தமிழகத் தேர்தல் 2006 – சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ அமோக வெற்றி!

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

எம்.கே.குமார்.


கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில ஞாயிற்றுக்கிழமைகளின் காலைப்பொழுது. இப்படி அது நடக்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஏறி இறங்கிய இரண்டு மூன்று கடைகளிலும் அன்றைய செய்தித்தாள் கிடைக்காமல் போனது எனக்கு பேராச்சரியம் எனில் சிங்கப்பூரின் ஒரே தமிழ்ச் செய்தித்தாளான தமிழ்முரசுவிற்கும் அது மிகுந்த மகிழ்ச்சியானதொரு நிகழ்வாய் அமைந்துவிட்டிருக்கவேண்டும். இதுவரை இல்லாத அளவு மிகப்பெரும் விற்பனை எண்ணிக்கையைப் பெற்று சாதனை படைத்தது இந்த மாதங்களின் சில நாட்களில்.

சராசரியான வார விற்பனையைவிட மிக அதிகமாக, இதுவரை விற்பனையாகியிருந்த அளவைவிட அதிகமாய் அன்றைய தினங்களில் தமிழ்முரசு வெற்றியடைய காரணம் தான் என்ன?

ஜெயலலிதா-வைகோ இருவரும் கூட்டணி அமைக்கையில், உமியை யாரும் அரிசியை யாரும் கொண்டு வந்தார்களோ இறுதியில் யார் அரிசியைத் தின்றார்களோ தெரியவில்லை! இரண்டிலும் வெற்றியைத் தன்னகத்தே பெற்றுக்கொண்டது என்னவோ இந்நாளேடுதான். வைகோ அதிமுகவுடன் கூட்டணி என்றமைத்த அடுத்த வாரத்திற்குள் தமிழகத் தேர்தல் களத்தைவிட பலமடங்கு சூடு பிடிக்கத் தொடங்கியது சிங்கப்பூர் தமிழ்முரசுவின் விற்பனை.

இதை அப்பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டது. சிங்கப்பூரில் நடந்த ஒரு குழந்தையின் கொலைச்செய்தியும் காரணமென்று பார்க்கப்பட்டாலும் இவ்வெற்றிக்கு முழுமுதற் காரணம் இந்திய குறிப்பாகத் தமிழகத் தேர்தல் களமும் வயிற்றுப்பாட்டிற்காய் வந்தாலும் சினிமாவையும் அரசியலையும் இருகண்களாகப் பாவிக்கும் கடல் தாண்டி வந்த நம் தமிழகத்தொழிலாளர்களும் தான் என்பதை உறுதியாகக்கூறலாம்.

வைகோவின் வரவு தேர்தல்களத்திற்கும் பத்திரிக்கை உலகிற்கும் ஒரு பெருஞ்செய்தியாய் அமைந்திருந்த அத்தருணம். அதனைச் சரியாக உணர்ந்து சாதித்தது தமிழ்முரசு.

ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தவாறு இந்தியத் தொழிலாளர்களையே பெரும்பான்மை வாசகராய் கொண்டிருக்கும் இத் தமிழ் நாளேடு, சில மாதங்களுக்கு முன் பல அதிரடிகளைச்செய்தது. அதன்படி, நீளமான கவிதைகளைத்தவிர்க்கவும் என்று வந்த வேண்டுதலோடு, வரப்போகும் உண்மை நமக்குப் புரிந்து போனாலும் சிறுகதைக்கென்றும் கவிதைக்கென்றும் இருந்த இரண்டு பக்கங்களைச் சுருக்கி ஒரே பக்கத்தில் ‘கவிதை பாதி கதை பாதி’ என்று முடுக்கி விட்டது. இந்த இரண்டு பக்கங்கள் ஏதும் வாசகரைச் சுண்டியிழுத்தவை இல்லையெனினும் இப்படிச் சுருக்கி மீதமான ஒரு பக்கத்தை உருப்படியாய்ச் செயலாக்கியது அது.

அதன்படி சராசரி இந்தியத்தமிழனின் விருப்பமான கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டது. இந்தியா-இங்கிலாந்து, இந்தியா-சிரிலங்கா ஆகிய போட்டிகளை மிக விரிவாகவும் விளக்கமாகவும் அட்டவணை தந்து விளக்கியது. இதன்மூலம் இது தன் வாசக முகத்துவாரத்தின் அடிப்படையை உணர்ந்துகொண்டது சந்தோசமாயிருந்தது.

இத்தகைய ஒரு பிடிப்பை உணர்ந்த அது தனது அடுத்த உற்சவத்திற்குதான் தமிழகத்தேர்தலை எடுத்துக்கொண்டது. அடித்து ஆடத்தொடங்கிய இதன் ஆட்டம், சூடுபிடித்த தருணம் வைகோ அதிமுகவுடன் இணைந்தபிறகுதான்.

சூடுபிடித்த ஆட்டத்தை தொடர்ந்து முன்நிறுத்தவேண்டாமா? அருமையாய்ச் சில காரியங்களைச் செய்தது. ஒரு ரிப்போர்ட்டரை தமிழ்நாட்டிற்கே அனுப்பியது. நல்லவேளை, இந்தியா-இங்கிலாந்து மேட்சின் முடிவு இரவு எட்டுமணிக்கே சிங்கப்பூரில் தெரிந்தபின்னும் அடுத்தநாள் காலை பேப்பர் இன்னும் இந்தியா வெற்றிக்காய் போராடுவதாய் இருந்ததைப் போலில்லாமல், சிம்புவும் நயனதாராவும் சிங்கப்பூருக்கு வந்து சுற்றித்திரிந்ததை தமிழக வார இதழ்களில் செய்தி வந்தபின் சிங்கப்பூரில் வெளியிடுவதைப் போன்றில்லாமல் ஆட்டத்தின் வேகம் உணர்ந்து திறம்பட உழைத்தது அது.

நிருபர் வெங்கட் சென்னை போனார். லதா, எம்.கே.ருஷ்யேந்திரன், கிருஷ்ணன் என ஒரு பெரிய குழுவே முழு முயற்சியுடன் களத்தில் குதித்தது. ஜெயலலிதாவின் வரலாறும் அரசியல் பாதையும் ஆராயப்பட்டன. கலைஞரின் தேர்தல் பார்வையும் தேர்தல் அறிக்கையின் போக்கும் தெரிவிக்கப்பட்டன. வைகோவின் பேச்சு எதிரொலித்தது. சுடச்சுட அரசியல் செய்திகள் சிங்கப்பூர் வாழ் தமிழர்களைச் சேர்ந்தவண்ணம் இருந்தன. சுறுசுறுப்பாய் இயங்கிய அக்குழுவிற்கு வெற்றியும் கிடைத்தது. செய்தித்தாளும் மிக அதிக அளவில் விற்பனையைக் காட்டியது; சாதித்தது.

எத்தகைய நேரத்தில் எதை ஒரு வாசகனிடம் சேர்ப்பிக்கவேண்டும் என்று உணர்ந்து உழைத்து வெற்றி பெற்ற அக்குழுவிற்கு எமது வாழ்த்துகளைச் சொல்லும் நேரத்தில் தொடர்ந்து இதனைத் தக்கவைக்க இன்னும் சில விஷயங்களையும் மேற்கொண்டால் உயர்வாயிருக்கும் என்பதைச்சொல்லவும் விருப்பமாயிருக்கிறது. தமிழ்ச் செய்தித்தாளில் இருந்த ஒரே ஒரு ஆங்கில பக்கம் அண்மைக்காலங்களில் தவிர்க்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வாரபலனுக்காய் பதினாறில் ஒன்றை (அநியாயமாய்) ஒதுக்கும் ஞாயிற்றுப்பதிப்பில் அப்பக்கத்தின் தேவையை ஆராயந்து எடுத்துவிடலாம் அல்லது கவிதைக்கான வழியையே பின்பற்றிவிடலாம். சராசரி வாசகனின் நேசத்துக்குரிய சினிமாவிலும் இலக்கியம் இருக்கிறது; ஆராதித்து அரவணைக்கலாம்.

இன்றைய வாரத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் போக்கு ஆராயப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப தமிழ்ச்செல்வனின் (செய்தி ஆசிரியர் லதாவுடனான) பேட்டி வருகிறது. இந்தியத் தமிழர்களைத்தவிர இலங்கைத்தமிழர்களை பெரும்பான்மையாகக் கொன்டிருக்கும் சிங்கப்பூரில், எல்லோருக்கும் இப்பிரச்சனையின் தீவிரம் குறித்த செய்திகளைத் தர அது எடுத்துக்கொன்ட முயற்சி பாராட்டுதலுக்குரியதாய் இருக்கிறது.

தொடர்ந்து இத்தகைய சிறந்த முயற்சிகளையும் கடும் உழைப்பையும் மேற்கொண்டால் விரைவில் மிகச்சிறந்த பலன்களைக் கைமேல் உணரலாம். தமிழ்ச்சமுதாயத்தின் குரல் எழுந்து நிற்கலாம். இன்றுபோல என்றும் நாமும் வாழ்த்தலாம்.

எம்.கே.குமார்.

Series Navigation