தமிழ் சினிமாவும் அதில் பெண்கள் நிலையும்

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

மாதவி ஸ்ரீப்ரியா


சில நாட்களுக்கு முன், திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான திரு.தங்கர் பச்சான், தமிழ் திரைப்பட நடிகைகள் பற்றி ஏதோ தரக்குறைவாக பேசியதாகவும், அதற்கு திரைப்பட உலகமே திரண்டு எழுந்து கண்டன குரல் கொடுத்ததும், தங்கர் பச்சான் மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன் வேலை நிறுத்தத்தை வாபஸ் கொண்டதாகவும் செய்திகளில் வந்தவண்ணம் இருக்கிறது. சரிதான், தங்கள் துறையில் கலைப் பணியாற்றும் பெண்களின் மானத்தை காக்க போர்க்கொடி உயர்த்தியது சரிதான். ஆனால், இந்த துறையினர் உண்மையிலேயே, தங்கள் துறையில் கலை சேவையாற்றும் பெண்கள் பற்றி அக்கறை இருப்பின், இந்த துறையினர் ஆற்ற வேண்டிய கடமைகளும், செய்ய வேண்டிய மாற்றங்களும் பல உண்டு என்பது கருத்து. அதில் குறைந்த பட்சம், தமிழ் சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்களும், அவர்களுடன் சேர்ந்து கலைப் பணியாற்றும் சக நடிகர், நடிகைகளும் சிலவற்றையாவது கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து. தமிழ் சினிமா ரசிகர்களும், பொதுமக்களும், இதை ஆமோதிப்பார்கள் என்பது என் கருத்து.

1) கடந்த 20 அல்லது 25 ஆண்டுகளில், இந்திய சினிமாவிலும், தமிழ்சினிமாவிலும் பெண்கள் ஒரு போதை வஸ்துவாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்தகாலத்திய கெளரவ(!) தோற்றமாக வந்து போகும் நாட்டிய நடிகைகள் தொடங்கி (ஜோதிலட்சுமி, ஜெயமாலினி முதல்) இப்பொழுது நடிக்கும் கதாநாயகிகள் வரை கலை என்ற பெயரில், தமிழ் சினிமாவில் இவர்கள் ஆடிய நடனங்களும், விரச தோற்றங்களும், அரைகுறை உடைகளும் தங்களையே இழிவுபடுத்திக் கொள்வதோடு பெண்களையே இழிவு செய்யும் செயலன்றி, வேறென்ன. இதைப்பற்றி கேட்டால், இயக்குனர்கள் மேலும், தயாரிப்பாளார்கள் மேலும், ரசிகர்களின் மீதும் பழி போடுவது, இவர்களை பற்றிய தவறான கருத்துக்களை மேலும் வலுப்படுத்ததான் செய்யும். இதை மாற்றுவதற்கு, சிறிதளவாவது முயற்சி செய்யுங்களேன் சினிமா துறையினரே!! எத்தனை படங்களில் இப்படி ஆபாசமாக ஆடிகொண்டும், பாடிக்கொண்டும், பெண்களை இழிவு செய்யும் வசனங்களையும் பேசிக் கொண்டும் இருப்பீர்கள். இது விபச்சாரத்தை காட்டிலும் கேவலமான செயல். கலை என்ற பெயரில் சினிமா துறையினரே இந்த சீரழிவிற்கு துணை போகும்போது, மற்றவரை குறை சொல்வது எதற்கும் உதவாது.

2) இளம், நடிகர், நடிகைகள் ஒன்றும் பெரிதாக மாற்றங்கள் செய்ய இயலாதுதான். ஆனால் சினிமாவில் வளர்ந்து, முண்ணனி நட்சத்திரங்களான பிறகும், செல்வங்களை குவித்த பின்னும், இவர்கள் இதையே செய்து கொண்டு இருப்பது, வருந்ததக்கது. இவர்கள் கொடுக்கும், பேட்டிகளாகட்டும், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளாகட்டும், பேசும் விஷயங்களாகட்டும், எதிலும் அறிவு சார்ந்த, மக்களூக்கு பயன் தரக்கூடிய செயல்களே இல்லை. ஆனால் சினிமா துறையினர்

நிறைய பேருக்கு ஆசை. உடனே MLA, MP, மற்றும் மந்திரிகளாக வேண்டும் என்று. நீங்கள் ஒன்றும் Mother Theresa ஆக வேண்டாம்; கொஞ்சம் நல்ல புத்தகங்களை படித்து, நல்ல விஷயங்களை பேசி, பொது மக்கள் நலன் குறித்த செயல்களில் கொஞ்சமாவது ஆர்வம் காட்டுங்களேன்!.

3) பெரும்பாலான இந்திய பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமை மிகவும் பின் தங்கியது என்று, உலகம் எல்லாம் சுற்றும் சினிமா துறையினருக்கு ஒன்றும் தெரியாததல்ல. இந்திய பெண்களின் சிறப்பே மானத்தை காப்பாற்றிகொள்ளும் பண்புதான். சினிமாவில் பெண்களை சீரழித்து காட்டியதோடு,

இப்பொழுது புதிதாக பரவி வரும் நீலபடங்களும், நிர்வாண நடன அரங்குகளும் சில சினிமா துறையின் ஆதரவிலேயே நடத்தப்படுவதாக செய்திகள் வந்தபடி உள்ளன. அப்படி இருப்பின், இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுபவரை கொஞ்சம் தடுக்க முயற்சி எடுங்களேன்!.

—-

madhavisripriya@yahoo.com

Series Navigation

மாதவி ஸ்ரீப்ரியா

மாதவி ஸ்ரீப்ரியா