தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

மலர்மன்னன்


தஸ்லிமா நஸ்ரீன் தமது மார்க்கத்தை இழிவுசெய்து எழுதிவிட்டார் என்று குற்றம் சாட்டி அவரது தலைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் விலை தரப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள இன்றைய நிலையில், ஏறத்தாழ அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே ஹிந்துஸ்தானத்தில் முகமதியப் பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் தமது மார்க்க நெறிமுறைகளுக்கு விரோதமாக மிகவும் ஆபாசமாக எழுதியிருக்கிறார் எனச் சில முகமதிய மார்க்க குருமார்கள் தூண்டுதலின் பேரில் அவர்மீது தொடரப்பட்ட வழக்கு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. நல்ல வேளையாக சுக்தாய் எதிர்கொள்ள நேர்ந்தது வெறும் நீதிமன்ற வழக்குதான். மனம் போன போக்கில் மரன தண்டனை விதித்துக் கொலை செய்யத் தூண்டுகிற மாதிரி பத்வா விடுப்பது அன்று நடைமுறைக்கு வந்திருக்கவில்லை.

வட மாநிலங்களில் குளிருக்கு அடக்கமாகப் போர்த்திக்கொள்ள உபயோகப்படும் ரஜாய் என்கிற போர்வையைக் குறியீடாக வைத்து 1941ல் லிஹாப் என்கிற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதினார், சுக்தாய். கணவன் என்று ஒருவன் தனக்கு இருக்கிறானா என்கிற நிச்சயமில்லாத ஒரு சீமாட்டி தன் பணிபெண்ணுடன் உறவு வைத்திருப்பது பற்றிய நுணுக்கமான கதை அது. மேலோட்டாமாகப் படித்தால் எதுவும் தெளிவாகப் புரியாதவாறு மிகவும் இங்கிதமாகத்தான் கதையை எழுதியிருந்தார், சுக்தாய். ஆபாசம் என்று சுட்டிக்காட்டும் படியாக ஒரு சொல்கூட அதில் இல்லை. பல தாரங்களை வைத்துக்கொண்டு, தமது தேவைகளின்போது மட்டுமே அவர்களின் நினைவு வருமாறு வேறு களியாட்டங்களிலும் திளைக்கிற ஆண்கள் மீது குற்றம் சாட்டுகிற கோபம்தான் அப்படியொரு மறைமுகமான சிறுகதையாக அவரிடமிருந்து வெளிப்பட்டது. உடனே தங்கள் மார்க்கத்திற்கு விரோதமாக ஒழுக்ககேட்டைத் தூண்டுகிற சிறுகதை என்று அதனைக் கண்டித்து, அன்றைய பம்பாய் மாகாண அரசிடம் புகார் செய்து அதற்குத் தடை விதிக்கச் செய்தார்கள். போயும் போயும் ஒரு பெண்ணாகப் பிறந்த போதிலும் தங்கள் சமூகத்தையே தலை குனியச் செய்யும் படி பகிரங்கமாக எழுதுகிற அளவுக்குத் துணிந்துவிட்ட சுக்தாயை இதோடு விடலாகாது என்று ஆபாச எழுத்தாளர் எனக் குற்றம் சாட்டி அவர் மீது வழக்குத் தொடரச் சிலர் முற்பட்டனர்.


( இஸ்மத் சுக்தாய் )

அன்று பாரதம், பாகிஸ்தான் என இரு தேசங்களாக ஹிந்துஸ்தானம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. சுக்தாய் மீதான வழக்கு இன்று பாகிஸ்தானில் இருக்கிற லஹோர் நீதி மன்றத்தில் நடந்தது. ஹிந்தி திரைப்படத் துறையில் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஈடுபட்டிருந்த ஷஹீத் லத்தீபை மணந்து, தானும் திரைக்கதை எழுதுவதில் முனைந்திருந்த சுக்தாய் வழக்கை எதிர்கொள்வதற்காக மும்பையிலிருந்து லஹோர் வரை செல்ல வேண்டியதாயிற்று. ஆனால் அதையும் உல்லாசமாக ஏதோ சுற்றுலாவுக்குப் போகிற மாதிரிதான் எடுத்துக் கொண்டார் சுக்தாய். அதற்கேற்ப அந்த வழக்கும் குற்றம் நிரூபணமாகவில்லை என்று சுக்தாய்க்குச் சாதகமாகவே தீர்ப்பாகியது.

ஆபாச எழுத்திற்காகத் தன் மீது நடந்த சாரமில்லாத வழக்கை விவரித்துப் பின்னர் மிகவும் நகைச்சுவை ததும்ப எழுதினார் சுக்தாய். ஒரு பெண் என்கிற காரணத்திற்காகத் தான் எதிர்கொள்ள நேரிடும் சில பிரத்தியேகத் தடங்கல்களையும் அதில் ஒரு குற்றச்சாட்டைப் போல் அல்லாது பிரதியட்ச நிலவரத்தை விவரிப்பதுபோலப் பதிவு செய்திருக்கிறார், அவர்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் மும்பை மாநகரிலும் தில்லியிலும் கலை இலக்கியத் தளங்களில் மிகத் தீவிரமாக இயங்கிவந்தவர்களில் சாதத் ஹாசன் மாண்டோவும் இஸ்மத் சுக்தாயும் மிகவும் முக்கியமானவர்கள். இருவரும் ஹிந்தி திரைப்படத் துறையிலும் ஆளுமை மிக்கவர்களாகவே இருந்தனர்.

இந்திய முஸ்லிம் லீக் சமயத்தின் அடிப்படையில் முகமதியர்களுக்கெனத் தனி தேசம் வேண்டும் என்று வலியுறுத்தியபோது, அதைவிட அபத்தம் ஏதுமில்லை என்று சொன்னவர்கள் மாண்டோவும், சுக்தாயும். இருவரும் சம காலத்தவர் மட்டுமின்றி, நெருங்கிய நண்பர்களாகவும் ஒத்த சிந்தனைப் போக்குள்ளவர்களாவும் இருந்தனர்.
நாற்பதுகளின் மையத்தில் பிரிவினை கோஷம் மிகவும் வலுத்துவிட்டிருந்த போதிலும் இருவருமே தைரியமாக எதிர்க் குரல் எழுப்பினார்கள். மாண்டோ தமக்கே உரிய எள்ளல் தொனியில் பிரிவினையக் கிண்டல் செய்தார் என்றால், சுக்தாய் மிகவும் வெளிப்படையாகத் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துப் பிரிவினைக் கோரிக்கையைக் கண்டித்தார்.
சமயத்தால் நான் முகமதியராக இருக்கலாம. ஆனால் பாரம்பரியமாக எனக்குச் சொந்தமாக இருந்துவரும் ஹிந்து பண்பாட்டுக் கூறுகள், அடையாளங்கள், தொன்மங்கள் ஆகியவை மீது எனக்கு உள்ள உரிமையை என்னால் விட்டுக் கொடுக்கமுடியாது. அவற்றை நான் இழக்கத் தயாரில்லை என்று எழுதினார், சுக்தாய். ராதாக்ருஷ்ண பிரேமையைச் சிலாகித்து எழுதி, பெண்களைத் தனது தோழிகளாய் மதித்து அன்பு செலுத்திய கண்ணபிரான் மீது தனக்கு இருந்த அபிமானத்தை வெளிப்படுத்திக் கொள்ளவும் சுக்தாய் தயங்கவில்லை.

மாண்டோவாவது பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு மீண்டும் தமது வெளிப்படையான எழுத்துகளுக்காக தேசத் துரோகக் குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகளில் அவதிப்பட்டு, மனமுடைந்து போதையில் மூழ்கி அற்ப ஆயுளில் இறந்தே போனார். ஆனால் சுக்தாய் ஹிந்துஸ்தானம் தான் எனது தாய்மண் என்று பிடிவாதமாக இறுதி வரை மும்பையிலேயே வாழ்ந்தார். 1991 ல் தனது 76 ஆவது வயதில் அவர் மரித்தபோது, தனது உடலை அடக்கம் செய்வதற்குப் பதிலாகத் தகனம்தான் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே உயில் எழுதிவைத்துவிட்டுத்தான் உயிர் துறந்தார். அப்போதும் மார்க்கத் தலைவர்கள் பெரும் சச்சரவுகளைக் கிளப்பத் தவறவில்லை. எனினும் சுக்தாய் விரும்பிய வண்ணமே அவரது உடல் சமயச் சடங்குகள் ஏதுமின்றி எரியூட்டப்பட்டது.

தன் மீது தொடரப்பட்ட வழக்கை ஒரு சுவாரசியமான கதைபோலவே எழுதிவிட்டார், இஸ்மத் சுக்தாய். சுருக்கமாகச் சொல்வதானால் அது இப்படிப் போகிறது….

வாசலில் உள்ள அழைப்பு மணி உரக்க ஒலித்தபோது பிற்பகல் மணி நான்கு அல்லது நான்கரை இருக்கும். பணியாள்தான் வாயிற் கதவைத் திறந்து பார்த்து, விக்கித்துப் போனவனாகப் பின் வாங்கினான்.

யார் வந்திருப்பது?

போலீஸ்!

அக்கம் பக்கத்தில் ஏதாவது திருட்டு என்றால் முதலில் விசாரணைக்குள்ளாவது பணியாள்கள்தாம்.

போலீசா? ஷஹீத் (சுக்தாயின் கணவர்)அவசராமாக எழுந்தார்.

ஆமாம் ஐயா என்றான் பணியாள், உடல் நடுங்க. ஆனால் ஐயாவே நான் எதுவும் செய்யவில்லை. சத்தியமாக எனப் புலம்பினான்.

வாசலுக்குச் சென்ற ஷஹீத் என்ன விஷயம் என்று வந்தவர்களிடம் விசாரித்தார்.

சம்மன்.

சம்மனா? ஆனால்… சரி கொடுங்கள்.

ஸாரி. அதை உங்களிடம் கொடுக்க முடியாது.

அப்படியென்றாõல் யாருக்கு சம்மன்?

இஸ்மத் சுக்தாய்க்கு. அவரை வரச் சொல்லுங்கள்.

அதைக் கேட்ட பிறகு பணியாள் நிம்மதிப் பெருமூச்செறிந்தான்.

என்ன விஷயம் என்றாவது என்னிடம் சொல்லுங்கள்.

தயவு செய்து அந்த அம்மாவை வரச் சொல்லுங்கள். லஹோரிலிருந்து அவருக்குச் சம்மன் வந்திருக்கிறது.

பிறந்து இரண்டு மாதங்களேயான என் பெண் குழந்தை ஸீமாவுக்குக் கொடுப்பதற்காகக் கரைத்து வைத்திருந்த பாலை ஆற்றுவதில் முனைந்திருந்தேன். புட்டியைக் குழாய்த் தண்ணீரில் கழுவியவாறு, என்ன, லஹோரிலிருந்து சம்மனா என்று கேட்டேன்.

ஆமாம், லஹோரிலிருந்துதான் என்று குரலில் எரிச்சல் தொனிக்கப் பதிலிறுத்தார், ஷஹீத்.

புட்டியும் கையுமாக, வெறும் பாதங்களுடன் வாசலுக்குச்சென்றேன். அட, எதற்காக எனக்கு சம்மன்?

நீங்களே படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார், சம்மனைக் கொண்டு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.

சம்மனை வாங்கிப் பிரித்து அதன் தலைப்பில் இருந்த வாசகத்தைப் படித்ததுமே அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டேன். இஸ்மத் சுக்தாய்க்கும் பிரிட்டிஷ் ராஜ மகுடத்துக்குமான வழக்கு! அட, என்மீது வழக்குத் தொடரும் அளவுக்கு பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக அப்படி
என்னதான் செய்துவிட்டேன்?

விளையாடாதீர்கள். படித்துப் பார்த்து ஒப்பமிட்டுக் கொடுங்கள் என்று கண்டிப்பான குரலில் கூறினார் இன்ஸ்பெக்டர்.

சம்மனை நான் மேலும் படிக்கலானேன். ரஜாய் என்கிற சிறுகதையை எழுதியதற்காக என் மீது ஆபாச எழுத்தாளர் என்று லஹோர் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதோ பாருங்கள், இந்த சம்மனை நான் வாங்கப் போவதில்லை, என்றேன். அந்தக் காகிதத்தை இன்ஸ்பெக்டரிடம் திருப்பிக் கொடுத்தவாறு, பால் புட்டியைக் குலுக்கத் தொடங்கினேன். தயவு செய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

இல்லை, நீங்கள் வாங்கித்தான் ஆக வேண்டும்.

ஏன்? எனது வழக்கப்படி நான் தர்க்கிக்கலானேன்.

மாடிப்படி வழியாக அவசரமாய் வந்த மோசின் அப்துல்லா, அட, என்ன நடக்கிறது இங்கே என்றார். இவ்வளவு நேரமாக அவர் எங்கேதான் இருந்தாரோ, கடவுளுக்கே வெளிச்சம்.

இந்த சம்மனை வாங்கிக் கொள்ளுமாறு என்னைக் கட்டாயப் படுத்துகிறார்கள். எதற்காக நான் இதை வாங்க வேண்டும்?

மோசின் சட்டக் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறியவர். சம்மனை வாங்கிப் படித்துப் பார்த்தபின், ஊம், எந்தக் கதை அது? என்றார்.

கடவுளே, எல்லாம் அந்தப் பாழாய்ப் போன கதைதான்! பெரிய தொந்தரவாகப் போய்விட்டது.

சம்மனை நீ வாங்கித்தான் ஆக வேண்டும்.

எதற்காக?

ஷஹீத் சீறினார்: எப்பவும் போல அதே தகராறு, அதே பிடிவாதம்!

நான் வாங்கப் போவதில்லை. முடியவே முடியாது!

வாங்காவிட்டால் உன்னைக் கைது செய்வார்கள் என்றார் மோசின்.

வேண்டுமானால் கைது செய்துகொள்ளட்டும். நான் என்னவோ சம்மனை வாங்குவதாக இல்லை.

உன்னைச் சிறையில் தள்ளுவார்கள்!

அப்படியா? அதைவிட விரும்பிக் கேட்பதற்கு எதுவுமில்லை. ஒரு சிறைச் சாலைக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்று எத்தனை காலமாக ஏங்கிக்கொண்டிருக்கிறேன். சிறைச் சாலையைச் சுற்றிக் காண்பிக்குமாறு யூசுப்பிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன்? அவனானால் எப்போதும் வெறுமே சிரித்துவிட்டுப் போகிறான். இன்ஸ்பெக்டர் ஸாப், தயவு செய்து என்னைச் சிறைக்கு அழைத்துப் போங்கள். கை விலங்கு கொண்டு வந்திருக்
கிறீர்களா?

இன்ஸ்பெக்டருக்குக் கோபம் தலைக் கேறியது. அதை அடக்கிகொண்டு, சம்மனைத் திரும்பவும் நீட்டி, விளையாடாதீர்கள். பேசாமல் கையொப்பமிடுங்கள் என்றார்.

ஷஹீத்,மோசின் இருவருமே பொறுமை யிழந்துவிட்டார்கள். நானானால் எதையுமே பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டிருதேன். ஷஹீதும் மோசினும் என்னை மிகவும் தளர்வடையச் செய்து விட்டார்கள். சரி, கையொப்பமிட்டு சம்மனை வாங்கிக் கொள்ளலாம் என்று கையில் இருந்த பால் புட்டியை இன்ஸ்பெக்டரிடம் நீட்டினேன். நான் ஏதோ துப்பாக்கியை நீட்டிவிட்டது போல அவர் பின்வாங்கினார். மோசின் சட்டென என் கையிலிருந்து புட்டியைப் பிடுங்கிக் கொண்டார். நான் கையெழுத்துப் போட்டு சம்மனை வாங்கிக் கொண்டேன்.

இனி காவல் நிலையத்துக்கு வர வேண்டும், ஐநூறு ரூபய் செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ள என்றார் இன்ஸ்பெக்டர்.

என்னிடம் இப்போது ஐநூறு ரூபாய் இருக்காது என்று நினைக்கிறேன்.

நீங்கள் அல்ல, உங்களுக்காக யாராவது ஜாமீன் தொகை செலுத்த வேண்டும்.

வேறு எவரையும் இதில் சம்பந்தப் படுத்த எனக்கு விருப்பமில்லை. நீதி மன்றத்தில் நான் ஆஜராகாவிட்டால் எனக்காகச் செலுத்தப்பட்ட ஜாமீன் தொகை பறிபோய்விடுமே! இம்மாதிரி விவகாரங்களில் எனக்கு இருக்கிற அறிவைப் புலப்படுத்த முற்பட்டேன். எனக்காக ஒருவர் ஜாமீன் கொடுப்பதைவிட நீங்கள் என்னைக் கைது செய்துவிடலாம்.

இன்ஸ்பெக்டர் இப்போது சினம் கோள்ளவில்லை. சோபாவில் இரு கரங்களாலும் தலையைத் தாங்கியவாறு அமர்ந்திருக்கும் ஷஹீதைப் பார்த்துப் புன்னகைத்தார். என்னைப் பார்த்து,
தயவு செய்து என்னோடு வாருங்கள். சில நிமிடங்களுக்கு மேல் ஆகாது என்றார்.

அப்படியானால் ஜாமீன்? என்று கேட்டேன், ஒருவாறு இணக்கத்துடன்.

நான் ஜாமீன் தருகிறேன் என்று முன் வந்தார், மோசின்.

ஆனால் என் மகள் பசியாக இருக்கிறாள். ஆயா புதிசு. சின்ன வயதுப் பெண் வேறு.

குழந்தைக்குப் பால் புகட்டிவிட்டே வரலாம் என்றார் இன்ஸ்பெக்டர்.

அப்படியானால் உள்ளே வாருங்கள் என்று மோசின் போலீசாரை அழைத்தார்.
இன்ஸ்பெக்டர் ஷஹீதின் ரசிகனாகிவிட்டார். மிகவும் உற்சாக மாக அவர் பேசத் தொடங்கவும் ஷஹீத் சகஜ நிலைக்குத் திரும்பினார்.

ஷஹீத், மோசின், நான் மூவரும் மாஹிம் காவல் நிலையம் சென்றோம்.
கொடுக்கப்பட்ட ஆவணங்களில் கையொப்பமிட்ட பிறகு, எங்கே இருக்கிறார்கள் நீங்கள் பிடித்துவரும் குற்றவாளிகள் என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன்.

அவர்களைப் பார்க்க வேண்டுமா?

நிச்ச்சயமாக.

கம்பிக் கதவுக்குப் பின்னால் ஒரு குறுகலான அறையில் சுமார் பனிரண்டு பேர் குறுக்கும் நெடுக்குமாகப் படுத்துக் கிடந்தார்கள்.

இவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான். குற்றவாளிகளாகத் தண்டனை வழங்கப் பெற்றவர்கள் அல்ல. நாளைக்கு இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவார்கள்.

என்னை உள்ளே வைப்பதாக இருந்தால் எங்கே வைத்திருப்பீர்கள்?

பெண்களை வைப்பதற்கு இங்கே ஏற்பாடு இல்லை. அதனால் கிராண்ட் ரோடு அல்லது மிதங்காவுக்கு அழைத்துப் போயிருப்போம்.

வீடு திரும்பிய பிறகு ஷஹீதும் மோசினும் என்னோடு கடுமையாகச் சண்டை போட்டார்கள். ஷஹீதின் சண்டை இரவு முழுவதுமே நீடித்தது. நாங்கள் ஏறத் தாழ மண விலக்குப் பெற்றுவிடலாமா என்று யோசிக்கிற அளவுக்கு அது வலுத்து விட்டது. மோசினை அடக்குவது எளிதாக இருந்தது. இப்படி விடாமல் சச்சரவிட்டுக் கொண்டிருந்தால் தலைமறைவாகி விடுவேன் அப்புறம் உங்கள் ஐநூறு ரூபாய் பறிபோய்விடும் என்று எச்சரித்தே அவரது வாயைப் பொத்த முடிந்தது. ஆனால் ஷஹீதை அப்படிச் சரிக்கட்ட இயலவில்லை. இப்படியொரு வழக்கு நீதி மன்றத்திற்கு வருவதால் குடும்ப கவுரவத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்பு, தன் தாய் தந்தையர் மற்றும் மூத்த சகோதரர்களிடமிருந்து வரப் போகிற எதிர்வினை என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.

இந்தச் செய்தி இதழ்களில் வெளியானதும் என் மாமனாரிடமிருந்து சோõக ரசம் ததும்பும் கடிதம் ஒன்று வந்தது: என் மருமகளுக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லு; அவள் அல்லாவைப் பற்றியாவது, அவரது தூதரைப் பற்றியாவது ஏதேனும் எழுதட்டும். அதன் பயனாக அவளது பிற்கால வாழக்கையிலாவது அவள் ஆசீர்வதிக்கப்படட்டும். வம்பு வழக்கு, அதிலும் ஆபாச வழக்கு, எங்கள் அனைவருக்கும் கவலையாக இருக்கிறது. கடவுள்தான் நம் மீது கருணை காட்ட வேண்டும்.

மான்டோவிடமிருந்து தொலைபேசியில் தகவல் வந்தது. தன் மீதும் ஆபாச எழுத்து வழக்கு அதே நீதி மன்றத்தில் அதே தினம் இருப்பதாக. அவரும் சபியாவும் உடனே வீட்டுக்கும் வந்துவிட்டார்கள். மான்டோ ஏதோ தனக்கு விக்டோரியா க்ராஸ் விருதே அளிக்கப்பட்டுவிட்டது போல மிகவும் மகிழ்ச்சியாகக் காணப் பட்டார். எனக்கோ என்ன இப்படியாகி விட்டதே என்கிற விசனத்தில் இதயம் கனத்துப் போனது. மான்டோவிடம் பேசியதில் ஷஹீதுக்கும் சிறிது தென்பு வந்தது; மான்டோவின் உற்சாகமூட்டும் பேச்சு எனது அச்சத்தையும் களைந்தது.

அதன் பின் எனக்கு வசைமாரி பொழியும் கடிதங்கள் வரலாயின. என்னை மட்டுமின்றி, என் குடும்பம் முழுவதையும், ஷஹீதையும், ஏன், இரண்டே மாதங்களான எனது மகளைக்கூட இதுவரை கேட்டேயிராத கெட்ட வார்த்தைகளால் சபிக்கும் அக் கடிதங்களைப் படிக்க நேர்ந்தால் பிணம் கூடச் சிலிர்த்து எழுந்துவிடும்.

எனக்கு வரும் கடிதங்களைக் கண்டதுமே அவற்றுள் பாம்பும் தேளும் இருப்பதாகப் பயந்து நடுங்கலானேன். ஒவ்வொரு கடிதத்தையும் பிரித்துப் பாம்பையும் தேளையும் பார்த்தபின் அவசரமாக அதனைத் தீயிலிட்டுப் பொசுக்கிப் போடுவேன். அக் கடிதங்களில் ஏதேனும் ஒன்று ஷஹீதின் பார்வையில் சிக்கியிருந்தாலும் எங்களுக்குள் மீண்டும் மண விலக்குப் பேச்சு தொடங்கியிருக்கும்.

என் மீது தொடரப்பட்டுள்ள ஆபாச எழுத்து வழக்கைப் பற்றிப் பத்திரிகைகளிலும் தனிப்பட்ட அரட்டைப் பேச்சுகளிலும் விரிவாக விவாதம் நடைபெறலாயிற்று. என்னளவு மரத்துப் போன ஒருவரால்தான் சகித்துக் கொள்ளமுடியும் என்று தோன்றுகிற அளவுக்கு அவை கடுமையாக இருந்தன. எதற்கும் நான் பதிலிறுக்க முற்படவில்லை. எனது பிழையை ஒப்புக்கொள்ளவும் மறுக்கவில்லை. ஆம், நான் பிழை செய்துவிட்டேன்; எனது குற்றத்தை நான் ஒப்புக்கொண்டேன். மான்டோ ஒருவருக்குத்தான் எனது இந்தக் கோழைத்தனம் அதிர்ச்சி தருவதாக இருந்தது. அச்சமயம் எனது போக்கிற்கு நானே விரோதமாக இயங்கினேன். மான்டோ மட்டும் என் எழுத்தில் பிழையில்லை என்பதில் உறுதியாக இருந்தார். என் நண்பர்களும் சரி, ஷஹீதின் நண்பர்களுங்கூட இதனை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. க்வாஜா அஹமது அப்பாஸ் அந்தக் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எதிலோ வெளியிட்டதாகவும் நினைக்கிறேன். முற்போக்கு எழுத்தாளர்கள் அந்தக் கதையை எழுதியதற்காக என்னைத் தூற்றவும் இல்லை, பாராட்டவுமில்லை. அவர்களின் நிலைப்பாடு எனக்குத் தென்பூட்டுவதாக இருந்தது.

என் சகோதரருடன் வசித்து வந்த சமயத்தில்தான் அந்தக் கதையை நான் எழுதினேன். ஓர் இரவு அதை எழுதி மறுநாள் என் அண்ணியிடம் படித்துக் காட்டினேன். அதைக் கேட்டு, இது ஒரு அசிங்கமான கதை என்றெல்லாம் அவள் சொல்லவில்லை. ஆனால் கதையில் விவரிக்கப் படும் நபர் யார் என்பதை அடையாளங் கண்டுகொண்டாள். அதன் பிறகு பதினான்கு வயதேயான என் ஒன்றுவிட்ட சகோதரியிடம் படித்துக் காட்டினேன். கேட்டுவிட்டு நீ என்ன எழுதியிருக்கிறாய்? எதுவுமே எனக்குப் புரியவில்லை என்று சொன்னாள். அதன் பிறகு ஆதாப் ஏ லதீப் என்கிற பத்திரிகைக்கு அதை அனுப்பினேன். இதழின் ஆசிரியர் எவ்வித விமர்சனமும் இன்றி உடனே அதைப் பிரசுரித்துவிட்டார். அதே சமயம் எனது சிறுகதைகைளின் தொகுப்பை வெளியிட முனைந்திருந்த அஹ்மது தலாவி இந்தச் சிறுகதையையும் தொகுப்பில் சேர்த்துவிட்டார். லிஹாப் (ரஜாய்) என்கிற இந்தச் சிறுகதை முதலில் 1942 ல் பிரசுரமாகியது. அந்தச் சமயத்தில்தான் ஷஹீதுக்கும் எனக்குமிடையிலான நட்பு வளர்ந்து அவரைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு நான் வந்திருந்தேன். ஷஹீத் கதையைப் படித்துவிட்டுத் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அது பற்றி எங்களிடையே விவாதமும் நடந்தது. ஆனால் அந்தக் கதை மீதான தாக்குதல் இன்னும் பம்பாயை எட்டியிருக்கவில்லை. அந்தச் சமயத்தில் எனக்கு வந்து கொண்டிருந்த இலக்கிய இதழ்கள் சகியும் அதாப் ஏ லதீபும்தாம். ஆகவே ஷஹீதுக்கு அந்தக் கதையின் விளைவு குறித்துக் கவலை ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

வழக்கின் நிமித்தமாக 1944 டிசம்பர் மாதம் லஹோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. எனக்குச் சிறை தண்டனையெல்லாம் விதிக்கப்பட மாட்டாது, ஏதேனும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும், அவ்வளவுதான் என்று அனைவரும் அபிப்பிராயப்பட்டார்கள்.

சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட அஹ்மத் தலாவியும் எழுத்துரு வரிவடிவம் செய்தவரும் இதே வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தார்கள். கதையை முதலில் வெளியிட்ட இதழின் மீது வழக்கு இல்லை. ஆக பதிப்பாளரும், எழுத்துரு
வாக்கியவரும் எங்களுடன் இணைந்துகொண்டனர் (உர்து மொழியைப் பொருத்தவரை தனித் தனி அச்செழுத்து இல்லாத காரணத்தால் முழு வாக்கியங்களை எழுதிப் பக்கங்களை அச்சடிக்க வேண்டியிருந்தது; இதற்கென்றே திறமை வாய்ந்த எழுத்துருவாக்கம் செய்வோர் நியமிக்கப் பட்டிரு ந்தனர்).

இதற்கிடையில் மான்டோவும் வந்து சேர்ந்தார். நாங்கள் ஒவ்வொரு நாளும் நண்பர்களின் விருந்துபசாரத்தைப் பெறலானோம். பெரும்பாலும் மான்டோவின் நண்பர்கள்தாம். என்னை ஒரு வினோதப் பிராணியாகப் பாவித்து என்னையும் விருந்துக்கு அழைத்தார்கள்.

குறிப்பிட்ட தினத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. நீதிபதி என் பெயரைக் கேட்டு சம்பந்தப்பட்ட கதையை எழுதியது நான்தானா என்று விசாரித்தார். நான் ஒப்புக்கொண்டேன். அதோடு விசாரணை முடிந்தது. எனக்கு ஒரே ஏமாற்றமாகி விட்டது. எனது வழக்குரைஞர் மட்டும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் எங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததால் அதெல்லாம் எங்கள் காதில் விழவில்லை. விசாரணை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

(அதன் பிறகு சுக்தாய், அவருடைய கணவர் ஷஹீத், மான்டோ ஆகியோர் சில தினங்கள் லஹோரிலேயே தங்கி சுற்றுலாவுக்கு வந்தவர்களைப் போல அந்த நகரின் பிரத்தியேக அமசங்களைக் கண்டு அனுபவிக்கலாயினர். லஹோரையும் அங்கு தம் அனுபவங்களையும் சுவையாக விவரிக்க்கிறார், சுக்தாய்).

ஒரு தெருக் கோடியில் வறுத்த மீனைத் தின்றுவிட்டு உணவு விடுதிக்குள்ளும் நுழைந்தோம். அங்கு ஹாட் டாகும், ஹாம்பர்கர்களும் பார்வையில் பட்டு, நாவில் நீர் ஊறச் செய்தன.

ஹாம்பர்ர்கரில் பன்றி இறைச்சி இருக்கும். அதனால் ஹாட் டாக் சாப்பிடுவோம் என்று ஷஹீத் யோசனை தெரிவித்தார். நாங்களும் அதற்கு உடன்பட்டு விசுவாசமிக்க முகமதியர்களாய் ஹாட் டாக் மட்டும் வயிறு கொள்ளும்வரை உண்டு காந்தஹார் மாதுளை ரசமும் பருகினோம். அதன் பிறகுதான் வெள்ளை இனத்தின் சாதுரியம் எந்த மட்டும் இருக்கும் என்பது தெரிய வந்தது. ஹாம்பர்கரில் பன்றி இறைச்சி கிடையாது; ஆனால் நாங்கள் சாப்பிட்ட ஹாட் டாக் தான் உண்மையில் பன்றி இறைச்சி சாசேஜசால் செய்யப் பட்டது!

இது தெரிய வந்து இரண்டு நாட்களாகிவிட்டன என்ற போதிலும் ஷஹீதுக்குக் குமட்டல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. நல்ல வேளையாக தெரியாத்தனமாகப் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அது பாவமாகாது என்று ஒரு மவுல்வி சாகிப் பத்வா கொடுக்கவும் ஷஹீதின் குமட்டல் நின்றது.

ஆனால் மாலை வேளைகளில் ஷஹீதும் மான்டோவும் மது அருந்தத் தொடங்கி, விவாதிக்கத் தொடங்குகையில், ஹாம்பர்கர் சரியில்லை என்றும் ஹாட் டாக்தான் மேலானது என்றும் அவர்களிடையே ஆக்ரோஷமான சர்ச்சை கிளம்பும். ஒருமுறை விவாதம் மிகவும் அபாயகரமான கட்டத்தை அடைந்து பிறகு இறுதியில் எது ஹலால் எது ஹராம் என்று நிச்சயமாகத் தெரியாத நிலையில் எதற்கு வம்பு என்று இரண்டையுமே தவிர்த்து வெறும் சிக்கன் டிக்கா மட்டும் உண்பது என்று இறுதி முடிவாகியது.

எங்கள் மீது இப்படியொரு வழக்கைத் தொடர்ந்து லஹோரில் ஒரு விழாக் காலக் கொண்டாட்டத்தை அனுபவிக்க எங்களுக்கு வாய்ப்புத் தந்தமைக்காக பிரிட்டிஷ் அரசரை மனமாரப் பாராட்டியவாறு பொழுதைக் கழித்தோம்.

இரண்டாவது விசாரணை 1946 நவம்பர் மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஷஹீத் தனது திரைப்படத் தயாரிப்பில் மும்முரமாகியிருந்தார். நான் மீண்டும் லஹோர் சென்றடைந்தேன்.
பதிப்பாளர் அஹமது தலாவியும், கதையின் எழுத்து வரிவடிவம் செய்த காலிகிராபரும் தனியாக வந்து சேர்ந்துகொண்டனர். பாவம், அந்தக் காலிகிராபரைப் பார்க்கிறபோது எனக்குப் பரிதாபமாக இருக்கும். ஒவ்வொருமுறை அவரைக் காணும்போது குற்ற உணர்வும் மிகும்.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நாம் தோற்றுவிடுவோமா என்று அவரிடம் கேட்டேன்.

என்னால் சொல்ல முடியாது. கதையை நான் படித்துப் பார்க்கவில்லை என்றார்.

ஆனால் நீங்கள்தானே எழுத்துரு செய்தீர்கள்.

எழுதுகிறபோதெல்லாம் நான் தனித் தனி சொற்களைப் பார்த்துத்தான் எழுத்துரு செய்வேன். அவற்றின் அர்த்தத்தில் கவனம் செலுத்த மாட்டேன்.

ஆச்சரியமாக இருக்கிறது. அச்சுக்குப் போகிறபோதாவது வாசிப்பீர்கள் அல்லவா?

ஆமாம், ஆனால் பிழைகளைக் கண்டுபிடிக்க மட்டும்தான்.

அப்படியானால் அதுவும் ஒவ்வொரு சொல்லாகத் தனித் தனியாகத்தானா?

ஆம் என்று சொன்னவர் தலையைக் குனிந்து கொண்டார். பிறகு, நான் ஒன்று சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே என்றார்.

மாட்டேன். சொல்லுங்கள் என்றேன்.

நீங்கள் ஏராளமாக எழுத்துப் பிழை செய்கிறீர்கள். நான் சொற்களைப் படிப்பதால் அர்த்தத்தைக் கவனிப்பதில்லை என்பதுபோல நீங்கள் அர்த்தத்தில் கவனம் செலுத்துவதால் எழுத்துப் பிழைகளை கவனிப்பதில்லை போலிருக்கிறது என்றார்.

ஆண்டவர் இந்த காலிகிராபர்களை ஆசீர்வதிப்பாராக!

(வேறொரு எழுத்தாளரான) அஸ்லம் வீட்டில் தங்கினோம். என்னைப் பார்த்ததும் முகமன் கூறிக் கொள்வதற்கு முன்பாகவே அவர் என்னைக் கண்டிக்கத் தொடங்கிவிட்டார். என் எழுத்து மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். நான் வெகுண்டெழுந்தேன்.

நீங்கள் உங்களுடைய இரவின் பாவங்கள் என்கிற கதையில் உடல் உறவை மிகவும் நுணுக்கமாக விவரித்திருக்கிறீர்களே, அது மட்டும் ஆபாசமில்லையா?

என் விஷயம் வேறு. நான் ஆண்.

ஒகோ, அதுதான் என் தவறா?

நீ என்ன சொல்கிறாய்?

கடவுள் உங்களை ஆணாகப் படைத்திருக்கிறார். அதனால் எனக்கு ஆவது ஒன்றுமில்லை. அதேபோல என்னை அவர் பெண்ணாகப் படைத்திருக்கிறார். உங்களுக்கும் இதனால் ஆவதொன்றுமில்லை என்கிறேன். நீங்கள் என்ன எழுத விரும்புகிறீர்களோ அதனை எழுதுவதற்கு என்னிடம் அனுமதி கோரவில்லை. அதேபோல என்ன எழுதத் தோன்றுகிறதோ அதைச் சுதந்திரமாக எழுத உங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை.

ஆனால் நீ நன்கு படித்த ஒரு கவுரவமான முகமதிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்.

நீங்களுந்தான் நன்கு படித்த ஒரு கவுரவமான முகமதிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நீ என்ன ஆண்களுடன் சரி சமான உரிமை வேண்டும் என்றுகேட்கிறாயா?

இல்லவே இல்லை! நான் படிக்கிற காலத்தில் வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் பையன்களைவிட அதிக மதிப்பெண்கள் வாங்குவதுதான் வழக்கம்.

எனக்கு இயல்பான தர்க்க சுபாவம் என்னுள் கிளர்வதை நான் உணர்ந்தேன். ஆனால் அஸ்லம் சாகிப்பின் சிவப்பேறிய முகத் தோற்றத்தைப் பார்த்த போது எங்கே அவர் என் கன்னத்தில் அறைந்து விடுவாரோ என்றும் இல்லாவிட்டால் அவரது மூளைக்குள் ஊடுருவிச் செல்லும் ரத்த நாளங்களுள் ஏதேனும் ஒன்று அறுந்துவிடுமோ எனவும் அச்சமாக இருந்தது.குரலைச் சிறிது மென்மையாக்கிக்கொண்டு, அஸ்லம் ஸாப், அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயம் சொல்லப்படக் கூடாத பாவம் என்று எவரும் என்னிடம் சொல்லவில்லை. இந்த நோயை அல்லது மனப் போக்கை எழுதக் கூடாது என்று எங்கும் நான் படிக்கவும் இல்லை. என்னிடம் ஒரு மலிவான காமராதான் இருக்கிறது. எதையாவது பார்த்தால் அது அப்படியே பதிவு செய்துவிடுகிறது. எனது பேனாவுக்கும் வேறு வழியில்லை. என் மனம் எனது பேனாவை எழுதத் தூண்டுகிற போது, என்னால் அவற்றுக்கிடையே தலையிட முடிவதில்லை என்று சமாதானம் சொன்னேன்.

அப்படியானால் நீ சமயக் கல்வி எதுவும் பெறவில்லையா?

அஸ்லம் ஸாப், சிறு வயதிலேயே பஹிஷ்தி ஸேவர் படித்திருக்கிறேன். அதில் வெளிப்படையாக எழுதப்பட்டுள்ள பல விஷயங்கள் அசிங்கமாகத் தோன்றும். பிறகு பி ஏ வகுப்பில் படிக்கையில் மீண்டும் வாசித்தபோது அதில் அசிங்கம் ஏதும் இல்லை, புத்தியுள்ள எவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்தான் அவை என்று புரிந்தது. மருத்துவப் பாடங்களும் உளவியல் பாடங்களுங்கூட மக்களுக்கு அசிங்கமாகத் தோன்றலாம்தான்.

நிலைமை ஒருவாறு சுமுகமானபோது, நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்டு விடு என்று அறிவுரை சொன்னார், அஸ்லம்.

எதற்காக? இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று வழக்குரைஞர் சொல்கிறாரே?

இல்லை, அந்த ஆள் சொல்வதெல்லாம் பொய். நீயும் மான்டோவும் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுவிட்டால் வழக்கு ஐந்தே நிமிடத்தில் முடிந்துவிடும்.

அப்படியென்றால் இங்கே இருக்கிற கவுரவம் மிக்க பெரிய மனிதர்களுடைய தூண்டுதலின் பேரில்தான் எங்களுக்கு எதிராக அரசாங்கம் இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறதா?

அர்த்தமில்லாத பேச்சு என்றார் அஸ்லம். ஆனால் என்னை நேராகப் பார்ப்பதை மட்டும் தவிர்த்தார்.

அர்த்தமில்லாத பேச்சா? அப்படியானால் அரசாங்கமோ பிரிட்டிஷ் ராஜாவோ இந்தக் கதைகளைப் படித்துப் பார்த்துவிட்டு எங்கள் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களா?

பதிப்பாளர் தலாவி மிகவும் தணிந்த குரலில் பேசலானார்: அஸ்லம் ஸாப், இங்கே இருக்கிற சில எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பெரிய மனிதர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இந்தக் கதைகள் ஒழுக்கக்கேடானாவை என்று சொல்லி இவை இடம் பெற்றிருக்கிற புத்தகங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடம் வற்புறுத்தியிருக்கிறார்கள்.

நீங்கள் என்ன ஒழுக்கக் கேடான புத்தகங்கள் தடை செய்யப்படுவதற்குப் பதில் போற்றப்பட வேண்டும் என்கிறீர்களா என்று உறுமினார், அஸ்லம்.

அவை ஒழுக்கக் கேடானவை என்றால் நிச்சயமாக நாங்கள் தண்டிக்கப்பட வேண்டும்தான் என்றேன்.

மறுபடியும் நீ முரட்டுத்தனமாகத் தர்க்கம் செய்யத் தொடங்கிவிட்டாய்!

(சாதத் ஹாசன் மாண்டோ)

இல்லை, அஸ்லம் ஸாப். நாங்கள் பவித்திரமான மக்களை ஒழுக்ககேடான வழியில் திசை திருப்பும் குற்றத்தை இழைத்திருக்கும் பட்சத்தில் அதற்காக மன்னிப்புக் கேட்டு எளிதாகத் தப்பித்துக்கொள்வது சரியல்ல. உண்மையிலேயே நான் ஒரு குற்றம் இழைத்து, அது குற்றம் என்று நிரூபணமும் ஆகிறது என்றால் அதற்கான தண்டனை எனக்கு விதிக்கப்பட்டால்தான் என் மனச் சாட்சிக்குத் திருப்தியாக இருக்க்கும்.

பிடிவாதம் பிடிக்காதே. வெறுமனே மன்னிப்புக் கேள். அது போதும்.

குற்றம் நிரூபணமானால் என்ன மாதிரி தண்டனை எங்களுக்குக் கிடைக்கும்? அபராதம் விதிப்பார்களா?

அதோடு, அவமானமும் கிடைக்கும்.

அதுதான் எப்போதோ கிடைத்தாகி விட்டதே, ஏராளமாக. இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது? நீதிமன்றம், வழக்கு என்பதில் எல்லாம் பெரிதாக ஒன்றும்வந்துவிடப் போவதில்லை. அபராதம் என்றால் எவ்வளவு விதிப்பார்கள்?

இருநூறு அல்லது முன்னூறு ரூபாய் விதிப்பார்கள் என்று நினைக்கிறேன் என்றார், பதிப்பாளர்.

அவ்வளவுதானா? என்றேன்.

ஐநூறு ரூபாய் வரைகூட விதிக்கப்படலாம் என்றார், அஸ்லம் என்னை அச்சுறுத்திப் பார்ப்பது போல.

அப்படியா என்றேன் இயல்பாக.

ஏது, உன்னிடம் ஏராளமாகப் பணம் இருக்கும் போலிருக்கிறதே! என்று சொன்ன அஸ்லமுக்கு மீண்டும் கோபம் வரத் தொடங்கியது.

எல்லாம் உங்கள் ஆசீர்வாதம். அப்படியே என்னிடம் இல்லாவிட்டாலும் நீங்கள் எனக்காக அபராதம் செலுத்தி சிறைக்குப் போகாதவாறு என்னைக் காப்பாற்றமாட்டீர்களா, என்ன? லஹோரில் உள்ள பெரும் செல்வந்தர்களுள் ஒருவரல்லவா நீங்கள்?

நீ ரொம்பப் பேசுகிறாய் என்று சொன்ன அஸ்லம் சிறிது நேரத்திற்குப் பின் மறுபடியும் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுவிடுமாறு வற்புறுத்தினார்.

அவரது மண்டையைப் பிளந்துவிட வேண்டும் போல எனக்கு ஆத்திரம் வந்தது. மவுனமாக இருந்தேன்.

வழக்கு விசாரணைக்கு வந்த அன்று நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜரானோம். சாட்சிகள் வரவழைக்கப்பட்டனர். மான்டோ எழுதிய துர் நாற்றம் என்கிற கதையும் எனது ரஜாய் சிறுகதையும் ஆபாசமானவை என்று அவர்கள் நிரூபித்தாக வேண்டும். நேரடியாக ஏதாவது கேட்டாலொழிய நான் வாயைத் திறக்கக் கூடாது என்று என் வழக்குரைஞர் எனக்குச் சொல்லியிருந்தார்.

முதலில் மான்டோ வின் துர்நாற்றம் கதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தக் கதை ஆபாசமாக இருக்கிறது என்கிறீர்களா என்று சாட்சியிடம் கேட்டார், மான்டோவின் வழக்குரைஞர்.

ஆமாம் என்றார் சாட்சி.

கதையில் எந்தச் சொல் ஆபாசமாக இருக்கிறது?

சாட்சி: மார்பு

வழக்குரைஞர்: நீதிபதியவர்களே, மார்பு என்கிற சொல் ஆபாசம் அல்ல.

நீதிபதி: ஆம், நீங்கள் சொல்வது சரிதான்.

வழக்குரைஞர்: எனவே அது ஆபாசமில்லை அல்லவா?

சாட்சி: ஆனால் ஒரு பெண்ணின் மார்பகங்களைக் குறிப்பதாக அந்தச் சொல் இருந்தது.

அதை கேட்டதும் மான்டோ திடீரென எழுந்து நின்று கேட்டார்: பெண்ணின் மார்பகங்களை மார்பு என்று குறிப்பிடாமல் வேறு எப்படிக் கூறுவதாம்? வேர்க்கடலை என்றா?

அதைக் கேட்டதும் நீதிமன்ற அறை முழுவதும் சிரிப்பலை மோதியது. மான்டோவும் சிரிக்கலானார்.

குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர் இப்படி மட்டரக நகைச் சுவைகளை வெளியிட்டால் நீதிமன்ற மன்ற அவமதிப்புக் குற்றம் பதிவு செய்து அவரை வெளியேற்ற வேண்டிவரும் என்று நீதிபதி எச்ச்சரித்தார்.

சாட்சி மேலும் விசாரிக்கப்பட்டபோது அவர் திரும்பத் திரும்ப மார்பு என்கிற ஒரு சொல்லே ஆபாசமாகப் பட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதை ஆபாசம் என்று நிர்ணயம் செய்வது சாத்தியமாக இல்லை.

மார்பு ஆபாசம் என்றால் கணுக்கால் தோள்பட்டை எல்லாம் ஏன் ஆபாசமில்லை ? என்று மான்டோவிடம் கேட்டேன்.

எல்லாம் வெறும் குப்பை என்றார், மான்டோ.

வழக்கு மறு நாளும் தொடர்ந்தது. நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீதிபதியிடம் மன்னிப்புக் கோருமாறு எங்களுக்குச் சிலர் அறிவுரை கூறினார்கள். எங்கள் சார்பில் தாமே அபராதம் செலுத்திவிடுவதாகவும் சொன்னார்கள். வழக்கு விசாரணையின் போக்கு குற்றச்சாட்டு மிகவும் பலவீனமாக இருப்பதைப் புலப்படுத்திவிட்டது. எனது ரஜாய் சிறுகதையை ஆபாசம் என்று நிறுவ அழைக்கப்பட்ட சாட்சிகள் தடுமாற்றமடைய
லானார்கள். சாட்சி சொல்ல வந்த ஒரு கனவான் நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு அவள் காதலர்களைச் சேகரித்துக் கொண்டிருந்தாள் என்கிற சொற்றொடரில் ஆபாசம் இருப்பதாகச் சொன்னார்.

இந்தச் சொற்றொடரில் எந்தச் சொல் ஆபாசமாக இருக்கிறது? சேகரித்தல் என்பதா அல்லது காதலர்களா? என்று கேட்டார், என் வழக்குரைஞர்.

சிறிது தயக்கத்துடன் காதலர்கள் என்கிற சொல் என்று சொன்னார், சாட்சி.

நீதிபதியவர்களே, காதலர்கள் என்கிற சொல்லை மாபெரும் கவிஞர்கள் எல்லோரும் கையாண்டிருக்கிறார்கள். இறைத் தூதுவரைக் துதிக்கும் பாடல்களில்கூட இச்சொல் இடம் பெறுகிறது. இந்தச் சொல் புனிதம் மிக்கதாகவும் பக்திமான்களால் கருதப்படுகிறது என்றார் வழக்குரைஞர்.

ஆனால் பெண்கள் காதலர்களைச் சேகரம் செய்வதாகச் சொல்வது மிகவும் முறைகேடானது என்று சாட்சி அறிவித்தார்.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டார், வழக்குரைஞர்.

ஏனென்றால் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவ்வாறு செய்வது முறை கேடானது.

அப்படியானால் கவுரவப்பட்ட குடும்பத்தைச் சேராத பெண்கள் என்றால் அதில் முறைகேடு எதுவும் இல்லை அல்லவா?

இல்லையில்லை.. என்று தடுமாறினார், சாட்சி.

ஒருவேளை என் கட்சிக்காரர் அப்படிப்பட்ட கவுரவம் இல்லாத பெண் காதலர்களைச் சேகரித்துக் கொண்டிருந்ததாக எழுதியிருக்கலாம் அல்லவா?

ஆமாம், ஆனால் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த, நன்கு படித்த ஒருவர் அம்மாதிரியான பெண்களைப் பற்றி எழுதியிருப்பது கண்டிக்கத் தக்கது என்றார் சாட்சி.

அப்படியானால் தாராளமாகக் கண்டியுங்கள். அதைவிட்டு விட்டு எதற்கு சட்டப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று மடக்கினார் வழக்குரைஞர்.

வழக்கு அந்தக் கணமே முனை மழுங்கிப் போனது.

முன்பின் தெரியாத ஒரு நபர் என்னை அணுகி, இருவரும் மன்னிப்புக் கோருங்கள். இந்த வழக்கிற்காக உங்களுக்கு ஆகும் எல்லாச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்று ரகசியம் பேசினார்.

நல்லது. மான்டோ சாகிப், என்ன சொல்கிறீர்கள், மன்னிப்புக் கேட்டு விடுவோமா? நமக்குக் கிடைக்கிற பணத்தில் நிறையப் பொருள்கள் வாங்கிக்கொண்டு போகலாம் அல்லவா?

குப்பை என்றார், மான்டோ தனது விழிகளை முறைப்பாக விரித்து.

வருந்துகிறேன், கிறுக்குப் பிடித்த இந்த மான்டோ ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார்.

அப்படியானால் நீங்கள் மட்டுமாவது மன்னிப்புக் கேளுங்கள்.

முடியாது. இந்த மனிதர் (மான்டோ) மிகவும் தொந்தரவான பேர்வழி. மன்னிப்புக் கேட்டால் அப்புறம் என்னால் பம்பாயில் வசிக்கவே முடியாதபடிச் செய்துவிடுவார். இந்த வழக்கில் எனக்குக் கிடைக்கக் கூடிய தண்டனையைவிட நான் மன்னிப்புக் கேட்பதால் என் மீது அவருக்கு ஏற்படக்கூடிய கோபம் பன் மடங்கு கொடியதாக இருக்கும்.

இறுதியில் தண்டனை ஏதுமின்றி வழக்கிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.

மன்னிப்புக் கேட்குமாறு என்னிடம் மன்றாடியவரின் முகம் தொங்கிப் போயிற்று.

தீர்ப்புக்குப் பிறகு என்னைத் தமது அறைக்கு அழைத்த நீதிபதி நான் சென்றதும் அன்போடு வாழ்த்துத் தெரிவித்தார். நீங்கள் எழுதியுள்ள கதைகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன். அவை ஆபாசமல்ல. ரஜாய் கதையிலும் ஆபாசம் இல்லை. ஆனால் மான்டோவின் எழுத்தில்தான் நிறைய அழுக்கு இருக்கிறது என்றார்.

இந்த உலகமே பல அழுக்குகளால் நிரம்பித்தானே இருக்கிறது என்றேன்.

அதற்காக அதை எடுத்து அப்புவது அவசியந்தானா?

அப்படிச் செய்வதால் அழுக்கு இருப்பது அனைவரின் கவனத்திற்கும் வரும் அல்லவா? அதன் பயனாக அழுக்கை நீக்கித் தூய்மைப் படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படலாம்.

நீதிபதி அதைக் கேட்டு நகைத்தார்.

எங்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதில் எங்களுக்குச் சங்கடம் ஏதும் இல்லை. வழக்கில்
வெற்றி பெற்றதற்காக எங்களுக்கு மகிழ்ச்சியும் இல்லை. உண்மையில் வழக்கு முடிந்துவிட்டதில் எங்களுக்கு வருத்தமே. மறுபடியும் லஹோருக்கு வருகிற வாய்ப்பு எப்போது கிட்டுமோ என்றுதான்.

(இஸ்மத் சுக்தாய் தம் மீது தொடுக்கப் பட்ட வழக்கு குறித்து உர்துவில் எழுதிய விரிவான கட்டுரையை லிஹாப் வழக்கு என்னும் தலைப்பில் தஹிரா நக்வியும் முஹமது உமர் மேமனும் இணைந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் தமிழாக்கம் இது. இடக் கட்டுப்பாடு கருதிப் பல பக்கங்களை மொழியாக்கம் செய்யாது விட்டிருக்கிறேன்.)


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்