‘சொற்களிடமிருந்து மெளனங்களுக்குள் ‘

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

தேவமைந்தன்


கவிஞர் பாலபாரதியின் ‘சில பொய்களும் சில உண்மைகளும் ‘ என்ற கவிதைத் தொகுப்பைத் தோழியர் ே ?மா, வாசிக்கத் தந்தார்கள். அதில், கவிஞர் சல்மாவின் அணிந்துரை, அத்தகையவற்றுள் மூன்றாவதாக இருந்தது. தலைப்பு, ‘மக்களோடும் மண்ணோடும் நேசம் கொண்ட கவிதைகள் ‘ என்பது. அந்த அணிந்துரையை, கவிதை குறித்த ஓர் ஆழ்ந்த தேடலாக, பலதரப்பட்ட, குறிப்பாக பாட்டாளித்துவ அரசியலில் பங்குபெறும் மகளிரின் சிந்தனைக்கு முன்வைத்துள்ளார் சல்மா. அதில், பல தளங்களிலும் இன்றைக்கு மிகுந்த அக்கறையோடு நம் தமிழ்க் கவிதையை முன்னெடுத்துச் செல்லும் ஓயாப் பணியில் ஈடுபட்டிருக்கிற, சமூக அக்கறையுள்ள கவிஞர்களுக்கும் கவிதை வாசகர்களுக்கும் மொழிபெயர்ப்பாசிரியர்களுக்கும் பயன்படும் பல கருத்தூட்டங்கள் இருக்கின்றன. அவற்றைக் குப்பல் குவியலாக முன்வைக்காமல், ஒற்றை ஒற்றைக் கதிராக இங்கே முன்வைக்கிறேன். உங்களின் நோக்கில் அவற்றை மதிப்பிட்டுக்கொள்ளலாம்.

1. மொழியைக் கையாளும் விதத்தில் உரிய கவனம் செலுத்தி, சொற்களிடமிருந்து மெளனங்களுக்குள் கவிதைகளை நகர்த்திச் சென்றால்தான், செறிவு கிடைக்கும் ஏனெனில், நவீன கவிதை, சொற்களின் கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு நெடுங்காலமாகிவிட்டது.

2. தன் வடிவத்தைக் கலைத்துக் கொள்வதற்கெனக் காத்திருக்கிற கவிதையின் பயணம், தனித்த மனதின் வெற்றிடத்திலிருந்து வேறொரு தனித்த மனதின் வெற்றிடத்தை தேடிச்சென்று சேர்வதாக உள்ளது.

3. ஒரு கட்டத்தில் படிமங்களாலும், உவமானங்களாலும் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்த கவிதை வடிவம், அதே பாதையிலேயே தன்னைத் துரத்திக் கொண்டிருக்காமல் இன்றைக்குப் பல தளங்களிலும் பரீட்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாலும் இன்றைய கவிதை தனக்குள்ளாக ஆழ்ந்த மெளனத்தைத் தேக்கி வைத்துக் கொள்வதையே தனது பலமாகக் கொண்டிருக்கிறது.

வெறுமனே ஓர் அணிந்துரையைக் ‘கடனே ‘ என்று கொடுக்காமல், தான் தரும் அணிந்துரை மூலமாகவும் கவிதைத் தொகுதி, திறனாய்வு-மனம் தெளிந்தவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற கவிஞர் சல்மாவின் நோக்கம் பாராட்டற்குரியது.

புத்தகம் பற்றிய வயணம்:

கவிஞர் பாலபாரதி,

சில பொய்களும் சில உண்மைகளும் (கவிதைத் தொகுதி),

வம்சி புக் ?, 19, டி. எம். சரோன், திருவண்ணாமலை – 606 601.

பக்:120(டெமி 1/8) விலை: ரூ. 50

****

annan_pasupathy@hotmail.com

Series Navigation

author

தேவமைந்தன்

தேவமைந்தன்

Similar Posts