ஜெயமோகன் சிந்தனைக்கு (சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக)

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

கிருஷ்ணா ஜெயராம்


ஜெயமோகன் அவர்களுக்கு,

சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக நீங்கள் எழுதிய கடிதம் கண்டேன். சு.ராவிடம் நீங்கள் காணும் குறைகளை குற்றம் என்று சொல்வது போல் உள்ளது.

நீங்கள் ‘சு.ராவின் அந்தக்கால இலக்கிய வம்பு ‘ என்ற குற்றச்சாட்டிற்கு சு.ரா ஜெயகாந்தனை கையாண்ட விதமாக நீங்கள் நம்புவதை முன்னிருத்தி கூறுவதால் நானும் அதையே முன்னிருத்தி என் கருத்துக்களை தொகுத்துள்ளேன்.

ஜெயகாந்தனை சு.ரா திட்டமிட்டு புறக்கணித்து விட்டதாக கூறுகிறீர்கள்.அப்படி இருட்டடிப்பு செய்வதற்கு இலக்கிய உலகின் ‘light switch ‘ சு.ராவிடமா இருக்கிறது. அல்லது அவர் மட்டும் தான் பொறுப்பா ? ஜெயகாந்தன் மீது தமிழ் பத்திரிகை உலகின் ஒளி நன்றாகவே விழுந்தது. தமிழ் இலக்கிய உலகில் அனைவரும் அவரை படித்திருப்பார்கள். அவரை புரிந்து கொள்வது கடினம் இல்லை. நீங்கள் ஜெயகாந்தணை சுயமாகத்தானே புரிந்து கொண்டார்கள். மற்றவர்கள் அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள் ? ஜெயகாந்தணை கணிப்பது கடினம் இல்லை என்றே தோன்றுகிறது.

சு.ரா. அவரைப் பொருட்படுத்தி விமர்சிக்காமல் இருந்தது எந்த வகையில் முக்கியம் ?

சு.ரா ஜெயகாந்தனைப் விமர்சிப்பதும் நீங்கள் மற்றும் S.ராமகிருஷ்ணன் சு.ராவை விமர்சிப்பதும் அவரவர்கள் ‘Ego ‘ சம்பந்தப்பட்ட விஷையமாக மட்டும் பார்ப்பதாக தொனிக்கிறது. முக்கியமாக அது சம்பந்தபட்டவர்கள் மற்றும் வாசகர்கள் பகிர்ந்து கொள்வதர்க்கும் விவாதிப்பதற்கும் கூடத்தான். சு.ரா ஜெயகாந்தனை விமர்சிக்கவில்லை என்பதும் சு.ராவை மரியாதை நிமித்தமாக நீங்கள் எழுத்தில் விமர்சிக்கவில்லை என்பதும் முடிவைப் பொறுத்தவரை ஒன்றுதான் என்று படுகிறது.

நீங்கள் தத்துவ புரிதலை கடந்து வந்திருக்கலாம். ஆனால் மு.தளையசிங்கத்தின் (மு.தா) வீச்சு (சு.ராவின் வீச்செ கூட) வாசகனுக்கு போய் செர்வதற்கு தத்துவப் புரிதல் அவசியம். ஓரளவு இலக்கியப் பரிச்சியம் உள்ளவர்களுக்கே சு.ராவை,(உங்களையே கூட) அணுகமுடியாமல் இருப்பதற்கு தத்துவப் புரிதல் இல்லாமை காரணம் என்பது உங்களுக்கு தெரியாததா ?

எழுத்து நடை அவரவர் பாணி. சு.ராவின் எழுத்து நடை சாதாரண வாசகனுக்கு கஷ்டம் தான். ஆனால் உங்களை புரிந்து கொண்டவனுக்கு சு.ராவை புரிந்து கொள்வதற்கு அவரது நடை தடையாக இருக்காது என்றே தோன்றுகிறது. சு.ராவின் நடையில் செயற்கை இருக்கம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

ஜெயகாந்தணை சு.ரா புறக்கணித்தார் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் அந்த குறை உங்களிடம் அழுத்தமாக பதிந்திருக்கிறது. நீங்கள் தமிழில் சிறந்த 10 நாவல்கள் என்ற உங்கள் தேர்வை திண்ணையில் வெளியிட்டார்கள். அதில் ஜெயகாந்தனின் நாவல் ஒன்று கூட இடம் பெறவில்லை. சு.ராவின் 2 நாவல்கள் இடம் பெற்றுள்ளன. உங்களை தொடர்ந்து கோ.ராஜாராம் ஒரு பட்டியல் வெளியிட்டார். அதில் ஜெயகாந்தனின் 3 நாவல்கள் முக்கியமாக முதலில் இருந்தன. நீங்கள் அதற்கு பதில் அளிக்கும்போது பொன்னீலனை (4 வது இடம்) சுட்டிக்காட்டி பதில் சொன்னீர்கள். ஆனால் ஜெயகாந்தன் சம்பந்தமாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவில்லை. சு.ரா விற்கு ஜெயகாந்தனை விமர்சிப்பது முக்கியமானதாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அந்தக்குறை அழுத்தமாக பதிந்த உங்களுக்கு தோன்றாமல் போனது ஆச்சர்யம் தான்.

ஒருவரை பற்றி விமர்சிக்காமல் இருப்பதற்கு ‘ஒதுக்குதல் ‘ ஒரு காரணம் தான். இன்னும் பல காரணங்கள் உள்ளன. அதை உணர்ந்து தான் அறிய முடியும். அதை நீங்கள் உணர்வதற்கு மேலே சுட்டி காட்டிய உங்களின் ‘ஜெயகாந்தன் சம்பந்தமான விடுதல் ‘ உதவலாம். நீங்கள் எழுதியதை வைத்து உங்களை மற்றவர்கள் விமர்சனம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் ஏன் எழுதவில்லை என்று கேட்பதும் நியாயமாகாது என்றே தோன்றுகிறது.

சு.ரா ஜெயகாந்தனைப் பற்றி சூசகமாக, வெளிப்படையாக சொல்லியிருப்பதை விட தீவிரமானது சு.ரா வைப் பற்றிய சுறுக்கமான உங்கள் விமர்சனம். சு.ரா உங்களிடம் சுருக்கமான விமர்சனம் பற்றி கேட்பதற்கு எதிர் கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் சு.ரா மீது மதிப்பு மரியாதை எல்லாம் வைத்துள்ளீர்கள். அவருடைய இரண்டு நாவல்களை சிறந்த நாவல்களாக தேர்ந்து எடுத்துள்ளீர்கள். சு.ரா ஜெயகாந்தன் மற்றும் சிலரை பற்றி பொருட்படுத்தி ஒன்றுமே எழுதவில்லை. அவர் உங்களிடம் விமர்சன விளக்கம் கேட்பதை உங்கள் எதிர் கேள்வியோடு எப்படி ஒப்பிடமுடியும் ?

சு.ரா மரபின் முக்கியத்துவத்தை அறியவில்லை என்று சொல்கிறீர்கள். அவரின் கிண்டல் பாணியை சுட்டி காட்டுகிறீர்கள். கிண்டலும் மற்றும் சுறுக்கமான கச்சிதமான தத்துவத்தில் தோய்ந்த எழுத்து அவர் ஆளுமையின் முக்கியமான அங்கமல்லவா ? மேலும் இவையெல்லாம் இலக்கிய வடிவத்தின் ஒரு அங்கமும் தானே ? தத்துவத்தையும் மரபையும் ஒப்பிட்டால் தத்துவம் தானே நிதர்சனம் ? ஒரு வகையில் கிண்டல் பாணி எழுத்து வெளிப்படையாய் எழுதுவதை விட பிரச்சணயானது தானே ? மேலும் நீங்கள் சு.ராவை விட எழுத்தில் வெளிப்படையாக பதிக்கிறேன் அதுதான் சரியென்று வாதிடுகிறீர்கள். மற்றொறுவர் எழுத்தையும் தாண்டி செயலில் காட்டுவது(அதாவது மு.த மாதிரி) தான் சரி என்று சொல்வார். அப்போது எதை வைத்து தீர்மானிப்பது ? எழுத்து மற்றும் எழுதும் பாணி சுயம், சூழ்நிலை, காலம் சார்ந்தது தானே ?

நீங்கள் மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதால் வரும் பிரச்சணை பற்றி எழுதியுள்ளீர்கள். விமர்சனத்தால் சம்பந்தபட்டவர்கள்(விமர்சிப்பவரும் தான்) மற்றும் வாசகர்கள் வளரவும் முடியும். அதற்கு பயன்பட வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

நன்றி

இப்படிக்கு,

கிருஷ்ணா ஜெயராம்

S Jayaraman skjay2000@yahoo.com

Series Navigation

author

கிருஷ்ணா ஜெயராம்

கிருஷ்ணா ஜெயராம்

Similar Posts