தமிழ்நாட்டு அரசின் பொறுப்பற்றதனம்

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

சின்னக்கருப்பன்


மாறன் குடும்பத்தினருக்கும் கலைஞர் குடும்பத்தினருக்கும் இடையேயான பூசல் இன்று தெருக்களில் வெடிக்கிறது. வளர்த்த சன் டிவி மார்பில் பாய்கிறது என்று கலைஞர் புலம்பலாம். ஆனால், அது உண்மையாகத்தான் இருக்கும். ஆனால், அதனை விட உண்மையானது வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது.

தினகரன் பத்திரிக்கை கருத்துக்கணிப்பு என்ற பெயரில் குடும்ப அரசியலை அரங்கேற்றியுள்ளது. பெண்களுக்கு என்ன உடை பிடிக்கும் என்பது போன்ற கருத்து கணிப்புகளைபோர்வையாக போட்டுக்கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வெறுக்கும் அண்டை மாநிலம் என்ன, கலைஞர் கருணாநிதிக்கு பிறகு யார் திமுக தலைவர் என்பது போன்ற அபசகுனமான, அவலட்சணமான கருத்து கணிப்புகளை அரங்கேற்றியுள்ளது.

இதன் பின்னே இருப்பது குடும்ப அரசியலாக இருக்கட்டும், அல்லது மூளை கெட்ட வக்கிரமாக இருக்கட்டும். ஆனால், இங்கே எந்த விதமான அங்கீகாரமும் கொடுக்கக்கூடாத ஒரு ஊடகக் குழுமம் இந்த சன் டிவி குழுமம் என்பதற்கு இதனை விட வேறு ஆதாரம் வேண்டாம்.

வளர்த்த கிடா மார்பில் பாய்வதும், தன் தலைமைக்கு எதிராக எழுபவர்களுக்கு – எம் ஜி ஆர் , விஜயகாந்த் – தொந்தரவு அளிப்பதும் கலைஞருக்குப் புதிதல்லவே. அதே பாணியில் தான் குடும்பப் பூசலை மூட்டிவிடவும், முடுக்கிவிடவும் சன் குழுமம் அதிபர் செய்த குசும்பு இது என்பதில் சந்தேகம் இல்லை.

கருத்துக் கணிப்பு நடத்துவதில் தவறில்லை. ஆனால், அந்தக் கருத்துக் கணிப்பின் பின்னால் ஒரு – probability – நிகழக்கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும். அல்லது மக்களின் கருத்துகளின் அடிப்படையில் ஒரு பொதுநலத் திட்டம் அல்லது , வியாபார வளர்ச்சி நோக்கம் இருக்க வேண்டும். சினிமாப் பாடல் மக்களுக்குப் பிடிக்கிறதா அல்லது நகைச்சுவை நிகழ்ச்சி பிடிக்கிறதா என்று கருத்துக் கணிப்பு நடத்தினால் அர்த்தமுண்டு. கனிமொழியையும், மு க அழகிரியையும் முதல்வர் பதவிக்கு வாரிசுகள் என்று தகவல் சேர்க்கும் கருத்துக் கணிப்புக்க்கு ஏதாவது முகாந்திரம் இருக்கிறதா? ஸ்டாலினுக்குப் பின்னல் ஒரே வரியில் மற்றவர்கள் என்று 20 சதவீதம் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டுவிட்டு மு க அழகிரி, கனிமொழிக்கு ஒரு சதவீதம், இரண்டு சதவீதம் என்று வெளீயிடுவது எபப்டி சரியான பத்திரிகை தர்மம் ஆகும்? அதுவும் மு க அழகிரியோ, கனிமொழியோ அரசியல் தளத்தில் தி மு கவிலே எந்த முக்கிய பொறுப்பு வகிப்பவர்களும் இல்லை.

கலைஞருக்கு பிறகு அடுத்த திமுக தலைவர் யார் என்பதை விட, கலைஞர் தன் அரசாங்கத்தை ஸ்டாலினிடம் கொடுத்துவிடக்கூடாது என்ற அவசரமே சன் டிவிக்கு என்பது என் கருத்து. இது ஆதாரமில்லாத கருத்து என்பது உண்மைதான். ஆனால், சமீபத்தில்தான் இதர ஊடகங்களில் கலைஞர் ஸ்டாலினுக்கு முடி சூட்டிவிட்டு சோனியா போல பின்னால் தார்மீக ஆதரவை அளித்துக்கொண்டு ஒதுங்குவார் என்பது போன்ற செய்திகள் வந்தன என்பதனை கவனிக்க வேண்டும். ஜெயா டிவியில் ஸ்டாலின் முகத்தை காட்டும் அளவுக்கு கூட சன் டிவியில் ஸ்டாலின் முகத்தை காட்டுவதில்லை என்பதையும், மு க அழகிரியை எப்போதுமே காட்டியதில்லை என்பதையும் வைத்து பார்க்கும்போது வெகுகாலமாக புகைந்துவரும் ஒரு குடும்ப சண்டையே வெளியே தெரிகிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் கூட நமக்கு நல்லதுதான் ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவது நம் சொத்துக்கு ஆபத்து, தொடர்ந்து கலைஞரிடமே ஆட்சி இருந்தாலும் அது நல்லதுதான் என்ற கருத்திலேயே இந்த அழகிரி உசுப்பல் நடந்திருக்கிறது என்பது என் கருத்து. ஸ்டாலினையும் அழகிரியையும் அடித்துக்கொள்ளச் செய்வதன் மூலம், ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதை தடுப்பது இந்த குறிக்கோளாக இருக்கலாம்.

தினகரன் சன் டிவி குழுமம் இன்று தன் அரக்கப்பிடியை தமிழ்நாட்டு ஊடகங்கள் மீது செலுத்திக்கொண்டிருப்பதற்கு பக்க பலமாக இருப்பது திமுக தமிழ்நாட்டிலும் மத்திய அரசிலும் கடந்த 15 வருடங்களில் செலுத்திய செல்வாக்குதான் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். இன்று அது ஒரு மோனோபோலியாக வளர்ந்து கேபிள் டிவி, பத்திரிக்கைகள், தெலுங்கு டிவி, மலையாள டிவி, கன்னட டிவி என்று ஒரு ஊடக சாம்ராஜ்யத்தை வளர்த்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு குழுமத்துடன் நெருங்கிய தொடர்புடையவரான தயாநிதி மாறன் மத்தியில் அதே துறை மந்திரியாக இருப்பது கான்பிலிக்ட் ஆப் இண்டர்ஸ்ட் என்பதும் அந்த நெறி முறைகள் எதனையும் இங்கே கட்சிகள் மதிக்கவில்லை என்பதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தினகரன் பத்திரிக்கை தாக்கப்பட்டது குறித்து பேசிய கலைஞர், “எந்த பத்திரிக்கையாக இருந்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொண்டவன் இல்லை” என்று கூறியிருக்கிறார். வயதான காலத்தில் அவருக்கு அலை ஓசை தாக்கப்பட்டதும், ஆனந்த விகடன் தாக்கப்பட்டதும், துக்ளக் தாக்கப்பட்டதும், மறந்துவிட்டது போலிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த வன்முறை கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததே திராவிட கட்சிகள் தான் என்னும் போது அதே வன்முறை கலாச்சாரமே திராவிட கட்சிகளின் முடிவுக்கும் காரணமாகவும் இருக்கும் என்பது பொருத்தமானதாகவே இருக்கும்.

பொருளாதார ரீதியில் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் மத்தியில் வன்முறைக்கு வரவேற்பு இருக்கலாம். தங்களது பொருளாதார விரக்திகளை வெளிக்காட்ட வன்முறையிலும் அதே மக்கள் இறங்கலாம். ஆனால், பொருளாதார ரீதியிலும் எதிர்காலத்திலும் பல்வேறு விதங்களில் முதலீடு செய்து வைத்திருக்கும் மக்கள் தெருக்களில் நடக்கும் வன்முறையினால் அதிர்ச்சியுறுவது மட்டுமல்ல, அத்தகைய வன்முறையை கைக்கொள்ளும் குழுக்களை வெறுத்தொதுக்கவும் முனைவார்கள். அதுதான் திமுகவுக்கு நடக்கும். இதே காரணத்தினால்,

இன்று திமுகவுக்கு மாற்று இல்லாததால் அதிமுகவுக்கும் அதிமுகவுக்கு மாற்று இல்லாததால் திமுகவுக்கும் ஓட்டுப் போட்டார்கள் என்பது உண்மைதான்.

தினகரனின் அரைவேக்காடு, அபத்த, வன்முறை நிறைந்த கருத்துகணிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும். அவர்களுக்கு முட்டாள்களாகவும் வக்கிரம் பிடித்தவர்களாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகணிப்பு நடத்தவும் உரிமை இருக்கிறது. செய்யட்டும். ஆனால், இங்கே முதல் குற்றம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மீதுதான் இருக்கிறது.

ஆனால், இங்கே முக்கியமாக தமிழ்நாடு அரசு வேலை செய்யவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக வைக்கிறேன். தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்த படங்கள் எந்த இழி நிலையில் தமிழக அரசு இருக்கிறது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. அந்த படங்கள் போட்டாஷாப்பில் உருவாக்கப்பட்டவையாக இல்லாத பட்சத்தில், குண்டர்கள் ஒரு நிறுவனத்தின் உள்ளே சென்று பொருட்களை உடைத்து நொறுக்குவதையும், அதனை போலீஸ் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதையும், குண்டர்கள் வேலை முடிந்து வெளியேறுவதையும், அவர்களை போலீஸார் வழியனுப்பி வைப்பதையும் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

இங்கே சிபிஐ விசாரணைக்கு என்ன தேவை இருக்கிறது? தமிழ்நாட்டில் அரசாங்கத்தை சார்ந்த போலீஸ், ஒரு நிறுவனத்தின் பொருட்களை பாதுகாக்கவேண்டிய போலீஸ், அதனை உடைப்பதற்கும், குண்டர்களுக்கு உறுதுணையாக இருப்பதையும் படம் பிடித்து காட்டும்போது எதற்காக மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்?

இந்த அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்படுவதற்கு இது ஒன்றே போதும். இன்றைய மத்திய அரசின் நிலையில் அந்த நேர்மையை அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்லர். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

இந்த வன்முறை கலாச்சாரம் தமிழக மக்களை விஜயகாந்தின் பக்கமும் ஏன் பாரதிய ஜனதாவின் பக்கமும் செலுத்தினால் ஆச்சரியப்பட மாட்டேன்.


karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்