ஜாகீர் ராஜாவின் செம்பருத்தி பூத்த வீடு

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

வெங்கட் சாமிநாதன்


தமிழில் இப்போது நிறையப் பேர் நன்றாக எழுதுகிறார்கள் தான். ஆரம்ப காலங்களில், முப்பது நாற்பதுக்களில் இப்படி ஒரு எழுத்துத் திறன், சிலருக்கு வரப்பிரசாதம் போல் வந்தடைந்தது. அனேகருக்கு பயிற்சியினால் தான் கிடைக்கவிருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைக் காலத்திற்குப் பிறகு, எழுத ஆரம்பிக்கும் போதே ஏதோ பிதிரார்ஜித சொத்துக்கு வாரிசானது போலத்தான் எழுத்துத் திறன் தானாகவே சித்தித்து விடுகிறது. இருந்தாலும், ஒரு புதிய திறனைப் பார்க்கும்போது சந்தோஷமாகத் தான் இருக்கிறது. எழுத்துத் திறன் மாத்திரம் இல்லை. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், வாழ்க்கையையும் சொல்லிவிட முடிகிறது சரி. அதிலும் எழுதுபவனின் தனித்வத்தை அடையாளம் காட்டும் எழுத்தாகவும் இருந்து விட்டால் இன்னமும் சிறப்புத்தான். சாதாரணமாகச் சொல்லிவிடலாம். எழுதுகிறவனின் தனித்வம் இல்லாத எழுத்து என்ன எழுத்து என்று. வாஸ்தவம் தான்.

ஆனால், இன்று அப்படி எல்லோராலும் இருந்து விட முடிகிறதில்லை. ஸ்தாபனம் சார்ந்து, கட்சி சார்ந்து, வரித்துக் கொண்ட சித்தாந்தம் சார்ந்து எல்லைக் கோடுகள் வரையப் பட்டு விடுகின்றன. அததற்கான சித்தரிப்புகள், மனித குணாம்சங்கள், ஏற்கனவே நிச்சயிக்கப் பட்டு விடுகின்றன. அவற்றை மீறுவது இயலாத ஒன்றாகி விடுகிறது. முதலில் மீறும் எண்ணம் இருப்பதில்லை. ஒரு முற்போக்கு எழுத்தாளன் அவனே ஒரு ஆட்டோ ரிக்ஷாக்காரனின் அடாவடித்தனத்திர்கு இரையாகியிருந்தாலும், அப்படி ஒரு சித்தரிப்பைக் கொடுத்து விடமுடியாது. ரிக்ஷாக்காரன் ஒரு பாட்டாளி. அவன் சுரண்டலுக்கு இரையாகிறவன் என்று ஒரு வாய்ப்பாடு தரப்பட்டிருக்கிறது. பணம் படைத்தவன் இரக்கமற்றவனாகத் தான் இருப்பான். அதெப்படியோ அந்தப் பணக்காரனின் பெண்ணைத் தான் ஒரு ஏழைத் தொழிலாளி காதலித்துத் தொலைப்பான். (ரகுநாதனின் பஞ்சும் பசியும்) இப்படி ஒவ்வொரு வகைக்குமான குணச்சித்தரிப்பு வாய்ப்பாடு இருக்கிறது. இதையெல்லாம் இப்போது நாம் சீரியஸாக எடுத்துக் கொள்வது கிடையாது. வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டகாசங்களைப் பற்றி இப்போது எந்த முற்போக்கும் கவிதை எழுதுவது கிடையாது. அவர்களில் பலரை இப்போது கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களில், அல்லது கலைஞரைப் பாராட்டும் விழா மேடைகளில் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு கட்சிக் கொள்கை, சித்தாந்தம் சார்ந்த எழுத்தாளர்களுக்கு அததற்கான வரையரைகள், பார்வைக் கோணங்கள் உண்டு. ஒரு கால கட்டம் வரை இந்த வரையறைகள் பொதுவாக நமக்குத் தெளிவாகத் தெரிந்ததில்லை. கழகத்தாரின் எழுத்துக்களும் முற்போக்குகளின் எழுத்துக்களும் அனேகமாக வரும் வழியிலேயே பின் தங்கி விட்டன. வானம்பாடிகளை, பாரதி தாசனை, சிதம்பர ரகுநாதனை, கழக எழுத்துச் சிற்பிகளை ஓவியர்களைப் பற்றி யாருக்கு இப்போது கவலை? தலித் எழுத்தாளர்கள் தான் எந்த எல்லை விதிப்புக்கும் கட்டுப் படாமல் தம் அனுபவம் சார்ந்து எழுதுகின்றனர். அந்த அனுபவங்களும் எழுத்துக்களும் சித்தாந்திகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சிரமம் தருகின்றன.

ஆனால் இதையெல்லாம் பார்க்க, இப்போது அதிகம் கெடுபிடிகளுக்கு உள்ளாவது முஸ்லீம் சமுதாயத்திலிருந்து எழும் எழுத்தாளர்கள் தான். இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுதும் நிலவும் கெடுபிடி. இந்த விதிமுறைகளும், மீறுவோர்க்கான கண்டனங்களும், எழுத்துலகத்திலிருந்து வருவதில்லை. மதத்தலைவர்களிடமிருந்து வருகின்றன. மதத்தலைவர்களின் தாக்கீதுகளுக்கு பயந்து வாழும் முஸ்லீம் எழுத்துலக பிரகிருதிகளிடமிருந்து வருகின்றன. இந்தக் கெடுபிடிகள், முற்போக்குகளும் தலித் எழுத்தாளர்களும் எதிர்கொள்வதை விட மிகக் கடுமையானவை. சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் அளவுக்கு அவை கடுமையானவை. இதற்கு மேலும் கடுமை கொள்வது தமிழ் நாட்டில் இதுவரை நிகழவில்லை என்பதில் நாம் ஆசுவாசம் கொள்ளலாம்.

சமீப காலங்களில் முஸ்லீம் சமுதாய கவிஞர், கதைக்காரர்கள் தம் சமுதாயத்தைப் பற்றிய சித்தரிப்பில் தம் அனுபவ உண்மையையே எழுதி வருகிறார்கள். அவர்கள் தம் சமுதாயத்திற்கு எதிராக எழுத வேண்டும், ஏதும் புரட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை தான். எந்த சமுதாயத்திலும் காணும் காட்சிகளைத் தான் அவர்கள் தம் அனுபவத்திலும் கண்டு எழுதியுள்ளார்கள். ஆனால், அவர்கள் முஸ்லீம்களாதலால், அவர்கள் வாழூம் உலகைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள தனிமனிதர்களின் குணக்கேடு தனி மனிதக் குணக்கேடேயல்லாது, மதம் சார்ந்ததல்ல என்பதை மதத் தலைவர்கள் புரிந்து கொள்வதில்லை. பாதகமான ஒரு செயலோ நிகழ்வோ ஒரு முஸ்லீமோடு சம்பந்தப்பட்டிருந்தால் அது இஸ்லாமையே குறித்ததாக எடுத்துக்கொள்கிறார்கள். இது அவர்கள் பார்வைக் குறுகலையே வெளிப்படுத்துகிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

செம்பருத்தி பூத்த வீடு என்று ஒரு சிறுகதைத் தொகுதி, கீரனூர் ஜாகீர் ராஜா எழுதியது. ஐந்து வருடங்களுக்கு முன் வெளிவந்தது, இப்போது தான் என் பார்வையில் பட்டது. காலதாமதமானாலும் இப்போதாவது எனக்குப் படிக்கக் கிடைத்ததே என்று சந்தோஷப் படவைக்கும் எழுத்து கீரனூர் ஜாகீர் ராஜாவினது. முஸ்லீம் சமூகத்திலிருந்து வரும் எழுத்தாளர்கள் எழுத உட்காரும்போதே மிகுந்த தயக்கத்தோடேயே தான், தான் ஒரு முஸ்லீம், தனக்குத் தெரிந்த உலகைப் பற்றிய அனுபவங்களைத் தான் எழுதினாலும் யார் என்ன சொல்வார்களோ, என்னென்ன பாதக விளைவுகளைச் சந்திக்க வேண்டுமோ என்ற பயத்தோடும் எச்சரிக்கையோடும் தான் எழுதுவார்களோ என்று எண்ணத் தோன்றுவது, மதவாதிகளின் கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இயல்புதான். ஹெச் ஜி. ரசூல் படும் பாடு நமக்குத் தெரியும். இன்னம் இங்கு யாரும் எந்த மதத் தலைவரும்அயதொல்லா கொமீனியாகவில்லை.

ஆனால் இம்மாதிரியான தயக்கங்களுக்கோ பயங்களுக்கோ ஜாகீர் ராஜாவின் கதைகளில் இடமில்லை. எச்சரிக்கையோடு எழுதுகிறார் என்று அர்த்தமில்லை. யாரும் எந்த சமூகத்திலிருந்தாலும், தன் அனுபவங்களை எழுதுவது போலத்தான் இவரும் தன் உலகின் மனிதர்களையும் நடந்த சம்பவங்களியும் எழுதுகிறார். இவர் ஒரு ஜாகீர் ராஜாவாக இல்லாது ஒரு சிவராமனாக, பழனிச்சாமியாக இருந்திருந்தால் மேலே எழுதியது எதுவும் எழுதவேண்டியிராது.

தலைப்புக் கதையையே எடுத்துக் கொள்ளலாமே. படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு பெண்ணிடம் கொண்டிருந்த ஒரு கிறக்கம். அப்பா இறந்ததும் பெரியப்பாவோடு வியாபாரத்தில் இறங்கி கேரளம் போய் பத்து பதினைந்து வருடங்களாயிற்று. பின் வியாபாரம் படுத்துவிடவே ஊர் திரும்பும்போது சின்ன வயசுக் காதலி பற்றிய நினைப்பு வருகிறது. பழைய செம்பருத்தி பூத்த வீடு இருக்கிறது. ஆனால் அந்த கவுண்டப் பொண்ணு மயிலாத்தா எப்பவோ இறந்துவிட்டதாக செய்தி சொல்வது சின்ன வயசிலிருந்து மிக நெருக்காமாகப் பழகிய கூடலிங்கம் தான். “மாப்ள, அந்தப் புள்ளே செத்துப் போயி ஏழெட்டு வருஷமாச்சேடா..” என்கிறான் கூடலிங்கம். அந்த ஊர் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர் என்று தெரிகிறது. அப்படியிருந்தும், மைதீனுக்குப் பிடித்த ஒரே நண்பன் கூடலிங்கம் தான். இந்த கூடலிங்கம் இன்னும் அனேக கதைகளில் நண்பனாக வருகிறான். வேறு எந்த பெயரும் இவ்வளவு நெருக்கத்தில் பேசப்படவில்லை.

மயிலாத்தா இருக்கும் கவுண்டரோட வீடு..”எப்பண்ணாலும், யாருண்ணாலும் போகலாம்….எங்க வீடு மாதிரி ஜென்னலுக்கு மறைப்பு, கதவுக்கு மறைப்பு, கதவுக்கு அங்கிட்டு ஒரு மறைப்புன்னல்லாம் இருக்காது. தொறந்த வீடு. வாசல்பூராவும் பூச்செடிங்க….” இது ஒருவாறாக ஜாகீரின் மனநிலையைச் சொல்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

அனீ·பா ராவுத்தர் தன் பெண் ·பரீதாவை தன் சொத்தெல்லாம் வித்து கட்டிக்கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை மஜீத் தை நாலு நாள் மீனும் கறியுமாக உபசாரம் செய்ய வழி தெரியாது, பள்ளிவாசல் குளத்தில் இருக்கும் ராஜ மீனைத் திருடிவிடுகிறார். “இந்த வாழ்க்கை வாழறதுக்கு பதிலா கபர்ஸ்தான் வந்து குழிவெட்டி படுத்துக்கலாம்.” என்று சொல்கிறார் இபுராஹீம் லெபை.

எங்கும் காணும் ஏழ்மையின் கொடுமைதான். அதை உணர மறுக்கும் பணத்தின் மூர்க்கம் தான். ஆனால் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் ஆயிஷா என்னும் சிறுபெண் இருப்பது அதிசயம் தான். ஆயிஷாவின் உயிருக்குயிரான நூரின்னிசா இறந்து விடுகிறாள். பின்னால் ஆயிஷா பாசம் கொள்ளும் ஆட்டுக்குட்டியே நூரின்னிசாவாகத் தோன்றுகிறது ஆயிஷாவுக்கு. நூரின்னிசாவின் பாத்திஹாவின் போது ஐம்பது பேருக்கு சாப்பாடு போட பணம் சேர்க்கிறாள் ஆயிஷா. சித்தப்பா வீட்டுக்குக் கொஞ்ச நாள் போய்விட்டுத் திரும்பிய போது ஆட்டுக்குட்டியைக் காணோம். பக்ரீது செலவுக்கு பணம் வேண்டுமே விற்றாயிற்று. இது தெரிந்ததும் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு நூரின்னிசாவை வாங்க ஓடுகிறாள் ஆயிஷா. ஆயிஷா ஒரு தனிப் பிறவி தான். “இந்த துனியாவில் மாமிசம் மறுத்த முதல் முஸ்லீம் பெண்ணல்லவா அவள். “அவளை ஏர்வாடிக்குக் கூட்டிட்டுப்போயி ஓதிப்பார்த்து ஒரு தாயத்து கட்டி இழுத்துட்டு வரவேண்டிய” கேஸ்,” என்று தான் அம்மாவுக்கு அத்தாவுக்கும் அபிப்ராயம். இப்படி ஒரு சிறு பெண் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் காண்பது ஆச்சரியம் தான். ஆனால், அப்துல் கலாம் இருக்கிறாரே, என்று சொல்லலாம். ஆச்சரியம் தான். ஆயிஷாவின் ஆத்தா நோயாளி. இருந்தாலும் நோன்பிருக்கிறாள். ‘நோன்பு திறக்க” பள்ளி வாசலிலிருந்து அறிவுப்புக்காகக் காத்திருக்கிறாள், ஆத்தா. அவள் முன்பு கஞ்சியும் கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம் பழங்களும். கஞ்சி சரி. பேரீச்சம்பழங்கள்? வேறு பழங்கள் உதவாது போலும்.

பக்ரீது ஆடுகள் என்று ஒரு கதை. பல கதைகளில் பேசப்படும் சுலைமான் ராவுத்தர் தான் ஆடுகளை பல ஊர்களிலிருந்து வாங்கி வந்து உள்ளூரில், பல கதைகளில் பேசப்படும், ஏ.எம்.எஸ் முதலாளிக்கும் இன்னும் மற்ற வேண்டுபவர்கள்க்கும் பக்ரீத் குர்பானிக்காக சப்ளை செய்பவர். இப்படித்தான் அவர் பிழைப்பு நடந்து வருகிறது. சுலைமான் ராவுத்தரும் அவர் உதவியாள் ஜின்னாவும் இந்த வருஷமும் வெளியூர்களிலிருந்து ஆடு பத்திக்கொண்டு வந்து முதல் நாள் இரவே ஊரில் எல்லோருக்கும் செய்தி சொல்லியும் ஆயிற்று. ஆனாலும் ஆடு கேட்டு யாரும் கதவைத் தட்ட வில்லை. என்னவென்று விசாரிக்கப் போன இடத்தில் ஒரே கூட்டம். யாரும் ராவுத்தரைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஏ.எம்.எஸ் முதலாளி ப்ளஷர் காரில் வந்து இறங்குகிறார். அவர் பின்னால் ஒரு லாரியில் வந்து இறங்குவது ஒட்டகம். “வக்காலி, சுத்து வட்டாரத்திலே நம்ம சனத்திலே எவனாச்சி ஒட்டகம் அறுத்து குர்பானி குடுத்ததா கதையாச்சிம் உண்டா?” என்று பெருமிதத்துடன் தன் செயலை சொல்லிக் கொள்கிறார். மாறி வரும் வாழ்க்கைச் சூழல் மதிப்புகள்! இனி சுலைமான் ராவுத்தருக்கு அடுத்த ஊர் சந்தைக்குப் போனால் பத்தாது. ராஜஸ்தானுக்குப் போகவேண்டும். இல்லை, ஹஜ் போய்த் திரும்பும்போது ஆளுக்கொரு ஒட்டகத்தையும் ஓட்டிக்கொண்டு வரவேண்டும்.

அமானுஷியில் ஒரு அமானுஷ்ய நிகழ்வையும் அமானுஷ்ய பெண்ணையும் சந்திக்கிறோம். ரஜியா நிக்காஹ்-க்காகக் காத்திருக்கும் பெண். அவளுக்கு “கனவில் நாகூர் ஆண்டவரும் இன்னும் நானூத்தி நாலு பேரும் வந்து அவளுக்கு ஏதோ ரகசியமாகச் சொல்லி” விட்டுப் போகிறார்கள். ரஜியா அந்த ரகசியம் என்னவென்று சொல்வதில்ல. ஆத்தா, பெத்தம்மா, அம்மா, முஜி, யாருக்குமே. ஒவ்வொரு சமயம் பூடகமாக ஏதோ சொல்வாள். ‘ வாய் தவிக்கும், நாக்கு வறளும், கிணறு…” என்று. போய்ப்பார்த்தல், கிணற்றில் ஒரு ஆண் பிணம். இப்படி பல. நாகூர் தர்காவுக்கே போகாத ரஜியா நாகூரைப் பற்றி விலாவாரியாகச் சொல்கிறாள். ஆக, அவள் ஏதும் புது ரகசியம் இருப்பதாகச் சொல்லும்போதெல்லாம், எல்லோருக்கும் என்ன நடக்குமோ என்று பயம். அவள் ஏர்வாடி கேஸ் இல்லை, அது போலத் தோன்றினாலும். ஒரு முறை பேஷ் இமாமை அழைத்து வந்து என்ன ரகசியம் என்று அவளைக் கேட்கச் சொல்கிறார்கள். ரஜியா ஒரு அறையில் அடுத்த அறையில் பேஷ் இமாம். அறைகளுக்கு வெளியே ஊரே திரண்டு ஒரே கூட்டம். பேஷ் இமாம் நடுச்சுவரில் காதை வைத்து என்ன ரகசியம் சொல் என்கிறார். ரஜியா சொல்கிறாள், “பேஷ் இமாம் அவர்களே, குரானின் முப்பது ஜூஸ்களையும் நீங்கள் மனப்பாடமாக ஓதிக் காட்டினால், அந்த ரகசியத்தைச் சொல்கிறேன் என்கிறாள். இமாம் திடுக்கிட்டு வெலவெலத்துப் போகிறார். அந்த சமயத்தில் பள்ளிவாசல் பாங்கு கேட்கிறது. தொழுகைக்கு நேரமாகிறது என்று சொல்லிக் கொண்டே பள்ளிவாசலுக்கு ஓடி விடுகிறார், இமாம்.

“சொடலை வந்திருக்கேன், சாமி” என்று நாணாவின் வீட்டு முன் வந்து கத்துவான் சக்கிலியன் சொடலை. மிஞ்சிப் போன சோறு, கறி ஆணம் என்று கொண்டு போடுவாள் ஆமினா. சக்கிலியன் சொடலையிடம் இந்தக் கருணை காட்டுவது நாணா மாத்திரமே அந்த ஊரில். மற்ற எல்லா இடத்திலும் கிடைப்பது அவமானம் தான். சொடலையின் பெண்டாட்டிக்கும் நாணாவுக்கும் ஒரு ஒட்டுதல். சக்கிலிப் பெண் என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. “இஸ்லாத்தில் சேந்து விடு. ஒத்தரும் ஒதுக்கமாட்டான். எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு!” என்று ஆசை காட்டுகிறார். அவனுக்கும் ஆசை தான்.மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று.

இரண்டு நாள் கழித்து நாணா வீட்டுத் திண்ணையில் ஒரு பையில் கைலி, சட்டையெல்லாம் திணிக்கப்பட்டுக் கிடக்கிறது. சுடலை பழைய காக்கி உடையில் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டு நிற்கிறான், வாசலில்.

மார்க் விஷயத்தில் ‘கெடுபிடியான ஆளான், காசிம் ராவுத்தரின் ஏழ்மையில் அவர் மகன் அப்துல்லா ராமசாமி கடையில் வேலைக்குச் சேர்கிறான். ஒரு ஸ்டூல் மேல் ஏறி, கடையில் இருக்கும் சாமி படங்களுக்கெல்லாம் பூ சார்த்துவான் அப்துல்லா. இந்த சமாசாரம் காசிம் ராவுத்தருக்கு ஒரு நாள் தெரிந்ததும், “ஒரு கா·பிரை எனக்குப் புள்ளையா தந்துட்டியேடா, யா அல்லாஹ்” என்று புலம்புகிறார். “அப்படியானால் இந்த நாட்டில் எத்தனை லட்சம் கா·பிர்கள்” என்று அப்துல்லாவின் மனதில் கேள்விகள். அத்தா அவனை மன்னிக்க மறுத்து விடுகிறார். அப்துல்லாவின் கனவில் கதீஜா ஒரு பொட்டலம் பூவைக்கொடுத்து அனுப்புகிறாள் கடைக்கு. அத்தா அவனை ஆதுரத்துடன் பார்க்கிறார். ஆனால் அது அவன் கனவு தான். வீடு என்னவோ வெறிச்சிட்டிருக்கிறது. இந்தக் கதை ‘கா·பிர்”.

குஜராத் போன்ற இடங்களுக்கு ஆடகள் அனுப்ப கறுப்புக்கோட்டுக்கு புரோக்கராக தொழில் செய்து கமிஷனில் வாழ்பவர் முத்தலீப். இப்போது நிலைமை மாறிவிட்டது. பூகம்பம், குஜராத் கலவரம் எல்லாம் சேர்ந்து ஆள் கிடைப்பது துர்லபமாகிக்கொண்டு வருகிறது. நம்ம கமிஷன்லே தானே இவன் நாலு குமருகளுக்குக் நிக்காஹ் செஞ்சு வச்சான், இப்போ இப்படி காலைவாறுகிறானே என்று கருப்புக் கோட்டுக்கு குமுறல். இன்னம் ஒரு பொண்ணைக் கரையேத்தனுமே என்று முத்தலீபுக்கு கவலை. வெளியூர்லே ஒருத்தருக்கும் காட்டாமே படிக்க வச்சிட்டிருக்கியே உன் மவன். அவனைசேர்த்து மூணு பேரை நாளைக்கு அனுப்பிடு என்று கட்டளை பிறக்கிறது கறுப்புக்கோட்டிடமிருந்து. எவன் எக்கேடு கெட்டால் என்ன, தன் வியாபாரம் தொடரணும் கறுப்புக்கொட்டுக்கு.

ச·பியா தன் கணவன் இக்பாலால் கைவிடப்பட்டவள். மூன்று வயதுக் குழந்தை வேறு. மதரசாவில் கற்ற இஸ்லாம் மார்க்க கல்வி அவளுக்கு உதவுகிறது. மேலும் மௌல்வியின் பெண் என்ற காரணத்தாலும் மதரஸாவில் அவளுக்கு வேலை கிடைக்கிறது. இக்பால் தலாக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராகத்தான் இருக்கிறாள் ச·பியா. ஆனால் அவன் கொடுப்பதாக இல்லை. “அல்லாஹ் மிகவும் மனம் வெறுத்துத் தான் இதற்கான அனுமைதியைத் தந்திருக்கிறான். தலாக்கின் மூன்று நிலைகள், அந்த அவகாசங்கள் மிக முக்கியமானவை. அதை எவரும் லட்சியப்படுத்துவதில்லை.” என்றும் ஜாகீர் ராஜா கதையில் சொல்கிறார். பள்ளி வாசலில் ச·பியாவின் மனதைச் சஞ்சலப்படுத்துவது பிலால். அவன் கவிதை “ஆதம் ஹவ்வா காலம், ஷாபானு, சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன் வரை பேசி, ஒரு வழக்கமான முஸ்லீம் குரலாய் பாபரி மஸ்ஜித், பொதுச் சிவில் சட்டம் வரை அலசி ஒய்ந்து, என்று இக்பாலைப் பற்றிச் சொல்கிறது கதை.

செம்பருத்தி பூத்த வீடு தொகுப்பில் 19 கதைகள். இக்கதைகளினூடே, இன்றைய தமிழ் நாட்டு முஸ்லீம் சமூகம், அதன் பல வண்ணங்கள் மாத்திரமல்ல, ஜாகீர் ராஜாவையும் கூட சந்திக்கலாம். இனி ஜாகீர் ராஜாவின் எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது,.

வெங்கட் சாமிநாதன்/1.7.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்