தமிழ்நாடே! தமிழை நடு!

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

சி. ஜெயபாரதன், கனடாலண்டனுக்குப் படிக்கப் போனால்,
லத்தீன் மொழி பயிலலாம்,
அடிப்படை ஆங்கிலம்,
படிப்பதாய் ஒப்புக் கொண்டால்!
பாரிஸ் பள்ளிக்குப் போனால்
பைபிலையும்
பிரெஞ்சில் தான் கற்றுக் கொள்வாய்!
கல்வி வளமாக்கும் ரஷ்யா
பள்ளிப் பாலருக்குத் தாய்மொழியில்
கற்பிக்கும்!
சீனப் பள்ளிக் கூடத்தில்
சின்னஞ் சிறுவர்
செம்மையாய்ப் பயில்வது சீன மொழி!
ஜப்பானில் பிள்ளைகள் அனைத்தும்
தப்பாமல் எல்லாம் படிப்பது
தாய்மொழி ஒன்றில்!
பிறப்புத் தளமொழி!
பெங்களூரில் கல்வி கற்கும்
சிறுவரெல்லாம்
கன்னடத்தில் பயின்றிடுவார்!
தெலுங்குப் பள்ளித் தளங்களில்
பயிலப்படுவது தெலுங்கு!
வங்கப் பள்ளியில் தடம்வைத்தால்
தங்கையும்,
வங்க மொழியில்தான்
அகரம், உகரம் உச்சரிப்பாள்!
மும்பைப் பள்ளிக்குச் சென்றால்,
முதலில்
மராட்டி மொழியில்தான்
மகன் படிப்பான்!
தமிழகத்தின்
கேந்திரிய வித்தியாலயங்களில்
விருப்ப பாடமாய்க் கூடத்
தமிழில்லை!
வெட்கக் கேடு! அங்கே
அனைத்தையும் கற்பது ஹிந்தியில்!
நாலாயிரம் ஆண்டுகளாய்ச்
சங்கப் பேரவை வைத்துச்
சிங்கப் புலவர்கள் தோளில் சுமந்து
செம்மையாய்ச்
செதுக்கி நட்ட சிற்பமிது!
உழுது, உரமிட்டு
நீரூற்றி
வேரும், விழுதும் விட்டு ஆலமரமாய்,
பாறையில் முளைத்த
வைரப் பயிரிது!
நாளடைவில் களைகளாய் முளைத்தவை
நாட்டுப் பயிரைத் தின்றன!
செத்த மொழிக்கு உயிரூட்ட
ஜீவ மொழி
மூச்சளிக்கும்!
மொழிவாரிப் பிரிவுகளில்
தமிழ் மட்டும்
வழிமாறிப் போனதடா!
குழி பறிக்கும் கூட்டத்தை
அழிக்க முடியாது,
விழித்தெழு!
பள்ளித் தளமனைத்தும்
துள்ளித் திரிகின்ற பாலருக்குத்
தேமதுரத் தமிழைக்
கட்டாய மொழியாக்கு!
சட்ட வேலி யிட்டு,
தமிழை நடு!
தமிழை நாடு!
எந்தன்
தங்கத் தமிழ் நாடே!

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan June 7, 2006]

Series Navigation