ஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

ரிக் ராஸ்


கயானா நாட்டில், நவம்பர் 18, 1978இல் ஜிம் ஜோன்ஸ் என்ற மதப்பிரச்சாரகரின் சீடர்கள், ஜிம் ஜோன்ஸ் நடத்தும் சர்ச்சை விசாரிக்கச் சென்ற அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான லியோ ஜே ரயான் அவர்களையும் அவருடன் இருந்த 4 பேர்களையும் சுட்டுக்கொன்றார்கள்.

ஜோன்ஸ் டவுன் என்ற பெயரில் ஜிம் ஜோன்ஸ் மற்றும் அவரது சீடர்கள் கயானாவில் உருவாக்கியிருந்த சர்ச்சைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இவர்கள் சென்றிருந்தார்கள். ஜிம் ஜோன்ஸின் சீடர்கள் பெரும்பாலும் கலிபோர்னியாவைச் சார்ந்தவர்கள்.

அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரைக் கொன்ற பின்னர், தனது முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டார் ஜிம் ஜோன்ஸ். தன்னுடைய வழிநடப்பவர்களாக இருந்த சுமார் 914 பேர்களையும் ‘புரட்சி தற்கொலை ‘ செய்துகொள்ள கட்டளையிட்டார். இதில் சுமார் 200 குழந்தைகளும் அடங்குவர்.

ஜிம் ஜோன்ஸின் வளர்ச்சி

ஜிம் ஜோன்ஸ் தன்னுடைய திருஇச்சபையை சான் பிரான்ஸிஸ்கோவில் ஆரம்பித்தார். முதியவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்வதற்காக சில திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அவரது நண்பர்கள் குழாம் விரிவடைந்து முன்னணி அரசியல்வாதிகளையும் பெரிய பணக்காரர்களையும் கொண்டதாக இருந்தது. இவர்கள் ஜிம் ஜோன்ஸின் குரூரங்களை மறைக்கவும் ஜிம் ஜோன்ஸ் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வாதாடவும் செய்தனர்.

இவர் தன்னுடைய சர்ச் ஆட்களை தவறாக உபயோகப்படுத்திக்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் பெருகவும், தன்னையும் தன்னுடைய சீடர்களையும் தனிமைப்படுத்திக்கொள்ள கயானா நாட்டைத் தேர்ந்தெடுத்தார். இங்கு தன்னுடைய சீடர்களை, பத்திரிக்கைகளும், தன் சீடர்களின் குடும்பங்களும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது என்று கருதினார். இருப்பினும் இந்த கயானாவில் உருவாக்கப்பட்ட ஜோன்ஸ்டவுனில் நடக்கும் அத்துமீறல்களை விசாரிக்க சட்டமன்ற உறுப்பினர் ரயான் இங்கு வந்தார்.

ஒரு சமயத்தில் ஸான் பிரான்ஸிஸ்கோவில் மிகவும் புகழ்பெற்ற, எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு மதத்தலைவராக ஜிம் ஜோன்ஸ் இருந்தார். தன்னுடைய சர்ச் உறுப்பினர்களைக்கொண்டு யாரையும் சட்டமன்றத்துக்கு ஜெயிக்க வைக்கவும், வேறு எந்த விஷயத்துக்கும் ஜிம் ஜோன்ஸ் பயன்படுத்தியதால் அவரது உதவியை பல பெரிய தலைவர்களும் பணக்காரர்களும் நாடினார்கள்.

ஆரம்பிக்கும்போது, ஜோன்ஸ் தன்னை ஒரு தேவதூதர் என்று குறிப்பிட்டுக்கொள்ளவில்லை. கிரிஸ்துவின் சீடர்கள் என்ற முக்கிய அமெரிக்க மையநீரோட்டத்தில் இருக்கும் சர்ச்சின் ஒரு நியமிக்கப்பட்ட மதப்பிரச்சாரகராகத்தான் (ordained minister of the Disciples of Christ,) இருந்தார். ஒரு சமயத்தில் அவரது சர்ச்சின் கீழ் சுமார் 8000 பேர்கள் இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் ஏழை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்.

ஜோன்ஸ் தன்னை முற்போக்குவாதியாக காண்பித்துக்கொண்டு, தாராளவாத அரசியல்வாதிகளுடனான அணியில் இருந்தார். பிலிப், ஜான் பர்ட்டன். வில்லி பிரவுன், ஜியார்ஜ் மாஸ்கோன் ஆகிய அரசியல்வாதிகளுக்கு நண்பராக இருந்தார்.

ஜோன்ஸ்டவுனில் இந்தப் படுகொலைக்குப் பிறகு முந்தைய ஜிம் ஜோன்ஸ் அரசியல்வாதி நண்பர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பற்றதன் காரணத்தை விளக்கச் சிரமப்பட்டார்கள்.

‘ஜிம்-இன் சக்தி எந்த மாய மந்திரமும் கிடையாது. அடிப்படையில் அரசியல். அரசியல்வாதிகள் விரும்புவதை ஜோன்ஸ் தந்தார். அது அரசியல் செல்வாக்கு; பதவி. எவ்வாறு அரசியல் பதவி வரும் ? ஓட்டுக்கள். எவ்வாறு ஓட்டுக்கள் கிடைக்கும் ? மக்கள் மூலம். எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கும் தன்னுடைய சீடர்கள் 3000 பேரை அனுப்பிவைக்க முடியும். ‘ என்று ஜோன்ஸின் சீடராக வெகுகாலம் இருந்த டிம் ஸ்டோலன் விளக்கினார்.

ஜனநாயகக் கட்சியின் மத்தியக்கமிட்டி தலைவர் அகர் ஜைக்ஸ் அவர்களும் ஸ்டோலன் சொன்னதை ஒப்புக்கொண்டார். ‘ஜோன்ஸிடம் இருந்தது தயார் நிலையில் இருக்கும் ஒரு தொண்டர் படை. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் காரியத்துக்கும் இவரால் உடனே ஒரு தொண்டர் படையை அனுப்பித்தரமுடியும் ‘

1970இல் ஜோன்ஸ் முதன் முதலாக அரசியல் செல்வாக்குக்கான வழியில் இறங்கினார். தம் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது இறந்த போலீஸார்களுக்காக ஒரு நிதி அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம், தர்ம காரியங்களுக்காக உருவாக்கப்படும் அமைப்புகளுக்காக பல முக்கிய பிரயோசனமான நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டார்.

ஸான் பிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர் என்ற பத்திரிக்கையில் 1972இல் வந்த ஒரு விமர்சனக் கட்டுரையே முதன் முதலில் ஜிம் ஜோன்ஸ் பெற்ற எதிர்மறை விமர்சனம். இதில் ஜோன்ஸ் தன்னை ஒரு தேவ தூதர் என்று கூறிக்கொள்கிறார் என்றும், இவர் தன்னால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொள்கிறார் என்றும் வெளிப்படுத்தியது.

தன்னைப்பற்றி விமர்சனக்கட்டுரைகள் வரக்கூடாது என்று எண்ணி, உடனே ஜிம் ஜோன்ஸ் சுமார் 12 பத்திரிக்கைகளுக்கு பண உதவி செய்தார். பத்திரிக்கையாளர்கள் ஆதரவு வேண்டுமென்று, ரகசியமாக கிடைத்த ஆதாரங்களைச் சொல்லமுடியாது என்பதற்காக சிறைப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தினார். பத்திரிக்கைகளிலிருந்து விலகி ஓடி, தன்னுடைய குழுவுக்குள்ளேயே விமர்சனக்கருத்துக்களை சகிக்க முடியாமல் இருந்த ஜிம் ஜோன்ஸ் 1973இல் தான் ‘ கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்துக்கு தான் தீவிர ஆதரவாளன் ‘ என்று கூறியது ஒரு முரண்.

1973இல் ஸான் பிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர் இவர் நடத்திய சர்ச்சை விமர்சனம் செய்து பல கட்டுரைகளை வெளியிட்டது. ஆனால், ஜோன்ஸ் உருவாக்கிக்கொடுத்த தொண்டர் படை காரணமாக மஸ்கோன் என்பவர் மேயராக ஆனார். அரசு வழக்கறிஞராக ஜோஸப் பிரைடாஸ் அவர்களும், நகர ஷெரிப்பாக ரிச்சர்ட் ஹோங்கிஸ்டோ 1975இலும் பதவி பெற்றார்கள்.

ஜோன்ஸ் தன்னுடைய பணத்தை தொடர்ந்து வினியோகித்து தனக்கு செல்வாக்கை உருவாக்கிக்கொண்டிருந்தார். 1976இல் ஸான் பிரான்ஸிஸ்கோ குரோனிகிளில் ஒருவர் எழுதியிருந்தார். ‘பல நல்ல காரியங்களும் அமைப்புக்களும் மக்கள் கோவில் (ஜோன்ஸின் சர்ச் பெயர் peoples Temple) இடமிருந்து கொழுத்த பணஓலைகளைப்பெற்றார்கள். கூடவே ஒரு கடிதமும் வரும். ‘நீங்கள் செய்வதை நாங்கள் பாராட்டுகிறோம் ‘ என்று ‘

கறுப்பர்களுக்கான சமூகக் கல்வி அமைப்பான NAACPக்கும் இன்னும் மற்ற சமாதான அமைப்புகளுக்கும் முதியவர் நலவாழ்வு அமைப்புகளுக்கும் ஜோன்ஸ் பணம் அனுப்பினார். அன்றைய கலிபோர்னியா கவர்னராக இருந்த ஜெர்ரி பிரவுண் மற்றும் வில்லி பிரவுண் ஆகியோர் இந்த சர்ச் கூட்டங்களுக்கு வந்து தங்கள் நண்பரை கவுரவப்படுத்தினார்கள்.

1976ன் இலையுதிர்காலம் ஜோன்ஸின் அரசியல் செல்வாக்கு உச்சத்தை அடைந்தது. கலிபோர்னியாவின் அனைத்து பெரிய அரசியல்வாதிகளும் அவரது வீட்டுக்கு வந்து அவரை கவுரவப்படுத்தினார்கள். ஸான் பிரான்ஸிஸ்கோ ஹவுஸிங் அத்தாரிட்டியில் இடமும் கொடுத்தார் ஸான்பிரான்ஸிஸ்கோ மேயர்.

ஜிம் ஜோன்ஸ் வீழ்ச்சி

1976இல் அவரது வீழ்ச்சி ஆரம்பித்தது. பத்திரிக்கை நிருபர் மார்ஷல் கில்டுஃப் ஏராளமான செய்திகளைச் சேகரித்து மிகவும் தீவிரமான விமர்சனத்துடன் ஜிம் ஜோன்ஸ் பற்றி கட்டுரை எழுதினார். இது ஆகஸ்ட் 1977இல் நியூ வெஸ்ட் பத்திரிக்கையில் வெளிவந்தது. இதில் ஜோன்ஸ் செய்யும் பொய்யான குணப்படுத்தல்களையும், மிரட்டி நிதி உதவி சேகரிப்பதையும், இப்படிப்பட்ட நிதி உதவி சேகரிப்பின் காரணமாகவும், வேண்டுமென்றேயும் தன் சீடர்களின் சொத்துக்களை விற்கச்செய்து தன்னிடம் (தனது சர்ச்சிடம் ) கொடுக்கச் சொன்னார் என்பதையும் வெளிப்படுத்தினார்.

கடைசியில் இந்த கட்டுரையே ஜிம் ஜோன்ஸ் ஸான் பிரான்ஸிஸ்கோவை விட்டு வெளியேறி தன்னுடைய தீவிர ஆதரவாளர்களோடு கயானாவின் தனிமைக்குச் செல்லும்படி துரத்தியது.

இன்னும் தீவிரமான விமர்சனத்துடன் கட்டுரைகள் வெளியாக ஆரம்பித்தன. 1978 சூன் மாதம், ஜோன்ஸ்டவுணிலிருந்து திருட்டுத்தனமாக வெளியேறிய ஜோன்ஸின் முன்னாள் சீடர் டெபோரா லைட்டன் தன்னுடைய கதையை ‘ஸான் பிரான்ஸிஸ்கோ குரோனிகிளு ‘க்குத் தெரிவித்தார். இந்த குழுவின் சுற்றுச்சுவர்களுக்குள்ளே கயானாவில் எப்படிப்பட்ட அடக்குமுறையும் கடுமையான சூழ்நிலையும் நிலவுகிறது என்பதை இந்த கட்டுரைத்தொடர் விவரித்தது.

1978இல் இந்த படுகொலைகள் நடந்தபின்னர் வில்லி பிரவுண் (கலிபோர்னியாவின் பெரிய அரசியல்வாதி) சொன்னார், ‘ ஜோன்ஸ் ஒரு பைத்தியக்காரன் என்று தெரிந்திருந்தால், நாங்கள் அவனுடன் சேர்ந்து காட்சியளித்திருக்க மாட்டோம். நாங்கள் செய்தது தவறென்று சொல்லமுடியாது. இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனம் பல வருடங்களுக்குப் பின்னர்தான் நடந்திருக்கிறது ‘

ஜோன்ஸ்டவுண் தற்கொலை-கொலைகள் நடந்து 9 நாட்களுக்குப் பின்னர் ஸான் பிரான்ஸிஸ்கோ மேயர் மாஸ்கோன் சுட்டுக்கொல்லப்பட்டார். தன்னுடைய சாவுக்கு முன்னர் மாஸ்கோன், ‘ஒரு தீய திட்டம் இருந்து வந்திருக்கிறது என்பதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பது தெளிவாகத்தெரிகிறது. ஆனால் நான் எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளமுடியாது ‘ என்றார்.

இதில் முக்கிய நிகழ்ச்சிகள்

1953: ஜிம் ஜோன்ஸ் தன்னுடைய சுதந்திர திருச்சபையை (அதாவது போப்பின் கத்தோலிக்க மதம் போன்ற பெரிய அமைப்புடன் இணையாமல்) இந்தியானாபோலிஸ் நகரத்தில் திறந்தார்.

1964: டிஸைபிள்ஸ் ஆஃப் கிரைஸ்ட் சர்ச் அமைப்பு ஜோன்ஸை தனது மதகுருவாக அங்கீகரித்தது.

1965-71: அணுகுண்டுகளால் உலகம் அழியும் என்று ஜிம் ஜோன்ஸ் நம்புகிறார். இதனால், தன்னுடைய குழுவை வடக்கு கலிபோர்னியாவுக்கு மாற்றினார். இவரது சர்ச் வளர்கிறது. பெரிதாகிறது. மெண்டோசினொ நகரத்தின் கிராண்ட் ஜ்ஊரியின்(வழக்காடு மன்றத்தின் மக்கள் பிரதிநிதி) தலைவராக இவர் நியமிக்கப்படுகிறார்.

1971: ஸான் பிரான்ஸிஸ்கோ நகரத்தின் மையத்தில் இவரது பியூப்பிள்ஸ் டெம்பிள் மக்கள் கோவில் இடம் வாங்குகிறது. இன்னொரு கிளையை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் தொடங்குகிறது. தலைமையகம் ஸான் பிரான்ஸிஸ்கோவுக்கு மாற்றப்படுகிறது.

1971-73: இந்த சர்ச்சின் உறுப்பினர் எண்ணிக்கை வெகுவாக வளர்கிறது. சமூக சேவை திட்டங்களை ஆரம்பிக்கிறது. வேலை வாய்ப்பு மற்றும் ஆரோக்கியத்துக்காக திட்டங்களை துவக்குகிறது.

1974: கயானா அரசாங்கத்திடமிருந்து ஒரு காட்டுப்பகுதி நிலத்தை குத்தகைக்கு எடுக்கிறது.

1975: சர்ச் தனது ஆதரவாளர்களை அரசியல் கூட்டங்களுக்கு அனுப்பி தனக்கு சாதகமான வேட்பாளர்களை ஸான் பிரான்ஸிஸ்கோ நகர சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கிறது.

1976: மேயர் ஜார்ஜ் மாஸ்கோன், இந்த ஜிம் ஜோன்ஸை நகர வீட்டு வளர்ச்சி கமிஷனுக்கு நியமிக்கிறார்.

1977 கோடைக்காலம்: நியூ வெஸ்ட் பத்திரிகை, ஜோன்ஸை விமரிசித்து அவரை பகிரங்கப்படுத்தியும் அவரது போலி குணப்படுத்தல்களையும், அத்துமீறல்களையும், கேள்விக்குறிய நிதி திரட்டல்களையும் அம்பலப்படுத்துகிறது.

1977 ஆகஸ்ட்: ஜோன்ஸ் கயானாவுக்குச் சென்று ஜோன்ஸ்டவுனை உருவாக்குகிறார்

1977-78 சுமார் 1000 சர்ச் உறுப்பினர்கள் ஜோன்ஸ்டவுணுக்குச் செல்கிறார்கள்

ஜ்ஊன் 1978: ஜோன்ஸ்டவுணிலிருந்து தப்பிய டெபோரா லைட்டன் ஸான் பிரான்ஸிஸ்கோ குரோனிகிளால் பேட்டிகாணப்பட்டு அங்கு நடக்கும் கொடூரங்களையும், ஒட்டுமொத்த தற்கொலைத் திட்டத்தையும் அம்பலப்படுத்துகிறார்.

1978 இலையுதிர்காலம் ‘ ஜோன்ஸ் டவுனுக்குச் சென்றவர்களின் உறவினர்கள் அரசாங்க விசாரணையைக் கோருகிறார்கள்.

நவம்பர் 7, 1978: மக்கள் பிரதிநிதி லியோ ரயான் அவர்கள் ஜோன்ஸ்டவுணுக்குச் சென்று விசாரணை நடத்த இருப்பதை தெரிவிக்கிறார்.

நவம்பர் 17, ரயான் ஜோன்ஸ்டவுனுக்கு வந்து சேர்கிறார்

நவம்பர் 18: சில ஜோன்ஸ்டவுண் வாசிகள் ரயானை ஜோன்ஸ்டவுனை விட்டுச் செல்லும்படி அறிவுறுத்துகிறார்கள். ஜோன்ஸ்டவுனிலிருந்து தப்பிய சிலருடன் ரயான் கயானாவை விட்டு கிளம்ப முயற்சிக்கிறார். ஆனால், ஜோன்ஸ்டவுனில் இருந்த சிலரால் அவரும் அவருடன் இருந்த சிலரும் விமானதளத்திலேயே சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். ரயான், என்.பி.சி நியூஸ் நிருபர் ராபர்ட் பிரவுண், டான் ஹாரிஸ், ஸான் பிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர் புகைப்படக்காரர் க்ரெக் ராபின்ஸன், ஜோன்ஸ்டவுன் முன்னாள் வாசி பாட்டிரிசியா பார்க்ஸ் ஆகியோர் கொல்லப்படுகிறார்கள். மற்றவர்கள் காட்டுக்குள் மறைந்துகொள்கிறார்கள்.

நவம்பர் 18, ஜோன்ஸ் தன்னுடைய சீடர்களை சயனைடு விஷம் உட்கொண்டு ஒட்டுமொத்த தற்கொலை செய்துகொள்ள கட்டளையிடுகிறார். மறுப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள். சுமார் 200 குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். 914 சடலங்கள், ஜிம் ஜோன்ஸ் உட்பட, ஜோன்ஸ்டவுனில் கிடக்கின்றன.

***

இந்தக் கட்டுரை மைக்கல் டைலர் எழுதிய ஸான் பிரான்ஸிஸ்கோ குரோனிகிள் கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.

Series Navigation

ரிக் ராஸ்

ரிக் ராஸ்