டி.என்.ஏ. கணினிகள்

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


இஸ்ரேலிய நாட்டு அறிவியல் அறிஞர்கள் அங்குள்ள வெய்ஜ்மான் நிறுவனத்தில் (Weizmann Institute) மிகச் சிறிய நுண்கணினி ஒன்றை டி..என்.ஏ (DNA) விலிருந்து தயாரித்துள்ளனர். டி.என்.ஏ (DNA) என்பது டிஆக்சிரிபோநியூகிளிக் அமிலம் (Deoxyribonucleic Acid) என்பதன் சுருக்கம். மேற்கூறிய கணினி எந்த அளவுக்குச் சிறியது எனில், ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி டி.என்.ஏ. கணினிகளை ஒரு சோதனைக் குழாயில் அடைத்துவிட இயலும்; அந்த அளவுக்குச் சிறியது. ஆனால் ஒரு வினாடியில் நூறு கோடி செயல்பாடுகளை 99% துல்லியமாகச் செய்யும் ஆற்றல் மிக்கது.

டி.என்.ஏ. கணக்கீடு என்பது அண்மையில், சுமார் பத்தாண்டுகளுக்குள் உருவான ஓர் அறிவியல் துறை. தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் லியோனார்ட் அடெல்மென் (Leonard Adelman) என்பவர் சோதனைக் குழாய் ஒன்றில் டி.என்.ஏ.வை இட்டு கணிதப் புதிர்களை விடுவிக்கப் பயன்படுத்தினார். கணினித் தொழில்நுட்பத்தையும், உயிரியல் துறையையும் ஒருங்கிணைத்துத் தகவல் தொழில்நுட்பத்துறையில் பயன்படுத்தும் முயற்சியினை உலக அறிவியல் அறிஞர்கள் தற்போது மேற்கொண்டுள்ளனர்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அல்லது புதிர்களை விடுவிப்பதற்கு வரைபடங்கள், வாய்பாடுகள் (formulae) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நுண்கணினியில் உள்ளீடு, வெளியீடு, மென்பொருள்கள் ஆகியவற்றிற்கு டி.என்.ஏ. மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அறிவியல் அறிஞர்கள் கருத்துப்படி, வருங்கால நுண்கணினிகள் தற்போதைய கணினிகளைவிட அளவில் மிகச் சிறியதாக இருப்பதோடு மட்டுமின்றி, செயல் வேகத்தில் பன்மடங்கு விரைந்து செயல்படப் போகின்றன.

நுண்கணினிகள் எவ்வகையில் செயல்படப் போகின்றன என்பதற்கான விடையைத் தற்போது கூறுவது கடினம்; எதிர்காலத்தில் டி.என்.ஏ. கணினிகள் மனித உயிரணுக்களிலேயே (human cells) பணிபுரிவதுடன், மனிதர்கட்கு வரக்கூடிய நோய்கள், அவற்றிற்கான காரணங்கள் ஆகியவற்றைக் கண்டறியும் ஆற்றல் வாய்ந்தவையாகவும் விளங்கும் எனக் கூறப்படுகிறது.

டி.என்.ஏ.வின் ஆற்றலால் ஒரு கன செ.மீ. அளவுள்ள இடத்தில் பல லட்சம் கோடி குறுவட்டுகளில் (CDs) சேமிக்கப்படும் தகவல்களைவிட மிகுதியான தகவல்களைச் சேமிக்க இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓர் உயிரணுவில் (cell) நம்பமுடியாத அளவுக்கு தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய மூலக்கூறு எந்திரங்கள் இருப்பதாகவும் அவை தற்போதைய கணக்கீடுகளுக்கு இணையாகச் செயல்புரியக்கூடியவை என்றும் அறியப்பட்டுள்ளது. மேலும் இந்த டி.என்.ஏ. கணினி ஓர் எளிய தானியங்கிக் கணினி; பல்வேறு புதிர்களுக்கு விடை காணவல்லது; இக்கணினிக்குத் தேவையான ஆற்றலும் மிகக் குறைவே; ஓர் உயிரணுவில் டி.என்.ஏ. கனினி பொருத்தப்பட்டால், அது குறைந்த ஆற்றலைக் கொண்டே மிகப் பெரிய செயல்களைச் செய்யும் என்பது உறுதி.

***

டாக்டர் இரா விஜயராகவன்

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித் துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

***

Dr R Vijayaraghavan BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education

Mysore 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர