்றிச் சிறிதளவு அறிமுகமும் வடக்கே இருந்ததில்லை. தலித்துகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், சிவராஜன் பெயர்கள் அறியப்படவில்லை. தேசிய இயக்கங்களான காங்கிரசிலும் சரி, கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் சரி, தென்னாட்டவர் பின் பாட்டுப் பாடுகிறவர்களாகவே இருந்தனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று அதுகாறும் பிரிட்டிஷ் காலனியாக இருந்துவந்த பாரதத்தின் பகுதிகள் முதல் சுதந்திர தினம் எனக் கொண்டாடிய சமயத்தில் பிரெஞ்சு காலனியின் தலை நகரமான பாண்டிச்சேரியில்தான் நான் இருந்தேன், என் தந்தையார் ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் குடும்பத்தோடு தங்கியதால். அங்கும் வட நாட்டவரின், முக்கியமாக வங்காளியரின் ஆதிக்கம்தான். தமிழுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. அரவிந்தாசிரமப் பள்ளியில் தமிழ் கற்பிக்க ஏற்பாடு இல்லை, பாண்டிச்சேரி தமிழ் வழங்கும் பகுதி என்ற போதிலும்!

1947 ஆகஸ்ட் 15 அன்று என் வயதினரைத் திரட்டித் தெருவில் மூவண்ணக் கொடிபிடித்து ஊர்வலம் சென்றபோது உடன் வந்தவர்கள் தமிழ்ப் பிள்ளைகள்தான் என்றபோதிலும், மகாத்மா காந்திக்கு ஜே, நேருவுக்கு ஜே, நேதாஜிக்கு ஜே, பட்டேலுக்கு ஜே என்றுதான் முழக்கங்கள் வந்துகொண்டிருந்தனவேயன்றி, ஒரு தமிழ் நாட்டு, அல்லது தென்னாட்டுத் தலைவரின் பெயரும் உச்சரிக்கப்படவில்லை! ஒரு தமிழ்ப் பகுதியிலேயே இதுதான் நிலைமை.

இக்கால கட்டத்தில் தமிழ் நாட்டிலேயே வசிக்கும் வாய்ப்புக் கிட்டியபோது, தமிழ், தமிழர் என்கிற அடையாளங்களின் வலியுறுத்தல் மிக ஆவேசத்துடன் கேட்டது, திராவிட இயக்கத்திலிருந்து கிளை பிரிந்து வந்து தி மு கழகத்தைத் தம் தம்பிமார்கள் துணையுடன் நடத்திச் சென்ற அண்ணா அவர்கள் வாயிலாகத்தான். தமிழ் நாட்டில் ஆரவாரித்துக்கொண்டிருந்த திராவிட இயக்கத்தையும் அதனை வேரூன்றச் செய்தவர்களில் தலையாயவரான ஈ.வே.ரா. அவர்களையும் பற்றிக் கேள்வியுற நேர்ந்தது அண்ணா அவர்களின் பேச்சிலிருந்துதான். அண்ணாவைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தபின் அவரது தொடர்பிற்காக ஆர்வத்துடன் அவரை நான் நெருங்கியது மாணவப் பருவத்தில்தான். ஒரு பத்திரிகை நிருபனாக அவருக்கு அறிணிகமானவன் அல்ல.

பிற்காலத்தில் மக்களின் பேராதரவுபெற்ற மாபெரும் தலைவராக மாநில முதலமைச்சர் பொறுப்பினை ஏற்கின்ற அளவுக்கு அவர் மலர்ச்சி பெறுவார் என்றெல்லாõம் எதிர்பார்த்தோ, அவரோடு இருந்தால் எனக்கும் ஏதாவது பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்றோ திட்டமிட்டு அவரை அணுகவில்லை. உண்மையில், தமிழ் நாட்டு அரசியலில் தி மு க இவ்வளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்கிற யூகமே அன்று இருந்ததில்லை. மேலும் தி மு க என்றாலே ஒருவிதத் தீண்டாமை உணர்வுதான் பிறரிடம் காணப்படும்.

அன்ணா அவர்கள் முதல்வர் பதவியை ஏற்றபின்னரும் ஒரு பத்திரிகையாளனாகத்தான் பிற பத்திரிகையாளருடன் சேர்ந்து அவரைப் பார்த்ததுண்டே தவிர நானாக ஒரு தடவைகூட அவரை முன்பே அறிந்தவன் என்கிற உரிமையைப் பயன் படுத்தி அவரைக் காணச் சென்றதில்லை. அண்ணாவின் மனதில் நான் தமிழ் நாட்டிற்கு வெளியிலிருந்தவன் என்கிற சித்திரம் பதிந்துவிட்டிருந்ததால் எப்போதுமே ஆங்கிலத்தில்தான் என்னுடன் உரையாடுவார். முதலமைச்சர் கூட்டும் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது மட்டுமே நான் அவரைச் சந்திக்கத் தொடங்கியிருந்ததால் ஒருணிறை ஷûட் யூ ஆல்வேஸ் கம் டு மீ இன் டிஸ்கைஸ் ஆப் எ ப்ரெஸ்மேன் ஒன்லி என்று கேட்டார். அதன் பிறகும் அவரிடமிருந்து தகவல் வரும்போது மட்டுமே அவரைக் காணச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். கூட்டத்தோடு அல்லாமல் தனியாகவும் நான் வரவேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு அழைத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிந்திருந்தேன். புதிதாக அமைந்துள்ள தமது ஆட்சி குறித்து மக்களிடையே எம்மாதிரியான அபிப்பிராயம் உள்ளது , தேர்தலின் போது இருந்த அமோக ஆதரவு எந்த அளவுக்கு நீடிக்கிறது என்பதையெல்லாம் தம்மீது தனிப்பட்ட முறையில் அபிமானமுள்ள ஒரு நபரிடமிருந்து நம்பகமான தகவல் கிடைக்கக்கூடும் என்பதாலேயே அவர் என்னை அவ்வப்போது அழைக்கிறார் என்பதையும் அறிந்திருந்தேன். மேலும் நான் பிற கட்சியினருடனும் பழகுபவன், முக்கியமாகக் காமராஜர், சி. எஸ். முதலானோரிடம் சென்று வருபவன் என்பதாலும் அண்ணா அவ்வப்போது என்னை அழைத்திருக்கக்கூடும். ஏனெனில் என்னிடம் பெரும்பாலும் அவர் விசாரிப்பது மக்களின் மனவோட்டம் பற்றியும் காங்கிரசாரின் அரசியல் பற்றியும்தான்.

அண்ணாவை வெறும் சிலை வடிவங்களாகவும், வெற்று வார்த்தைப் புகழாரங்கள் சூட்டப் படுகிறவராகவும் மட்டுமே பார்த்துப் பழகிய இன்றைய தலைமுறையினர் சிலர், அண்ணாவைப் பற்றி நான் எழுதுவதைப் படித்துவிட்டு அலட்சிய தொனியில் அஞ்சல் அனுப்புவ
துண்டு. நீங்கள் இப்படியெல்லாம் பாராட்டும் அளவுக்கு அண்ணா அப்படி என்ன சாதித்து விட்டார், தமிழ் நாட்டிற்காக எனக் கேட்பார்கள். என் தலைமுறையைச் சேர்ந்த சிலருக்கும் அப்படியொரு எண்ணம் உண்டு. இவர்களுடைய கவனத்திற்கு ஒரு விஷயத்தைக் கொண்டு வருவது முக்கியம்.

பாரதம் குடியரசான பின் நடந்த முதல் பொதுத் தேர்தலின்போதே காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் ஆட்டங் கண்டு விட்டது. ஆந்திரப் பகுதிகளிலிருந்தும் பாலக்காடு பகுதிகளிலிருந்தும் மட்டுமின்றித் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டசபையின் உறுப்பினர்களாக உள்ளே வந்து உட்கார்ந்திருந்தனர். ராமமூர்த்தி, ஜீவானந்தம், ஏ எஸ் கே அய்யங்கார், மணலி கந்தசாமி என்று சிவப்பு நட்சத்திரங்கள் சென்னை ராஜதானியின் சட்டசபையில் ஜ்வலித்துக்கொண்டிருந்த காலம். அந்த நட்சத்திரங்களின் ஒளியினைக் குன்றச் செய்ய வேண்டுமே என்றுதான் ராஜாஜி என்கிற சூரியனைக் காங்கிரஸ் சட்டசபைக்குள் கொண்டுவரவேண்டியதாயிற்று, மேலவை உறுப்பினராக!

1952 ல் தமிழ் நாட்டில் பேரியக்கமாகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம் 1957ல் காணாமலே போனது எவ்வாறு? ராஜாஜி முதல்வராக இருந்த போது சட்டசபையிலேயே கம்யூனிஸ்ட் கட்சி எனது முதல் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்தார். அண்ணா அப்படி ஏதும் வாய்விட்டுச் சொல்லாமலேயே அந்த எதிரியை முடக்கிப் போட்டார். தமிழ் நாடு கம்யூனிஸ்ட்டுகளின் பிடியில் போய்விடாதவாறு பார்த்துக்கொண்டவர் அண்ணா. தமிழ் நாட்டிற்கு அண்ணாவால் கிட்டிய பெரும்பயன் இது. கம்யூனிஸ்ட் கட்சி, அது இடமாயினும் சரி, வலமாயினும் சரி, மக்களை விழுந்து பிடுங்க மாட்டாமல் தமிழ் நாட்டில் ஒரு சில மூலை முடுக்குகளில் மட்டுமே தலையை நிமிர்த்திப் பார்க்கின்ற பிராணியாக ஒடுங்கிப்போனமைக்கு அண்ணாவே முழுமுதல் காரணமாவார். கம்யூனிஸ்ட் கட்சியினர் மேடையில் தி மு க வை எச்சரித்துக் கொண்டும் தனிமையில் நச்சரித்துக்கொண்டும் சட்ட மன்றத்தில் ஒரு சில இடங்களுக்காக மன்றாடவேண்டிய நிலைமையை உருவாக்கியவர் அண்ணா அவர்கள். அண்ணாவை நான் நன்றியுடன் நினைத்துக்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

திராவிட இயக்கத்தின் அரசியல் வாரிசாக வந்த தி மு க அதிகாரம் மிக்க ஆட்சிப் பொறுப்பிற்கு வர முடிந்ததே அது திராவிட இயக்கத்திற்கான அடிப்படை குணாம்சங்களையெல்லாம் தன்னிடமிருந்து சிறுகச் சிறுகக் கழற்றிப் போட்டுக் கொண்டே வந்தமையால்தான்! அதனால்தான் அதிகாரம் ஏதும் இல்லாதபோது செல்வாக்குடன் பரவி வந்த திராவிட இயக்கம், அதன் ஒரு கூறான தி மு க அதிகாரத்தைக் கைப்பற்றிய சூட்டோடு சூடாகவே கரைந்துபோகத் தொடங்கிவிட்டது!

கம்யூனிஸ்ட் இயக்கம் எப்படிக் கூலி உயர்வுக்காகக் கொடி பிடிக்கும் அமைப்பாகக் குறுகிப் போயிற்றோ அதே மாதிரி திராவிட இயக்கம் முற்போக்கு வகுப்பினர் பட்டியலிலிருந்து பிற்போக்கு வகுப்பினர் பட்டியல், பிற்போக்கு வகுப்பினர் பட்டியலிலிருந்து மிகவும் பிற்பட்டோர் பட்டியல் என்று பல்வேறு சாதியினரும் தம்மைக் கீழே, கீழே இறக்கிக் கொண்டு, இட ஒதுக்கீடு கோருவதற்கு உதவும் ஒரு சாதனமாகவும், கல்வி வியாபாரம் செய்யும் ஸ்தாபனமாகவும் சுருங்கிப் போனது!

அது கல்! பேசாது! என்று கருணாநிதி வசனம் எழுதின மாதிரியே, இன்று ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு ஈ வே ரா அவர்களின் சிலைகள் நின்ற வாக்கிலும் அமர்ந்த கோலத்திலும் காட்சியளித்தாலும் அவை பேசுவதில்லை. ஆகையால் பிரச்சினையும் இல்லை!

இன்றைக்கு திராவிடம், திராவிடர் என்கிற பிளவுப் பிரசாரம், ஹிந்தி எதிர்ப்பு, தேசிய மறுப்பு, ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மீதான துவேஷத் தூண்டுதல்கள் யாவும் மக்களிடையே பிரசாரம் செய்யப்படுவதில்லை, செய்தாலும் அவற்றுக்குச் செலாவணியும் இல்லை.

ஈ வே ரா அவர்கள் ஹிந்துக்கள் தெய்வமாக வணங்கியோரின் விக்கிரகங்களுக்கு அவமரியாதை செய்தபோது ஹிந்துக்கள் தமது மரபின் பிரகாரம் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதத்தில் முன்னிலும் கூடுதலான வீரியத்துடன் அந்த தெய்வங்களுக்கு ஆராதனை செய்யலானார்கள். கண்டனப் பேரணி நடத்தி வன்முறையில் இறங்கி வீதியோரம் நிறுத்தப்பட்ட யார் யாருக்கோ சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கவில்லை. கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்களின் மீது கல் எறியவில்லை. கடைகளைச் சூறையாடவில்லை. இந்த அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐம்பதுகளில் ஆக்ரோஷத்துடன் நடைபெற்ற ஹிந்து சமய எதிர்ப்புப் பிரசாரம் இன்று மக்களிடையே எடுபடுவதில்லை. திராவிட இயக்கப் பிரசாரம் என்பது இன்று ஒரு சிறு குழுவினருக்கிடையேயான தனிச் சுற்றுக்கு மட்டும் என்பதான அளவில் குறுகிப் போய்விட்டது.

சாதிகளை வேரறுக்க வேண்டும் என்று உத்வேகத்துடன் கிளம்பிய திராவிட இயக்கம் இன்று சாதிகளால்தான் உயிர் தரித்திருக்கிறது. சாதிகளை வலியுறுத்தி, அவற்றின் உயர்வு தாழ்ச்சியைப் பேசி, சமுதாயத்தில் சாதிகளின் நிரந்தரத்தை வற்புறுத்தும் சிறு குழுவாக அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீடு என்ற சாக்கில் சாதிகள் சாசுவதமாக இருக்க விழையும் ஒரு பிற்போக்கு வாதமாக அதன் கோட்பாடுகள் மெலிந்து போயின.

நியாயப்படி தி மு க ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததுமே தனது திராவிட பாரம்பரியத்திற்கு ஏற்ப, ஹிந்து அற நிலையத் துறை தனது மதச் சார்பின்மைக்கு முரணாக இருப்பதால் அதனை அரசின் பொறுப்பிலிருந்து விடுவித்து, ஹிந்து சமயச் சான்றோர் பலர் அடங்கிய குழுவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கவேண்டும். மாறாக அனைத்துச் சாதியினரும் ஹிந்து ஆலயங்களில் அர்ச்சகராகலாம் என்று ஏதோ புரட்சி செய்துவிட்டது போல் பேசுகிற அளவுக்கு, சாதிகளை அங்கீகரித்தும், ஆலய வழிபாட்டை ஒப்புக்கொண்டும் இயங்குகிற அரசாக மாறிப்போனது! இன்றைக்கு அர்ச்சகர்களாக உள்ளவர்களின் வீட்டுப் பிள்ளைகளே அர்ச்சகர் பணிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு கணிசமான வருமானம் தேடப்போய்க்கொண்டிருக்கிறார்கள். எல்லருக்குமா அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சிங்ப்பூரிலும் உள்ள ஹிந்து ஆலயங்களில் அர்ச்சகர் பணி கிடைத்துவிடும்? ஆக சாதிகளை விடாமல் பற்றிக் கொள்வதற்கான ஒரு விளைவாகத்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் ஏற்பாடும் இருக்கும். அதற்கு வழிசெய்வதோ சாதிகளை மறுப்பதில் உறுதி காட்டிய திராவிட இயக்கத்தின் வழி வந்தவர்கள்!

கலப்புத் திருமணம் என்று சொன்னாலே மனுஷனுக்கும் மிருகத்துக்குமா கலியாணம், கலப்புத் திருமணம்னு சொல்ல; மனுஷருக்குள்ளேதானே நடக்குது இது, சாதி மறுப்புத் திருமணம்னு சொல்லு இதை என்று அதட்டல் போட்ட ஈ வே ரா அவர்களின் கொள்கைக்கு முரணான நடவடிக்கை இது என்கிற பகுத்தறிவு கூட இல்லாமற் போயிற்றே! நடப்பில் உள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு சாதிகளின் இருத்தலுக்கேற்ப இப்படி சமரசம் செய்துகொள்வதாகச் சமாதானம் வேறு! இப்படி சமரசம் செய்துகொண்டேயிருந்தால் நடப்பில் உள்ள நிலைமை எப்படி மாறும்? சீர்திருத்தம் என்பது நடப்பில் உள்ள நிலைமையைக் காலத்திற்கேற்ப மாற்றியமைப்பதே அல்லவா? சாதி ஒழிப்பு என்றால் லாபமோ நஷ்டமோ எதனையும் கணக்குப் பார்ர்துக்கொண்டிருக்காமல் அதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்குவதுதான்.

ஆக, திராவிட இயக்கம் ஈடுபட்டிருந்த சாதி மறுப்புக்கான தீவிர பிரசாரமும் இன்று இல்லை. அதற்கு முரணாக சாதிகளைக் கட்டிக்கொண்டு அழும் அமைப்பாக அது மாறிப்போனது.

திராவிட இயக்கத்திற்கு வாரிசுரிமை கொண்டாடும் அரசியல் கட்சிகள் எவற்றுக்கும் அதற்கான அடையாளம் எதுவும் இன்று இல்லை. அரசியல், பொருளதாரம், சமூகம் என எந்த அம்சத்திலும் எவ்விதக் கோட்பாடுமின்றி, ஆட்சியை கைப்பற்றி அதனைத் தக்கவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியுடன், பங்காளிக் காய்ச்சலும் சேரச் செயல்படும் குழுக்கள் என்பதைத் தவிர அவற்றுக்கு எவ்வித மரியாதையும் இல்லை.

அரசியலுக்கு வராமல் திராவிடர் கழகமாகத் தொடரும் அமைப்பும் பிளந்து போயிற்று. அதன் சொத்துரிமைகளை சொந்தமாக்கிக் கொண்டவர்கள் ஒரு வியாபார ஸ்தாபனமாகச் செயல் படுவதும், அந்த வியாபாரத்தை விஸ்தரிப்பதற்கான வழிகளைக் கண்டறிவதுமாக மிகவும் வசதியாகக் காலங்கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்டித்து வெளியேறியவர்கள் தனிச் சுற்றுக்கு மட்டும் என்கிற கட்டத்தை இன்னும் தாண்டியாகவில்லை. பத்திரிகை பலமோ செல்வச் செழிப்போ, வேறு வசதிகளோ இல்லாமல் வெகுஜன இயக்கம் போல் வலிமையுடன் விளங்கிய திராவிட இயக்கதிற்கு இன்றுள்ள முகம் இது!

அதன் பிரசாரகர்கள் கூட்டங்களில் பேச பஸ்ஸில் மட்டுமா, சமயங்களில் லாரிகளில் கூட ஓட்டுனருக்குப் பக்கத்தில் ஒண்டிக்கொண்டு போவார்கள்; கூப்பிட்ட கட்சிக்காரன் வாங்கித் தருவதை உண்பார்கள். செலவுக்கு அவன் கொடுப்பதை வாங்கிக் கொள்வர்கள். கூட்டச் செலவுக்கே அந்தக் கூட்டத்தின் போது துண்டேந்தித்தான் சரிக்கட்டுவார்கள். பெரும்பாலும் துண்டு விழும்! மேஜை நாற்காலி வாடகைக்காரனிடமும் ஒலிபெருக்கி ஆளிடமும் தவணை சொல்வார்கள். சிதம்பரத்தில் இப்படியான சந்தர்ப்பங்களில் நகரச் செயலாளர் சக்கரவர்த்தியோ பொன் சொக்கலிங்கமோ மாப்ளே காசு கொறையுது, என்று பலமுறை அவசரமாக வந்து கேட்டு, நானும் கொடுத்ததுண்டு! அந்த அளவுக்கு எளிமையாக இருந்த இயக்கம். இன்று அது எங்கே?

வலுவான கோட்பாடுகள், ஆதாரம் உள்ள நியாயங்கள் என ஏதும் இல்லாததால் திராவிட இயக்கத்தால் வேரோட முடியாமல் போனது. எவரும்போராடி முறியடிக்க வேண்டிய அவசியம் இன்றி அது தானாகவே தனது இருப்பை இழந்தது.

இன்று திராவிட இயக்கம் என்பதாக ஒரு வலுவான அமைப்பு இல்லை. ஆனால் அதனை உரிமை கொண்டாடிக் கொண்டு சில அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றுக்கு திராவிட இயக்கம் வலியுறுத்திய கருத்துகளோடு எவ்வித சம்பந்தமும் இல்லை. பதவியைக் கைப்பற்றுதல் என்கிற ஓர் அம்சக் கொள்கை தவிர வேறு தெளிவான கோட்பாடோ செயல் திட்டமோ அவற்றுக்கு இல்லை.

பொறுப்புணர்வும், தேச நலனில் நாட்டமும் பதவிப் பசி இல்லாமையும் , தெளிவான செயல் திட்டங்களுமுள்ள தேசிய சக்திகள் மனம் வைத்தால் பதவியைக் கைப்பற்றுதல் தவிர வேறு லட்சியம் ஏதும் இல்லாத திராவிடக் கட்சிகளை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவது சாத்தியம்தான். இதற்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும். பிரதி பலன் கருதாது கடுமையாக உழைப்பதில் ஆர்வம் வேண்டும். தனி மனிதனின் ஆயுள் காலத்தைவிட தேசத்தின் ஆயுள் காலம் மிகவும் கூடுதல் ஆதலால் தனது காலத்திலேயே பலன் கிடைக்கத் தாமதமாயினும் பரவாயில்லை என்னும் சுய நலமின்மை வேண்டும். பிற கட்சிகளின் துணையால்தான் இன்று தமிழ் நாட்டில் இருக்கிற பிரதான திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றன. முடிந்தவரை பேரம் பேசி இயன்றவரை அதிக இடங்களை திராவிடக் கட்சிகளிடமிருந்து பெற்றாலே போதும் என்கிற மனப்பான்மை மாற வேண்டும். கொஞ்சம் சுயமரியாதையும் அவசியம். ஜாதியையும் பணவசதியையும் வைத்துக் கணக்குப் போடும் புத்தி மாற வேண்டும். தோற்றாலும் பரவாயில்லை, தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொள்வோம் என்கிற உறுதி வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டும் என்றில்லாமல் இடைவிடாது தெருமுனைக் கூட்டம், வீட்டுக்கு வீடு நேர்முகக் கருத்துப் பரிமாற்றம், மக்களின் சிறு பிரச்சினகளையும் கவனித்துத் தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபடுதல் என்று செயல் திட்டங்களை வகுத்துக்கொண்டு அசுர வேகத்தில் இயங்க வேண்டும். மக்கள் வேறு வழியின்றித்தான், ஓர் ஆழ்ந்த மனப்பதிவின் காரணமாகவும் திரும்பத் திரும்ப இவ்விரு திராவிடக் கட்சிகளைத் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது அவற்றுக்குச் சரியான மாற்றுக் கட்சி என்று மக்களிடையே நம்பிக்கை பிறக்குமாறு பிற கட்சிகள் செயல்பட வேண்டும். அவ்விரு திராவிடக் கட்சிகளையும் பிற கட்சிகள் ஒருமித்துப் புறக்கணித்து அரசியல் களத்தில் இறங்க வேண்டும். செயல் திட்டங்கள், குறைந்த பட்ச கருத்தொற்றுமைகள் என்றெல்லாம் இல்லாமல் தொகுதிப் பங்கீடு மட்டுமே செய்துகொள்ளும் சாமர்த்தியத்தை எல்லா அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும். இது சாத்தியமாகும்போது, திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கம் இல்லாத அரசியலையும் ஆட்சிமுறையையும் தமிழ் நாட்டில் காண்பது சாத்தியமாகும்.


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்