தனி மனிதப் பார்வையில் சமூகம், இலக்கியம் பற்றிய குறிப்புகள்

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

திசைகள் அ.வெற்றிவேல்சமீபத்தில் எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகம், அமெரிக்க வாழ் தமிழர் பி.கே.சிவகுமார் அவர்கள்
இணைய இதழ்களில் பல்வேறு தலைப்புகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான
“அட்லாண்டிக்குக்கு அப்பால்” என்ற கட்டுரைத் தொகுப்பு.எனி இந்தியன் பதிப்பகம்,பதிப்புத்துறையில்
காலடி வைத்து முதன்முதலாக வெளியிட்டுள்ள புத்தகம் .
நண்பர் சிவகுமார் அவர்களின் எழுத்துக்களை திண்ணை இணைய இதழில் அடிக்கடி படிப்பதுண்டு.
எதிலும் கறாரான “வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு” என்ற பாணியில் கருத்துக்களை எடுத்து வைக்கும்
அவரது எழுத்து, இந்தக் கறார் தன்மைக்காகவே என்னைக் கவர்ந்ததுண்டு.
இத்தொகுப்பில்,இலக்கியம்,கவிதை கேளுங்கள்,விவாதம்,சமூகம்,அமெரிக்கா என்ற உட்பிரிவுகளுடன்,
ஒவ்வொரு பிரிவிலும் நாலைந்து கட்டுரைகள் என்ற வீதம் தொகுத்துள்ளார்கள்.அனைத்துக்கும் உள்ள ஒரே
சரடு..தமிழ் இலக்கியம், சமூகம் மீதுள்ள அக்கறை என கட்டுரைகளை வாசித்த பின்பு தெரியவருகிறது.
பேராசான் ஜெயகாந்தனும், ஜெயமோகனும் அணிந்துரை,முன்னுரை வழங்கி வாழ்த்தியுள்ளார்கள்
ஜெயகாந்தனை தனது ஞானகுருவாக ஏற்றுள்ளதாக சிவகுமாரும் தனது என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.அதனாலேயோ என்னவோ,ஜெயகாந்தனுக்குள்ள Intellectual Arrogance “-தனக்கும் கொஞ்சமாவது உண்டு என்று நிரூபிக்கும் வண்ணம்,காலச்சுவடில் அரவிந்தன் எழுதிய ஜெயகாந்தன் பற்றிய கட்டுரைக்கு பதிலாக எழுதியுள்ள கட்டுரை இத்தொகுதியில் உள்ளது. ஜெயகாந்தனை ஆராதிப்பதில் பெருமைப்பட்டு
சிவகுமார் எழுதி இருக்கும் “ஜெயகாந்தனின் விமர்சனப் பரப்பில் அரவிந்தனின் இடம்”கட்டுரை,அரவிந்தன் ஜெயகாந்தன் மேல் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான எதிர்வினை அல்ல. ஜெயகாந்தனை மறுபடி
வாசிக்கும் போது, அவரது நேர்மையில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.நீதி போதனை,எளிய சூத்திரங்கள்,சத்தமான பிரச்சாரம் – இவற்றின் மூலம் செறிவான இலக்கியப் பிரதியை உருவாக்க இயலாது என்ற அரவிந்தனின் வாதத்தை நான் முழுமையாக வழி மொழிகிறேன் .மேலும் மீள்வாசிப்புக்கு ஜெயகாந்தனை உட்படுத்தும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.தமிழ் இலக்கியம் ஜெயகாந்தனைத் தாண்டி வந்துவிட்டது என்பதாலேயே,அவரது எழுத்துக்கள் செத்த பாம்பு என்று அரவிந்தன் குறிப்பிடுவது எந்த வகை நியாயம் எனத் தெரியவில்லை.தமிழ் இலக்கிய உலகில் புதிதாக நுழைபவனை அரவணைத்து அழைத்துச் சென்று
புதிய வெளியைக் காட்டிக் கொடுக்கும் பேராசான் அல்லவா மதிப்பிற்குரிய ஜெயகாந்தன்.”சமூகத்தில் எல்லாத்தரப்பு மக்களையும்,எல்லாமட்டங்களையும், எல்லாத்தரப்பு வாழ்க்கை முறைகளையும் கதைப்
பொருளாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தை செழுமையாக்கியவர்கள் ஜெயகாந்தனைப் போல்
யாருமில்லை” என எழுதியுள்ளார்.எல்லாவற்றையும் எழுதியதாலே அவரது புனைவுகள் செறிவான இலக்கியப் பிரதி என்பது எந்தவகை விவாதம்.சுந்தரராமசாமி சொன்னது போல், வீட்டின் நடுக்கூடத்தில் ஊஞ்சல் மேல் உட்கார்ந்து கொண்டிருந்த தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை வாசலுக்கு அழைத்து வந்தவர் பு.பி என்றால், அதைத் தெருத்தெருவாக இழுத்து வந்தவர் ஜெயகாந்தன் என்ற வாதத்தில் தான் அர்த்தம் உள்ளதாக நான் உணர்கிறேன்.புனைவுகளை விடுத்து அவர் எழுதியுள்ள படைப்பாக்கங்கள் மற்றும் தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த 50 வருடங்களாக அவரின் பங்களிப்பு அரவிந்தன் போன்றோர்களால்
நிராகரிக்க இயலாத உயர்ந்த இடத்தில் உள்ளது என்பது எனது கருத்து.இந்தக் கட்டுரை தனிப்பட்ட
தாக்குதலுக்கு இடங்கொடுத்துவிட்டது என நினைக்கிறேன்.
“விமர்சகரும் வாசகரும்” என்ற கட்டுரையை”தமிழில் விமர்சனத்துறை வளரவே இல்லை” என்று
ஆரம்பித்துள்ள சிவகுமார்,மற்றுமொரு இடத்தில் தமிழில் விமர்சகர்கள் பெருகி விட்டார்கள்” என்றும்
குறிப்பிட்டும் உள்ளார்..25 வருடங்களாக தமிழ்ச்சூழலை நன்கு கவனித்து வந்தவன் என்ற முறையில் தமிழில்
விமர்சனத்துறை நன்கே வளர்ந்துள்ளது. அதனாலேயே அளவுக்கு அதிகமாகவே சண்டைச் சத்தமும்
கேட்கிறது.
கவிதை கேளுங்கள் என்ற தலைப்பில் தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள கவிதைகள்,சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் அனைத்தும் நான் மிகவும் ரசித்தவை என்பதாலும்,சுஜாதவைப் பொறுத்தவரையில் சிவகுமாருக்கும் எனக்கும் ஒரே அலைவரிசை என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.தனிப்பட்ட முறையில் தான்
ரசித்தவை, தன்னைக் கவர்ந்தவை என்று எழுதியுள்ள அனைத்திலும் ஒரு நேர்மையான பதிவு உள்ளது.அதனாலேயே இக்கட்டுரைத் தொகுப்பிற்கு முக்கியத்துவம் கூடுகிறது.இணையம் அளித்துள்ள வசதியை முறையாக பயன்படுத்தியுள்ளார்.சங்கத் தமிழ் போன்ற செவ்வியல் இலக்கியங்களில் உள்ள பரிச்சியம் இன்றுள்ள நவீன கவிதைகளைத் தெரிவு செய்வதில் உதவி புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
திவீர வாசகனாக இருந்து தான் ரசித்தது மட்டுமில்லாது, தனக்குப் பிடித்த, பிடிக்காத சமூகப்
போராட்டங்கள் குறித்தும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது வரவேற்கத்தகுந்ததே.இருந்தும் அத்தகையப் போராட்டங்களுக்கு வேறு காரணங்களும், பயன்களும் உண்டு என்பதை சிவகுமார் உணரவில்லையோ
என நினைக்கத் தோன்றுகிறது. குறிப்பாகத் தனித்தமிழ் இயக்கப் போராட்டம்..நானும் தனித்தமிழ் இயக்க ஆதரவாளன் இல்லை.இருந்தும் அத்தகைய போராட்டங்களுக்கு இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு தேவை இருக்கிறது என்று மட்டும் என்னால் சொல்ல இயலும்.ஆங்கில அறிவே அறிவு என்று இருக்கும் ஒரு
சமுதாயத்தில் இத்தகைய அமைப்பு இருப்பது தேவையான ஒன்றே என்பது எனது கருத்து.35 வருடங்களுக்கு முன்னர் , நான் தினசரிகள் வாசிக்கத்தொடங்கிய நாட்களில் என்ன தமிழ் புழக்கத்தில் இருந்தது என்று நினைத்து பார்க்கும் பொழுது, இத்தகைய தமிழ் ஆர்வலர்கள் சாதித்துள்ளார்கள்
என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.குறிப்பாக 1969ல் நான் தினமணி வாசிக்கத் தொடங்கிய பொழுது, ராஷ்டிரபதி அபேட்சகராக வி.வி.கிரி, என்றும்,காவிரி நீர் தாவா, ஜில்லா போர்டு, ஜில்லா கலெக்டர், மராமத்து மந்திரி, இன்று ரஜா.. என்ற வார்தைப் பிரயோகங்கள் தான் படிக்க கிடைத்தவை.இன்று குடியரசுத்தலைவர்,வேட்பாளர், வாக்காளர்,மாவட்டம், மாவட்ட ஆட்சியர்,பொதுப்பணித் துறை என்ற
வார்த்தைகள் படிப்பது கண்டு எனக்கு சந்தோஷமே. வன்முறை தவிர்த்த இந்த வகைப் போராட்டங்கள் இன்றைய தமிழ்ச் சமுதாயத்திற்கு தேவையான ஒன்றுதான்.அவர்களால் காபியை கொட்டைவடிநீராக மாற்ற முடியாது.இருந்தாலும் டைரக்ஷன், இயக்கமாகவும்,ஸீனரியோ திரைக்தையாகவும், கேமரா ஒளிப்பதிவாகவும் மாறியதில் எனக்கு மகிழ்ச்சியே.

அமெரிக்கா பற்றிய கட்டுரைகள் அனைத்தும் விவரங்களின் பதிவுகளாக உள்ளன.தனது மகளுடன்
நடைபெற்ற உரையாடலை பொதுப்பார்வைக்கு கொண்டு சென்றது சிவகுமாரின் எழுத்தாற்றலுக்கும்,
வாழ்க்கை அனுபவங்களை பொதுவான தளத்திற்கு விரிவுபடுத்தி பார்க்கும் பார்வைக்கும் உதாரணமாக உள்ளது.வாழ்த்துக்கள்.ஒரு எழுத்தாளனுக்கு வேண்டிய முக்கிய பண்புகளில் இது தலையானது. தம்பொருள் என்ப தம்மக்கள் என்ற கட்டுரை ஒரு சராசரித் தகப்பனின் சராசரி கனவுகள் குறித்த அருமையான பதிவு.
என்னைப் போன்று அனுபவித்தவர்களுக்குத் தான் இக்கட்டுரையின் முக்கியத்துவம் புலப்படும்.

பெரியாரை “வெறுப்பை அடிப்படையாக வைத்து ” பிரச்சாரம் செய்தவர் என்று குறிப்பிடுகிறார்.பெரியாரை இந்த மாதிரி சின்ன அளவுகளுக்குள் அடைக்க முயன்றிருக்கிறார்.புத்தன் தொடர்ச்சியாக வள்ளலார் வழி வந்த ஒரு நீண்ட பரம்பரையில் 20 நூற்றாண்டில் தோன்றிய மாபெரும் சிந்தனையாளர் “பெரியார்” என்பது எனது கருத்து.20 ம் நூற்றாண்டில் மக்களின் பாஷையில் பேசியும் எழுதியும் தயங்காமல் தனது கருத்துக்களைச் சொன்ன இந்தியச் சிந்தனையாளர்கள் காந்தியும், பெரியாரும் தான்.பெரியாரை
‘இட ஒதுக்கிட்டீற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிற இன்றைய அரசியல்வாதிகளின் பார்வையில்’
பார்ப்பது தவறான பார்வையாகும்.அவர் எடுத்துக் கொண்ட போராடிய பிரச்சனைகள் அனைத்துக்கும் தத்துவ விளக்கம் மட்டும் அளிக்காமல், முடிந்தவரை தீர்வும் சொன்னவர் பெரியார்.அதனாலேயே
வெறுப்பின் அடிப்படையில் பிரச்சாரம் செய்தவர் என்ற குற்றச்சாட்டுக்கும் உள்ளாகிறார்.பெரியார்.
அம்பேத்கார் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு அரசியல் ரீதியாக அதை முன்னெடுத்துச் சென்றிருந்தால், இந்திய சமுதாயம் இன்றிலும் அதிகம் முன்னேறி இருக்கும்,அதிகம் பண்பட்டு இருக்கும் என்று திடமாக இன்றும் நம்புகிறேன்.

மேற்சொன்ன விமர்சனங்களைத் தவிர்த்து ரொம்பவும் பொருட்படுத்தப் பட வேண்டிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.”கணையாழியின் கடைசிப் பக்கங்கள்””சிவவாக்கியர் திருவாக்கியங்கள்”
சுகுமாரனின் “திசைகளும் தடங்களும்” வை.மு.கோ வின் “கம்பராமாயண உரைத்தொகுப்புகள்”
வல்லிக்கண்ணைன் வாழ்க்கைச் சுவடுகள் பற்றிய நேர்மையான பதிவுகள் புதிதாக இவற்றை
அறியவரும் வாசகர்களூக்கு புத்தகத்தை தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டு பண்ணக்கூடியது.

இந்தக் கட்டுரைக்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒரு விஷயம்.அதே தொகுப்பில் மற்றுமொரு கட்டுரையில் அமெரிக்க அரசாங்கம், குழந்தைகளின் கல்விக்கு கொடுக்கும் வசதிகள் பற்றி ஒரு வரியில் குறிப்பிட்டு உள்ளார்.என்ன வசதி என்று தெரியவில்லை. நல்ல வசதிகளாகத் தான் இருக்க வேண்டும்.இருந்தும்
அமெரிக்கக் குடிமக்களில் பெரும் பாலோர் தனித்த சிந்தனை உள்ளவர்களாக ஏன் இல்லை என்று தெரியவில்லை.உலகத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் குறித்த எந்தவொரு சிந்தனையும் இன்றி இருப்பதாகவே எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட குறுகிய அனுபவம் உண்ர்த்தியது. அது ஏனெனத் தெரியவில்லை.

மிகவும் எளிமையான வார்த்தைப்பிரயோகம், தெளிவான சிந்தனை (பேராசான் ஜெ.கே வே சொல்லிவிட்டார்.வேறு என்ன வேண்டும்!)தொடர்ந்து படிக்க வைக்கும் தெளிந்த நீரோட்டமான எழுத்து..முதல் கட்டுரைத் தொகுப்பு..நல்ல பண்பட்ட நிலத்தில் தான் பயிர் செழிப்பாக வளர முடியும்.தமிழ் இலக்கியத்தில் நவீனம், சங்கம் இர்ண்டிலும் நல்ல பயிற்சியும், சமூத்தின் மேல் அக்கறையும் கொண்ட எழுத்துக்கு
சொந்தக்காரர் என்பதில் சிவகுமார் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.தமிழ் கூறும் நல்லுலகம் இவரிடமிருந்து அதிகம் எதிபார்க்கலாம் என்ற நம்பிக்கையைத் இத்தொகுப்பின் மூலம் நமக்கு அளித்துள்ள சிவகுமார்,
முன்னுரையில் ஜெ.கேவும் ஜெயமோகனும் சொல்லியுள்ளபடி தாராளமாகவே புனைவுக்குள் செல்லலாம்.
வாழ்த்துக்கள்.
———————————
வெள்ளிக்கிழமை,9 ஜூன் 2006
vetrivel@nsc-ksa.com

Series Navigation

திசைகள் அ.வெற்றிவேல்

திசைகள் அ.வெற்றிவேல்