தமிழகத்தில் மக்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் ?

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

சின்னக்கருப்பன்


நம் ஊரில் இருக்கும் ஒரு வாக்காளரிடம் கேட்டால் அவர் தெளிவாக ‘நான் கருணாநிதிக்கு ஓட்டுப்போட்டேன் ‘ என்றோ ‘நான் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டேன் ‘ என்றோ, ‘ராமதாஸ் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடச்சொன்னார், நான் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டேன் ‘ என்றோ சொல்வார்கள்.

ஆனால் உண்மை என்ன ?

அவர்கள் போட்ட ஓட்டு அந்தத் தொகுதியை யார் சென்னையில் பிரதிநிதித்துவம் செய்வார்கள் என்பது பற்றி மட்டும்தான்.

அரசாங்கத்தில் நம் தொகுதிக்காக யார் வாதாடுவார்கள் என்பதையும், நான் திருச்சிராப்பள்ளி 1 தொகுதி சார்பாக பேசுகிறேன் என்று சொல்லும் ஒரு மனிதரையும்தான் நாம் ஓட்டுப் போட்டு நிர்ணயம் செய்கிறோம்.

இதுதான் ஜனநாயகம். நாம் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப்போடவில்லை. நம் தொகுதி சார்பாக யார் அரசாங்கத்தில் பங்கு வகிப்பார்கள் என்பதைத்தான் தீர்மானிக்கிறோம்.

அப்படிப்பட்ட பிரதிநிதிகள் இணைந்து, நான் அரசாங்கத்தின் தலைவராக இவரை நியமிக்கிறேன் என்று சொல்லி ஒருவரை முன்னிருத்துகிறார்கள். அவர்தான் முதலமைச்சர். அது ஜெயலலிதா அல்லது கருணாநிதி.

இதை மக்களுக்கு எளிமைப்படுத்தவே கட்சிகள் இருக்கின்றன. ஒரு கட்சி தன் வேட்பாளரை நிறுத்தி அந்த வேட்பாளருக்கு ஒட்டுப் போட்டால் அவர் கருணாநிதியை ஆதரிப்பார் என்பதையும் இந்த வேட்பாளருக்கு ஓட்டுப்போட்டால் இவர் ஜெயலலிதாவை ஆதரிப்பார் என்பதையும் கட்சிப் பெயர், கட்சிக்கொடி, கட்சிக் கொள்கை, கட்சி தேர்தல் சின்னம் போன்றவை மூலம் எளிமைப்படுத்துகின்றன.

இப்போது பிரச்னை ஆரம்பமாகிறது.

நம் தொகுதி வேட்பாளர் முக்கியமா ? அல்லது அரசாங்கத்தலைவர் முக்கியமா ? ஓட்டுப்போடுவது யாருக்கு ? ஜெயலலிதாவுக்கா, தொகுதி வேட்பாளருக்கா ?

சில தொகுதிகளில் அந்த தொகுதி சார்பாக நன்றாக அரசாங்கத்தில் வேலை செய்து அந்தத் தொகுதிக்கு பல நன்மைகள் செய்த பிரதிநிதிகள்கூட அடுத்தமுறை எம்ஜியார், ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்கு போகும் ஓட்டு காரணமாக தோற்று போகும் நிலை இருக்கிறது.

சில தொகுதிகளில் எம்ஜியார் அல்லது கருணாநிதி பெயரைப் போட்டு ஓட்டு வாங்கி அரசாங்கத்தில் பங்கு பெற்று தொகுதிக்கு ஒரு வேலையும் செய்யாமல் மீண்டும் மீண்டும் எம்ஜியார் பெயரைச் சொல்லி வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள்.

உதாரணமாக தாமரைக்கனி, அறந்தாங்கி திருநாவுக்கரசு போன்றவர்கள் தொகுதிக்கு நல்ல வேலைகள் செய்வதால், எந்த அலை இருந்தாலும் வெற்றி பெறுவதும் நடக்கும் (சில சமயங்களில்)

ஆனால் கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அது பெரும்பாலான பிரதிநிதிகள் தொகுதியை சுத்தமாகக் கண்டுகொள்வதில்லை. வேட்பாளர்களுக்கு எம்ஜியார் ஜெயலலிதா கருணாநிதி ஆதரவு முக்கியமே தவிர மக்கள் ஆதரவும் அவர்கள் அந்தத் தொகுதிக்குச் செய்யும் வேலையும் முக்கியமாக இல்லை என்பதும் தெரியும்.

இதற்குக் காரணம் இன்றைய அரசாங்க அமைப்பு.

நம் அரசாங்க அமைப்பை ஆராய வேண்டுமெனில் மற்ற நாடுகளில் எவ்வாறு அரசாங்கம் இயங்குகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

உதாரணமாக அமெரிக்க அரசாங்க அமைப்பை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் இந்தியாவும் அமெரிக்காவும் பெரும்பாலான வகையில் ஒரே மாதிரியானவை. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல வகையான மொழிகள் பேசும் மக்களும், பரந்த கண்டமும், பல மாநிலங்களும் இருக்கின்றன. எல்லா மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி இருக்கிறது. (உதாரணமாக கலிபோர்னியாவில் வாங்கிய வாகன ஓட்டுனர் அனுமதிச்சீட்டு நியூ ஜெர்சியில் செல்லும். ஆனால் நியூ ஜெர்சியில் வீடு எடுத்துத் தங்கினால், நீங்கள் நியூ ஜெர்சி வானக ஓட்டுனர் அனுமதிச்சீட்டு தனியாக வாங்க வேண்டும். அமெரிக்க அரசாங்கத்துக்கு வருமானவரி கட்டுவது போலவே, அந்தந்த மாநிலங்களுக்கும் வருமான வரி கட்ட வேண்டும். அந்தந்த முனிசிபாலிடிக்கு கொடுக்கும் வீட்டு வரியும் அப்படியே அங்கிருக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடங்களுக்கு கொடுக்கப்படும். அங்கங்கு இருக்கும் மக்கள் தேர்ந்தெடுக்கும் லோக்கல் அரசாங்கமே, அந்த அரசாங்கப்பள்ளிக்கூடங்களை நிர்வகிக்கிறது. நியூ ஜெர்சியில் இருக்கும் மக்கள் கொடுக்கும் வருமானவரிப்பணத்திலிருந்துதான் அங்கு சாலைகள் போடப்படுகின்றன. நியூ ஜெர்சிக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து எந்தப்பணமும் வராது. ஆனால் ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்காக பணம் கேட்டுப் பெறுவது நடக்கிறது)

அமெரிக்காவில் இருக்கும் ஒரு மாநிலத்துக்கு கவர்னர் இருக்கிறார். ஆனால் இவர் தமிழகத்தில் இருப்பதுபோல மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர் அல்ல. இவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னர். இவர் தமிழகத்தில் இருக்கும் முதலமைச்சருக்கு இருப்பது போல அத்தனை அதிகாரங்களும் இருக்கின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனி வேட்பாளர்களும் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள்.

அதாவது ஒரு தேர்தலில் ஒட்டுப்போடச் சென்றால் இரண்டு ஓட்டு வழங்கப்படும். ஒன்று யார் கவர்னராக ஆக ஓட்டுப் போடுகிறீர்கள் என்பது பற்றி. இரண்டாவது ஓட்டு உங்கள் தொகுதி எம் எல் ஏ யாருக்கு ஓட்டு போடுகிறீர்கள் என்பது பற்றி.

இப்படி ஒரு ஓட்டு தமிழகத்தில் இருந்தால் நமக்குத் தெளிவாக இருக்கும். நாம் கருணாநிதி ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பினால் கருணாநிதிக்கு ஓட்டுப் போடலாம். அதே நேரத்தில் நம் தொகுதி எம் எல் ஏ ஆக இருக்க ஒரு நல்ல மனிதர் என நாம் நினைக்கும் ஒருவருக்கு ஓட்டுப் போடலாம். அந்த ஆள் திமுகவாக இருக்கலாம் அல்லது அதிமுகவாக இருக்கலாம் அல்லது நம் ஜாதிக்காரர் என்பதால் இருக்கலாம். சுயேச்சையாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு காரணம். ஓவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஆனால் குழப்பமில்லாமல் ஓட்டுப் போடலாம். தெரிந்தே ஒரு கெட்டநபருக்கு ஓட்டுப்போடும் கட்டாயம் இல்லை. அதே போல எம்ஜியார் பேரைச்சொல்லி ஓட்டு வாங்கிவிட்டு தொகுதி பக்கம் தலைகாட்டாமல் இருப்பவருக்கு அடுத்த முறையும் ஓட்டுப் போடும் கட்டாயமும் இல்லை.

அமெரிக்காவில் ஒரு வழிமுறை இருக்கிறது. அதை ஒரு கட்சி அடுத்த கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்று சொல்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல ஓட்டுப்போடுகிறார்கள். உதாரணமாக கவர்னர் வேலைக்கு ஒரு கட்சியைச் சார்ந்தவருக்கு ஓட்டுப்போட்டால், பிரதிநிதிக்கு எதிர்க்கட்சியைச் சார்ந்தவருக்கு ஓட்டுப்போடுவது. இப்போது உதாரணமாக தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், முதலமைச்சர் பதவிக்கு ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டால், எம் எல் ஏவுக்கு திமுகவுக்கு ஓட்டுப்போடுவது. இதன் மூலம் ஒரு நன்மை இருக்கிறது.

அரசாங்கத்தை நடத்துவது, சட்டம் ஒழுங்கு சீர்படுத்துவது, அரசாங்க பட்ஜட் போடுவது, நீதிபதிகளை நியமிப்பது போன்ற அரசாங்க வேலைகளையெல்லாம் கவர்னரும் அவர் நியமிக்கும் செயலாளர்களும் செய்கிறார்கள் (நம் ஊரில் முதலமைச்சரும் மந்திரிகளும் செய்யும் வேலை) ஆனால் கவர்னர் வேலையை ஒழுங்காகச் செய்கிறாரா அல்லது தவறாகச் செய்கிறாரா என்று பார்ப்பது சட்டசபையின் வேலை. அதற்கு கமிட்டிகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். உதாரணமாக நிதிக்கமிட்டி பணபட்டுவாடா, பணப்புழக்கம், (அந்த பணப்புழக்கம் அல்ல), அரசாங்க கஜானா நிலைமை போன்றவற்றை ஆராய்ந்து மக்களுக்கு விஷயத்தை தெரிவிக்கிறது. போக்குவரத்து கமிட்டி தமிழ்நாட்டில் போக்குவரத்து தேவை எப்படி இருக்கிறது, மேலும் பஸ்கள் தேவையாக இருக்கிறதா, எல்லா கிராமங்களுக்கும் பஸ் போக்குவரத்து இருக்கிறதா, திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்படுகின்றன போன்றவற்றை ஆராய்கிறது. இதே போல பல கமிட்டிகள். இதில் குறிப்பிட்ட ஆர்வமுள்ள எம் எல் ஏக்கள் உறுப்பினர்களாகவும் மூத்த தலைவர்கள், இந்த கமிட்டிகளின் தலைவர்களாகவும் ஆகிறார்கள். இவ்வாறு கவர்னர் செய்யும் வேலையை கண்காணிக்கவும், எம் எல் ஏக்கள் செய்யும் வேலையை மக்கள் கண்காணிக்கவும் ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது.

இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் அரசு தான் தோன்றித்தனமாக, எதிர்க்கட்சித் தலைவர்களை பொய் வழக்குகளில் சிறைக்கு அனுப்புவதும், தேர்தலுக்கு முன்னர் உழவர் சந்தையை விரிவுபடுத்துவோம் என்று சொல்லிவிட்டு அரசுக்குள் வந்ததும் உழவர் சந்தைகள் மூடப்படும் என்று பேசுவதும் போன்ற விஷயங்கள் கட்டுப்படுத்தப்படும். குறைந்தது தட்டிக்கேட்க அரசாங்கத்திலேயே ஆட்கள் இருக்கும்.

சட்டங்களை ஏற்படுத்துவது சட்டசபையின் வேலை. அந்த சட்டங்களை நிறைவேற்றுவதும், தினசரி அரசாங்க வேலைகளை கவனிப்பதும் கவர்னரின் வேலை. அந்தச்சட்டங்கள் சரியான நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா என்று பார்ப்பது நீதித்துறையின் வேலை. போலீஸ், நீதிபதிகளை நியமிப்பது கவர்னரின் வேலை. அந்த நீதிபதிகள், அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் போன்றவர்கள் தகுதியானவர்களா என்று பார்ப்பது சட்டசபையின் வேலை. கவர்னரால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் சரியானவர்கள் அல்லர் என்று ஒதுக்கவும் சட்டசபைக்கு அதிகாரம் உண்டு.

போலீஸ் நிர்வாகம் கவர்னரிடம் இருந்தாலும், போலீஸ் சட்டசபைக்கும், நீதித்துறைக்கும் அடிபணிந்ததுதான். சட்டசபை சபாநாயகரும், கவர்னரும், தலைமை நீதிபதியும் ஏறத்தாழ சம பங்கு பலம் பொருந்தியவர்களாக இருக்கும் போது ஒருவரை ஒருவர் கண்காணிக்கவும், அப்படி கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வே பெரும்பாலான நேரங்களில் சரியான வேலையை மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைக்கு எல்லோரையும் கொண்டுவந்துவிடுகிறது. இந்த மூன்று தூண்களும் அரசாங்கத்தை தாங்குகின்றன. இதில் நான்காவது தூணாக பத்திரிக்கைகளும் வெகுஜன மக்கள் தொடர்பு சாதனங்களான டிவி, ரேடியோ, இண்டெர்நெட் போன்றவைகளும் இருந்து மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கும் இடைவெளியை நிரப்பி, அரசாங்கத்தில் உள்ளவர்கள் செய்வதை மக்களுக்குச் சொல்கின்றன. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அரசாங்கத்தில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்கின்றன.

மிகவும் மோசமான கவர்னர் இருந்தால் அவரை பதவி நீக்கம் செய்யவும் சட்டசபையால் இயலும். தலைமை நீதிபதி லஞ்சம் வாங்கினார் என்று அவரை பதவிநீக்கம் செய்யவும் சட்டசபையால் இயலும். இருப்பினும் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. சொல்லப்போனால் இந்த முறையில் யாருக்குமே வானளாவிய அதிகாரம் கிடையாது.

அமெரிக்க அரசாங்கமும் அமெரிக்காவில் இருக்கும் மாநிலங்கள் முன்னேறுவதற்கும் காரணம் இந்த கட்டுப்பாடும், அந்தந்த மாநிலங்களுக்கு இருக்கும் மாநில சுயாட்சியும் தான். (அதையெல்லாம் தாண்டி, அவர்கள் பெரும்பாலும் நேர்மையாக இருக்கிறார்கள். கெட்டபெயருக்கு அஞ்சுகிறார்கள். கெட்ட பெயர் கொண்டவர்கள் அரசியலிலிருந்து விலகி விடுகிறார்கள். ஏனெனில் கெட்ட பெயர் கொண்டவர்கள் எப்போது ஜெயிக்க முடியாது என்பதை அமெரிக்க மக்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேர்தலிலும் உணர்த்தி வந்திருக்கிறார்கள். அதைவிட முக்கியம், அமெரிக்காவில், பத்திரிக்கையாளர்களும், பொதுஜன கருத்தை ஏற்படுத்துபவர்களும், என்றும் அநியாயத்துக்கும் கெட்ட பெயருக்கும் துணை நிற்பதில்லை. அதனால் அரசியல்வாதிகளிடம் கெட்டபெயருக்கு ஒரு பயம் இருக்கிறது)

***

எந்தத் அமைப்பை கொடுத்தாலும் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரவர்க்கமும் அதில் ஓட்டையை உருவாக்கி விடுவார்கள் என்பதை மறுக்கவில்லை. ஓட்டைகளே சட்டமாக இருக்கும் இந்த தமிழ்நாட்டில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்பதும், எளிமையான, குழப்பமில்லாத அமைப்பை உருவாக்குவதும் மக்களின் கடமைகள் தான். அது ஓட்டைகளினாலேயே வாழும் வக்கீல்களின் வேலை அல்ல. பெரிய நியாயவாதி நேர்மை வாதி என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட சோ போன்றவர்களும், டி என் சேஷன் போன்றவர்களும், எப்படி ஊழலுக்கும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளுக்கும் ஜால்ரா தட்டினார்கள் என்பது நாம் பார்த்தது.

ஜனநாயகம் என்பது ஒரு பண்பாடு. ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் சர்வாதிகார அமைப்பு அல்ல. எல்லா மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பு. (It is not dictatorship of the majority, it is a representative government of all the people). பெரும்பான்மையின் சர்வாதிகார அமைப்பாகத்தான் இந்தியாவிலும் தமிழகத்திலும் ஜனநாயகம் இருந்து வருகிறது என்பது வேறுவிஷயம். ஜனநாயகத்தில் சட்டப்படி நான் செய்தது தவறில்லை என்று பேசிவிட்டு எல்லோருக்கும் தெரிந்த தவறைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், மக்களுக்கு அமைப்பின்மீதும், ஜனநாயகத்தின் மீதும் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும். ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கை போய்விட்டால், நாடு தீவிரவாதிகளின் வேட்டைக்காடாகி விடும்.

நாம் எழுதிக்கொள்ளும் சட்டங்கள் நாம் வளமாக வாழ நாமே ஏற்படுத்திக்கொள்பவை. சட்டத்தில் ஓட்டை இருக்கிறது என்று பேசி நாம் செய்ததை நியாயப்படுத்த முடியாது. சட்டத்தில் ஓட்டைகள் இருப்பின் அவைகளை அடைப்பதே அறிஞர்களின் கற்றோர்களின் பணி. குற்றவாளிகள் நீதிபதிகள் ஆகலாம் என்று மக்களே ஒட்டுப் போட்டாலும், அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வராமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வதே நாட்டுத்தலைவர்களின் பணி. பாமரத்தனத்தையும், படிப்பறிவற்றவர்களின் எண்ணத்தையும், ஜாதிவெறியர்களையும் நியாயப்படுத்தக்கூடாது. அவ்வாறு நாம் நியாயப்படுத்தப் போகிறோம் என்றால், நாம் இப்படி ஒரு பெரிய தேசத்தை எல்லா மக்களுக்காகவும் கட்டமைக்கவேண்டிய அவசியமில்லை. எவனோ எக்கேடோ கெட்டுப்போங்கள் என்று தடியெடுத்தவன் தண்டல்காரனாகி ஆளுக்காள் அடித்துக்கொள்ளலாம். (அப்படி ஆளுக்காள் அடித்துக்கொள்வதில் எல்லாக்காலத்திலும் ஒரு குறிப்பிட்டச் சிலருக்கு நன்மை இருக்கலாம்) குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது நாம் வகுத்துக்கொண்ட ஒரு வழி முறை. அந்த வழிமுறை இருந்தால்தான் நாட்டில் ஒரு ஒழுங்குமுறை இருக்கும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று பேசிவிட்டு குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று பேசுவதும் அதற்கு பல படித்தவர்கள் ஆதரவு தெரிவிப்பதும், நீதிபதியாக இருந்த கவர்னர் அதைச் சரியென்று ஒப்புக்கொள்வதும் ஆபத்தானது.

ஆகவே படித்த மக்கள் முன்னோடியாக இருந்து படிக்காத மக்களையும் பாமரர்களையும் வழிநடத்த வேண்டும். அதற்கான சமூகக்கடமை அவர்களுக்கு இருக்கிறது. குழப்படியான அரசியல் அமைப்பு இன்று அந்த படிக்க மக்கள் சூதும் வாதும் செய்ய உதவியாக இருப்பதால் அதை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் இறுதியில் அடிபடப்போவது படித்த மக்களும் படிக்காத மக்களுமே. படித்த மக்கள் தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கிவிட்டு அமெரிக்காவுக்கு ஓடிவிடலாம். படிக்காத மக்கள் இந்த உழவர் சந்தைகள் போன்றவைகள் மூலம்தான் மெல்ல மெல்ல முன்னேற முடியும்.

நம் அரசியல் அமைப்பில் உள்ள பிரச்னைகளைக் களைவதற்கும், அதனை மேலும் செம்மைப்படுத்தி மக்களுக்கு உதவுவதாக மாற்றுவதற்கும் படித்தவர்களுக்கும், அறிவு ஜீவிகளுக்கும், நல்லெண்ணம் கொண்டவர்களுக்கும் கடமை இருக்கிறது.

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்