தாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் !

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமனிதத் தேவைகளை ஒதுக்கி

முனிவர் போல்

கடுந்தவம் புரிந்து வாழ்வில்

விடுதலை பெறுவது

எனக்குகந்த பாதை யில்லை !

என்னைச் சுற்றியுள்ள

எண்ணற்ற

பந்த பாசப் பூரிப்புகளில்

எந்தன் சுதந்திரச் சுவையிருக்கும் !

உலகப் புதைமண் பானையில்

திரும்பத் திரும்ப அமுதத்தை

நிரப்பித் தொடர்ந்து

ஊற்றுகிறாய்

பன்னிறத்தில், நறுமணத்தில் !

உனது ஒளி விளக்கில்

எனது பிரபஞ்ச மெல்லாம்

தூண்டப் பட

ஆயிரம் ஆயிரம் தீப் பந்தங்களை

அர்ப்பணம் செய்கிறேன்

உன் சந்நிதி நடுவில் !

என் ஐம்புலன்களின்

வாசற் கதவுகளை மூடிக் கொண்டு

மாதவம் புரிவது

எனக்குகந்த பாதை யில்லை !

கண்ணில் தெரியும் இன்பம்

கானம், நறுமணம் யாவும் உந்தன்

களிப்பினிலே

கண்டு கொள்ள முடியும் !

என் உள்ளக் கனல்

உன்னத மாய்ப் பற்றி

எரிவதில்தான்

எனக்குப் பேராவல் இருக்கும் !

அதில் விளையும் கனி மீதுதான்

எனக்குப் பெரு மோகம் இருக்கும் !

உன்னுள்ளே வீற்றிருக்கும்

அன்னை மகத்துவம் கண்டு

வியந்து நிற்கிறேன்

அந்தி மயங்கும் உந்தன் இனிமையில் !

பெருமை எனக்குச்

சிறிது மில்லை

மனிதர் ஆத்ம வடிவில் !

தூசியும் மண்ணும்

பூசி எனக்கு

ஆசிகள் பொழிந்தாய்

அன்புடன் !

************

Original Source: A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 18, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா