ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

சித்ரா சிவகுமார்


வாழ்த்துக்கள். யாரேயேனும் வாழ்த்த விரும்பினால் இந்த வார்த்தையைக் கொண்டு வாழ்த்துவார்கள். பிறந்த நாளைக்கு வாழ்த்து கூற வேண்டுமானால் ‘தான்ஜோபி ஓமோதிதோ கோசைமசு” என்று வாழ்த்த வேண்டும்.

ஜப்பானியர்கள் கடினமான சூழ்நிலைகளையெல்லாம் தாண்டி இன்று மிகப் பெருமை வாய்ந்த நாடாகத் திகழ்வதற்கு பல காரணங்கள் உண்டு. அவர்கள் கண்டுபிடித்தவை மிகச் சில. ஆனால் மற்ற நாட்டவர்கள் கண்டு பிடித்தவற்றை ஆராய்ந்து அதை மேலும் மேலும் சிறப்பாக இருக்கும் வகையில் சிறப்பம்சங்களை புகுத்துவதில் மிகவும் கை தேர்ந்தவர்கள். தரம் மிக்கவையாக ஆக்க வல்லவர்கள்.

ஜப்பானியர்கள் தனித்தன்மையைக் காட்ட வல்ல சில விஷயங்கள் சின்கான்சென் என்று கூறப்படும் அதி வேக ரயில், கராவுகே என்று கூறப்படும் பாடலுக்கு இசை தரும் கருவி, தங்கும் கூடுகள், ஹைகூ கவிதைகள்.

சின்கான்சென் என்பதற்கு ‘புதிய இரயில் பாதை” என்று பொருள். இந்த இரயில் 1964ல் டோக்கியோ ஒலிம்பிக்ஸின் போது, மணிக்கு 210 கி. மீ வேகத்தில் ஓடத் தொடங்கியது. இதன் ஓடும் வேகத்தைக் கொண்டு இதை “புல்லட் இரயில்” என்றும் கூறுவர். தற்போது மணிக்கு 300 கி. மீ வேகத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதை 500 கி. மீ வேகத்திற்கு கொண்டு வர முயற்சிகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சின்கான்சென்

இன்று வரையிலும் நேரம் தவறாமல் ஓடிக் கொண்டு இருக்கும் இரயில் இது. எந்தவொரு விபத்தும் இல்லாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டு இருப்பது மகத்தான விஷயம். இந்த இரயில் பாதை பல முக்கிய நகரங்களை இணைக்கிறது. இதில் பயணம் செய்வது ஒரு சுகமான அனுபவத்தைத் தர வல்லது. வுpமானத்தில் பறப்பது போன்ற உணர்வைத் தரும். நேரத்தில் கிளம்பி நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைய வல்லது. நில நடுக்க அறிகுறிகள் ஏற்படும் போது, தானாகவே இரயில் நின்று விடும் தன்மை கொண்டது.

என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் புல்லட் டிரெயின் என்ற ஜப்பானியப் படத்தை குடும்பத்தோடு பார்த்த ஞாபகம் எனக்கு இன்றளவும் உண்டு. இந்த படத்தில் அத்தனை வேகமாச் செல்லும் இரயிலைக் கண்ட போது பிரமிப்பாக இருந்தது. நான் ஜப்பானில் இருக்கும் போது அத்தகைய இரயிலில் செல்ல வாய்ப்பு கிடைத்த போது, பயணித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இன்று நீங்கள் அதில் முதன் முறையாகப் பயணம் செய்யும் போது உங்களுக்கும் நிச்சயம் ஒரு பரவசம் மிக்க உணர்வு ஏற்பட்டே தீரும்.

ஜப்பானியர்களின் முக்கிய கண்டுபிடிப்பு கராவுகே என்று அழைக்கப்படும் இசை மெட்டு தரும் கருவி. இதை டய்சுகே இநோவே என்பவர் 1970களில் அறிமுகப்படுத்தினார்.

கராவுகே அமைப்பு பாடலைப் பாடியவரின் குரல் குறைக்கப்பட்டு பாடலின் இசை மட்டுமே தெளிவாகக் கேட்கும் படி அமைக்கப்பட்டிருக்கும் இசைத் தட்டுகளில் வரும். பாடல் வரிகள் கணிப்பொறியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ தோன்றும்.

பாட விரும்புகிறவர்கள் இசையோடு பாடல் வரிகளைப் பாடி மகிழலாம். இத்தகைய கராவுகே விடுதிகள் ஜப்பானில் பல இடங்களில் காணலாம்.

தங்கும் விடுதிகளை நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஜப்பானில் இடப் பற்றாக்குறை மற்றும் அதிக விலைவாசியின் காரணமாக தங்கும் கூடுகள் ஏற்படுத்தப்பட்டன. முதன் முதலில் ஓசகாவைச் சேர்ந்த கிஷோ குரோகவா என்பவர் 1979ல் இத்தகைய தங்கும் கூடுகளை ஓசகாவில் ஆரம்பித்தார். இது பிறகு ஜப்பானில் மிகப் பிரபலமடைந்து, பல இடங்களில் தற்போது இத்தகைய விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூடு ஒரு ஆள் மட்டுமே தூங்கி எழத் தேவையான அளவில் அமைக்கப்பட்டிருக்கும்.


கூடு கூடு விடுதி
அதனுள்ளே பற்பல வசதிகள் உண்டு. தொலைக்காட்சி தொலைபேசி மின் விளக்கு இணைய இணைப்பு அனைத்தும் இருக்கும். மெத்தையும் தலையணையும் தரப்படும். சில இடங்களில் யோகத்தா உடையும் காலணியும் கூட தரப்படும். நாம் எடுத்துச் செல்லும் பொருட்கள் வெளியே அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். கூட்டின் கதவு மூடித் திறக்கும் வகையில் இருக்கும். இத்தகைய தங்கும் கூடுகள் மிகவும் மலிவானவை. ஓரிரவு தங்கவும், சில மணி நேரங்களே தூங்க வேண்டியிருந்தால் தங்கவும் இவை பெரிதும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இடத்திற்கேற்ப, அளவிற்கேற்ப 2000 யென் முதல் 4000 யென் வரை ஆகும்.


ஹைகூ ஜப்பானியர்களின் தனித்துவம் வாய்ந்த கவிதை முறை. ஹைகூ நடை, உரை, மொழி மூன்றும் கலந்த அர்த்தமுள்ள மிகச் சிறிய கவிதை வடிவம். ஹைகூ கவிஞர்கள் தாம் அன்றாட வாழ்வில் காணும் பொருட்களைப் பற்றி சற்றே வித்தியாசமான முறையில் எழுதுவர். இதில் இயற்கை, உணர்வுகள், அனுபவங்கள் பற்றி வௌ;வேறு விதங்களில் கூறப்படும்.

இவை பெரும்பாலும் மிகவும் எளிய வார்த்தைகளை எளிய இலக்கண முறைப்படி அமைக்கப்பட்டவை. இவை மூன்று வரிகளைக் கொண்டவை. முதல் வரி 5, இரண்டாம் வரி 7, மூன்றாம் வரி 5 வார்த்தைகளைக் கொண்டவை. இதில் எதுகை மோனை வர வேண்டிய அவசியம் இல்லை.

ஹைகூ கவிதைகள் படிப்பவரின் மனதில் ஒரு எளிய படத்தை வரைந்து காட்டக் கூடியது. தமிழ் மொழியின் புதுக் கவிதையை இதனோடு ஒப்பிடலாம்.

ஜப்பானியர்களிடம் இன்னும் பற்பல சிறப்பம்சங்கள் உண்டு. இவை தாம் அவர்களை முன்னிலைப்படுத்துகின்றன.


chitra@netvigator.com

Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்