தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

மலர் மன்னன்


கல்வி, அரசு வேலை வாய்ப்பு முதலானவற்றில் சலுகைகளைப் பெறும் தகுதி இல்லாமை மட்டுமின்றி, பிற சாதியாரால் இளப்பமாகவும் ஏளனமாகவும் பேசப்படும் ஒருவித சமூகப் புறக்கணிப்பு, மேலாதிக்கம் செலுத்தி அனைவரையும் அடக்கி ஆண்டவர்கள் என்று மற்றவர்களால் சுமத்தப்படும் பழி, எல்லா சமூகத் தீமைகளுக்கும் அவர்கள்தாம் மூல காரணம் எனப் பிறரால் நடத்தப்படும் பிரசாரம், சில சமயங்களில் வன்முறைத் தாக்குதலுக்கும் உள்ளாதல், அதற்கு சரியான நடவடிக்கையின்றிச் சட்டம் ஒழுங்கு அமைப்புகள் அலட்சியம் காட்டுதல், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்கிற பழமொழி தமக்குத்தான் பொருந்தும் என்கிற சுய பரிதாபமும் தாழ்வு மனப் பானமையும் எனப் பல்வேறு தாக்கங்களால் நெடுங்காலமாவே தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் மனம் குமுறிக் கொண்டிருப்பதை அறிவேன்.

சில தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், முக்கியமாக எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் திரையுலகு சம்பந்தப்பட்டவர்களும் சமூகத் தீட்டிலிருந்து தமக்கு விலக்கு கிடைக்கும் என்கிற நப்பாசையில் முற்போக்குப் போர்வையைப் போர்த்திக்கொண்டு சுய விமர்சனம் என்னும் சாக்கில் சுய தூஷணம் செய்து வருவதையும் அறிந்துள்ளேன்.

வட மாநிலங்களில் எனது தொடக்க கால வாழ்க்கையைக் கழித்துவிட்டுத் தமிழகம் வந்த புதிதில் பார்ப்பனர் மீது தமிழ்ச் சமூகத்தில் எதிர்ப்புணர்வும் சமூக விலக்கமும் இருந்து வருவதைக் கண்டபோது அது வியப்பிற்குரியதாகவும் புரிந்துகொள்வதற்குச் சிரமமாக
வும்தான் இருந்தது. ஊரார் வீட்டுச் சுவர்களில் எல்லாம் மிகப் பிரமாண்டமாகக் கருஞ் சாயத்தினால் பார்ப்பானே வெளியேறு என்று எழுதப் பட்டிருப்பதைப் பார்க்கையில் மிகவும் குழப்பமாகவும் இருக்கும்.

பார்ப்பான் ஏன் வெளியேற வேண்டும்? அப்படியே அவன் வெளியேறுவதானால் பிறருக்கு அதனால் என்ன ஆதாயம் கிட்டும்? தத்தம் சொந்த ஊர்களைவிட்டு அவர்கள் எங்கே போவார்கள்? என்றெல்லாம் மனதிற்குள் கேள்விகள் எழும். போகப் போகத்தான் இவையெல்லாம் ஹிந்து சமூகத்தைப் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என இரு பிரிவுகளாகப் பிளந்து போடத் திருவாளர் ஈ வே ரா மேற்கொண்ட கைங்கரியம் எனத் தெரிய வந்தது.

சரி, பார்ப்பனர்கள் இவ்வாறு ஏளனப் படுத்தப்பட்டும், பழி சுமத்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் சொந்த நாட்டிலேயே ஒருவித அந்நியமாதலுக்கு இலக்காகியும் வந்த போதிலும் அவர்களிடமிருந்து இதற்கான எதிர்வினை ஏதும் வராமல் இருப்பது ஏன் என்கிற வியப்பும் ஏற்படும். ஏனெறால் வட மாநிலங்களில் எனக்குப் பரிச்சயமான பார்ப்பன சமூகங்களின் இயல்பே வேறுதான்.

குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம் முதலான இடங்களில் சிறு சிறு பிரம்மசரிய மடங்கள் இருக்கும். இவற்றை நடத்துகிறவர்களும், இவற்றில் வசிப்பவர்களும் அநேகமாகப் பார்ப்பனர்கள்தாம். இவற்றுக்கு அகாடா என்று பெயர். இதன் பொருள் என்ன தெரியுமா? போர்ப் பயிற்சிக்கான களம் என்பதுதான். ஆம், இம்மடங்களில் வசிக்கும் பிரம்மச்சாரி இளைஞர்களின் காலை மாலை நேரப் பொழுதுபோக்கு மல் யுத்தம் முதலான வீர விளையாட்டுகள்தாம்!

ஹாங்காங் திரைப்படங்களில் பார்க்கிற பவுத்த மடாலயங்கள்போல பலவாறான போர்க்கலைப் பயிற்சிக் களங்களாகத்தாம் அகாடாக்கள் விளங்கும்.

ஊரில் ஏதேனும் பிரச்சினை என்றால் முதலில் தொடை தட்டிகொண்டு வருபவர்கள் அந்த அகாடாக்களைச் சேர்ந்த பிரம்மசாரிப் பார்ப்பன இளஞர்கள்தாம். நியாய, அநியாயங்
களுக்காக அரசு நிர்வாகங்களுடன் மோதி, காவல் துறையின் கவனிப்புக்கு ஆளாகி பாகி யாக, அதாவது சமூகத்திலிருந்து ஓடிப் போகிறவர்களாக வாழ்க்கையில் திருப்பம் காண்பவர்களிலும் பார்ப்பனர்கள் கணிசமாகவே உண்டு. இவ்வாறு சமூகத்தைவிட்டு ஓடிப் போகிறவர்கள் என்பதைவிட ஓடிப் போக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறவர்கள் தமது உயிர்த்திருத்தலுக்குத் தேர்ந்துகொள்ளும் தொழில் வழிப்பறி, கொள்ளை போன்றவையாகத்தான் இருக்க முடியும். காவல் துறையினரின் அபாண்டமான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க ஊரை விட்டு ஓடித் தலைமறைவாகும் அவர்கள் நிஜமாகவே குற்றச் செயலில் இறங்கி மேலும் மேலும் குற்றங்களைச் செய்யும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு கொள்ளைக்காரர்களாக உருவெடுப்பவர்கள் அதிகார வர்க்கத்துடன் தனி நபராக மோதும் சக்தியின்மையால் காலப்போக்கில் தனித் தனிக் குழுக்களாகச் சேர்ந்து இயங்கத் தொடங்குவார்கள். இப்படி உருவாகி இயங்கியவைதாம் சம்பல் கொள்ளைக் கூட்டங்கள். இவ்வாறான குழுக்கள் பல பார்ப்பனர் தலைமையில் இயங்கியதுண்டு.

வடக்கே ராணுவம், காவல் துறை போன்ற உடல் வலிமை சார்ந்த பிரிவுகளில் பார்ப்பனர்கள் ஏராளமாக இடம்பெற்றிருப்பதையும் கண்டிருக்கிறேன். எனவே எனக்குப் பரிச்சயமான வட மாநிலச் சமூகங்களைச் சேர்ந்த பார்ப்பனர்கள் போர்க்குணம் மிக்கவர்களாகவும், தமது உடல் வலிமையின் காரணமாக மற்ற பிரிவினரால் மிகவும் மதிக்கத் தக்கவர்களாகவுமே இருந்தனர். அத்தகைய பார்ப்பனர்களைப் பார்த்துப் பழகியிருந்த எனக்குத் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் இயலாமையினையும் சுய பச்சாதாபத்தையும் பார்க்கையில் ஆச்சரியமாகவும் வெறுப்பாகவுங்கூட இருந்தது. அந்தக் கால கட்டத்தில் வாய்ப்பேச்சளவிலும் எழுத்து மூலமாகவும் பார்ப்பனர் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்று வந்த போதிலும் மிகவும் அபூர்வமாகவே அவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. பார்ப்பனர் மீது மிகக் கடுமையான எதிர்ப் பிரசாரம் இருந்த போதிலும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு என்பதெல்லாம் எப்பொழுதேனும் அங்கொன்றும் இங்கொன்றும் நிகழும் சம்பவங்களாகத்தான் இருக்கும். அவற்றுக்கு ஆளாகிறவர்களும் வறியவராய் நோஞ்சான்களான அப்பாவி அர்ச்சகர்களாகவோ, புரோகிதர்களாகவோ சமையல்காரர்களாகவோதான் இருப்பார்கள். ஒரு வக்கீலாகவோ அரசாங்க அதிகாரியாகவோ இருக்க மாட்டார்கள்! ஆக பார்ப்பன வெறுப்பாளர்களின் தாக்குதலும் கையாலாகாத அப்பாவி பார்ப்பனர்கள் மீதுதான் நடக்கும். இவ்வாறு தாகுதலுக்கு உள்ளாகிறவர்கள் என்னதான் கையாலாகாதவர்களாக இருப்பினும் திருப்பித் தாக்காமல் தம்மீதான தாக்குதலுக்குப் பணிந்து போவானேன் என்றும் ஆச்சரியமாக இருக்கும். சிறு வயது முதலே துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்கிற பாட்டிமார் போதனையில் ஊறியதால் வந்த வினை அது என்று புரியாது. அச்சம் தவிர், மோதி மிதித்து விடு என்றெல்லாம் பாடம் புகட்டப் படாத வளர்ப்பு அது என்று தெரியவில்லை.

நாõட்டுப்புறங்களில் நாட்டாண்மை செலுத்துவோர் பெரும்பாலும் பார்ப்பனர் அல்லாதோராகவே இருக்கக் கண்டேன். இவர்களுக்குத் தலையாட்டும் சிப்பந்திகளாகவே பார்ப்பனர் இருப்பதும் கண்டேன். உதாரணமாக விழாக்களில் முதல் மரியாதை பெறுபவர் பார்ப்பனர் அல்லாதவராகவும் அந்த முதல் மரியாதையை பவ்வியமாக அளிப்பவர் பார்ப்பனப் புரோகிதராகவும்தான் இருப்பார். சாமி என்று அவர் அழைக்கப்பட்டாலும். அழைப்பவர் குரலில் அதிகார தொனிதான் இருக்கும். பிறகு ஏன் பார்ப்பனர் தனிமைப் படுத்தப் பட்டு எதிர்க்கப் படுகிறார்கள்? விவசாயமே முக்கிய தொழிலாக இருந்த அக்கால கட்டத்தில் நிலச் சுவான்தாரர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர் பார்ப்பனர் அல்ல. நில புலன்கள் ஏராளமாக இருந்த பார்ப்பனர்களில் பலர் குத்தகைக்கு அவற்றைக் கொடுத்துவிட்டுத் திண்ணையில் சீட்டாடிப் பொழுது போக்கும் சோம்பேறிகளாகத்தான் இருந்தனர். பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுடன் , அவர்களைத் துன்புறுத்தும் விதமாகவோ, அவர்களின் உழைப்பைச் சுரண்டும் வகையிலோ நட்ந்துகொள்ளும் வாய்ப்பு பார்ப்பனர்களுக்கு இல்லை. பார்ப்பனர் அல்லாத குத்தகைதாரர் மற்றும் சிறு நில உடமையாளர்கள்தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப் படுத்துகிறவர்களாகவும் அதற்கான வாய்ப்பு உள்ளவர்களாகவும் இருக்கக் கண்டேன். பிறகேன் பார்ப்பனர் மீது அத்தனை துவேஷம்?

மிகவும் யோசித்துப் பார்த்ததில், பார்ப்பனருக்கு அடுத்த நிலையில் உள்ள பிற சாதியாரை கல்வி, அரசாங்க உத்தியோகம் ஆகியவற்றில் பார்ப்பனருக்குப் போட்டியாக இயங்குவதற்குத் தூண்டிவிடும் பொருட்டும் தாழ்த்தப்பட்டோரிடையே அவர்கள் மீதான வெறுப்பைத் திசை திருப்பி விடுவதற்காகவும்தான் பார்ப்பன துவேஷ செயல் திட்டத்தை
ஈ வே ரா வும் அவரது முன்னோடிகளான பொப்பிலி அரசர், டி எம் நாயர், தியாகராய செட்டியார் முதலானோரும் வகுத்து, வெற்றிகரமாகச் செயல் படுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்தது. இவர்கள் அனைவருமே கல்வி உத்தியோகம் செல்வச் செழிப்பு ஆகியவற்றில் பார்ப்பனர்களால் எவ்விதப் பாதிப்புக்கும் இலக்கானவர்கள் அல்ல என்பதும் புரிந்தது. கல்வி, அரசாங்க உத்தியோகம் ஆகியவற்றில் பார்ப்பனர் அல்லாத பிற சாதியாரும் வாய்ப்புப் பெற வேண்டுமெனில் பார்ப்பனர் மீதான துவேஷத்தைத் தோற்றுவிக்காமல் ஆக்கபூர்வமான வழிகளில் அதனைச் சாதித்திருக்க முடியும். ஆனால் துவேஷத்தைத் தூண்டுவதன் மூலம் இதில் துரிதகதியைத் தோற்றுவிக்க முடியும் என ஒருவேளை அவர்கள் எண்ணி விட்டனர் போலும்.

ஒரு குறிப்பிட்ட சாதியாருக்கு எதிராக அவர்களின் சமயம் சார்ந்த பிற சாதியாரை ஒன்று திரட்டி ஒரு துவேஷப் பிரசார இயக்கம் தொடங்கும் முயற்சி தமிழ் நாட்டில்தான் தோன்றியது. குறிப்பாக ஹிந்து சமயத்தின் குருமார் ஸ்தானத்தில் இருப்பவர்கள் பார்ப்பனர்தாம் என்ற எண்ணத்தில் அவர்களை செல்லாக் காசாக்கிவிட்டால் ஹிந்து சமயத்திலிருந்து பிற சாதியாரை வெகு எளிதாகத் தம் மதங்களுக்கு இழுத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் மத மாற்ற சக்திகள் பார்ப்பன துவேஷத்தை உற்சாகமாக வரவேற்றதில் வியப்பில்லை. ஆனால் இந்த சக்திகளுக்கும் தமிழ் நாட்டில்தான் பிடிமானம் இருந்தது. பிரத்தியட்ச நிலவரப்படிப் பார்த்தால் சமூகப் படிக்கட்டுகளில் பார்ப்பனர் இருந்த இடம் மேலாதிக்கம் செலுத்தத் தக்க தலையாயதாக இல்லை. அதிலும் குறிப்பாக நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் கல்வி, அரசுப் பணியிடங்கள் ஆகியவற்றில் பார்ப்பனரின் எண்ணிக்கை கன வேகமாகக் குறையத் தொடங்கிவிட்டிருந்தது. ஆனாலும் பார்ப்பன துவேஷப் பிரசாரம் வேகம் குறையாமல் தொடரவே செய்தது. சமுதாயத்திலுள்ள எல்லாவிதக் குறைபாடு
களுக்கும் பார்ப்பனர்தான் காரணம் என்பதுபோல், சமூகத்தில் பார்ப்பனர் இல்லாது ஒழிந்துவிட்டால் எல்லம் சரியாகிவிடும் எனப் பிரசாரம் செய்யப்பட்டது.

தமிழ் நாட்டின் வரலாற்றில் பார்ப்பன துவேஷம் மிகவும் உச்ச கட்டத்தில் இருந்தது நாற்பதாம், ஐம்பதாம் ஆண்டுகளில்தான். இன்றைய இளந் தலைமுறையினரிடையே பார்ப்பனத் துவேஷம் இல்லை. இதை விரும்பாத திராவிட இயக்கத்தவர், மீண்டும் அதனைப் புதுப்பிக்க அரும்பாடு பட்டு வருகின்றனர். கல்வி, உத்தியோகம் ஆகியவற்றில் பார்ப்பனருடன் போட்டியிடவேண்டிய அவசியம் இன்று பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்கு இல்லாததால் திராவிட இயக்கத்தவருக்கு இதில் வெற்றிகிட்டவில்லை. பார்ப்பனர் அல்லாத இளைய தலைமுறைனரிடையே பார்ப்பனரை வேறுபடுத்திப் பார்க்கும் இயல்பு இல்லாததோடு, பலருக்குப் பழகும் தன்மையில் பார்ப்பனர்போல் நடந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் உள்ளது. படிப்பில் பார்ப்பனக் குழந்தைகள்தான் சூட்டிகையாக இருப்பார்கள் என்று முன்பெல்லாம் இருந்து வந்த அனுமானம் இன்று பொய்த்துப் போய்விட்டது. இன்றைய இளம் தலைமுறையினரின் இயல்பைக் கவனிக்கிற போது, பார்ப்பன துவேஷம் என்பது விரைவில் காலாவதியாகிவிடும் என்றே எதிர்பார்க்க முடிகிறது.

பார்ப்பன துவேஷம் கொடிகட்டிப் பறந்த ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்க காலத்தில்தான் எனக்கு அண்ணாவுடன் பழகும் வாய்ப்பும் கிட்டியது.

அன்று அண்ணா அவர்களுடன் பேசிப் பழகியது மிக மிகக் குறுகிய காலமே என்றாலும், சமூகத்தில் நிலவும் பலவாறான கேடுகளுக்கு அனைத்துச் சாதியாருமே பொறுப்பாளிகளாக இருக்கையில் பார்ப்பனரை மட்டும் தனிமைப்படுத்தி அவர்கள் மீது பிறருக்கு விரோதம் வளரவிடுவது எந்தவிதத்தில் சரி என்று ஒருதடவை கேட்டபோது, அப்படி ஒரு குறுப்பிட்ட சாதியார் மீது பகை இருக்கலாகாது என்பதால்தான் நாங்கள் எதிர்ப்பது பார்ப்பனியத்தைத்
தான், அது எல்லா சாதியாரிடமும் உள்ளது, பார்ப்பனரிடம் மட்டும்தான் இருப்பதாகச் சொல்ல முடியாது என்கிறோம் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். அப்படியானால் அதை ஏன் பார்ப்பனியம் என்று ஒரு குறிப்பிட்ட சாதியார் மீதான பழி போலச் சுட்ட வேண்டும் என்று கேட்டபோது, அண்ணா அவருக்கே உரித்தான குறும்புச் சிரிப்புடன் அடையாளப் படுத்துவதற்கு ஏதாவது ஒரு பெயர் வேண்டாமா என்றார்கள். மேலும் சமாதானம் செய்வதுபோல, பார்ப்பனர் மத்தியிலேயே தீண்டாமை, ஆலயப் பிரவேசம், விதவா விவாகம் என்கிற விஷயங்களில் எதிர்ப்புக் காட்டுபவர்களை சனாதனிகள் என்று அடையாளப் படுத்துவதில்லையா, சனாதன தர்மம் என்று சொல்வது பொதுவாக ஹிந்து மதத்தைத்தானே, அது சம்பந்தமான விவகாரங்களைத்தானே நாம் பேசுகிறோம், ஹிந்து சமயத்தின் வழிபாடு, திருமணம், இறுதிச் சடங்கு முதலான நடைமுறைகளைச் செயல்படுத்துகிற பொறுப்பி லுள்ளவர்கள் பார்ப்பனர்தாமே என்றும் சொன்னார்கள்.
தி.மு.க வில் பார்ப்பன இளைஞர்கள் பெருமளவில் சேரவேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும் அண்ணா அவர்கள் மிகத் தெளிவாகச் சொன்னார்கள். அவரது விருப்பம் நிறைவேறியிருப்பின் இன்று தி மு கவின் பிம்பமே மாறிப் போயிருக்கும். ராஜாஜியின் குடும்ப நண்பரான ஏ வி ராமனின் மகன் வி பி ராமன் மிகச் சிறந்த சட்ட வல்லுனர். ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டு, அண்ணாவின் மீதான அபிமானமும் நம்பிக்கையும் மீதூற அவர் திமு க வில் சேர்ந்தார். அன்று தி மு க வில் இருந்த முன்னணியினர் பலரும் அவரிடம் மிகவும் மரியாதையோடும் அன்போடும்தான் பழகினார்கள். ஆனால் குறுகிய காலத்திலேயே அவர் தி மு க விலிருந்து விலகிச் செல்ல நேர்ந்தது. அதற்குக் காரணம் என்ன என்பது எனக்குத் தெரியும் என்றாலும், ஆதாரம் இல்லாததால் பகிரங்கப் படுத்த இயலாதவனாக இருக்கிறேன். குறிப்பாக மதியழகன், முல்லை சத்தி, செழியன், கே ஏ கிருஷ்ண சாமி, மனோகரன் போன்றவர்கள் வி பி ராமனிடம் மிகவும் பிரியமாகவும் மரியாதையோடும் பழகினார்கள்.

தேர்தல் களத்தில் காங்கிரசை முறியடிப்பதற்காக தி மு கவும் சுதந்திரக் கட்சியும் நெருங்கி வந்த போது ஒரு சந்தர்ப்பத்தில் அது பற்றி அண்ணாவிடம் பேசுகையில் இதனால் அரசியல் ரீதியாகப் பலன் விளைகிறதோ இல்லையோ, பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கிற பிளவு மறைந்தால் சரி என்று அண்ணா சொன்னார்கள். பார்ப்பனர் பலரிடம் அண்ணா மிகவும் அந்நியோன்னியமாகப் பழகுவதைப் பார்த்திருக்கிறேன். சோவை அவர் மிகவும் பாராட்டிப் பேசுவார். ஒரு முறை எதற்காகவோ நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் உடனடியாக ஒரு ஆவணத்தில் கையொப்பம் பெற வேண்டியிருந்தது. பிராட்வேயில் மிகவும் தற்செயலாக ஒரு வைணவப் பார்ப்பன வழக்கறிஞரிடம் சென்றுவிட்டோம். நெற்றியில் லட்சணமாகத் திருமண் இட்டுக்கொண்டு, கட்டுக் குடுமியுடன் பஞ்ச கச்சம் அணிந்து அவர் காட்சியளித்தார்.

அண்ணாவைப் பார்த்ததும் அந்த வழக்கறிஞர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, பலவாறு உபசரித்து, அதன்பின் உங்களுக்கு நான் என்ன சேவை செய்ய வேண்டும் என்று கேட்டார். அண்ணா அவர்கள் தமது தேவையைச் சுருக்கமாக எடுத்துச் சொன்னார்கள். நீங்கள் என்னைத் தேடி வந்ததில் எனக்கு மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும்தான் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் இந்தச் சின்ன விஷயத்திற்காக நீங்கள் சிரமப்பட்டு வரவேண்டுமா? யாரிடமாவது கொடுத்துவிட்டிருந்தால் கையொப்பமிட்டு அனுப்பியிருக்க மாட்டேனா? என்று கேட்டார். இது என்னை அறிந்தவ்ர் என்ற முறையில் அளிக்கப்பட வேண்டிய சான்று. ஆகையால் நான் நேறில் வருவதுதானே முறை எண்று அண்ணா பதிலிறுத்தார்கள். அதைக் கேட்டு வழககறிஞர் மிகவும் மனம் நெகிழ்ந்துவிட்டார். என்ன அண்ணா இது, நீங்கள் வந்துதானா உங்களை ஒருவர் அறிய வேண்டும்? உங்களை அறிந்திருப்பதாகக் கையொப்பமிடுவதே ஒரு பெருமை அல்லவா? இதற்கான வாய்ப்பை எனக்குத் தந்தமைக்காக நன்றி என்று சொன்னார். கவனிக்க வேண்டும், அண்ணா என்றுதான் அந்த வழக்கறிஞர் சொன்னார். தொடக்கத்தில் அண்ணாவை ஸர் என்று அழைத்தவர் அவர்! திரும்பி வருகையில் அண்ணா அவர்கள் என்னிடம் அவர் எப்படி இருக்கிறர் பார்த்தாயா? லட்சணமாகத் திருமண் நெற்றியும் தலையில் குடுமியுமாகச் சிம்மம் மாதிரி உட்கார்ந்திருக்கிறார் பார். என்னைப் பார்த்ததில் சிறிதளவாவது அவருக்குக் காம்ப்ளெக்ஸ் ஏதும் வந்ததா? என்று அந்த வழக்கறிஞரைப் பாராட்டினார்கள் (அண்ணா அவர்கள் ஹோம் லேண்ட் இதழை ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தபோது இச்சம்பவம் நிகழ் ந்தது. இதே போன்ற சம்பவம் பல ஆண்டுகள் கழித்து மிகவும் வியக்கத் தக்க வகையில் கே ஏ கிருஷ்ணசாமியை ஒரு நோட்டரி பப்ளிக்கிடம் அழைத்துச் சென்றபோதும் நிகழ்ந்தது. கே ஏ கே அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். தமிழ் நாடு பாட நூல் திட்டப் புத்தகங்களை அச்சிடுவதற்கு வங்கிக் கடன் பேறுவதற்காக நோட்டரி பப்ளிக் கையொப்பம் தேவைப்பட்டது. முன்னேற்பாடு ஏதும் இன்றி நாங்கள் சென்றதுகூட நெற்றியில் திருமண், தலையில் கட்டுக் குடுமி என்றிருந்த ஒரு ஐயங்கார் ஸ்வாமியிடம்தான்! அண்ணாவைப் போலவே கே ஏ கேயும் திரும்பி வருகையில் அவரைப் பாராட்டிப் பேசத்தவறவில்லை. ஒருமுறை கே ஏ கே யிடம் ஒரு நபர் இன்னொரு நபரைப் பற்றி இகழ்வாகப் பேசி, அதற்கு முத்தாய்ப்பு போல என்ன இருந்தாலும் பார்ப்பான் தானே என்று அலட்சியமாகச் சொன்னார். அதைக் கேட்டதும் அடக்க மாட்டாத கோபத்துடன் கே ஏ கே தமது இருக்கையிலிருந்து துள்ளி எழுந்து, ஓடிப் போடா நாயே என்று அந்த நபரை விரட்டினார்).

இந்தப் பின்னணியில் இன்றைய காலகட்டத்திலும் பார்ப்பனர் மீதான துவேஷம் புதுப்பிக்கப் பட்டுவருவதைக் காண்கிறேன். ஹிந்து சமூக உணர்வு அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் மேலோங்கி, அதன் விளைவாக ஹிந்து ஆலயங்களுக்கு அருகாமையில் ஹிந்துக்களின் சமய நம்பிக்கைகளைப் புண்படுத்தி, அவர்களை வம்புக்கு இழுப்பதுபோல் நிறுவப்படும் வே ரா சிலைகள் மீது ஏதேனும் தாக்குதல் நிகழும்போது, ஊருக்கு இளைத்த பார்ப்பனர் மீதுதான் வன்முறைத் தாக்குதல் நடக்கிறது.

சமூக அமைப்பின் எல்லா நிலைகளிலும் பார்ப்பனருக்கு வாய்ப்பு மிக மிகக் குன்றி
விட்டிருக்கிற இன்று பார்ப்பனர் ஒரு அரசியல், சமூக சக்தியாக இல்லாத போதிலும் அவர்கள் மீதான துவேஷப் பிரசாரம் நீர்த்துப் போய்விடாமல் பாதுகாக்கப் படுகிறது. இதனால் வெளி மாநிலங்களில் கூட அல்ல, வெளி நாடுகளுக்கே போய் நிரந்தரமாகத் தங்கிவிடுவோம் என்கிற விரக்தி மனப்பான்மை பார்ப்பனரிடையே வளர்ந்துவிட்டிருக்கிறது.

புத்தி சாதுர்யமும் முன்னேறும் சாதுரியமும் பார்ப்பனர்களிடம் மட்டும்தான் உள்ளது என்கிற நிலைமை இன்று இல்லை. ஹிந்து சமூகத்தில் எல்லா வகுப்பாருமே முயற்சியிருந்தால் எல்லா வகையிலும் முன்னேற முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே பிற வகுப்பார் இனியும் பார்ப்பனரைத் தனிமைப் படுத்தி அவர்கள் தமது முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதாக விரோதம் பாராட்டத் தேவையில்லை.

இன்று அரசுத் துறைகள் மட்டுமே வேலை வாய்ப்பிற்கான வழிமுறைகளாக இல்லை. அரசுப் பணியைவிடக் கூடுதல் ஊதியமும், தகுதியின் அடிப்படையில் விரைவான பதவி உயர்வும் கிட்டும் பணியிடங்கள் பலவும் தனியார் துறைகளில் உள்ளன. ஆனால் அதிகாரம் உள்ள, சமூக நலனுக்கான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ள பணியிடங்கள் அரசு சார்ந்தவையாகத்தான் இருக்க முடியும். இட ஒதுக்கீட்டின் பிரகாரம் அவை அளிக்கப்
பட்டாலும், ஓரளவுக்கேனும் சில இடங்களைப் பார்ப்பனர் கைப்பற்ற முடியும். தடைகள்
பல இருப்பின் அவற்றை மீறி முன்செல்லும் தூண்டுதல் எழுவது இயற்கை விதி. சூரிய ஒளி மறுக்கப்படும் தாவரம் சுற்றி வளைத்துக் கொண்டு தலை தூக்குவதுபோல் பார்ப்பனருக்கு முன்னேறும் துணிவு தோன்றவேண்டும்.

பார்ப்பன இளைஞர்கள் உடல் வலிமைக்கான பயிற்சிகளையும் வீர விளயாட்டுகளையும் மேற்கொள்வதை கல்வி கற்பதற்கு இணையான அவசியமாகக் கொள்ளவேண்டும். உடம்பில் உரம் இருந்தால் உள்ளமும் தானே உரம் பெறும். தன்னாலும் முடியும் என்கிற தன்னம்பிக்கை பெருகும். எதிரி அடித்தால் குனிந்து வாங்கிக் கொள்ளாமல் திருப்பி ஓர் அடியாவது கொடுக்கிற துணிவு வரும். திருப்பி அடிக்கத் தொடங்கினால் அதன்பிறகு எதிராளி அடிக்க யோசிப்பான்.

உடல் உரம் பெறுவதற்கான சத்துணவை விலை அதிகம் இல்லாத உணவுப் பண்டங்கள் மூலமாகவே பெறுவது சாத்தியம்தான். எனவே உடல் பலவீனத்திற்கு வறுமையைக் காரணம் காட்டத் தேவையில்லை. வெறும் கீரை வகைகளிலிருந்தே எல்லாச் சத்துகளையும் கிரகித்துக் கொண்டுவிட முடியும்.

சிதம்பரத்தில் வசித்த போது அங்கு புதுத் தெருவுக்குப் பின்னால் இருந்த ஓடைக்கரையில் பார்ப்பனச் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள். அவர்களை அங்கு வரும் பார்ப்பனரல்லாத சாதிகளைச் சேர்ந்த பெரிய பையன்கள் மடக்கிக் கிண்டல் செய்து வம்புக்கு இழுப்பார்கள். பதிலுக்கு பார்ப்பனச் சிறுவர்கள் வாய்மொழியாகவாவது சிறு அளவில் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களா என்று கவனிப்பேன். ஊஹூம், ஒதுங்கிப் போய் தலை குனிந்து நிற்பார்கள். இதனால் பார்ப்பனர் அல்லாத பையன்கள் மேலும் துணிவு பெற்று, ஸ்டம்புகளைப் பிடுங்கி எறிவதும், பந்தைக் கவர்ந்து வீசி எறிவதுமாக ஆட்டம் காட்டுவார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு ஒருமுறை அவர்களின் குறுக்கீட்டைக் கண்டித்தேன். பையன்கள் அதைப் பொருட்படுத்தாததால் பொறுமையைக் கைவிட்டு, நட்டு வைத்திருந்த ஸ்டம்புகளை நானே பிடுங்கி அந்தப் பெரிய பையன்களின் முதுகில் நாலு போட்டேன். பையன்கள் சிதறி ஓடினார்கள். நீங்கள் கிரிக்கெட் ஆடினது
போ தும், முதலில் உருப்படியாக உடற் பயிற்சி செய்யுங்கள், குஸ்தி பழகுங்கள் என்று பார்ப்பனச் சிறுவர்களிடம் சொன்னேன். சக்கரவர்த்தி (இவர் நகர தி. மு.க செயலாளர் அல்ல, வேறொரு தண்டால் பஸ்கி எடுக்கும் சக்கரவர்த்தி)என்பவரிடம் சொல்லி அவர்கள் குஸ்தி பழக ஏற்பாடு செய்தேன். ஆனால் பெற்றோர் அனுமதி மறுத்ததால் பார்ப்பனச் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுவதைத்தான் தொடர்ந்தனர்! நல்ல வேளையாக அதன்பின் அவர்களுக்குப் பிறரால் இடையூறு ஏதும் நேரவில்லை! எதிர்ப்பு வரும் என்று தெரிந்தால் வாலைச் சுருட்டிக் கொள்வது வம்பர்களின் இயல்பு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டேன்.

தப்பியோடுவதற்கான எல்லா வழிகளும் மூடப்பட்டு விட்டால் பூனைக் குட்டிகூடச் சீறிப் பாயத் தயாராகிவிடும். இதனைப் பார்ப்பனர் உணரவேண்டும். எதிரிகள் தாக்கினால் திருப்பி ஒரு முறையாவது தன்னால் முடிந்தவரை தாக்க வேண்டும் என்கிற சொரணை அவர்களுக்கு வர வேண்டும். திருப்பித் தாக்கப்படுவோம் என்று தெரிந்தால் தாக்குகிறவன் யோசிப்பான்.

இட ஒதுக்கீட்டுச் சலுகை தமக்கு இல்லை என்பதால் உலகமே அஸ்தமித்துவிட்டதாகப் பார்ப்பனர் எண்ணத் தேவையில்லை. எலிகளின் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளத் தமக்கும் வாய்ப்புக் கிட்டவேண்டும் என்று சுய மரியாதையின்றி அவர்கள் ஏங்கவும் தேவையில்லை. மிகச் சிறப்பாகப் போட்டியிட்டு ஐ ஏ எஸ், ஐ பிஎஸ் முதலான பதவிகளைக் கணிசமான அளவு கைப்பற்றினாலே போதும். அப்படிச் சிலர் கைப் பற்றிக் கொண்டுதான் வருகின்றனர் (வெளி மாநில மையங்களில் தேர்வு எழுதிப் பிறகு தமிழக கேடரைப் பெற முடியும். எனது ஆலோசனைப்படி இவ்வாறு நடந்து சிலர் வெற்றிபெற்றிருக்கிறார்கள் ). சாதாரண அரசுப் பணிகள் தேவையில்லை என்று மற்றவர்கள் தமது இலக்கை வேறு திக்குகளுக்கு மாற்றிக் கொள்ளவேண்டும். இன்றைய நிலையில் இது சாத்தியம்தான். உத்தியோகம் என்கிற இலக்கை விடுத்து சுயதொழில் என்கிற இலக்கை மேற்கொள்வதும் சாத்தியமே. அது சமூகத்தில் ஒரு உயர் ஸ்தானத்தைத் தேடித் தரும்.

உயர் கல்வியில் ஆர்வமும் அதற்கான தகுதியும் உள்ளவர்கள் மனம் சோராமல் முயற்சி செய்தால் அதற்குப் பலன் கிட்டாமல் போவதில்லை. தகுதியுள்ளவர்கள் போட்டியிட்டு ஜயிக்கக் கை கொடுத்து உதவி உற்சாகப் படுத்துகிறவர்கள் இன்று இல்லாமல் போய்விட
வில்லை. மிக மிகச் சாதாரண நிலையில் தனி நபராக உள்ள என்னாலேயே கூட இவ்வாறு சிலரை ஊக்குவிக்க முடிந்திருக்கிறது என்றால் தகுதியுள்ளோருக்குக் கிட்டக் கூடிய வாய்ப்புகளுக்குக் குறைவே இல்லை எனலாம்.

தமிழ் நாட்டில் எல்லாச் சாதியரும் தமக்கென சாதிச் சங்கம் அமைத்துக் கொள்வதைக் கண்டபின் பார்ப்பனரும் தமக்கென ஒரு சாதிச் சங்கத்தை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். ஆக, முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் பிறரைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்!

மற்ற சாதியார் தமக்கெனச் சங்கம் அமைத்துக் கொண்ட போதிலும் பார்ப்பனர் இவ்வாறு தமக்குச் சங்கம் தொடங்கியிருக்க வேண்டாம் என்பதுதான் எனது கருத்து. பார்ப்பனர்களில் பலர் இக்கருத்தோடு உடன்படுபவர்களாக உள்ளனர். பார்ப்பனர் இவ்வாறு தமக்கென சங்கம் வைத்துக்கொண்டு விட்டதால், சாதி அடிப்படையில் அல்லாமல் பொருளாதார அடிப்படையில் கல்விக்கு நிதியுதவி, சிறு தொழில் முதலீடு, வேலை வாய்ப்பிற்கான பயிற்சி அளித்தல் முதலான பணிகளை மேற்கொள்ளலாம்.

உயர்கல்வி மட்டுமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்றும் எண்ணத் தேவையில்லை. பலருக்கு வேலை வாய்ப்பளிக்கக் கூடிய, மேற்கொள்வதற்கும் எளிய தொழில்கள் பல உள்ளன. துணிவும் மன உறுதியும் இருந்தால் வானமே வசப்படும்.

சிறுபான்மையினராக இருப்பதிலும் சில நன்மைகள் உண்டு என்பதைப் புரிந்து
கொள்ளவேண்டும். தடைக் கற்களையே படிக் கற்களாக்கிக் கொள்வது சாத்தியம்தான். ஒற்றுமை, விழிப்புணர்ச்சி, கிடைக்கும் சிறு வாய்ப்ப்பினையும் உடனே
சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுதல், வாழ்வா சாவா என்று போராடிப் பார்த்துவிடுகிற மன உறுதி முதலானவை சிறுபான்மையாக இருப்பதில் உள்ள சாதகங்கள். ஆகவே தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனர் தமக்கு அங்கு இடமில்லை என மனம் சோர்ந்து வேறு புகலிடம் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. எமக்கும் இதுவே தாயகம், இதனை விடுத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏதும் எமக்கு இல்லை என்கிற உணர்வுடன் அவர்கள் தமிழ் நாட்டில் காலூன்றி நிற்கவேண்டும்.

எல்லவற்றையும்விட முக்கியமாக வெறும் சாதியின் அடிப்படையில் மட்டுமே பார்ப்பனராக அறியப்படுகிறவர்கள் தம்மைப் பார்ப்பனர் எனக் கருதிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் சாதியை மறுத்து, தம்மை ஹிந்து சமயத்தவராக மட்டுமே அடையாளப் படுத்திக்
கொண்டு பிற சாதியாருக்கும் இவ்வாறான உணர்வு தோன்ற வழிகாட்ட வேண்டும். சுய பச்சாதாபத்தை விட்டொழித்து, செயலூக்கம் பெறவேண்டும்.

நமது சமூக இயக்கத்தைக் கூர்ந்து கவனித்தோமானால் பார்ப்பனர்தாம் எல்லா விஷயங்களிலும் முன்னோடும் பிள்ளைகளாக இருந்து வருவது தெரியவரும். அது ராஜாங்கத்துடன் ஒத்துப் போவதானாலும் சரி, எதிர்த்து நிற்பதானாலும் சரியே. எத்தனை புறக்கணிப்புகளும் இடையூறுகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறிக் கொண்டு முன்னேறுகிற சாமர்த்தியம் அவர்களுக்கு இருப்பதைக் காணலாம். நீரில் மூழ்குகிறவன், திட சித்தம் இருக்கும் பட்சத்தில் எப்படியாவது, எதைப் பற்றிக் கொண்டாவது மேலேறி வந்து விடுகிற மாதிரி பார்ப்பனர் பொருளாதார நிலையில் எவ்வளவுதான் வீழ்ச்சி
யடைந்திருப்பினும் அவர்களுள் மன உறுதியுள்ளவர்களால் போராடி ஜயித்து முன்னுக்கு வந்துவிட முடிகிறது. அவர்களுக்கு முயற்சி தன் மெய்வருத்தத்திற்கேற்பக் கூலி தராமல் போவதில்லை.

வர்ணாசிரம தர்மத்தின் பிரகாரம் மறுநாளுக்கான தேவைக்குக்கூட முன்னேற்பாடு செய்துகொள்ளாதவன்தான் உண்மையான பார்ப்பனனாக இருக்க முடியும். அப்படி இருக்கும் பார்ப்பனனின் நலனை அவனது சமூகமே கவனித்துக் கொள்ளும். இன்று அத்தகைய பார்ப்பனர் இல்லை, இருப்பது சாத்தியமும் இல்லை என்றாகிவிட்டது. அப்படி இருக்கக்கூடியவர்கள் எந்த சாதியினராயினும் அவர்களே பார்ப்பனராவர். ஆகையால் இன்றைய சமுதாய அமைப்பில் பார்ப்பன வர்ணத்திற்குப் பதிலாகப் பார்ப்பன சாதி மட்டுமே பரவலாகத் தென்படுகிறது. எனவே பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள் தம் சாதியை மறுத்து, ஹிந்து சமூகத்தில் சாதியமைப்பு நீர்த்துப் போவதற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் பொருளாதார அடிப்படையே சலுகைகள் கோருவதற்கான விதியாக அமையப் போவது உறுதி. அப்போது பிற்பட்ட சாதியினர், மிகவும் பிற்பட்ட சாதியினர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளிலும் பொருளாதாரக் காரணங்களாலும் வாழ்க்கை அமைப்பு முறையினாலும் பிறருக்குச் சமமாக முன்னேற வாய்ப்புப் பெறாதவர்கள் மட்டுமே சலுகை கோரத் தகுதி வாய்ந்தவர்களாக அறியப்படுவார்கள். ஆகவே பழஞ் சரக்கான சாதியை முன்னிறுத்தி சலுகை கோரும் பிற்போக்கு நிலைமையை சாசுவதமாக எண்ணத் தேவையுமில்லை, அதற்காகப் பொருமவும் வேண்டா.

+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்