சந்திரவதனா ,யேர்மனி
1
ஸ்ருட்காட் விமானநிலையம் வழமை போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்கன் எயர்லைன்ஸ்க்குரிய கவுண்டரை நோக்கி விரைந்து கொண்டிருந்த நர்மதாவுக்கோ இழுத்துக் கொண்டும் இடையிடையே தூக்கிக் கொண்டும் வந்த சூட்கேசை விட அவள் மனம் தான் பாரமாயிருந்தது.
இனி இந்த வாழ்க்கையில் நீளப் போகும் காலங்களின் ஒவ்வொரு கணமும் கூட தனிமையில்தான் களியப் போகுதென்ற நினைவு தந்த கலக்கத்தில், அவள் கண்களில் கண்ணீர் பொங்கிப் பொங்கி வந்து கொண்டிருந்தது. அதைச் சிந்த விட்டு யாருக்கும் தன் சோகத்தைக் காட்ட விரும்பாத அவள் அவசரமாய்ப் பேப்பர்க் கைக்குட்டையால் தன் கண்களை ஒற்றி ஒற்றிக் கொண்டே வரிசையில் போய் நின்று கொண்டாள்.
புயலில் அகப்பட்ட துரும்பாய், நிலையிலாது அலைந்து கொண்டிருக்கும் மனதுடன், முதல் முதலாக அவள் தன்னந்தனியாக இப்படியொரு நீண்ட தூரப் பயணத்துக்கு தயாரானதற்கு காத்திரமானதொரு காரணம் இருந்தது. மற்றவரிடம் சொல்லவே கூச்சமான அருவருப்பான விடயம் அது.
அவளுக்கு இப்ப கூட அந்த சம்பவத்தை நினைத்தால் அருவருப்பாகவும், கணவன் நேசன் மேல் தாங்க முடியாத கோபமாகவும் இருந்தது. இருபத்து இரண்டு வருடத் தாம்பத்தியம் இப்படி இரண்;டு பட்டுப் போகுமென அவள் எந்தக் கட்டத்திலும் நினைத்திருக்கவில்லை.
ஊரிலே – அவளுக்கு இருபது வயதாக இருக்கும் போது, அவளது மாநிறமான அழகையும், நீண்ட சுருண்ட கூந்தலையும் கண்டுதானே, நேசன் அவள் மேல் காதல் கொண்டு கல்யாணமும் செய்து கொண்டான்.
காதலின் சின்னமாக இரண்டு குழந்தைகள் வீட்டில் தவழவும், நடக்கவும் தொடங்கிய போது தான் நாட்டுப் பிரச்சனை துரத்த எல்லாவற்றையும் விட்டு குழந்தைகளுடன் யேர்மனி வரை வந்து சேர்ந்தார்கள் இருவரும்.
ஆரம்பகால யேர்மனிய வாழ்க்கை நர்மதாவுக்கு, சிறு குழந்தைகளுடன் குளிரும், பனியும், தனிமையும் என்று போராட்டமாகவே அமைந்திருந்தாலும், காதலும், நேசமும் என்று நேசனுடன் இனிமையும் கலந்தே களிந்தது.
பிள்ளைகளும் வளர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அவள் இந்த யேர்மனிய வாழ்க்கையுடன் இணையத் தொடங்கி விட்ட நேரத்தில்தான் அந்த துரோகம் அவளைச் சுட்டது. வேறு யாராவது, ஏதாவது துரோகம் செய்திருந்தால் அவள் தாங்கியிருப்பாள். ‘எனக்கே எனக்கு….! எனக்கு மட்டுமே சொந்தம்! ‘ என்று அவள் நினைத்திருந்த அவள் நேசன் அல்லவா அந்தத் துரோகத்தைச் செய்திருந்தான். எப்படித் தாங்குவாள்.
இரு வாரங்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாதிருந்ததால், வேலையிடத்தில் லீவு கேட்டுக் கொண்டு, வேளைக்கே வீட்டுக்கு வந்தாள் அவள். அவள் வரவை சற்றும் எதிர் பார்க்காத நேசன், அவளது அறையில், அவளது கட்டிலில் இன்னொரு பெண்ணுடன்….!
அந்தக் காட்சி தந்த அதிர்ச்சியில் ஆடிப் போய் விட்டாள் நர்மதா.
‘இத்தனை கேவலமானவனா என் புருஷன்…! ‘ என்ற நினைப்பே அவளைச் சுட்;டெரிக்கத் தொடங்கியது. அதற்கு மேல்; அவனுடன் வாழ அவளால் முடியவே இல்லை. யாரிடமும் இந்த அவமானத்தைச் சொல்லவும் அவள் தன்மானம் இடம் தரவில்லை. வளர்ந்து விட்ட பிள்ளைகளைத் தன்னுடன் இழுத்துச் செல்ல விரும்பாமல் தனியாகப் புறப்பட்டு விட்டாள்.
இந்தப் பயணம் நேசன் தந்த காயத்தை முற்றாக ஆற்றா விட்டாலும், வேதனையிலிருந்து காக்கும் என்ற நம்பிக்கை அவளுள் இருந்தது….
2
தமிழ்மன்றம் நடாத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற அக்கதையை எழுதும்போது மிகவும் சுலபமாக இருந்தது. நர்மதா என்ற கதாநாயகி கணவனை விட்டு விட்டு விமானமேறி அமெரிக்காவில் வாழ்வைத் தொடங்குவது கதைக்கு நன்றாக இருந்தது. அந்தக் கதையின் முடிவைப் பாராட்டி, அந்தக் கதாநாயகியின் துணிவைப் பாராட்டி அந்தக் கதாநாயகியே மெளனிகா என்பது போல், எத்தனை கடிதங்கள், எத்தனை தொலைபேசிகள்.
இத்தனையும் நியத்தில் சாத்தியப்படுமா ?! சொந்த வாழ்க்கை என்று வரும் போது
இந்தக் கதையில் வந்த கதாநாயகியின் துணிவு ஒரு பெண்ணுக்கு வந்து விடுமா ?!
நிட்சயமாக இல்லை.
தினம் தினம் தன்மானத்துக்கு விழும் அடிகள். உணர்வுகளைச் சுட்டெரிக்கும் வார்த்தை நெருப்புக்கள்….! இவனை விட்டுப் போய் விடுவோமா என்று துடிக்கும் என் மனதுக்குத்தான் எத்தனை தடைக்கற்கள்!
எத்தனைதான் புரட்சி என்றும் புதுமை என்றும் உரக்கக் கத்தினாலும், ஒரு பெண் விவாகரத்து என்று கூறி கணவனை விட்டு விலகும் போது, சமுதாயத்தின் அத்தனை பார்வைகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்ப்பது அந்தப் பெண்ணைத்தானே.
கணவன் கூடாதவன் என்பது அப்பட்டமாகத் தெரிந்தாலும், ‘என்ன இருந்தாலும் அவள் பொம்பிளை. அவள் தானே அநுசரிச்சுப் போயிருக்கோணும். ‘ என்றும், ‘அவளுக்குத் திமிர் ‘ என்றும கூறுவதுதான் அழகு என நினைக்கும் வெறும் வாய் மெல்லும் சமுதாயத்துக்கு முன், புரட்சியையும் புதுமையையும் சாதிப்பது எப்படி ?!
எழுதும் போது பாராட்டும் சமுதாயம், செயற்படுத்தும் போது பாராட்டுமா ?! இல்லை. இல்லவே இல்லை. நான் இப்போ என் கணவனை விட்டு விலகினால், இந்த சமுதாயம் என்னை வாய் கூசாமல் து}ற்றும். – கணவனை விட்டு வந்தவள், அடங்காதவள். . என்ற பட்டத்தை எனக்குச் சூட்டும். என் குழந்தைகள் அவமானத்தின் சின்னங்களாகக் கருதப் படுவார்கள்.
பிள்ளைகள் இருவரையும் இருபக்கக் கைகளிலும் பிடித்துக் கொண்டு மெளனமாக நடந்து கொண்டிருந்த மெளனிகாவின் மனசு விவாகரத்துப் பற்றிய எண்ணங்களுடனும், அதன் விளைவுகள் பற்றிய எண்ணங்களுடனும் போராடிக் கொண்டே இருந்தது.
மெளனிகா! – பெயர் சொல்லுமளவுக்கு – பிரபல்யமான எழுத்தாளர்களில்; ஒருத்தி. கல்யாணத்துக்கு முன் ஈழத்தில் எழுதிக் குவித்தது போல், கல்யாணத்தின் பின் இங்கு புலத்தில் எழுதிக் குவிக்கா விட்டாலும், அவ்வப்போது ஏதாவது இலக்கியமும் சுவையும் கலந்து, பொக்கிஷமாகப் பொத்தி வைக்கும் படி முத்தாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறாள். இருந்தாலும் அவள் கைகள் கட்டப் பட்டிருப்பதைப் பற்றி எதுவுமே தெரியாத எழுத்துலகம் ‘நீ எழுதுவது போதாது ‘ என்று அவள் காதுக்குள் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நச்சரிப்புக்கள் அவளை எரிச்சல்ப் படுத்துவதை விட வேதனைப் படுத்துவதுதான் அதிகம்.
எழுதுவது என்பது அவளுக்கு ஆத்ம திருப்தி தரும் விடயம். ஆனால் ஒவ்வொரு முறையும் உணர்வுகளை ஒன்று கூட்டி, வார்த்தைகளைக் கோர்வையாக்கி, கவிதைகளாகவோ, கதைகளாகவோ அவள் எழுதத் தொடங்கும் போது
‘மெளனிகா….! என்ன இப்ப போய் எழுதிக் கொண்டு….! நேரத்தைப் பாரும். எழுதுறதுக்கு ஒரு நேரம் காலம் கிடையாது! போய்ப் படும். ‘ கோபமாய் கட்டளை இடுவான் கணவன் சங்கர்.
இது இரவில் என்றால், பகலில் அவள் வேலைகளை முடித்து விட்டு எழுதத் தொடங்கினால், ‘புட்டே இண்டைக்கு அவிச்சனீர் ? எனக்கு இடியப்பம் விருப்பமாயிருக்கு அவியும். ‘ என்பான். எழுந்த உணர்வுகள் அப்படியே அடங்கிப் போக அழுகையும் கோபமும் மனதுள் பொங்கும். எதிர்த்து ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணத் தைரியமின்றி மெளனமாக மெளனிகாவின் வேலைகள் தொடரும்.
இது மட்டுந்தான் பிரச்சனை என்றால் அவள் வாழ்க்கை இத்தனை சோகமாக இராது. அதை விட மோசமாக – இருப்பது, எழும்புவது, அழுவது, சிரிப்பது, தூங்குவது…. என்று அவளது ஒவ்வொரு அசைவுமே சங்கரால்தான் தீர்மானிக்கப் படுகின்றது. மெளனிகாவுக்கு வாழ்க்கையே வெறுப்பும் சலிப்பும் ஆகிவிட்டது.
சங்கர் வெளியுலகுக்கு நல்லவன் போலத்தான் தெரிந்தான். யேர்மனியின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஸ்ருட்கார்ட்டில் சொந்தவீடு. வீடு நிறைய அழகிய புதிய தளபாடங்கள். இது போதாதா! எமது சமூகம் ஒரு கணவனுக்கு நல்லவனென்ற முத்திரை குத்துவதற்கு.
‘உமக்கென்ன மெளனிகா. மாளிகை போல வீடு. மனம் போல வாழ்வு. உமது கணவர் நல்ல பிரயாசி. கெட்டிக்காரன். ‘ என்று அவளுக்குத் தெரிந்த பெண்களில் பலர் பெருமூச்சு விடுவார்கள். இன்னொரு சிலரோ ‘உம்மடை ஆளுக்கு உம்மிலை நல்ல அன்பு. என்ரை வீட்டுச் சோபாவைப் பாரும். ஏதோ மியூசியத்துச் சாமான் போல. உம்மடை வீட்டு சோபாவே, உம்மடை ஆளுக்கு உம்மிலை உள்ள அன்பைச் சொல்லாமல் சொல்லுது. ‘ என்று பொறாமை ததும்பச் சொல்லுவார்கள்.
பஸ்சுக்கு இரண்டு டி.எம்(2DM) தேவையென்றாலும் அவனிடம் கை நீட்ட வேண்டிய இன்னொரு அவலம் அவளை அவமானத்தில் குறுகடிக்கும்.
ஒவ்வொரு முறையும் பஸ்சுக்கு காசுக்காக அவள் கை நீட்டும் போது, சினந்து விட்டு, பிச்சை போல அவன் இரண்டு டி.எம் (2DM) ஐப் போடும் அந்தக் கணத்தில் அவள் மனம் படும் பாட்டை யார் அறிவார்.
இந்தப் பத்து வருட யேர்மனிய வாழ்க்கையில், எந்த ஒரு கட்டத்திலும், அவனது சம்பளத்தை இவள் முழுமையாகப் பார்த்ததில்லை. ‘இந்தாரும் இதை இந்த மாதச் செலவுக்கு வைத்திரும். ‘ என்று அவன் அவளிடம் கொடுத்ததுமில்லை.
ஒரு கத்தரிக்காய் வேண்டுவதானாலும் அவனிடம் கை நீட்டி, அவன் சினப்பில் மனங்குறுக வேண்டிய கட்டாயமே அவளுக்கு.
இதையெல்லாம் தாங்க முடியாமல்தான், தான் எப்படியும் வேலைக்குப் போக வேண்டுமென அவள் தீர்மானித்தாள். தான் கிழித்த கோட்டுக்குள்ளேதான் மெளனிகாவின் அசைவு இருக்க வேண்டுமென்ற கோட்பாடு கொண்ட சங்கரிடம், மெளனிகா தன் வேலைக்குப் போகும் ஆசையை தன்மையாக, கோபமாக, சண்டையாக வெளிப்படுத்தி, ஒருவாறு சம்மதம் பெறுவதற்குள் சில மாதங்கள் ஓடின.
அவன் சம்மதத்துடன் பகுதி நேர வேலை செய்யத் தொடங்கிய பின் அவளிடம் மனதளவில் சற்று மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. அதுவும் முதல் மாதச் சம்பளம் வரைதான். முதல் மாதச் சம்பளத்தை – எனது பணம் – என்ற நிறைந்த நினைவுடன் அவள் எடுத்து வரும் வழியில், வீட்டில் சமையலுக்குத் தேவையான சில சாமான்களும் வேண்டிக் கொண்டு வந்தாள். அது வீட்டில் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணும் என்று அவள் எள்ளளவும் நினைக்கவில்லை.
‘என்னடி உனக்கு அவ்வளவு திமிர். ஆரைக் கேட்டு இவ்வளவு சாமானும் வேண்டினனீ ? உன்ரை காசெண்ட திமிரோடி…. ?! ‘ சங்கரின் அர்த்தமில்லாத அநாகரிகமான பேச்சும், உருத்திர தாண்டவமும், மெளனிகாவை வெறுப்பால் குளிப்பாட்டி, கோபத்தால் கொதிக்க வைத்தன. கொதிப்பு வார்த்தைகளாகச் சிதறின. விளைவு – அடியும் உதையும் அவளுக்கு வழமை போலக் கிடைத்தன. முதல் மாதச் சம்பளம் தந்த சந்தோசம் எங்கோ பறந்து விட, தன்மானம் அவளைப் பார்த்துக் கெக்கட்டம் விட்டுச் சிரிக்க, தாங்க முடியாமல் அழுதாள்.
இப்படி எத்தனை தடவைகள,; அவள் தன்மானத்துக்கு சாட்டையடிகள் விழுந்து விட்டன. ஆனாலும் வெளியில் உள்ளவர்களிடம் தனது மானத்தைக் காக்க எண்ணி வதையையே வாழ்வாக்கி விடுவாள் இவள்.
இப்போது இவளது மாதச்சம்பளம் அப்படியே சங்கரின் கையில் கொடுக்கப் படுகிறது. வேலைக்குப் போகாமல் இருந்து விடுவாள். வேலையையும் விட்டால் சற்று நேரம் வெளி உலகுடன் தனியாகக் கிடைக்கும் தொடர்பும் இல்லாது போய் விடும் என்பதால் தொடர்ந்தும் வேலைக்குப் போகிறாள்.
அதற்குக் கூட ‘இண்டைக்கு நீ வேலைக்குப் போகக் கூடாது. ‘ என்று எத்தனை தடவைகள் தடுத்திருக்கிறான். வேலையிடத்தில் இதனால் அவளுக்கு ஓழுங்கற்றவள் என்ற அவப் பெயர் கூட வந்து விட்டது.
நேற்று அவள், அவள் சம்பளத்தில் 10டா.எம் இற்கு தனக்கு ஒரு சில பேனைகள், எழுதுவதற்கு அவசியம் தேவையென்பதால் வாங்கி விட்டாள். இரவு பில் (டாடைட) லுடன் மிகுதிப் பணத்தையும் அப்படியே அவனிடம் கொடுத்தாள்.
எப்படியொரு கோபம் அவனுக்கு வந்தது. அவனைக் கேளாமல் பேனை வாங்கியது மெளனிகா செய்த பெருந்தவறுகளில் ஒன்று என்பது போலச் சீறினான். மிருகமாகி அவளை அடித்தான். உதைத்தான். எத்தனை கேவலப் படுத்தினான். அவளின் அலறலில் து}க்கத்திலிருந்த குழந்தைகள் கூட துடித்துப் பதைத்து எழுந்து வந்து கதறத் தொடங்கி விட்டார்கள்.
இதெல்லாம் இன்றா நேற்றா! பத்து வருடங்கள். – இன்னும் எத்தனை காலங்களுக்கு இதைத் தாங்குவது….! விடை தெரியாமல் கலங்கினாள் மெளனிகா.
இன்று பிள்ளைகளைத் தமிழ் பாடசாலைக்குக் கூட்டிப் போக, பஸ்சுக்குத் தேவையான பணத்தை சங்கரிடம் கேட்க மெளனிகாவுக்கு மனமே வரவில்லை.
அதனால்தான் 3 கிலோ மீற்றர் தூரத்தை நடப்பதாகத் தீர்மானித்து நடக்கிறாள். அவனது கோபம் ஆறிய பின், மெளனிகா தான் பிள்ளைகளுடன் 3 கிலோ மீற்றர் தூரத்தையும் நடந்தே சென்றது பற்றி அவனிடம் சொன்னால், ‘உனக்குக் கொழுப்பு. 2டா.எம் ஐக் கேட்டிருக்கலாம்தானே. ‘ என்பான்.
அவனது நினைப்பு, கருத்து எல்லாம் ‘பெண்ணென்றால் எதையும் தாங்கலாம். தன்மானம் எல்லாம் அவளுக்கு ஏன் ? புருஷனிடம் காசு கேட்பதில் என்ன வெட்கம்! புருஷன் அடிப்பான், உதைப்பான். அது வழக்கம்தானே! இதுக்கென்ன பெண்டாட்டி கோபப்படுவது! – என்பதுதான். தான் அடித்தாலும் மெளனிகா சிரித்துக் கொண்டு வாங்க வேண்டுமே தவிர கோபப் படவே கூடாது. ‘ என்பதில் அவன் திடமாகவே இருந்தான்.
‘இது என்ன நியாயம்… ? ‘ என்பதுதான் மெளனிகாவைக் குமுறச் செய்யும். அவனது ஆங்காரம் பிடித்த அதிகாரத்தனம் அவளைக் கோபப்படவும் வைக்கும்.
அடித்தால் அழக்கூட உரிமையில்லாத வாழ்வு அவளுக்கு.
‘வேலைக்குப் போற படியால் தான் உனக்கு இவ்வளவு திமிர் வந்தது. நீ இனி வேலைக்குப் போகக் கூடாது. ‘ என்றும் இன்று சொல்லி விட்டான்.
மீறிப் போவதொன்றும் பெரிய விடயமில்லை. ஆனால் அதன் பின் வீட்டில் ஏற்படப் போகும் பிரளயமும், அதனால் பாதிக்கப் படப் போகும் தனது குழந்தைகளின் மனநிலையும் அவளைக் கட்டிப் போட்டன.
‘நான் நானாக வாழ முடியாமல், மாளிகை போல வீடும் மகாராஜா வீட்டில் உள்ளது போல சோபாவும் இருந்தென்ன…! ‘ மனதுக்குள் எழுந்த சலிப்பைக் கொட்ட முடியாமல் மெளனமாய் குமுறினாள். சங்கர் திருந்துவான் என்ற நம்பிக்கை தொலைந்து நாட்களாகி விட்டன.
கதைகளில் எழுதியது போல் அவனைப் பிரிந்து போய் சுயமாக வாழத் திராணி இல்லை. சமூகம் என்ன சொல்லும் என்ற பயம். ‘புதுமை என்றும் புரட்சி என்றும் எழுதுவது மிகவும் சுலபம். கணவன் என்பவன் மிருகம் என்று தெரிந்த பின்னும் உலகம் என்ன சொல்லும் என்று, தன்மானத்தைக் கொன்று பெண் என்பவள் குடும்பமானம் காப்பதே இங்கு வழமை. ‘ புரிந்து கொண்டாள்.
புயலென எழுதுபவளின் வாழ்வில் புதுமைகள் இல்லை. பழமைகள் இருந்தால் கூடப் பரவாயில்லை. வீட்டில் எந்த ரூபத்தில் எப்போது புயல் வீசும் என்று தெரியாமலே தினம் தினம் பயம் சுமந்து, சுயமாக வாழ்வதையே மறந்து விட்டவள் இவள்.
3
மெளனிகா பிள்ளைகளுடன் பாடசாலையினுள் நுழைந்த போது ‘ஹலோ மெளனிகா! வணக்கம் மெளனிகா….! ‘ என்ற பல்வித முகஸ்துதிகளுடன் அவளை ஒரு பெண்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டது.
‘மெளனிகா..! உம்மைக் கண்டது நல்லதாப் போச்சு. நர்மதாவின் முடிவு எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு. ‘ பலவித பாராட்டுக்களின் மத்தியில் ஒருத்தியின் பாராட்டு மிகவும் சத்தமாக தெளிவாக மெளனிகாவின் செவிப்பறைகளைத் தழுவுவது போல் தழுவி பலமாக அறைந்தது.
எழுத்தாளர் மெளனிகா எல்லோரையும் மெளனித்த புன்னகையால் தொட்டபடி மனதுக்குள் கதறினாள்.
—-
October 2000
chandra1200@yahoo.de
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- சாயம்
- தென்னையும் பனையும்
- வெற்றுக் காகிதங்கள்
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- தனக்கென்று வரும் போது..!
- மலை (நாடகம்)
- பாசமா ? பாசிசமா ?
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- சித்திரவதை
- டயரி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- அஞ்சலைப் பாட்டி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- நிழல் யுத்தம் பற்றி
- தமிழுக்குப் பெருமை
- என் பொழுதுகளில் இதுவும்..
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
- கடிதம் ஜூன் 17,2004
- தெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்
- பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு
- சேதி கேட்டோ..
- ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘
- தன்னம்பிக்கை
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- கடலைக்கொல்லை
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- உறங்கட்டும் காதல்
- நிகழ்வெளியின் காட்சிகள்
- நிழல் பாரங்கள்
- வீடு திரும்புதல்
- ஆயுட் காவலன்
- கவிதைகள்
- தூரம்
- அவர்கள்
- அப்பாவுக்கு…!!!
- இல்லம்
- தீர்மானம்
- தமிழவன் கவிதைகள்-பத்து
- உடன் பிறப்பு…
- குழந்தை மனது
- நம்பிக்கை
- கவிதைகள்
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- மின்மினி பூச்சிகள்
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- நெய்தல் நிலத்துக்காாி!
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)