தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

கோவிந்தசாமி


தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன் எழுதியுள்ளார்.

சித்திரை ஒன்று புத்தாண்டாகவும் தை ஒன்று பொங்கல் (மகர சங்கராந்தி) எனக் கொண்டாடும் வழக்கம் எவ்வாறு வந்தது என்று கீழே கூறியுள்ளேன்.

உலகில் எல்லா நாடுகளிலும் காலண்டர் சந்திரனின் பிறைகள் (phases of moon) அடிப்படையிலேயே உருவாகின. வளர்பிறை முதல் நாள்(சுக்லபக்ஷ பிரதமை) தொடங்கி அமாவாசை வரை ஒரு மாதமாகக் காணக்கிடப் பட்டது. இந்தியா முழுவதும் (தமிழ்நாடு உட்பட) ஒரே கணக்கு தான் இருந்தது. இதற்கு சாந்திரமானம் என்று பெயர் (lunar calendar). இந்தியாவில் சப்தரிஷி சகாப்தம் என்னும் இந்த பஞ்சாங்கம் கி.மு 8500 ல் தொடங்கியது.

சூரியன் சந்திரன் மற்றும் இதர கோள்கள் சுற்றுவதாகத் தோன்றும் பாதையை (Ecliptic) 12 ராசிகளாவும் 360 Deg ஆகவும் பிரித்தனர். இந்தப் பாதையில் உள்ள , சுமார் சமத்தொலைவிலுள்ள 27 விண்மீன்களுக்குப் பெயரிட்டனர். ஒரு நக்ஷத்திரம் 13.33 Deg. சந்திரன் சுமார் ஒரு நாளில் ஒரு நக்ஷத்திரத்தைக் கடக்கிறான். முழுநிலா (பௌர்ணமி) அன்று இவற்றுள் 12 நக்ஷத்திரங்களிலோ அவற்றை ஒட்டிய நக்ஷத்திரங்களிலோ சந்திரன் இருப்பான். அந்த நக்ஷத்திரங்களின் பெயர்கள் மாதங்களுக்குக் கொடுக்கப்பட்டன.

சைத்ர, விஸாக, ஜேஷ்ட, ஆஷாட, ஸ்ராவண, பாத்ரபத, ஆஸ்வீஜ, க்ருத்திக, மார்கசிர, புஷ்ய, மாக, பல்குனி.

ஒரு சந்திர மாதம் 29.5 சூரிய நாட்கள். 12 சந்திர மாதங்கள் 354 சுசூரிய நாட்களுக்குச் சமம். பூமி சூரியனைச் சுற்றிவர 365.25 நாட்கள் ஆகின்றன. பருவங்கள் சூரியனின் கதியின் படியே நிகழ்கின்றன. அதாவது ; உத்தராயணம், தக்ஷிணாயனம், விஷுவத்துகள் (வடக்கு/தெற்கு நோக்கி நகர்தல், பூமத்திய ரேகையைக் கடத்தல்). ஆதலால் சாந்திரமானத்தில் திருத்தங்கள் செய்யவேண்டி நேர்ந்தது. சூரிய வருட்த்திற்கும் (365.25 நாட்கள்) 12 சந்திர மாதங்களுக்கும் உள்ள வித்தியாசம் 11.25 நாட்கள். ஐந்து வருடங்களில் இது 5 x11.25 = 56.25 நாட்கள். ஐந்து வருடங்களில் இரு மாதங்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டனர். வேறுநாடுகளிலும் இது போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.

சுமார் 1750 ஆண்டுகளுக்கு முன்பு தான் சௌரமானம் (சூரிய பஞ்சாங்கம்) தோற்றுவிக்கப்பட்டது. சூரியன் ஒவ்வொறு ராசியிலும் (30 Deg) இருக்கும் நேரம் ஒரு மாதம். இந்த மாதங்களுக்கும் பழைய பெயர்களே வைத்துக்கொள்ளப் பட்டன. இந்த பஞ்சாங்கம் தமிழ்நாடு, கேரளா, வங்காளம், பஞ்சாப், போன்ற பகுதிகளில் மட்டும் உபயோகத்தில் உள்ளது. ஆனால் கேரளாவில் மாதங்கள் ராசியின் பெயராலே உள்ளன. சித்திரை மாதம் மேஷ மாதமாகும். ஏனெனில் சூரியன் மேஷராசியில் உள்ளான்.

இந்த பஞ்சாங்கம் கணித்த காலத்தில்:

1 சித்திரை ஒன்றில் (April 14) சூரியன் பூமத்திய ரேகையை வடக்கு நோக்கிக் கடந்தான் (vernal equinox). இது புத்தாண்டு. ஏனெனில் அடுத்த ஆறு மாதங்கள் அவன் நம் பக்கம் இருப்பான் அல்லவா.

2 தை ஒன்றில் (January 14) உத்தராயணம் ( winter solstice) தொடங்கியது.

இது இளவேனில் தொடக்கம். சூரியன் நம்மை நோக்கித் திரும்பியதற்காக அவனை வணங்கும் நாள்.

இவை இரண்டும் ஒன்றே என்பது அறிவீனம். நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்களா?

At present winter solstice is on December 21 and Vernal equinox is on March 21.

ஏன் இந்த 24 நாட்கள் வித்தியாசம்? பள்ளிக்கூடங்களில் பூமி தன்னைத் தானே சுற்றுவதையும் சூரியனைச் சுற்றி வருவதையும் மட்டுமே கற்றுத் தருகின்றனர். ஆனால் அதன் அச்சு (axis) பின்னோக்கி (clockwise) 72 வருடங்களில் ஒரு டிகிரி சுற்றுகிறது என்று சொல்லித்தருவதில்லை. இதனால் பருவங்கள் 24 நாட்கள் முன்பு வருகின்றன. சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி 24 நாட்கள் ஆன பின் பொங்கலிடுகிறோம்!!!!!!

பருவங்களின் அடிப்படையில் கூறப்படும் சித்திரை வெய்யில், ஆடிக்காற்று முதலியவையும் தவறாகிவிட்டன.

கோவிந்தசாமி


sgovindaswamy@gmail.com

Series Navigation

கோவிந்தசாமி

கோவிந்தசாமி