ஜெயமோகனும் இயல் விருதும்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

மு.புஷ்பராஜன்


பொதுவாகவே இலக்கியப் பரிசுகளின் முடிவுகள் விவாத்திற்கான களமாகவே அமைந்து விடுகிறது. ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட,அரசியல் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் பரிசுகள் சார்பு நிலை கொண்டவையாக இருக்கையில் தகுதியுடையோர் புறக்கணிக்கப்படும் அவலம் நிகழ்ந்து விடுகிறது. ஹோலி வால்வெள்ளியாய் அன்றி குறிஞ்சி பூப்பதுபோல் தகுதியான படைப்பாளிகள் பரிசு பெறுவதும் நம் அதிருப்திகளின் மத்தியில்தான் நிகழ்ந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் பரிசுக்குத் தகுதியானவர்கள் என தீவிர படைப்பாளிகள், விமர்சகர்கள் பலபேரைத் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். இவைகளுக்குள்ளும் முரன்பாடுகளும் விவாதங்களும் நிகழ்வதுண்டு. இதுகுறித்த கவலைகளுக்கும் கோபங்களுக்கும் மாற்றுவழி எதுவும் உடனடியாக உருவாகிவிடுவதில்லை.
இந்த ஆண்டிற்கான இயல் விருது பற்றிய தனது அபிப்பிராயத்தை ஜெயமோகன் “இயல் விருதின் மரணம்”, கட்டுரையிலும் அதுசார்ந்து வ.ந.கிரிதரனுக்கான பதிலிலும், ஒரு ர்காணலிலும் பின்னர் “உலகத் தழிழர்களுக்கு ஓர் வேண்டுகோள்” ஆகியவைகளின் மூலம் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
பொதுவாகவே சீரிய இலக்கியத்தில் கவனம் கொண்டு வருபவர்கள் ஜெயமோகனது இந்த இயல் விருது பற்றி மட்டுமின்றி பொதுவாகவே அவரது விமர்சன முறைகளில், அபிப்பிராயங்களில் ஒரு பொதுத்தன்மையின் நிரந்தர இருப்பைக் கண்டு கொள்ளலாம். இப்போதைக்கு இயல் விருது சார்ந்து அவரது பொதுத் தன்மையின்; சில வகைகள்.
ஒரு படைப்பாளி அல்லது கலை, இலக்கியச் செயற்பாட்டாளருக்கு உருவாகிவரும்; புகழை, உயர்; மதிப்பீடுகளை தர்க்க வலுவின்றி அலட்சியமாக மட்டம் தட்டிவிடுதல். அத்துடன் தன் கருத்துக்கு எதிர்க் கருத்து வைப்பவரை அதைவிட அலட்சியமாக அவருக்கு ஒன்றும் தெரியாத கூழ் முட்டை என்ற பிம்பத்தை ஏற்றி விடுதல். அவர் தன் கருத்துக்களைப் புரிந்துகொள்ளப் பலஆண்டுகள் தாண்டி வரவேண்டியிருப்பதுபோண்ற பாவனையில் கூறுதல். இதன் மூலம் அவரை நிலைகுலைய வைக்கும் யுத்த தந்திரத்துடன் தன் தலைக்குப் பின்;னால் ஒரு ஒளி வட்டத்தை ஏற்றி விடும் நிகழ்வும் நடந்து விடுகிறது.
மற்றது, தனக்குத் தெரியாத,தெளிவில்லாத விடயங்களிலெல்லாம் “அ” படித்த அரசடியார் மாதிரி கருத்துக்கள் சொல்ல முயல்வது. இதுவும் அந்த ஒளிவட்டத்தின் இயங்கு நிலைதான்;;.ஜெயமோகன் இயல் விருது பெற்றவர்கள், இவரது கருத்துக்கு பதிலளித்த வ.ந.கிரிதரன் மற்றும் விருதுக்கு நடுவர்களாக இருந்தவர்களில் இருவர் பற்றிய (அ.இரா.வெங்கடாசலபதி, எம்.ஏ.நுஃமான்) இவரது மதிப்பீடுகள் இவை;
லஷ்மி ஹோம்ஸ்ரோம் எந்த இலக்கியம் பற்றியும் சொல்லும்படியான இரசனையோ புலமையோ இல்லாதவர். தமிழ்ப் பண்பாடு பற்றிய அடிப்படை ஞானம்கூட இல்லாதவர். வே.சா. பொதுப் பண்பாட்டால் அங்கீகரிக்கப் படாதவர் ஜார்ஜ் ஹார்ட் தமிழ் பண்பாடு குறித்து சில மேலோட்டமான ஆய்வுகள் செய்தவர்

அ.இரா.வெங்கடாசலபதி, ஏம்.ஏ.நுஃமான் ஆகியோர் தங்கள் கல்வி சார்ந்த சுயமேம்பாட்டிற்கு அப்பால் சிந்திக்காதவர்கள். நுஃ மான் நவீன இலக்கியத்திற்கு எந்த வகையில் தொடர்பு உடையவர். ஈழ இலக்கியம் பற்றியாவது குறிப்பிடும் படியாக செல்லியிருக்கின்றாரா?.

வ.ந.கிரிதரனுக்கான பதிலில்: உங்களுடைய தனிப்பட்ட தேர்வில் உங்களது தேர்ச்சியின்மை வெளிப்படுகிறதோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.உங்களது அளவுகோல் எவ்வளவு அபத்தமானது. என் சொற்களால் உங்களுக்கு புரியுமா எனத் தொரியவில்லை.பட்டியலில் உள்ள பிறரைப்பற்றி நீங்கள் என்ன அறிவீர்கள்

லஷ்மி ஹோம்ஸ்ரோம் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவைகளை ஒரு அகடமிக்குக்காக மொழிபெயர்த்தவர் எனச் சொல்லிக்கொண்டாலும் புதுமைப்பித்தன், மௌனி, சு.ரா, அசோகமித்திரன், அம்பை, ந.முத்துசாமி, பாமா, இமயம், ஆகியவர்களின் படைப்புக்களைத் தனது மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுத்தல் என்பது இலக்கியம் பற்றிய இரசனையோ, புலமையோ இன்றிச் சாத்தியமாகுமா? அவர் மூண்றாந்தர படைப்பாளிகளைத் தன்தேர்வில் கொண்டிருந்தால் ஜெயமோகனின் கூற்றில் நியாயம் இருந்கிருக்கும்;. மேலும் இயல் விருது பத்மநாப ஐயருக்கு வழங்கப்பட்டதை நியாயப்படுத்தும் ஜெயமோகன் அந்த ஒளியில் லஷ்மி ஹோம்ரோமை எப்படி நிராகரிக்க முடிந்தது?. பத்மநாப ஐயர் தமிழ் தெரிந்த தமிழ் நாட்டிற்கு ஈழப் படைப்புக்களை அறிமுகப்படுத்தினார். இவர் தழிழ் தெரியாத பிறமொழி வாசகர்களுக்கு தமிழ் படைப்புக்களை அறிமுகப்படுத்தினார். பத்மநாப ஐயர் திருப்பிக் கொடுக்க எதுவுமில்லாதவர் என்பது ஒரு நியாயமான காரணம் அல்ல. இதில் வ.ந.கிரிதரனுக்கான பதிலில் “உங்கள் கடிதம் சொல்லும் ஒரு தோரனையான நகைச்சுவை எண்ணிச் சிரித்தேன். உலகளாவிய தமிழர்களுக்கு தமிழிலக்கியத்தை ஆங்கில மொழிபெயர்ப்புமூலம் ஒரு அம்மணி அறிமுகம் செய்து வைக்கிறாள். என்றுவேறு கேலியாகக் குறிப்பிடுகிறார். இந்தச் சிரிப்பு உண்மையானால் தமிழகத்தின் தமிழ் வாசகர்களுக்கு பத்மநாப ஐயர்மூலம் தமிழ் நூல்கள் அறிமுகம் செய்யவேண்டியிருந்த நகைசச்சுவையை எண்ணிச் சிரிப்பு வரவில்லையா?.

ஆ.இரா.வெங்கடாசலபதியின்; புதுமைப்பித்தன் நூல்கள் பதிப்பக முயற்சிகளும்,அவரது பிற நூல்களும் கல்வி சார்;ந்த மேம்பாட்டிற்கான சிந்தனை என வகைப்படுத்த முடிந்தால் தமிழக பல்கலைக்கழகம் சார்ந்த படைப்பாளிகள், விமர்சகர்கள் அனைவரையும் அவ்வாறு வகைப்படுத்தி விடலாம்.

நுஃமான் ஈழத்தின் சிறந்த கவிஞர்களில் ஒருவர். மகாகவிக்குப் பின் ஈழத்தின் நவீன கவிதைக்கு பலமான அடித்தளம் இட்டவர்களில் ஒருவர். அவரும் சண்முகம் சிவலிங்கமும் இனைந்து நடாத்திய “கவிஞன்” கவிதை இதழ் ஈழத்தின் கவிதைப்போக்கில் நிகழ்த்திய பாதிப்புக்கள் அதிகம். ; மகாகவி மார்க்சிய வட்டத்துள் இல்லை என்பதற்காக அன்றைய அங்கீகரிக்கப்பட்ட மார்க்சிய விமர்சகர்களால் அவரது முக்கியத்துவம் மறுக்கப்பட்டபோது அதே மார்க்சிய கூட்டுக்குள் இருந்து மகாகவியின் கவித்துவத்தை முதன்மைப் படுத்தியதோடு ஒரு வளமான மார்க்சியப் போக்கை ஏ.ஜே.கனகரட்னாவிற்குப் பிறகு முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்கள்; சண்முகம் சிவலிங்கமும் நுஃமானுமே. ஈழத்தில் நடந்த அனேக கலை,இலக்கிய விவாதங்களில் எல்லாம்; இவர் பங்களித்து இருக்கிறார்.கவிதை நாடகம் பற்றி மு.பொன்னம்பலமும் நுஃமானும் விவாதங்கள் நடத்தியள்ளனர். இவையெல்லாம் நுஃமான் சார்ந்த ஞாபகத் தகவல்களே. நடுவர்களில் மு.பொ.வை ஏற்கும் nஐயமோகன் நுஃமானை நிராகரிப்பதன் தர்க்கம் முரன்படுகிறதே.

“எழுபதுகளில் இலங்கையின் எந்த ஒரு எழுத்தாளரைப் பற்றியும் தமிழில் எவருக்கும் தெரியாது. தமிழ் தீவிர இலக்கியம் பற்றி புதுமைபபித்தனைக்கூட அங்கே தெரியாது”. என இயல் விருது விவாதங்களில் ஜெயமோகன் தனது நோர்காணலில் குறிப்பிடுகிறார்.

“சரஸ்வதி”, “எழுத்து” காலத்திலிருந்தே ஈழத்து எழுத்தாளர்களைப்பற்றி தமிழகம் அறிந்துதான்; இருந்தது. ஜே.கனகரட்னாவின் “மௌனி வழிபாடு” சரஸ்வதியில்தான் வெளிவந்திருந்தது. “தாமரை” இதழ் முன் அட்டையில் ஈழத்து எழுத்தாளர்கள் சிலரது புகைப்படங்களைப் பிரசுரித்திருந்தது. எழுத்து இதழில் தர்மு சிவராமுவுக்கும் அப்பால் எஸ்.பொன்னுத்தரையின் “தீ” நாவல் பற்றிய விவாதத்தில் எஸ்.பொன்னத்துரை, மு.தளையசிங்கம் ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.

ஈழத்தின் தீவிர வாசகர்கள்,படைப்பாளிகளின் ஒவ்வொரு தலைமுறையினரும் புதுமைப்பித்தன், மௌனி,கு.பா.ரா.,ல.சா.ரா, ந.பிச்சமூர்த்தி என தமிழக முக்கிய படைப்பாளிகளைப் பற்றி அறிந்துதான் வைத்துள்ளனர். ஐம்பதுகளில் எழுதிவந்த வ.அ.இராசரத்தினம் போன்றவர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர். “அந்நாட்களில் நான் புதுமைப்பித்தனைப் படித்தேன். அவரது திருநெல்வேலி வட்டாரப் பேச்சும் தாமிரவரணிக்கரை மக்களின் வாழ்க்கைச் சித்தரிப்பும் என்னைக் கிறங்கவைத்தன” என “ஒரு காவியம் நிறைவு பெறுகிறது” நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இதுதவிர சோ.சிவபாதசுந்தரத்திற்கும் புதுமைப்பித்தனுக்கும் கடிதத் தொடர்பு இருந்திருக்கிறது. அக்காலத்தில் ஈழத்து கலை,இலக்கியக்காரர்கள் தமிழ்நாட்டு படைப்பாளிகளை மட்டுமின்றி பொற்றேகாட், வைக்கம் முகமது பசீர்,கேசவதேவ், தகழி சிவசங்கரம் பிள்ளை, போன்ற மலையாளப் படைப்பாளிகளையும் அறிந்திருந்தனர். உலக இலக்கியப் படைப்பாளிகளான ஜேம்ஸ் ஜோய்ஸ், டி.எச்.லோறன்ஸ், அல்பெட்டோ மொறாவியோ, எமிலிசோலா, கேசவகேவ் போன்ற பன்நாட்டு படைப்பாளிகளின் படைப்புப்கள் பற்றிய அபிப்பிராயங்களை முன்வைத்துள்ளனர். எழுபதுகளிலே அன்றி அதற்கு முன்னோ ஈழத்து இலக்கியம் ஜெயமோகன் நினைப்பதுபோல் விரல்சூப்பும் நிலையில் இல்லை.


santhan@talktalk.net

Series Navigation

மு.புஷ்பராஜன்

மு.புஷ்பராஜன்