ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


ஜோஸப் கேம்பெலை நான் சந்தித்தது 1992 இல் ஒரு நண்பனின் வீட்டில் சோம்பலான மதியவேளை ஒன்றில். அதாவது அவர் இறந்து ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு பிறகு. சுவாரசியமில்லாமல் ‘ஓக்ஸிடன்டல் மித்தாலஜி ‘ (மேற்கத்திய புராணங்கள்) எனும் நூலை புரட்டிய போது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை பார்த்தேன். அதுவரை கருத்தூன்றி படிக்காமல் வெறுமனே படங்களை பார்த்தபடி ஏதோ மேலோட்டமான புராண என்ஸைக்ளோபீடியாவாக இருக்கும் என நினைத்தவனுக்கு -ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளியீடுகள்மத்தியில் இதுவும் இருந்ததால் அப்படி நினைத்தேன்- இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது. நண்பனிடம் இரவல் கேட்டு வாங்கி வந்தபின்னர் அதனை முழுக்க படித்தேன். மீண்டும் மீண்டும் படித்தேன். மேற்கத்திய மற்றும் கிறிஸ்தவ மரபுகளில் இத்தனை புராணச்செழுமையை நான் எதிர்பார்க்கவேயில்லை. மட்டுமல்ல நாமறியும் அடிப்படைவாத எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவமும் சரி நிறுவன கிறிஸ்தவமும் சரி அவை தம்மைக் காட்டிக்கொள்பவை போல ஒற்றையாக எழுந்த இறுக்கப் பாறைகள் அல்ல பல்வேறு கிளைகளுள்ள மரத்தின் ஒரு பட்டையை பெயர்த்தெடுத்து அதுவே உலகின் ஒரே விருட்சம் என்று சொல்லும் கூத்துதான் பாரதத்தில் நிலைகொண்டுள்ள கிறிஸ்தவம். இன்று இம்முடிவில் அடியேன் தெளிவாக இருப்பதற்கு அடித்தளம் கேம்பெலில்தான் பெறப்பட்டதாக நினைக்கிறேன்.

ஜோஸப் கேம்பெல் வரலாற்றறிஞர் அல்ல. புராணவியலாளர். புராணவியலில் அவர் ஒரு முழுமையும் ஆழமும் கொண்ட பார்வையினை உருவாக்கினார். அவரது வாழ்க்கை சுவாரசியமானது. கடந்த மற்றும் இந்த நூற்றாண்டுகளில் மேற்கத்திய பண்பாட்டின் மிக முக்கியமான புராணவியலாளர். நியூயார்க் நகர நூலகம் ஒன்றில் ஜோ என அழைக்கப்பட்ட அந்த ரோமன் கத்தோலிக்க சிறுவன் அவன் தற்செயலாக கண்ட பூர்விக இனங்களின் புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்டான். தனது பதினோறாவது வயதிலேயே நூலகத்தில் உள்ள பெரியோருக்கான நூல்கள் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டான். புராணக்கதைகளில் ஏற்பட்ட இந்த ஈடுபாடு தொடர்ந்தது. அமெரிக்க கண்டத்தின் பூர்விகக்குடிகளுடன் தான் ஏதோ விதத்தில் பிணைக்கப்பட்டிருப்பதானதோர் திடமான நம்பிக்கை அச்சிறுவனின் மனதில் வேரூன்றியது. சிறுவன் ஜோவின் உடனிருந்த சிறுவர்களுக்கு துப்பாக்கி சுழற்றும் கெளபாய்களே பிரதான ஈர்ப்பாக இருக்க, ஜோவிற்கோ பூர்விக குடிகளின் நடை உடைகள் ஈர்ப்பாக இருந்தன. வில்-அம்பு மற்றும் இறக்கை தலையணிகளுக்கு அப்பால் அவர்களுடைய அனுபவங்களின் தரவுகளை தனதாக்க அவன் விரும்பினான். அவர்கள் தாவரங்களுடனும், விலங்குகளுடனும், அனைத்தியற்கையுடனும் கொண்ட உறவுகளினை அவன் அறியவும் அனுபவிக்கவும் விரும்பினான். அவர்களுடைய புராணங்களின் குறும்புக்கார தேவதேவியர், ஞானமுடைய காகங்கள், நரிகள் மற்றும் ஞானம் தேடி பரந்த வெளி பயணம் மேற்கொள்ளும் சாகஸ வீரர்கள் ஆகிய அனைத்தையுமே தனதுள் ஏற்று அனுபவிக்க அவன் ஏங்கினான். பின்னர் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் நாட்களில் புனிதக் கோப்பை கதை ஆராய்ச்சிகளில் இறங்கிய அவனது பயணம் பாரிஸுக்கும் மூனிக்கிற்கும் அவனைக் கொண்டு சென்றது. 1924 இல் தனது குடும்பத்தோடு ஐரோப்பா செல்கையில் பிராயணத்தில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் அவனுக்கு பரிச்சயம் ஏற்பட்டது. பின்னர் ஐரோப்பாவில் ப்ராய்டும் கார்ல் உங்கும் அம்மாணவனைச் செழுமைப்படுத்த, பழம் பிரான்ஸும், சமஸ்கிருதமும் கற்று உலகளாவிய புராணக்கதைகளுடன் ஆழ்ந்த பரிச்சயத்தை ஏற்படுத்த தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு ஜோஸப் கேம்பெல் 1929 இல் கொலம்பியா திரும்பினார். கொலம்பியாவில் அவரது ஆசிரியர்கள் புராணக்கதைகளின் இணைத்தன்மைகள் மற்றும் உளவியல் பரிமாணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேம்பெலின் ஆராய்ச்சி தங்களுக்கு அவ்வளவாக இரசிக்கத்தக்கதாக இல்லை என எச்சரித்தனர். ஒரு சமுதாயத்தின் கலைஞர்கள் அச்சமுதாயத்தின் புராண சிற்பிகள் என்றும், புராணம் ஒரு சமுதாயத்தின் பிரபஞ்ச, சமூக, தனி மனித ஆன்மிக அனுபவங்களை ஒருங்கிணைக்கும் படைப்பாக்க வலைப்பின்னலாக எழுகிறது என்றும் இவ்விதத்தில் உளவியல், கலை, புராணம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கருவிலிருந்தே பின்னிப்பிணைந்து கிடப்பதாகவும் அவர் கருதினார். 1931 இல் அவர் அமெரிக்கா முழுவதுமாக பிராயணம் செய்து ‘அதன் ஆன்மாவை ‘ உணர முடிவெடுத்தார். 1932 இல் தால்ஸ்தாயின் ‘போரும் அமைதியும் ‘ நாவலை அது இயற்றப்பட்ட மொழியிலேயே படிக்க ரஷிய மொழியை அவர் படித்தார். அவரது பிரயாணம் அவரை எழுத்தாளர் ஜான் ஸ்டெயின்பாக் மற்றும் அவரது மனைவியுடன் நட்பு கொள்ள வைத்தது. பின்னர் மிக முக்கியமாக கடல் உயிரியலாளர் எட் ரிக்கெட்ஸ்ஸுடன். இவ்வுயிரியலாளரின் தாக்கம் மிக ஆழமாக கேம்பெல்லிடம் பதிந்தது. 1932 இல் அமெரிக்க பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருந்த காலம். காம்பெல் அமெரிக்க கண்ட பிரயாணத்தில் எட் ரிக்கெட்ஸினை சந்தித்தார். வேலையின்மையும் நிச்சயமற்ற தன்மையும் தம்மை சூழ்ந்திருந்த அக்காலகட்டத்தில் அவர் ரிக்கெட்ஸுடன் இணைந்து உயிரியலின் அனுபவத்தை பெற்றார். 15000 ஜவ்வு மீன் (gonionemus vertens)களை சேகரிக்கும் ஒரு வேலையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ரிக்கெட்ஸ் அதில் கேம்பெல்லையும் இணைந்திடுமாறு கோரினார். அடுத்த பத்துவாரங்களுக்கு நிகழ்ந்த இக்கூட்டு உழைப்பில் கேம்பெலின் வாழ்க்கையில் ஒரு குருவாகவே ரிக்கெட்ஸ் மாறினார் எனலாம். ‘Notes and Observations, Mostly Ecological, Resulting from Northern Pacific Collecting Trips Chiefly in Southeasterly Alaska with Especial Reference to Wave Shock as a Factor in Littoral Ecology ‘ எனும் ஆய்வுத்தாளை சமைப்பதில் ரிக்கெட்ஸுக்கு கேம்பெல் பெரிதும் உதவினார். பின்னாளில் காம்பெல் கூறுவார், ‘நாமறியும் இயற்கை எந்த ஓர் தருணத்திலும் நம் அகத்திலும் புறத்திலும் உள்ளது. இவற்றின் தொடுபுலத்தினை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது கலை; அவ்வாறே உள்ளன சடங்குகள்; அவ்வாறே உள்ளன புராணங்கள். இவையும் கூட இயற்கையின் மகோன்னத வரைகோடுகளை வெளிக்கொணர்கின்றன. அவ்வாறு வெளிக்கொணர்கையில் அவை நம்முடைய அடியாழத்தில் இருக்கும் -அனைத்து இருப்பினுடனும் ஒன்றாயிருக்கும்-சத்தியத்தினை மீள்-ஸ்தாபிதம் செய்கின்றன. ‘ ஒரு புராணவியலாளரின் இருக்கை நகரா அழகியல் மேற்கோளல்ல மேற்கண்டது. மாறாக திறன் வாய்ந்த ஆராய்ச்சியறிஞரின் வழிகாட்டலுடன் தாம் அனுபவித்தறிந்த உண்மையை வாழ்க்கையில் இயைவு படுத்திய ஒருவரது அனுபவ சொற்கள் இவை. 1941 இல் ரிக்கட்ஸுக்கு எழுதிய கடிதத்தில் கேம்பெல் குறிப்பிடுகிறார், ‘…இந்த அலையிடை உயிரினக் கூட்டங்களும் பெரும் மானுடச் சமுதாயங்களும் ஒரேவித தத்துவங்களினால் அமைந்துள்ளன; இதையும் விட முக்கியமாக சிறியதும் பெரியதுமான சமுதாய கூட்டங்களும் மகோன்னதமானதும் அனைத்தையும் உள்ளணைப்பதுமானதோர் உயிரியின் உறுப்புகளாக நாம் அறிகிறோம். அவ்வுயிரி கனவு போன்றதோர் பாதி நனவுடை நிலையில் சுவாசித்து ஜீவிக்கிறது, தன் பகுதிகளையே எரித்து தன் பகுதிகளையே வளர்த்து வாழ்கிறது.. இது நம்மில் குறிக்கோளற்ற படைப்பின் சிந்தனையை உருவாக்குகிறது (non-teleological thinking) ‘ இக்காலகட்டம் காம்பெலின் வாழ்க்கையில் முக்கியமானது. ரிக்கெட்ஸும் காம்பெலும் அப்போது அறிவியல் உலகின் மிகப் பெரிய அதிர்வலையாக எழும்பிய நுண்பொருள் இயற்பியல் குறித்து ஐன்ஸ்டைன்-போர், ஹெய்ஸன்பெர்க் ஆகியோரிடையே நடந்த விவாதங்களையும் அதன் பின்னாலிருந்த தத்துவ நிலைபாடுகளையும் விவாதித்தனர். இத்துடன் இணைந்த உயிரியல் அனுபவம் காம்பெல்லை என்றென்றுக்குமாக அரிஸ்டாடிலியத்திற்கு புறம்பாக்கியது. மேலும் புராணம் மானுடத்தின் ஒரு உயிரியல் பண்பு எனும் தீர்க்கமான முடிவிற்கு வர இந்த அனுபவங்கள் அவருக்கு உதவின.

1934 இல் சாரா லாரன்ஸ் கல்லூரியில் அவர் ஆசிரியர் பணியிலமர்ந்தார். அடுத்த 38 ஆண்டுகளுக்கு இப்பணியிலேயே இருந்து வந்தார். 1938 இல் தமது மாணவியும் பின்னாளில் சிறந்த நடனக் கலைஞருமான ஜீன் எர்ட்மானை மணந்தார்.

1940 இல் அவர் சுவாமி நிகிலானந்தரை சந்தித்தார். 1942 இல் வெளியான பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நற்செய்தி (Gospel of Sri Ramakrishna) நூல் ஆக்கத்தில் அவர் சுவாமிஜியுடன் இணைந்து செயலாற்றினார். நிகிலானந்த சுவாமி அவரை புகழ்பெற்ற பாரதவியலாளர் ஹெயின்ரிச் ஸிம்மருக்கு அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே உங்கின் கோட்பாடுகளை அறிந்திருந்த கேம்பெல் உங்கை சந்திக்க வைத்தார் ஸிம்மர். ஸிம்மருடனான நட்பு 1943 இல் ஸிம்மரின் எதிர்பாராத மரணத்தினால் முடிவுக்கு வந்ததெனினும், அதற்கிடையில் அது ஆழ வேரூன்றிவிட்டது. எனவே ஸிம்மரின் முடிவுபெறாத நூல்களின் பிரசுரத்தின் மேற்பார்வை கேம்பெலிடம் ஸிம்மரின் விதவையால் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு வெளிவந்த நூல்களில் முதலாவது ‘இந்திய கலையிலும் பண்பாட்டிலும் புராணங்களும் குறியீடுகளும் ‘ (Myths and Symbols in Indian Art and Civilization), ‘அரசனும் சடலமும் ‘ (The King and the Corpse, 1948), ‘இந்தியாவின் தத்துவங்கள் ‘ (Philosophies of India,1951), ‘இந்திய ஆசியாவின் கலை ‘ (இரு பாகங்களாக, ‘The Art of Indian Asia ‘,1955).

பாரிஸில் கேம்பெல் இருந்த காலத்தில் அவர் ஜேம்ஸ் ஜாய்ஸியின் பிரசுரர் ஸில்வியா பீச்சுடன் நட்பு கொண்டிருந்தார். பீச் அவருக்கு ‘ஒற்றைப் புராண ‘(monomyth)க் கோட்பாட்டினை அறிமுகப்படுத்தினார். அதாவது எந்த இனம், எந்த கலாச்சாரம், என்ன வேலை என்கிற பாகுபாடுகளை மீறி ஒரு மகோன்னத புராணக்கதையொன்றின் விரிவாக -unfloding-ஆக ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப்படுகிறதென்பதே அக்கோட்பாடு. இது கேம்பெலுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒற்றைப் புராணத்துவமும் மனிதவியலாளர் அர்னால்ட் வான் ஜென்னப்பின் சமஸ்கார சடங்குகள் (Rites of passage) குறித்த கண்டடைவும் அவரில் சங்கமித்து உருவான ஆக்கம் 1949 இல் வெளிவந்த மிகவும் பிரசித்தி பெற்ற காம்பெலின் நூலான ‘ஆயிரம் முகங்களுடைய நாயகன் ‘ (Hero with a thousand faces). கதாநாயகன் தனது உண்மை சாகஸத்திற்கான அழைப்பினை உணர்ந்து அதனை ஏற்றல், குருவினை சந்தித்தல், உள்நுழைதலின் உச்சக்கட்டம், பின்னர் சாகஸம் புரிகையில்: ஆற்றுப்படுத்துவோரையும் துணையாளர்களையும் கண்டறிதல், சோதனைகளை சந்தித்தல், ஆசைகளை கவர்ச்சிகளை எதிர்கொள்ளுதல், எதிரிகளை துணிந்து எதிர்த்து நிற்றல், தகிக்கும் ஆன்ம பரிசோதனைக்கு ஆட்படுதல், உச்சக்கட்ட சோதனையை சந்தித்தல், பின்னர் அழிவற்ற பரிசொன்றை வெல்லல். இறுதி முடிவு நிலையில் புராண வீரன் சாகஸ தளத்திலிருந்து மீண்டு வருதல், உயிர்த்தெழுதல், வைபவம் மற்றும் முழு சாகஸமும் சேவையாகிட வென்ற பரிசினை பகிர்தல் மற்றும் சாகஸ உலகினையும் அன்றாட சம்சார உலகினையும் ஒருங்கிணைத்தல்-எனும் இந்நிகழ்ச்சிகளே ஒவ்வோர் வாழ்க்கையிலும் விரிகின்றன…அவற்றின் ஒரு உச்சக் கலையுணர்வும் உளவியல் பரிமாணங்களும் கொண்ட வெளிப்பாடாக புராணங்கள் உருவாகின்றன. ஆக, புராணக் கதையாடாலான இவ்வீரனின் வாழ்க்கை சுழல் இலக்கியங்களில் வெளிப்படுகின்றன என்பதோடு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்பட்டு விரிவடைகின்றன.கேம்பெல் விரிவுரையாற்றியது முழுக்க மாணவிகளுக்கே என்பதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். இப்பெண்களே புராணக் கூறுகளை தம் அன்றாட வாழ்க்கையின் விரிவுடன் இணைகாண்பதில் ஆர்வமாக இருந்து கேம்பெலின் சிந்தனை விரிவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தார்கள். ஒரு புகழ் பெற்ற கேம்பெல் மேற்கோள் இலக்கியம்-அன்றாட வாழ்க்கையுடன் இணைந்து வெளிப்படும் புராணக்கூறுகளை வெளிப்படுத்தும்: ‘இன்றைய தேதியில் வாழும் ஓடிபஸின் அவதாரமும், அரக்கனுக்கும் அழகிக்குமான தொடரும் காதலும் மதிய வேளையில் 42 ஆவது தெருவிலும், ஐந்தாவது அவென்யூவிலும் போக்குவரத்து சிக்னல் மாறுவதற்காக காத்து நிற்கின்றனர் ‘.

கேம்பெலின் இந்த புராண வீரனின் வாழ்க்கைச்சுழல் வகைப்படுத்தல் பின்னர் மிகப்பிரபலமான சில படைப்புகளில் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக ஸ்டார்வார்ஸ், மாட்ரிக்ஸ் ஆகிய திரைப்படங்களையும் சிறுவர்களுக்கான ஹாரி பாட்டர் நாவல்களையும் கூறலாம். இதில் ஸ்டார்வார்ஸினை உருவாக்கிய ஜியார்ஜ் லூகாஸ் மிகவும் கவனமாகவே அக்கதைவடிவமைப்பு புராணவீரனின் வாழ்க்கை சுழலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதையும், அதில் இராமாயணம் உட்பட உலகளாவிய புராணக்கதைகளின் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதையும் கூறியுள்ளார்.

கேம்பெலின் அடுத்த மிகப்பெரிய பணியாக அறியப்படுவது ‘கடவுளின் முகமூடிகள் ‘ (The Masks of God) எனும் உலக புராணங்களின் தொகுப்பு. இது ‘தொன்மை புராணங்கள் ‘ (Primitive Mythology), கிழக்கத்திய புராணங்கள் (Oriental Mythology), மேற்கத்திய புராணங்கள் (Occidental Mythology), படைப்பாக்க புராணங்கள் (Creative Mythology) என நான்கு பகுதிகளாக அவை வெளிவந்தன. மானுட குலம் எவ்வாறு உயிரியல் அடிப்படையில் ஒன்றாக இருக்கிறதோ அதே போல ஆன்மிக இயங்குதளத்திலும் ஒன்றாகவே இருக்கிறது எனும் தம் ஆழ்ந்த நம்பிக்கை இந்த ஆக்கங்களின் முடிவில் உறுதிப்பட்டதாக அவர் கூறுகிறார். ஹரப்பா நாகரிகம் முதல் ஜெயதேவரின் கீதங்கள் வரையிலாக அவரது வீச்சு அபரிமிதமானது. நாம் இன்னமும் ஆராய வேண்டிய மர்ம முடிச்சுகள் மேற்கத்திய-கிழக்கத்திய என பாகுபடுத்தப்பட்ட புராணங்களிடையே இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கெல்டிக் தெய்வமான செரூனோஸுக்கும் ஹரப்பாவில் கிடைக்கும் தொல்-சிவன்/ருத்திரன் எனக் கருதப்படும் தெய்வச்சின்னத்திற்குமான இணைகளையும் அவர் காட்டாமலில்லை. இந்த கெல்டிக் தெய்வ சிற்பத்தில், தானியங்களை அளித்தபடி செரூனோஸ் அமர்ந்திருக்க கீழே மாடும் மானும் நிற்கின்றன. மேலே ஒரு எலி. கேம்பெல் எலியின் பாரத புராண இடத்தையும் கணபதி வாகனமென விளக்கிச் செல்கிறார்.இந்த ஆக்கங்களின் போது அவர் பயன்படுத்திய வரலாற்றுத்தரவுகளில் சில இன்று பொய்ப்பிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டேயாகவேண்டும். உதாரணமாக, ஆரிய-செமிட்டிக் படையெடுப்பு வாதங்கள். என்றபோதிலும் கூட அவர் ஆரிய படையெடுப்புக்கோட்பாட்டாளர்கள் போல (இர்பான் ஹபீப் தமது அண்மை நூலில் முயற்சித்திருப்பது போல) வேத பாடல்களில் ‘இயற்கை தெய்வங்களின் வழிபாடு ‘ குறித்து கூறப்படுவதில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறார், உதாரணமாக வருணன் குறித்த வேத இலக்கிய விவரணங்களுக்கு பின்னர் கூறுகிறார், ‘தெளிவாகவே இக்கடவுள், வேத தெய்வக் குழாமில் பலர் காணவிரும்பும் வெறும் ‘இயற்கை தெய்வம் ‘ எனக் கூறிவிட முடியாதவாறு உள்ளது.அவ்வாறே ஒரு ஒழுங்குமுறை கொண்ட பரிணாம வளர்ச்சியை (அதாவது முதலில் இயற்கையை பாடினார்கள் பின்னர் இயற்கைக்கு பின்னால் ஒரு சக்தி இருப்பதை கண்டு கொண்டார்கள் என்பது போன்றெல்லாம்.) இப்பாடல்களின் மேல் திணித்து அவற்றினை பாகுபாடு செய்யவும் முடியாது. ‘ (கிழக்கத்திய புராணங்கள்:பக்.176-177) என்ற போதிலும் வேத இலக்கியத்தினை அவர் ஆரிய-ஆரியரற்ற எனும் இரட்டைப்பார்வையிலேயே ஆய்வு செய்துள்ளார். அவ்வாறே பாரத நாகரிகக் கூறுகள் சுமேரிலிருந்து பெறப்பட்டவை எனும் இன்று முழுமையாக நிராகரிக்கப்பட்ட/அன்று பெரும்பாலான அறிஞர்களால் ஏற்கப்பட்டிருந்த பார்வையும் அவரது எழுத்துக்களில் தெரிகிறது. இன்று அகழ்வாராய்ச்சி ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டினை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில் வேத இலக்கியங்கள் மற்றும் இன்றைய பாரதத்தின் பெரும் பன்மை செழிப்பு வாய்ந்த சடங்காச்சராங்கள் மற்றும் புராணங்கள் ஆகியவற்றுடனான ஒருமைத்தன்மை ஆகியவை கேம்பெலிய பார்வையில் ஆராயப்பட்டால் அது ஒரு மிகச் சிறந்த முழுமைத்தன்மையுடன் பாரதத்தை அறிய உதவும் என்பதில் ஐயமில்லை.

மேற்கத்திய புராணம் குறித்த நூலில் கிழக்கின் புராணங்களுடான இணைத்தன்மைகளை கேம்பெல் விளக்குகிறார். இந்நூலிலேயே இத்தொகுதி நூல்களில் கேம்பெல் மிகச்சிறந்து பிரகாசிக்கிறார் எனலாம். உதாரணமாக கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடைய பல கூறுகள் உலக புராணக்கதைகளில் இருப்பதையும், அதுவே ஏசுவின் பிறப்பு குறித்த கதையாடலில் மீள்-உருவாக்கப்பட்டுள்ளதையும் கூறும் அவர், என்ற போதிலும் பாரதம் இந்த புராணத்தை உளவியல் குறியீட்டுத்தன்மை கொண்டதாக மாற்றியதையும், கொடுங்கோலன் மற்றோரு மதத்தை அல்லது இனத்தை சார்ந்தவனாக சித்தரிக்கப்படும் மேற்கத்திய தன்மைக்கு மாறாக மனதின் அகங்காரம் மற்றும் மரணத்தினை கண்டு அச்சப்படும் பரிமாணங்களை காட்டுவதாக மாறுவதையும் அவர் குறிப்பிடுகிறார். (மேற்கத்திய புராணங்கள்: பக்.345) புதிய கற்கால தாய் தெய்வத்தின் முறையீடு மற்றும் அவளது மணவாள மைந்தன் குறித்த புராணக்கதையில் தொடங்கி மெக்ஸிகோவில் கோயெட்ஸல்காட்டல் (இறக்கைகளுடைய நாக வேந்தன்), பாரதத்தில் கிருஷ்ணன், புத்தன், ஆபிரகாமிய மதங்களில் ஆபிரகாம் மற்றும் ஏசு, பாரஸீகத்தில் ஜராதுஷ்டிரனின் புராணக்கதையில் பசு ஆன்மாவின் முறையீடுமென ஒருமைகளை காட்டுகிறார் கேம்பெல். கிறிஸ்தவத்தின் யோவானால் அளிக்கப்படும் ஞானஸ்நானம் யூதத்தின் எலிஜாவால் அளிக்கப்படும் அந்நீர் சடங்கு, சுமேரிய நீர் தெய்வமான இயாவின் சடங்கு எனக் காட்டுகிறார். இயாவின் ஹெலனிய காலப்பெயர் ஓயன்னெஸ் அதுவே கிரேக்கத்தில் இயோன்னஸ் எனவும் இலத்தீனில் ஜோகனெஸ் எனவும் ஹீப்ரூவில் யோகனான் எனவும் ஆங்கிலத்தில் ஜான் தமிழில் யோவான் எனவும் வழங்கப்படுகிறது (மே.பு பக்.349-350) இது புராணவீரன் கதைச் சுழலில் சாகஸ உலகிற்குள் வீரன் செல்வதற்கு முன்னர் நடக்கும் சடங்காகும். இது உலகம் தழுவியது. உடனடியாக காம்பெல் பாரத புராணங்களிலிருந்து இணைத்தன்மையை முன்வைக்கிறார். உதாரணமாக, புத்தர் பல இடங்களிலும் அலைந்து அன்று இருந்த அனைத்து அறிஞர்களையும் கண்டு தளர்ந்து பின்னர் தியானம் செய்யும் ஐந்து துறவிகளை கண்டு நிரஞ்சன நதியில் நீராடி தன்னந்தனியனாக தமது அகப்பயணத்தை துவக்குகிறார். இதே ரீதியாக ஏசுவின் கதையை புராண வீரனின் வாழ்க்கைச் சுழலில் பொறுத்துகிறார் காம்பெல். அடுத்ததாக இஸ்லாம் மற்றும் மார்க்ஸியத்தையும் அவர் இதே சட்டகத்துள் அலசுகிறார். மார்க்ஸியத்தின் அதிகாரமானது, யஹீவா, ஏசு மற்றும் அல்லா போன்ற தெய்வங்களினுடையதாக இல்லாமல், உழைப்பாளி எனும் சமுதாய கற்பனை உருவாக்கத்திலிருந்து பெற்றுக்கொள்கிறது. எனினும் இது, மார்க்ஸியம் மற்ற ஆபிரகாமிய மதங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அதிகாரப்பூர்வ சட்டத்திற்கான குறியீட்டாக்கம்தான் (symbolization of the shared concept of authentic law). அதே சமயம் யூதத்திற்கும் இஸ்லாம், கிறிஸ்தவம், மார்க்ஸியம் ஆகியவற்றிற்கும் முக்கியமான பிறிதோர் வேறுபாடு உள்ளது. ‘யூத சட்டத்திற்கும் பிற மூன்று சட்டங்களுக்குமிடையேயான வேறுபாடு, வாழ்க்கையிலிருந்து ஜீவ அனுபவங்களின் மூலம் ஓரளவுக்காவது உண்மையான அனுபவங்கள் மூலம் ஒரு சமுதாயம் பெற்ற சட்டத்திற்கும், ஒரு நிறுவப்பட்ட நூலிலிருந்து உருவாக்கப்பட்ட, இனிவரப்போவதாக கற்பனை செய்யப்பட்ட ஒரு சமுதாயத்திற்கான சட்டத்திற்கும் இடையிலான வேறுபாடாகும். யூத சட்டம் உயிரோட்டமுடைய தகவமைப்பும் வளர்ச்சியுமுடைய ஒன்று; மற்றவையோ (கிறிஸ்தவம், இஸ்லாம், மார்க்சியம்) மாறாக, உருவாக்கப்பட்ட உடையும் தன்மை கொண்டவை மட்டுமல்ல அந்த அமைப்புகளின் வெளியிலிருந்து நோக்குவோருக்கு தாங்க இயலாத அளவு மடத்தனம் உடையதாகவும், அவை தம்மை உலகமனைத்திற்கும் பொருந்துவதாக நினைப்பதால், யூத இறுதிநாளின் கொடும் விவரணங்களைக் கூட தேவதை கதையாக்கும் அளவுக்கு, படுபயங்கரத்தன்மை கொண்டவையாகவும் தோற்றமளிப்பவை. ‘ (பக்.439-40)

புராணவியலுக்கு இந்நூலின் மிக முக்கிய பங்களிப்பு புராணங்களின் செயல்பாடுகளை வகைப்படுத்தியதாகும். நான்கு அடிப்படையான முக்கிய செயல்பாடுகளை கேம்பெல் கூறுகிறார். முதலாவதாக இருப்பின் மர்மத்தின் மகோன்னதத்தினை உணர்த்தி வியக்கவைப்பது. இதுவே புராணத்தின் மிக முக்கியமானதும் முதன்மையானதுமான செயல்பாடாகும். இரண்டாவது செயல்பாடு, மேற்கூறிய வியப்புணர்ச்சியுடன் இணைந்த பிரபஞ்ச ஒழுங்கின் தத்துவத்தினை அளிப்பது. பாரத ஞானமரபில் இது ரிதம் எனப்படும் பிரபஞ்ச ஒழுங்கின் அடிப்படையில் கட்டமைப்பப்படுவதாக கருதலாம். மூன்றாவதாக சமூக ஒழுங்கினை உருவாக்கும் செயல்பாடு. சமூக பொருளாதார வரலாற்று காரணிகளுக்கு ஏற்ப தகவமைத்து ஜீவிக்கும் தன்மையை சமூகத்திற்கு நல்குகிறது இது. மார்க்ஸிய புராணவியலாளர்கள் இச்செயல்பாட்டின் ஒரு பரிமாணத்தையே முழு உண்மையாக காட்டமுயற்சிக்கின்றனர். நான்காவதாக தனிமனிதனின் ஆன்ம வேட்கை மற்றும் தனிமனித ஆன்ம முழுமைக்கு ஒரு வரைப்படமாகவும் செயல்படுகிறது. இந்த நான்கு செயல்பாடுகளையும் எந்த கலாச்சாரத்தின் புராணக்கதையமைப்புகளிலும் கண்டறியமுடியும்.

ஜியார்ஜ் லூகாஸின் வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்தார் கேம்பெல். லூகாஸின் ‘ஸகை வாக்கர் ராஞ்சில் ‘ அவருடன் பில் மோயர்ஸ் நடத்திய உரையாடல்கள் (1985,1986) ஆறு பகுதிகள் கொண்ட தொலைக்காட்சி தொடராகவும் பின்னர் ஒரு நூலாகவும் வெளிவந்தது. ‘புராணத்தின் ஆற்றல் ‘ (The Power of Myth,1988) எனும் அந்நூல் மிகச்சிறந்த தொடக்க வழிகாட்டியாகவும், அறிஞர்களுக்கு கூட உள்ளொளிக் கீற்றுக்களை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. புராண வீரனின் கதையில் சென்று பிரணவத்தின் வார்த்தைகள் கடந்த நிலையில் முடிவடையும் அவ்வுரையாடல் ஒவ்வொரு புராணவியல் மாணவருக்கும் நிச்சய -சுயவிருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுக்கும் பாடநூலாக இருக்கவேண்டும். இதோ அவ்வுரையாடலிலிருந்து ஒரு பகுதி:

மோயர்ஸ்: இது ஆதியாகமத்திலிருந்து: ‘ஆதியில் தேவன் வானங்களையும் உலகையும் படைத்தார். உலகு உருவமற்று சூனியமாக இருந்தது. இருள் ஆழத்தின் முகத்தின் மீது இருந்தது. ‘

கேம்பெல்: இது அரிஸோனாவின் பிமா பூர்விகக் குடிகளின் ‘உலகின் பாடல் ‘எனும் புராணத்திலிருந்து: ‘ஆதியில் எங்கும் இருள் இருந்தது. இருளும் நீரும் இருந்தன. இருள் எங்கும் கவிந்து கூடியது. கூடி விலகியது. விலகு கூடியது. ‘

மோயர்ஸ்: ஆதியாகமத்திலிருந்து: ‘தேவனின் ஆவியானவர் நீரின் மீது அசைந்தபடி இருந்தார்.தேவன் கூறினார், ‘ஒளி உண்டாகக் கடவது ‘. ஒளி உண்டாயிற்று. ‘

கேம்பெல்: இது ஹிந்து உபநிடதத்திலிருந்து: ‘ஆதியில் பெரும் ஆத்மா ஒன்றே இருந்தது. அதன் பிரதிபலிப்பை அது ஒரு தனி இருப்பாக உணர்ந்தது. அது தன் இருப்பினையேயன்றி வேறெதையும் அறியவில்லை.யாதன் முதல் வார்த்தைகள் ‘இதுவே நான் ‘ என்பதாக இருந்தன.

மோயர்ஸ்: ஆதியாகமம்: ‘எனவே தேவன் மனிதனை தனது பிரதிபலிப்பாகவே தேவனின் சாயலில் உருவாக்கினார். ஆண்-பெண்ணாக உருவாக்கினார். தேவன் அவர்களை ஆசிர்வதித்தார். தேவன் கூறினார் பலனுடையவர்களாக இருங்கள் நீங்கள் பல்கி பெருகுங்கள் ‘

கேம்பெல்: இது மேற்கு ஆப்பிரிக்காவின் பஸாரி மக்களின் புராணம்: ‘அன்நன்ம்போத் மனிதனை உருவாக்கி மனிதன் என பெயரிட்டார்….அவர் அவர்களிடம் . நீங்கள் இருக்கும் இடம் நீங்கள் தோண்டிட அளிக்கப்பட்டது. என்றார். பல தாவரங்களின் வித்துக்களை அளித்தார். தாவரங்களை பயிரிடுங்கள் எனக் கூறினார் ‘ (பக்.51)

அதே உரையாடலில் சர்ப்பம் குறித்து அவர் கூறுவதிலிருந்து ஒரு பகுதி: ‘வாழ்க்கையின் சக்தி சர்ப்பத்தை அதன் தோலினை களையச் செய்கிறது. மீண்டும் வாழ. நிலவின் நிழலைப் போல. அவை சமத்தன்மை உடைய குறியீடுகள். சில நேரங்களில் சர்ப்பம் அதன் வாலை அதுவே விழுங்க முற்படுவது போன்ற சித்திரங்கள் உள்ளன. அதுவும் வாழ்வின் குறியீடு….சர்ப்பம் பல கலாச்சாரங்களில் நேர்மறைத்தன்மை கொண்ட குறியீடாகவே உள்ளது. பாரதத்தில் மிக நஞ்சுடைய நல்ல பாம்பு கூட புனித விலங்காக கருதப்படுகிறது. புத்தருக்கு அடுத்த நிலையில் இருப்பது புராண நாகராஜனே. …அமெரிக்க பூர்விகக் கலாச்சாரங்களிலும் பாம்பு முக்கியமான சக்தியாக திகழ்கிறது. உதாரணமாக பூபுலோஸில் (Publos) ஹோபிகளின்(Hopis) நாக நடனம். மலைகளிலிருந்து அவற்றினை கொணர்ந்து அவற்றை தம் வாய்களில் வைத்து நட்பு பாராட்டி பின்னர் மலைகளில் கொண்டு விடுகின்றனர். மலைகளுக்கும் மக்களுக்கும் அவை செய்தி சொல்பவையாக கருதப்படுகின்றன….யஹீவாவின் ஆதி தோட்டத்தில் சர்ப்பமே முதன்மை தெய்வமாக விளங்கியது. பழம் சுமேரிய முத்திரைகளில் (கிமு 3500) பாம்பும் தேவியும் ஜீவவிருட்சமும் காணப்படுகின்றன.(பக்.53-54)

யூதேய-கிறிஸ்தவ மரபில் சர்ப்பத்தின் வீழ்ச்சியினை வாழ்வினை மறுதலிக்கும் போக்காக காண்கிறார். என்ற போதிலும் கிறிஸ்தவத்தில் புராணத்தன்மையை மீட்டெடுக்க அவர் செய்த முயற்சிகலின் தொகுப்பு 2001 இல் ‘Thou art that ‘ (தத்வமஸி) எனும் நூலாக வெளிவந்தது. கன்னி மூலம் பிறத்தல் (Virgin birth), வாக்களிக்கப்பட்ட தேசம் (Promised Land) மற்றும் இறையரசு (Kingdom of God) ஆகியவற்றினை வரலாற்று செய்திகளாக அல்லாமல் தனிமனித வாழ்க்கை சுழல் புராணக் கூறுகளாக மாற்றுகிறார் காம்பெல். ஒருவிதத்தில் ஆலன் வாட்ஸ் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கூறுவது போல இது யூதேய-கிறிஸ்தவ மரபினை முழுமையானதோர் ஹிந்துத்வப்படுத்தல் அல்லது வேதாந்தப்படுத்தல் எனலாம். கத்தோலிக்க சபையும் உலக கிறிஸ்தவ அமைப்பும் (World Christian Council) நடத்தும் பம்மாத்து மதமாற்ற உள்நோக்க உரையாடல்களுக்கு அப்பால் உண்மையான ஆன்மிக உறவினை விரும்பும் ஹிந்து -கிறிஸ்தவ உரையாடல்கள் நடத்தப்படும் போது கேம்பெல் நூல் உலகளாவிய மதங்களுக்கப்பால்பட்டதோர் ஆன்மிக வளர்த்தெடுப்பில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படும் என்பதில் ஐயமில்லை.

மேற்கத்திய பார்வை சமநிலையின்மை குறித்து கேம்பெல் கூறுகிறார், ‘புராணம் என்பது அடுத்தவரின் மதம். மதம் என்பது நம்மவரின் புராணம் ‘ ஒரு முறை சின்னகருப்பனுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். நூலகங்களில் புராணங்கள் என்று சொன்னால் நம் நாட்டு மற்றும் ஆப்பிரிக்க, அமெரிக்க பூர்விகக் குடிகளின் மதநம்பிக்கைகள் இடம் பெறுவதாகவும், விவிலிய நம்பிக்கைகள் அவ்வாறில்லை எனவும் அவை விவிலிய அகழ்வாராய்ச்சி என்பது போல நடைபெற்ற சரித்திரமாகவே கருதப்படுவதையும் கூறினார். அண்மையில் நாகர்கோவிலில் ஒரு நாட்டார் மதநம்பிக்கை ஒன்றை ஆய்வு செய்து ஒரு நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை நான் படிக்கவில்லை. ஆனால் அதன் விளம்பரத்தை காணும் பாக்கியம் எனக்கு கிட்டியது. ‘ஒற்றன் கதை: கடவுளாக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை ‘ எத்தனை மேலோட்டமான கர்வம் பிடித்த விளம்பரம் இது. ஒரு மனிதன் தெய்வநிலை அடைவதென்பது புராணங்களில் மீண்டும் மீண்டும் நாம் பார்க்கும் ஒரு நிகழ்வு. கிறிஸ்தவ பாதிரியார்களும் இடதுசாரிகளும் நிரம்பியுள்ள நாட்டார் வழக்காற்றியல் துறை வாழும் மத நம்பிக்கைகளை தமது மறைவான சித்தாந்த இறையியல் தேவைகளுக்காக பகுப்பாய்வு செய்கின்றனர். விளைவு இத்தகைய மேல்நிலைப் பார்வைகள். இதன் சிறந்த உதாரணமாக இங்கு இருக்கும் இப்படத்தினை பாருங்கள். கேம்பெல் கூறுவார் புனித குறியீடுகளை அவற்றின் புனிதச் சூழலிலிருந்து பெயர்த்தெடுத்து பகுப்பாய்வு செய்வது அவற்றினை உயிரிழக்கச் செய்யும் அடிப்படை தவறென்று. கேம்பெல் கூற்றின் பிரத்தியட்ச உதாரணமாக இப்படம் திகழ்கிறது. குமரி-நெல்லை மாவட்டங்களில் பல இலட்சக்கணக்கான மக்களால் வணங்கப்படும் தெய்வ திருவுரு அதற்கான குறைந்த பட்ச மரியாதை கூட அளிக்கப்படாமல் கேவலமான காட்சிப்பொருளாக நிற்க வைக்கப்பட்டிருப்பதை பாருங்கள். இதற்கு தேவை பிற மனிதரின் ஆன்ம உணர்வுகளை மதிக்காத மனநிலை என்பதை சிந்தியுங்கள். இத்தகையோரால் உருவாக்கப்படும் அறிவுத் திரட்டலே இனி நாட்டார் மரபுகளை அறிய விரும்புவோருக்கு ஒரே மையமாக அமையும் என்பதையும் உணருங்கள். இப்போது நம் சூழலில் கேம்பெலின் முக்கியத்துவம் தெரியும். மிஷினரி-மார்க்ஸியம் சார்ந்த ஒரு சிதைந்த உள்நோக்குடைய பார்வைக்கு மாற்றாக ஒரு உள்ளார்ந்த பார்வையாக அறிவியல் கறார் தன்மை சிறிதும் இழக்காத பார்வையாக உண்மைக்கு அழைத்துச் செல்லும் ஆய்வுப்பார்வையாக கேம்பெலிய ஆராய்ச்சி நமக்கு உதவும்.

கென்னடி மரணத்தின் 24 ஆவது ஆண்டு நினைவு தினத்திற்கு சில நாட்கள் முன்னதாக 1987 இல் ஜோசப் கேம்பெல் இறந்தார்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

ஜோஸப் கேம்பெல், ‘The Masks of God ‘ (Primitive Mythology)Vol-1, (Oriental Mythology) Vol-2, (Occidental Mythology) Vol-3, (Creative Mythology) Vol-4. (Penguin-Arkana, 1991)

ஜோஸப் கேம்பெல், (பில் மேயர்ஸுடன்), ‘The Power of Myth ‘ (Anchor edition, 1991)

ஜோஸப் கேம்பெல், ‘Thou Art That: Transforming Religious Metaphor, ‘ (Editor: Kennedy, Eugene New World Library,2001)

இணையதளம்:

www.jcf.org

இது ஏப்ரல் 1999 இல் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியிலிருந்து இயங்கும் Folklore Resources and Research centre News letter இல் வெளியான புகைப்படம்.

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்