தாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே !

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எதற்கும் நான் அஞ்சுவ தில்லை !
நிலமாய்க் கிடந்தால் என்ன ?
நீராய்ப் போனால் என்ன ?
புல்லாய், கனியாய், பூவாய்
எதுவாய் மாறினால் என்ன ?
பூமியின் மீது
ஆடு, மாடு மற்றும்
புள்ளினங் களோடு
ஓடியாடித் திரிந்தால் என்ன ?
எதற்கும் நான் நாணுவ தில்லை !
எங்கு நான் புகுந்தாலும்,
முடிவிலாப்
பந்த பாசப் பிணைப்புகளில்
சொந்த முண்டு
அந்தமே இல்லாத
எந்தனுக்கு !

மீண்டும் ஏற்றுக்கொள் என்னைப்
பூமித் தாயே !
உனது கரங்களில்
அணைத்துக் கொள்
உந்தன் குழந்தையை
பரந்த உன் பாதுகாப்புப்
போர்வைக்குள் !
வரம்பில்லாத
திசைகள் எங்கும் தெளித்தென்னை
வசந்த காலத்தில் எழும்
பூரிப்பு போல்
பூமித் தாயே ! நான்
உன்னதம் பெற வேண்டும்
உந்தன் மண்ணிலே !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 4, 2008)]

Series Navigation