தஸ்லிமா நஸ்ரீனின்பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ஆங்கில மூலம்: கரோலின்ரைட் )

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

தமிழில்: சிபிச்செல்வன்


அதன் பிறகு (Thereafter)
என் சகோதரி ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைப் பாடுவது வழக்கம்
அவள் சிமோன தி புவோவை விரும்பிப் படிப்பதும் வழக்கம்.
மதிய குளியலை மறந்து அவள் தன்னை மறந்து கார்ல் மார்க்ஸ்,
கார்கி, டால்ஸ்டாய், மற்றும் மாணிக் பந்தோபாத்யாய நாவல்கள் போன்றவற்றில் மூழ்குவாள்.
அவளுடைய பழைய ஞாபகத்தில் மூழ்குவதற்கு லாரா இன்கல்ஸ் வைல்டர்தான் பிடித்தமானவர்
போரைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தால், பாதி ராத்திரிவரை அழுது கொண்டேயிருப்பாள்.
என் சகோதரி அருமையான கவிதைகளை வாசிப்பாள்;
அவளுக்கு விருப்பமான சங்கா கோஷ், நீரேந்திரநாத் சக்கரபாரதி, நெருடா, மற்றும் யெவ்துஜூங்கோ
என் சகோதரி காட்டை நேசித்தாள், தோட்டத்தையல்ல;
அவள் சிலைகளை விரும்புவாள். ஒரு முறை இவற்றிற்காகப் பாரீஸ் போக டிக்கெட் வாங்கினாள்.
இப்போது என் சகோதரியின் கவிதை நோட்டில்
காய்கறி பற்றிய விவரங்களை எழுதி வைத்திருக்கிறாள்,
இப்போது பெருமையோடு சுற்றி வருகிறாள், உடல்நிறைய உலோக ஆபரணங்களை அணிந்து
அவள் பெருமையோடு சொல்கிறாள்
அரசியலைப்பற்றி
எண்ணியதில்லை
கலாச்சாரம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் அதுபற்றி அவள் கவலைப்படுவதில்லை.
அவளின் வீணை மீது தூசி படிந்திருக்கிறது, அவளின் தம்புரா எலி வலையானது
இப்போது அவள் கடை வீதிகளுக்குப் போய் வீட்டிற்கு தேவையான பொருட்களைச் சேகரிப்பதில்
கெட்டிக்காரியாகி விட்டாள்.
—-

நெருப்பு

அவன் என் கணவன், அகராதி கூறுகிறது அவன் என்னுடைய தலைவன், பிரபு, குரு, இத்யாதி இத்யாதி.
அவன் என்னுடைய கடவுள் என்பதைச் சமுதாயம் ஒப்புக்கொண்டது.
என்னுடைய நடுங்குகிற கிழக்கணவன் நன்றாக கற்றுக் கொண்டான்
மேலாதிக்கத்துடன் நடத்தை விதிமுறைகளைச் செயல்படுத்தும் அதிகாரம் குறித்து
ஒளிவிசுகிற சொக்கத்தின் எல்லையில், இறவாத தன்மையுடைய பாலத்தின்மீது உலாபோவதில் தணியாத ஆசையுடையவன் அவன்.
அவன் எல்லாப் பழவகைகளையும், பளிச்சென்று கிளர்ச்சியூட்டும் வண்ணங்களையும், சுவையான உணவுகளையும் விரும்பினான். அவனின் அடங்கா காமத்திற்குப் பின்
அழகு தேவதையின் உடலை மென்று சுவைத்து, சப்பி, உறிஞ்சி நக்குகிறான்.
இவையொன்றும் என் தலையில் எழுதி வைத்திருக்கவில்லை, ஆனால் விதி, இந்த மண்ணில் வாழும் நாட்கள்
முழுவதும் எரியும் சூட்டடுப்பில் தள்ளப்பட்ட விறகு போலாக்குகிறது இச்சமூகம்.
இந்த வாழ்விற்குபின், நான் பார்க்கிறேன் நடுங்குகிற கிழக்கணவன் எழுபத்தி ஏழு வயதிற்குப்பின்னும்
காமத்தில் திளைப்பதை.
நான் மட்டுமே தனியாக இருக்கிறேன், இன்பமான சொர்க்கத்தில் தோட்டத்தின் நான் மட்டுமே தனிமையில்
மனிதனின் நாற்றம் வீசும் குருட்டு ஆபாசத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நான் உள்ளுக்குள் காலங்காலமாகத் தீரா நரகத்தில் எரிந்துகொண்டிருக்கிறேன்,
ஒரு கற்புள்ள நற்குணமுள்ள பெண் என்பதால்.
—-
sibichelvan@gmail.com

Series Navigation

தமிழில்: சிபிச்செல்வன்

தமிழில்: சிபிச்செல்வன்