தமிழ்நாடு – அடையாள அரசியலும் கட்சிகளும் (முதல் பகுதி)

This entry is part [part not set] of 14 in the series 20010318_Issue

-வ.ஐ.ச.ஜெயபாலன்


1.

1999 கோடை காலத்தில் தமிழ் நாட்டிலும் பாண்டிச் சேரியிலும் பயணம் செய்தபோது சாதிக் கட்சிகளின் எழுச்சி பற்றி பல திராவிட மற்றும் இடதுசாரி நண்பர்கள் கவலையோடு விவாதித்தார்கள். இதுபற்றிய ஆராய்கிற அக்கறை எனக்கும் ஏற்பட்டது. அதற்கான ஆதரவும் அவகாசமும் இன்னும் கிட்டவில்லை. மேற்படி ஆய்வுக்கு அடிப்படையாக தயாரித்த கருதுகோள்களை ஒட்டியே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தமிழக சமூக அரசியல் வரலாற்றில் ஆர்வம் உள்ளவன் என்கிற வகையில் சாதிக்கட்சிகளின் வளர்சி தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு எனவே நான் கருதினேன். அத்தகைய ஒரு அரசியற் காலக் கட்டம் தமிழக வரலாற்றில் தவிர்க்கப் படக்கூடியது என்றோ நெறியற்ற போக்கு எனவோ நான் கருதவில்லை.

2

இந்தியாவின் தேசிய அடையாளம் இரட்டைத் தன்மையது. ஜன கண மண என்கிற இந்திய தேசிய கீதத்தை எழுதிய மகாகவி தாகூரே சோனார் பங்களா என்கிற வங்கள தேசிய கீதத்தையும் எழுதினார். முப்பது கோடி முகமுடையாள் எனினும் ***மொய் குழல் ஒன்றுடயாள் என்தாய் என பாரத தேசத்தை தோள் கொட்டிய மகாகவி பாரதியாரே செந்தமிழ் நாடெனும் போதினிலே தேன்வந்து பாயுது காதினிலே என பாடினார். இந்த இரட்டை இனத்துவ அடையாளங்களும் அவற்றின் வளர்சியும் என்கிற அரசவீதியிலேயே நவீன இந்திய தேசம் நகர்ந்து வருகிறது. இந்த இரட்டை அடையாளத்தை இந்திய பெருந் தேசிய இனத்துவம் எனவும் மொழிவாரி மாநில தேசிய இனத்துவம் ( தமிழ் மாநில தேசியம்) என குறிப்பிடுவோம்.

மொழிவாரி மாநில மட்டத்தில் மேம்பட்ட தலமைகளை உள்வாங்கி ஒருங்கிணைக்காமல் கட்சியை வைத்துக் கொண்டு தனிநபரும் குடும்பமும் இந்தியாவின் மக்கள் தலைமைத்துவத்தை நிர்ணயிக்கமுடியும் எனக் கருதியதே காங்கிரசின் வற்றிப் போதலுக்கும் வீழ்ச்சிக்கு காலாகிறது.

அது தவிர்க்க முடியாமல் மாநிலக் கட்சிகளின் வளர்சிக்கும் மத்தியில் கூட்டணி அரசியலுக்கு வழிசமைத்தது. இது ஒருவகையில் எதிர்காலத்தில் இந்திய ஒருமைப்பாட்டிற்க்கு வலுச்சேர்க்கப் போகும் அடிப்படையான அம்சமே ஆகும். இது இந்திய அரசியலின் ஜனநாயகப் படுதலே ஆகும். இது இந்தி மாநிலம் மையப் பட்டு ஏனைய மொழிவாரி மாநிலங்களை இணைக்கிற இந்திய தேசியம் என்கிற தளத்தில் இருந்து

கூட்டணி அரசில் கூட்டாக பல்வேறு சமத்துவமான மொழிசார் மாநில தேசியங்களில் மையப்படும் இந்திய பெரும் தேசியம் நோக்கிய தவிர்க்க முடியாத பயணமாகும். இதன் வெற்றியே, இதன் வெற்றி மட்டுமே, இந்தியாவின் ஒருமைப் பாட்டை இந்தப் புத்தாயிரங்களில் பலப்படுத்தும்.

இதுபோலவே தமிழ் நாடு மட்டத்தில் திராவிட கட்சிகளிலும் வரலாறு செயல்படுகிறது. வளர்சி, இட ஒதுக்குதல்களுக்கூடாக பல்வேறு சாதி சமூக மட்டங்களிலும் மேம்பட்ட தலைமைகளை உள்வாங்கி கட்சியை பலப்படுத்துவதற்க்குப் பதிலாக கட்சியை வைத்துக் கொண்டு தனி நபர்களும் குடும்பங்களும் தமிழ் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கமுடியும் எனக் கருதியதே திராவிட இயக்கத்தின் கட்சிகளின் வற்றிப்போதலுக்கும் வீழ்ச்சிக்கும் காலாகிறது.

3.

இந்தியாவின் பல்வேறு மாநில இனங்களின் முரண்பட்ட அடிப்படைத் தலைமைகளிடை செயல்படக்கூடிய அவற்றை இணைக்கக் கூடிய நேரு குடும்பம் சமரசத் தலைமையை (compromise leadership) அனுபவித்தது. அதுபோலவே தமிழக மட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு சாதி பிரதேச மட்ட முரண்பட்ட அடிப்படைத் தலைமைகலளிடை செயற்பட்டு அவற்றை இணைக்கக் கூடிய சமரசத் தலைமையை புகழ்பெற்ற திராவிட இயக்கத் தலைவர்கள் அனுபவித்தனர். எனினும் நேரு குடும்பத்தினரும் திராவிடத்தலைவர்களும் தமது கையில் ஆட்சி அதிகாரம் குவிந்த போது தமது பலம் முரண்பட்ட அடிப்படைத்தலைவர்களை அமைப்பு ரீதியாக வைத்திருப்பதும் அவர்களை இணைப்பதும்தான் என்பதை மறந்துபோயினர். இதனால் அடிப்படைத் தலைவர்களை புறக்கணித்துவிட்டு கட்சி அமைப்பு, தேசிய, மநில அரசு

யந்திரங்கள் என்பவற்றை வைத்துக் கொண்டு தமதும், தமது வாரிசுகளதும் தலைமையை நிறுவிட முடியுமெனகருதி விட்டனர். இதுதான் இன்று இந்தியாவிலும் தமிழகத்திலும் நிலவும் தலைமைத்துவ நெருக்கடிகளின் காரணம். இந்தப் பின்னணியில் வைத்தே இந்திய மட்டத்தில் மாநில கட்சிகளின் எழுச்சியும் தமிழக மட்டத்தில் சாதிக் கட்சிகளின் எழுச்சியும் ஆராயப் படவேண்டும். ஒருவகையில் இது மேற்படி அரசியல் மீண்டும் ஜனநாயகப் படுகிற செயல் பாட்டின் , தலைமைத்துவம் மக்கள் மயப்படுகிற செயல்பாட்டின் தவிர்க்க முடியாத கோணல் பாதைகள்தான்.

4

இந்தியா மற்றும் தமிழ் நாட்டுச் சமூக கலாசார அரசியல் வரலாற்றை வர்க்கங்களதும் அடையாளங்களதும் வளர்சியும் வரலாறுமாக ஆராய்வதும் அவசியம் என்றே கருதுகிறேன். வர்க்கம் எல்லா அடையாளங்களுள்ளும் செயல்ப்பட்டு அவற்றை முரண்பட்ட சமாந்தர நிரைகளாக பிழவுபடுத்திச் செயல்படுகிறது. அடையாளம் தனது புலத்துக்குள் வர்க்கங்களின் அமைப்பை மேலிருந்து கீழாக இணைத்துச் சமரசம் செய்து செயற் படுகிறது.

பெரும்பாலான அடையாளங்களுக்கு ( உதாரணம் இனம் ) புவியியல் புலம் உள்ளது. எந்த வர்க்கத்துக்கும் அத்தகைய புவியியல் புலம் இல்லை. இதனாலே குறித்த ஒரு தொகுதி பிரதேசம் மாநிலம் நாடு என ஆராய்கிறபோது வரலாறு வர்க்கங்களதும் அடையாளங்களதும் வரலாறாக உள்ளது.

தேர்தல்கள் தொகுதி வாரியாக புவியியல் புலத்தில் நடை பெறுவதாலேயே தன் அடிப்படையிலான நாடாளுமன்ற அரசியலில் மக்களை அணிதிரட்டுவதில் வர்க்க அணுகுமுறைகள் பலம் குன்றிப் போகின்றன. இத்தகைய சூழலில் வர்க்கம் அடையாளங்களுக்கு ஊடாகச் செயல்படுகிறது.

இதனாலேயே நாடாளுமன்ற அரசியலில் புவியியல் வரையறையற்ற வர்க்கத்தைவிட புவியியல் வரையறை உள்ள இனம் சாதி என்கிற அடையாளங்கள் முன்னிலைப் பட்டு மக்களை அணிதிரட்டிடும் அடிப்படையாகிவிடுகிறது. இதனை புரிந்து கொள்ளவும் கையாளவும் வலிமையில்லாத இடதுசாரிகள் சிலர் அதிகாரம் மக்களிடமிருந்தல்ல, துப்பாக்கிக் குழலில் இருந்தே பிறக்கிறது என்கிற கோஷங்களை

முன்வைக்கின்றனர். அடையாள அரசியலில் தலைமைத்துவம் சமரசத் தலைமைத்துவமே.

பெரும்பாலான தேசிய வாதிகள் வரலாற்றை அடையாளங்கள் அடிப்படையிலும் பெரும்பாலான மார்க்சிஸ்டுகள் அதை வர்க்கங்களின் அடிப்படையிலும் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முயல்கிறார்கள். ஒரு தொகுதி அல்லது பிரதேசம் ஒரு தொழிற்சாலை அல்ல. அல்லது அது ஒரு பெருந்தோட்டமும் (plantation ) அல்ல. இதனாலேயே தென்னாசிய மார்க்சிய கட்சிகள்பல ஒன்றில் தொழிலாளர்/ விவசாயிகளது சங்கங்களின் சம்மேளனமாக அல்லது உதிரிப் பாட்டாளிகளின் அதி தீவிரவாத அமைப்புகளாக குறுகிவிடநேர்ந்தது. அல்லாத பட்சத்தில் அவர்கள் புலம் சார்ந்த யதார்த்தத்தை நிராகரிக்கும் சர்வதேசியவாதிகளாக உள்ளனர். எனினும் இந்திய மார்க்சிஸ்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்ட வங்காளத்திலும் கேரளத்திலும் அவர்கள் வங்காளி மலையாளி அடையாளங்களையும் வரித்துள்ளனர்.

5

உதாரணத்துக்கு சிங்களக் கடற் படையால் தொடர்ந்தும் நாய்கள்போலச் சுடப் பட்டு வருகிற தமிழக தமிழ் / மீனவப் பாட்டாளி மக்கள் பிரச்சினையில் மார்க்சிய திராவிட கட்சிகளின் அணுகுமுறையை ஆராய்வோம்.

240க்கும் அதிகமான தமிழக மீனவப் பாட்டாளிகள் சிங்கள் அரசால் கொல்லப் பட்டு 1000 அளவில் காயப்பட்டுள்ள போதும் தமிழக மார்க்சிய கட்சித் தோழர்கள் கண்களுக்கு அது தெரியவில்லை. அந்தப் பாட்டாளிகளுக்காக மார்க்சிஸ்டுகள் குரல் கொடுக்கவோ போராடவோ தயாரில்லை. ஆனால் மேற்கு வங்காளபோரின்போது அவர்களின் நிலைபாடு வேறாக இருந்தது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் எதிர்காலத்தில் கேரள தமிழ் நாடு மாக்சிஸ்டுகள் எடுக்கப் போகிற நிலைபாடு ஆய்வுக்குரியது.

மறு புறத்தில் உலகத் தமிழின தலைவன் என அபிமானிகளால் கொண்டாடப் படுகிறவர் கலைஞர் கருணாநிதி. அவர் தமிழக முதல்வராகவும் மத்திய அரசில் பங்காளியாகவும் இருந்தும் கூட சிங்கள்படைகள் நூற்றுக் கணக்கான மீனவர் படுகொலைகளைத் தட்டிக் கேட்கவில்லை. அவர் ஸ்டாலின், அழகிரி மோதல் தொடர்பாகக் காட்டிய அக்கறையின் ஒரு சிறு பகுதியினைக் கூட தமிழ் நாட்டின் மீதான சிங்களபடையினரின் தொடற்ச்சியான தாக்குதல் தொடர்பாக காட்டவில்லை. அவரது மனசு நூற்றுக் கணக்கான தமிழ் மீனவர்களது இரத்தத்தையோ அல்லது இலட்சக் கணக்கான மீனவர்களின் கண்ணீரையோ பொருட்படுத்தவில்லை. இதுதான் அடையாள அரசியலின் பெலகீனமே. தமக்கு வெற்றிதரக்கூடிய பாரிய வாக்கு வங்கியுள்ள சமூகங்கள் அல்லது பலமுள்ள வர்க்கம் என்பவையே அடையாள அரசியலில் முன்னுரிமை பெறுகிறது.

திராவிட தமிழ் அடையாள அரசியலைப் பொறுத்து அவர்களது ஆரம்ப நிலை வேறு. இன்று அவர்களது அடையாள அரசில் அடையாளங்களின் வாக்கு வங்கி அரசியலாகச் சிதைந்து விட்டது.

எம்.ஜி.ஆரின் காலத்தில் மட்டுமே மத்திய அரசு தமிழக மீனவர்கள் சார்பாக நிர்பந்திக்கப்பட்டது. அவரது நெருக்குதலால் ராஜீவ் காந்தி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இலங்கைக் கடற்படையின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது. எம்.ஜி.ஆர் / ராஜீவ் காலத்தில் மட்டுமே தமிழ்நாட்டு தமிழர்களை சுட்டுக் கொல்வதற்கு சிங்களப் படை யோசிக்க வேண்டி இருந்தது. இந்த வகையில் எம் ஜி ஆர் அவர்களது தமிழ் அடையாள அரசியல் பம்மாத்துகளும் சுயநலமும் குறைந்ததாகும்.

தனது ஆட்சி முழுவதிலும் சிங்களப் படைகள் தமிழக மீனவர்களை எதிர்ப்பின்றிப் படுகொலை செய்ய அனுமதித்த ஒருவர் உலகத் தமிழினத் தலைவரென கொண்டாடப்படுகிற அபத்தம் அடையாள அரசியலின் அபத்தம்தான். மேலும் இவை தமிழகத்து மாக்சிஸ்டுகளின் வர்க்க அரசியலினதும் திராவிட இனத்துவ அடையாள அரசியலின் போலித்தனத்தையும் தோல்வியையும் கோடிட்டுக்காட்டுவதாகும்.

தமிழ் என்கிற கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா அம்மையார்போன்ற திராவிடக் கட்சித்தலைவர்களோ அல்லது இந்தியா என நிமிர்கிற பி.ஜே.பியோ தமிழ மீனவப் பாட்டாளிகளின் இரத்தத்தையும் கண்ணீரையும் கண்டுகொள்ளவில்லை.

ஜெயலலிதா அம்மையார் அவ்வப்போது அறிக்கைகளாவது விடுகிறார். நிழல் முதல்வரான ஸ்டாலின் போன்றவர்கள் தமிழக மீனவர்கள் பற்றியோ அல்லது தமிழக மீனவர்கள்மீது சிங்கள கடற்படையின்கொலைத் தாக்குதல் இடம்பெறுகிறது பற்றியோ ஏதும் அறிவார்கள் என்கிறதற்கு ஆவணச் சான்றுகள் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.

6

உண்மையில் தமிழகத்தில் திராவிட அரசியல், பெரியார் அண்ணா காலத்தில் மேம்பட்டிருந்த பரந்து பட்ட தமிழ் அடையாள தன்மையையும் ஜனநாயகப் பண்புகளையும் வேகமாக இழந்துவருகிறது. அதன் விழைவாக திராவிட கட்சிகள் அமைப்புரீதியாக தங்களது தளங்களை இழந்து சுருங்கி வருகிறன.

கட்சிக்குள் மக்களை கொண்டுவர அஞ்சும் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் தங்கள் செல்வாக்கினால் சுருங்கிப்போன கட்சியை மக்கள் மட்டத்தில் கொண்டு செல்ல முடியும் என நம்புகிறார்கள். கட்சிக்குள் மக்களை வரவிடாமல் மக்களை கட்சிப் பணிக்கு கொன்டுவரமுடியும் என அவர்கள் நினைக்கிறது விநோதம்தான்.அதைவிட விநோதம் தாம் சமரசத் தைவர்கள் மட்டும்தான் என்கிற அடிப்படை உண்மையை உணர

மறுப்பதுதான்.

மார்க்சியக் கட்சிகள் தமிழகத்தில் வங்காள கேரள அரசியலை இறக்குமதி செய்கிறதில்தோற்றுப் போய் விட்டார்கள். சமூகங்களின் வர்க்கத் தன்மையை திராவிட அரசிலும் அடையாளத் தன்மையை மார்க்சிய அரசியலும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஏற்பட்ட அரசியல் இடைவெளியில் சாதிய அமைப்புகள் மேலோங்கு கின்றன. பல சாதிவாரிக் கட்சிகளின் ‘நதி மூலம் ‘ தேடுகிறவர்கள் அவை திராவிட கட்சிகளால் புறந்தள்ளப்பட்ட மேற்படி சாதிகளைச் சேர்ந்த தலைவர்களில் இருந்தே உற்பத்தியானது என்பதைக் கண்டு கொள்வார்கள்.

இது உண்மையில் இன்றய திராவிட அடையாள அரசியலின் பாரிய நெருக்கடியின் ஒரு குறிகாட்டியாகும்.

தமிழக வரலாற்றில் திராவிட இயக்க பதகைகளின் கீழ் பல்வேறுபட்ட பிராமணரிலிசாதியினர் தம்முடன் முஸ்லிம்களையும் இணைத்து நடத்திய இயக்கங்கள் ஒருவகையில் சாதிவாரியான சமூகநீதிக்கும் சாதிவாரியான அரசியல் அதிகார வளப் பகிர்வுக்குமான இயக்கங்கள்தான். எல்லாத் திராவிட இயக்கங்களும், கட்சிகளும் தம் தமது காலத்து பிராமணரிலிச் சாதிகளின் இயற்கைத்தலைமைகளதும் முஸ்லிம்களதும் கூட்டணிகளே. மார்க்சிச கட்சிகள் பற்றிக்கூட இது பிராமண மார்க்சியகட்சி, அது பிராமணரிலி மார்க்சிசக் கட்சி என பேசப் படுவதைக் நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியில் சாதிக் கட்சி அரசியல் ஏதோ தமிழகத்துக்கு புதிய விடயம் என்கிற மாதிரி

கவலைப் படுகிறதில் அர்த்தமில்லை.

7

பிராமணரிலி கூட்டணி என்கிற திராவிடத் தோணி இந்தத் தேர்தலோடு தன்துறையை அடையப் போகிறது . எனது கணிப்பில் சாதி கட்சிகளின் எழுச்சி தற்காலிகமானது. சாதிக்கட்சிகளின் சமரசங்களுக்கூடாக தமிழ் மானில தேசிய வாத காலக்கட்டத்துள் தமிழ்நாடு பிரவேசிக்கப் போகிறது. இது பிராமணரிலிகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் புதியதொரு தளத்தில் சமரசம் ஏற்படுகிற காலக் கட்டமுமாகும்.

திராவிட இயக்கம் தனது தோற்றத்தின் அடிப்படை நோக்கங்களில் தனது வல்லமைக்குள் எய்தக்கூடியவற்றை எய்திவிட்டது. வர்க்க சாதி பாரபட்சங்கள் இருப்பினும் திராவிட இயக்க அரசியல், கல்விசார் வாய்ப்புகளை பல்வேறு பிராமணர்இலி சாதிகள் மத்தியில் பரவலாகுவதில் வெற்றிபெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட வம்சாவளியினரை தமிழ் மயமாக்குவதிலும்

முஸ்லிம்களின் தமிழ் அடையாளத்தை வலுப்படுத்துவதிலும் அது பெருவெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் மட்டுமல்ல டெல்ஹியிலும் குவிந்து தமிழகத்தின் சூத்திரக் கயிறுகளை பிடித்திருந்த பிராமணரை ஒரம்கட்டிக் கீழ்ப்படுத்தும் வகையில் பிராமணரிலிகள் மத்தியில் கற்ற மேல் வர்க்கங்களை உருவாக்குவதில் திராவிட அரசியல் வெற்றி பெற்றுள்ளது என்றே கருதுகிறேன். பல்வேறு சாதிகளைச்சேர்ந்த பிராமனரிலிகளின் மத்தியில் வளற்சி பெற்ற மேலோர்கள் தமக்கும் பிராமணருக்கும் இடையிலான சமன்பாட்டை ஓரளவு செம்மை செய்துள்ளனர். இப்போது மேற்படி பல்சாதி மேலோர் தலைமைகள்தமக்கு இடையிலான சமன்பாட்டை சாதிவாரியாக செம்மைப் படுத்துகிற முயற்சியில் தீவிரமாகியுள்ளனர்.

8

திராவிடர்களின் ஐக்கியம் என்கிற கோசம் அதன் உண்மையான அர்த்தத்தில் தென்னிந்தியாவை அல்ல தமிழ் நாட்டையே குறித்து நிற்கிறது. திராவிட இயக்கத்தின் கருத்தியல் ‘எங்கள் திராவிடப் பொன்னாடே ‘ பாடலைப் போல தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மட்டுமே குறித்து நிற்கிறது. திரவிடர்களின் ஐக்கியம் பற்றிய திராவிட இயக்கங்களின் கோட்பாடுகள் யாவும் தமிழ்நாட்டு மட்டத்தில் தமிழரையும் ஏனைய திராவிட வம்சா வழியினரையும் தமிழ் மயப்படுத்தி ஒருங்கிணைப்பதேயாகும். வெளியில் தமிழ் வீட்டில் பிறிதொரு திராவிட மொழியென வாழ்ந்த தமிழ்நாட்டு திராவிட வம்சாவழியினரதும் வட தமிழகத்து உருது முஸ்லிம்களதும் தமிழ் மயப்படுதல் துரிதப் பட்டதன் முலம் இது எய்தப் பட்டது. மேற்படி வளர்ச்சிப் போக்கு பல்வேறு பிராமணரிலி சாதியினர் மத்தியில் பன்முகப் பட்ட தலைமைத்துவ வளர்ச்சிக்கு வித்திட்டது.

எனினும் அவர்களிடையிலான நீதி தன்மையற்ற சமூக பொருளாதார கலாச்சார உறவுகள் சீர்திருந்தவில்லை. தலித் சாதிகள் மத்தியில் கற்றறிந்த மேலோர்கள் உருவாகிய போதும் நிலத்துடனும் கோவிலுடனுமான மேற்படி தலித் சாதியினரின் பாரம்பரிய உறவுகளின் அநீதித் தன்மையை

இம்மாற்றங்கள் களைந்திடவில்லை. இதுவும் இன்றைய நெருக்கடிகளின் ஒரு முகமாகும்.

(மீதி அடுத்த வாரம்)

Series Navigation