ஜனாப் வஹாபியின் குழப்பம்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

ஹமீது ஜா·பர்“இஸ்லாம்” என்ற வார்த்தைக்குப் பொருள் அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரிந்த ஒன்றே. என்றாலும் வஹாபி கேட்டிருப்பது அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. நான் கற்றவரையிலும் இஸ்லாம் என்ற வார்த்தை ‘சலாம்’ என்ற மூலச் சொல்லிலிருந்து வருகிறது, சலாம் என்றால் சாந்தி சமாதானம் அமைதி என்ற பொருளை கொடுக்கிறது. சாந்தி, சமாதானம், அமைதி இவைகளின் உறைவிடம் ஒற்றுமை. ஆனால் நம்மிடம் ஒற்றுமை எங்கே இருக்கிறது என்பதை நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.

ஒரு காலத்தில் இருந்தது. ஏன் 20, 25 ஆண்டுகளுக்கு முன் வரை ஒட்டிக்கொண்டிருந்ததாக ஞாபகம். இனிமேலும் தொடர்ந்து இருந்தால் மதிப்பில்லை என்று அது எங்கோ கண் காணா இடத்துக்குப் போய்விட்டது. அங்கிங்குமாக உறவாடிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்சத்தையும் பொரித்து தின்றாகிவிட்டது. இப்போதைய நிலமை….? எட்டு பெரிதா இருபது பெரிதா; விரல் – ஆட்டுவதா கூடாதா; நான் சொல்வதுதான் ஆதாரப்பூர்வமானது நீ சொல்வது இட்டுக்கட்டப்பட்டது; பொது விவாதத்துக்கு ரெடியா என்ற அரை கூவல். இது பெட்ரோலிய ஆலிம்களிடமிருந்து இளைய சமுதாயத்திடம் திணிக்கப்பட்டுவிட்டது. சிந்திக்க திராணியற்ற இளைய சமுதாயம் கவர்ச்சிகரமாக எது கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மைப் படைத்தது. எனவே குக்கிராமமாக இருந்தாலும் சரி அங்கும் இரண்டு பள்ளிவாசல்கள். ஒரு வீட்டின் நான்கு பேர் இருந்தால் குறைந்த பட்சம் ஒருவராவது மாறுபட்டக் கருத்தைக் கொண்டிருப்பார். ஏன் வஹாபிகூட அப்படித்தானே! (வஹ்ஹாபுக்குப் பொருள் அல்லாஹ் என்ற மூன்று கால்)

குர்ஆனின் சில வசனங்களைக் காண்பித்து வஹ்ஹாப் என்றால் அல்லாஹ் என்பதே பொருள் என்று மீண்டும் நிரூபணம் செய்ய முயற்சித்திருக்கிறார் ஜனாப் வஹாபி. [நல்லவேளை, சாமீ (சீன்+அலி·ப்+மீம்+யே) என்ற அரபு வார்த்தைக்கு உயர்ந்தவன் என்று பொருள். இதுவும் இறைவனின் திருநாமங்களில் ஒன்று. அதனால் சாமீ என்றால் இறைவன் எனவே சாமீ என்று சொல்வதில் தவறில்லை என்று ·பத்வா கொடுக்காமலிருந்தார் நம் வஹாபி] ஐயா, வஹ்ஹாப் என்பது இறைவனின் திருநாமங்களில் ஒன்று இது இறைபண்பை குறிக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்துக் கிடையாது, அதுதான் என்னுடைய நிலைபாடும் ஆகும். குர்ஆன் வசனங்களைப் பார்ப்பதற்கு முன், சில நியதிகளை சில முறைமைகளைப் பார்க்கவேண்டும்.

அரசரிடம் ஒரு புலவர் பெருமான் பரிசு கேட்கப் போகிறார். அவர் என்ன செய்கிறார், அரசனைப் புகழ்ந்துப் பாடுகிறார்; அரசவையைப் புகழ்கிறார்; ஆட்சியைப் புகழ்கிறார்; அந்த நாட்டைப் புகழ்கிறார் பரிசைப் பெறுகிறார், இது வழக்கம் மட்டுமல்ல மரபும்கூட. இப்புகழ்ச்சியின் அரசனின் கொடைத்தன்மை; நாட்டின் வளமை போன்றவற்றை காண முடிகிறது. மாறாக அரசனே! நீ ஈவிரக்கமற்றவன்; மக்களைத் துன்புறுத்துபவன், கொடுமைப் படுத்துபவன்; நாடு பஞ்சத்தில் வாடுகிறது; உன் மந்திரிகள் கொள்ளை அடிக்கிறார்கள்; நீ அடித்த கொள்ளையிலிருந்து எனக்கு கொஞ்சம் பரிசாகத் தா என்று கேட்டால் என்ன கிடைக்கும்?

அடுத்து உங்களைப் பார்த்து ஒருவன் ”ஐயா…. தர்ம பிரபே….! எதாவது பிச்சைப் போடுங்கள்” என்று கேட்பதற்கும் “ஐயா.. கஞ்ச பிரபே..!” என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? எப்படி கேட்டல் தர்மம் செய்வீர்கள்? தர்ம பிரபு என்பது உங்களை குறிக்கிறதா? இல்லை உங்கள் குணத்தைக் குறிக்கிறதா?

இதே நிலைதான் குர்ஆனிலும் கையாளப்பட்டிருக்கிறது. நீங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் குர்ஆன் வசனம் 03:08 ல் ‘ரப்பனா..’ – எங்கள் இறைவனே என்று தொடங்கி.. தடம்புரளாத இதயத்தை அருள்வாயாக என்று கேட்கப்படுகிறது. இத்தகைய அருளை அளிப்பதற்கு எப்படிப்பட்ட தகுதியைப் படைத்தவன் என்பதை “இன்னக்க அன்தல் வஹ்ஹாப்” – “நிச்சயமாக நீ பெருங்கொடையாளி” என்ற வார்த்தை ஈகை குணத்தைக் குறிக்கிறது. அதாவது ‘தர்ம பிரபே…!’ என்பதுபோல். மாறாக இந்த இடத்தில் இன்னக்க அன்தல் கஹ்ஹார்(நிச்சயமாக நீ அடக்கி ஆள்பவன்) என்றோ இன்னக்க அன்தல் முதில்லு(நிச்சயமாக நீ இழிவடையச் செய்பவன்) என்றோ இருந்தால் பொருத்தமானதாக இருக்குமா? சற்று சிந்தித்துப் பார்க்கவும்.

அவன் எப்படிப்பட்ட கொடையாளி என்பதை தாங்கள் சுட்டிக்காட்டிய அடுத்த வசனம் 38:09 ல் “அஜீஜில் வஹ்ஹாப்” – யாவரையும் மிகைத்த கொடையாளி என்று வாரிவழங்கும்தன்மையை மிகைப்படுத்தி காண்பிக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் கடை ஏழு வள்ளல்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களைக் காட்டிலும் வரலாற்றில் தனி முத்திரைப் பதித்துள்ளனர். காரணம் அவர்களின் வாரிவழங்கும் ஈகைத் தன்மை மற்ற மன்னர்களைக் காட்டிலும் மிகைத்திருந்தது. அதுபோல்தான் அல்லாஹ்வும் தன்னைப் பற்றி சொல்லும்போது மனித சமுதாயத்தைக் காட்டிலும் மிகைத்திருக்கின்றேன்; நீங்கள் யார் யாரை எல்லாம் உயர்வாக நினைக்கின்றீர்களோ அவர்களுக்கெல்லாம் நானே வழங்குகின்றேன் என்று பொருள்பட “அஜீஜில் வஹ்ஹாப்” என்று குறிப்பிடுகின்றான்.

குர்ஆனில் ஒன்றை பற்றி சொல்லும்போது அதை ஒட்டிய குணத்தை சுட்டிக்காட்டியே அந்த வசனம் முடியும். இதை குர்ஆனில் என்னிலடங்கா வசனங்களில் காணலாம். இது இலக்கிய மரபு. அதனால்தான் குர்ஆனை மாபெரும் இலக்கியம், அதற்கு ஈடாக வேறெதுவுமில்லை என்று பெரும் பெரும் அறிஞர்களெல்லாம் கூறுகிறார்கள்.

உதாரணமாக அறிவும் அறிவைச் சார்ந்த செய்தியை சொல்லும் வசனமாக இருந்தால் மறைவானவற்றை அறிபவன் என்ற பொருள் தரும் பெயருடன் அந்த வசனம் முடியும்; குற்றம் மற்றும் அதனைச் சார்ந்த செய்தியாக இருந்தால் மிகவும் மன்னிப்பவன், அருள் பாலிப்பவன் என்ற பொருள் தரும் பெயருடன் அந்த வசனம் முடியும்; தண்டனை எச்சரிக்கைப் போன்ற செய்திகளில் அடக்கி ஆள்பவன் என்ற பொருள் தரும் பெயருடன் முடியும். இது இலக்கிய நயம்.

வஹ்ஹாப் சொன்னான் என்பதற்கும் அல்லாஹ் சொன்னான் என்பதற்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கிறது. வஹ்ஹாபு சொன்னான் என்றால், எந்த வஹ்ஹாபு? என்ற கேள்வி அங்கு பிறக்கிறது. அந்த கேள்வி வஹ்ஹாபு என்ற பெயருடைய மனிதனை சார்கிறது. அல்லாஹ் சொன்னான் என்றால் அங்கு பேச்சுக்கே இடமில்ல, No more quastion.

அப்துல் வஹாப் நஜதியை பின்பற்றுகிற அனைத்து வஹாபிகளும் இறை வேதத்திற்கும் நபி போதத்திற்கும் வெளிப்படையான பொருளை எடுத்து இதுதான் வரையறுக்கப்பட்ட அர்த்தம் என்ற தீர்க்கமான முடிவுடன் முரட்டு வாதங்கள் புரிகின்றனரே தவிர ஆழமாக ஊடுருவிப் பார்ப்பதில்லை. இது அவர்களுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம் ஆனால் சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல. எனவே அவர்கள் தங்களை சுயப்பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளவேண்டும்.

இவண்,
ஹமீது ஜா·பர்.

email: maricar@eim.ae

Series Navigation