செவ்வியல் இலக்கியங்களை எப்படிப் பயில வேண்டும் ?

This entry is part [part not set] of 5 in the series 20000326_Issue

கோபால் ராஜாராம்.


(திண்ணையின் வேறு பக்கங்களில் இதாலோ கால்வினோ வின் கட்டுரை ‘செவ்வியல் இலக்கியங்களை ஏன் பயில வேண்டும் ? ‘ என்ற கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. செவ்வியல் இலக்கியங்களை எப்படிப் பயில வேண்டும் என்னையே நான்  எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு பல விதங்களில் கால்வினோவின் கட்டுரை தெளிவுகளை அளிக்கிறது. அந்தச் சரடை மேலும் தொடர்ந்து சிந்தித்ததன் பலன் தான் இந்தக் கட்டுரை. தாம் படித்த செவ்வியல் இலக்கியங்களைப் பற்றியும் அவை தம்மை பாதித்த விதம் பற்றியும் கட்டுரைகள் எவரும் எழுதினால் அந்த அனுபவப் பகிர்வு மற்றவர்க்கும் பயன் அளிக்கும்.)

செவ்வியல் இலக்கியங்களான கிளாசிக்-குகள் எல்லா மொழியிலும் உள்ளன. செவ்வியல் இலக்கியங்கள் அந்தந்த மொழியின் பொக்கிஷங்கள் மட்டுமல்ல, அந்தந்த கலாசாரத்தின் பொக்கிஷங்களும் கூட. பொக்கிஷம் என்பது அதன் முக்கியத்துவம் பற்றி மிகைப் படுத்திக் கூறுவதாக எவரும் உணர்ந்தால் அதுவும் சரிதான். ஏனென்றால் நானும் வெகுகாலம் அப்படித் தான் எண்ணியிருந்தேன். 

திருக்குறள் பெண்ணடிமையை ஆதரிக்கிறது. ‘குகனுடம் ஐவராய் ‘ ராமன் உணர்ந்தாலும், சாதீயத்தின் வேர்கள் ஆட்டங்ஆணுவதில்லை. மகாபாரதத்தில் ஏகலைவனின் கட்டைவிரல் வெட்டப்படும் போது நசுக்கப் பட்ட மக்களின் கட்டைவிரல்கள் வெட்டுறும்போது ஏற்படும் துடிப்பு உணர முடிகிறது. மெழுகு மாளிகையில் பஞ்ச பாண்டவர்களுக்காக தீவாய்ப்படும் ஐவரும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பது என்னைக் கோபப் படுத்தியிருக்கிறது. ராமரின் கீறிய அம்பின்  கீழே தேரைகள் மட்டுமல்ல, தீண்டத்தகாத சம்புகர்களும் கூடக் கதறுகிறார்கள். அக்கினிப் பிரவேசத்திற்குப் பின் சீதையர் அனாதைகளாய் விடப்படுகிறார்கள். விமர்சனத்துக்கு ஆயிரமாயிரம் குறைபாடுகள், நவீன மனத்தைச் சஞ்சலப்படுத்தும் இழைகள் இருக்கவே செய்கின்றன.

செவ்வியல் இலக்கியங்கள் நன்றாய் இருக்கின்றன, நன்றாய் இல்லை என்பதைத் தாண்டி பல்வேறு பிரசினைகளை ஒரு நவீன மனிதனுக்கு  ஏற்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமானது நம்பகத் தன்மை. பெளதீக உலகில் நடைபெறவே முடியாத பல விஷயங்கள் அதில் நடைபெறுகின்றன. அறிவின் வளர்ச்சியால் சிதைவுண்ட நம்பிக்கைகளை மீண்டும் ஒரு உத்தேச அளவிலாவது ஸ்தாபிக்காமல், செவ்வியல் இலக்கியங்களை அணுக முடியாது என்பது.  இங்கு சிதைவுண்ட நம்பிக்கைகள் என்று நான் குறிப்பிடுவது கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்களை மட்டுமல்ல. இன்னொன்று, மார்க்ஸியம் என்ற பெயரில் நமக்குச் சொல்லித்தரப் பட்ட சில சூத்திரங்களிலிருந்து நோக்கிடும் போது, செவ்வியல் இலக்கியம் மக்கள் இலக்கியமோ மக்கள் கலையோ இல்லை, மாறாக மேல்தட்டு வர்க்கங்களில் போராட்டமும், சிதைவுகளும் தானே தவிர  அடித்தட்டு மக்களின் பிரசினைகள் இதில் பேசப் படவில்லை என்கிற பார்வை. உதாரணங்களோடு இந்தச் சிக்கல்களை விளக்க முயலலாம்.

உதாரணமாக மகாபாரதம். இந்த லட்சிய புருஷர்கள் மனித சராசரித் தன்மையை மிகவும் மீறியவர்களாய்த் தோன்றுகிற அதே சமயம், மனித சராசரிக்கும் கீழான காரியங்களைச் செய்யத் துணிபவர்களாக இருக்கிறார்கள். அறத்தின் உருவாய் நிற்கிற தருமன், தன் மனைவியைப் பகடைக் காயின் பணயமாய் வைக்கத் தயங்குவதில்லை. ஒருவரையொருவர் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் போதும் அறமும் அது சார்ந்த ஆறுதல்களும் அவர்களுக்குத்  தேவைப்படுகின்றன. வெகு சார்புகளுடனேயே சாதீயம் காப்பாற்றப் படுகின்றது. விதுரன் தன் அறிவு மேன்மையைத் தாண்டியும் வேலைக்காரி மகனாகவே எதிர் கொள்ளப்படுகிறான். பகவத் கீதை கூட சாதீய நால் வருணத்திற்குச் சார்பாகவும், யுத்தத்திற்குச் சார்பாகவும் குரல் கொடுப்பதாகப் படுகிறது. பிற்போக்கு இலக்கியம் என்று சொல்லப் படுகிற எல்லா விளக்கங்களுக்கும் உதாரண நூலாய்த் தான் உள்ளது. 

இருந்தும், நான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகாபாரதத்தைப் படிக்கத் தவறியதே இல்லை. அது ராஜாஜியின் நூலாகட்டும், பி. லால் ஆங்கிலத்தில் எழுதிய நூலாகட்டும், சமீபத்தில் நாவல் வடிவில் வந்த நூலாகட்டும், சித்பவானந்தாவின் பகவத் கீதை உரையாகட்டும், டி.டி.கோசாம்பி பகவத் கீதை பற்றி எழுதியதாகட்டும், சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் ஆகட்டும், தொலைக்காட்சியில் வெளிவந்த சினிமாத் தனமும், ஜிகினாத்தனமும் கொண்ட மகாபாரதம் ஆகட்டும், என்.டி.ஆர் நடித்த மகாபாரத்தின் வெவ்வேறு துணுக்குகளாகட்டும் – மாயா பஜார் உட்பட – , பீட்டர் ப்ரூக்ஸின் நாடகத் திரையாக்கம் ஆகட்டும் – படிக்க, பார்க்கத் தவறியதே இல்லை. இது சற்று என்னை வெட்கித் தலை குனியக் கூடச் செய்கிறது. ஆனால் உண்மை அது தான். எல்லாவிதங்களிலும் அதைப் பார்ப்பதிலும், அதை அசை போடுவதிலும் தன்னுடைய பழைய வேர்களுக்குத் திரும்புவது போன்ற சுகமும், வெகுகாலம் முன்பு விட்டுச் சென்ற ஒரு கிராமத்திற்குத் திரும்பும் போது எதுவும் மாறாமல் இருப்பதில் உள்ள சுகமும், சோகமும் கலந்தது போன்ற அனுபவிப்பும் இருப்பதை மறைக்க முடியாது. 

என் பாட்டியின் மடியில் படுத்துப் பாதித் தூக்கமும், பாதி விழிப்புமாய், ஏழுமலை தாண்டி ஏழுகடல் தாண்டி அரக்கனின் உயிர் ஏதோ குகையின் உள்ளே சிமிழில் அடைபட்டுக்கிடந்ததைத் தேடிச் செல்லும் ராஜகுமாரனாய் என்னைக் கற்பனை செய்துகொண்டதில் இருந்த சுகம் மறு அனுபவிப்புக்கு இறைஞ்சி நிற்பதாய்த் தோன்றும். வயது கடந்த பின்னர், மகாபாரதமும், ராமாயணமு,ம் , டால்ஸ்டாயும் தாஸ்தாயெவ்ஸ்கியும், வேறு வேறு அர்த்தங்களைத் தருகிற இந்த நாட்களிலும் கூட அடிப்படையான ‘கதை கேட்கும் சிறுவனின் மனநிலை ‘ என்னை விட்டுப் போய்விட வில்லையோ என்று தோன்றுகிறது. இதை அறிவு பூர்வமாய் எப்படி விளக்க முடியும் என்று தெரிய வில்லை.

இந்த மனநிலையே கூட கிளாஸிக்குகளைப் பயிலத் தோதாக இருக்கும் மனநிலைக்கு எதிரானது தான். இந்த ‘அறிவு பூர்வமான மன நிலை ‘ என்பது தான் எவ்வளவு ஏமாற்றும் வார்த்தை. 

ராமாயணம் பற்றிப் பேசும் போது என் நண்பன் சொன்னான். ‘என்னடா பெரிய ராமாயணம் ? ராமக் கோனான் பொஞ்சாதியை ராவணக் கோனான் தூக்கிகிட்டுப் போனான், அனுமக் கோனான் உதவியோட ராமக் கோனான் போய் சண்டை போட்டு ராவணனைக் கொன்னுட்டு, பொஞ்சாதியைத் தூக்கிகிட்டு வந்தான். அவ்வளவு தானே ? ‘

இதைக் கேட்டு உடனே சிரிப்பு வந்தாலும் பிறகு கோபமும் வந்தது.. உன்னதமான ராமாயாணத்தின் இலக்கியச் சிறப்பை உணராமல் இதைக் குறுக்கிவிட்டானே என்று. ஆனால் அவன் சொன்ன கதைச் சுருக்கம் அப்படியொன்றும் ராமாயணத்தின் கதையிலிருந்து அப்படியொன்றும் பெரிதும் விலகியதல்ல. தான் கிளாஸிக்குகளைப் பயிலும் மனநிலை இப்படித்தான் உருவாக வேண்டும், உருவாகிறது. அதனுடன் நீ சண்டையிடு, அதனுடன் நீ போராடு. அதனை நீ கொஞ்சு. அதனுடன் கோபித்துக்கொள். அதனைத் தூக்கியெறி. அதனை அரவணைத்துக்கொள். அதனை விமர்சனம் செய். உன் அன்றாட வாழ்க்கையில் அதனை ஒரு குறிப்புப் புத்தகம் போல பயன் படுத்து.

மதத்தின் மாசு படிந்து கெட்டிதட்டிப் போய், இப்படிப் பட்ட திறந்த மனதின் அணுகல் முறையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்ட தம்மபதம், குரான், விவிலியம் போன்ற நூல்கள் இதனாலேயே , உண்மையான கிளாஸிக்குகள் என்று அழைக்கப் படும் தகுதியை இழந்து போகின்றன. ‘அராபிய ஆயிரத்தோரு இரவுகள் ‘, ‘திருக்குறள் ‘, ராமாயணம் ‘, ‘விக்கிரமாதித்தன் கதைகள் ‘ இவையும், டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், காஃப்கா, வால்மீகி, கம்பன், இவர்களும் கிளாஸிக்குகளாய் நம் கூட்டு மனதில் புதிது புதிதாய் கிளர்ச்சிகளை உண்டு பண்ண வல்லவர்களாய்த் தோற்றம் கொள்கிறார்கள்.
 

இதனால் தான், பெரியாரின் ‘ராமாயண கதாபாத்திரங்கள் ‘ அண்ணாவின் ‘கம்பரசம் ‘ கூடவே, மு.மு.இஸ்மாயிலின் ‘ராமாயணச் சொற்பொழிவுகள் ‘ கூட ராமாயணம் நம் கூட்டு மனவெளியில் பதிவு பெற்று விட்டதை மீண்டும் வலியுறுத்தும் பார்வைகள் தான். சொல்லப் போனால் பெரியார் , அண்ணாவின் பார்வைகள் நாம் இவற்றை சமகால வாழ்வுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியதன் அவசியத்தைத் தீவிரமாக வலியுறுத்தி, அவற்றிற்கு நாம் அளித்திருக்கக் கூடிய தொழுகை ஸ்தானத்திலிருந்து இறக்கி அவற்றின் ‘செவ்வியல் இலக்கிய ‘ ஸ்தானத்தை மீண்டும் உறுதி செய்கின்றன. இதாலோ கால்வினோ இதனைத் தான் எதிர்மறை நோக்கில் செவ்வியல் இலக்கியத்துடன் நாம் கொள்ளும் உறவு என்று அழைக்கிறார். இப்படிப் பட்ட ஒரு பன்முகப் பார்வையை மேற்கொள்வதன் மூலமாகத் தான் நாம் நம்முடைய கலாசாரத்துடன் ஒரு விமர்சன பூர்வமான உறவினை மேற்கொள்ள முடியும். அது தான் நம்மை முன்னோக்கிச் செலுத்தும்.
 
 
 
 

Series Navigation