செர்நோபில் விபத்துபோல் சென்னைக் கூடங்குள அணுமின் நிலையத்தில் நேருமா? -11

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅணு ஆயுத வெடிப்புகளின் ஆறாப் புண்கள்
அழிவு சக்தியை இன்னும்
நினைவூட் டினாலும், ஜப்பான்
ஆக்க சக்தியை நம்பி,
அணுமின் ஆலைகள் பலவற்றை நிறுவி,
அனுப்பி வரும் மின்சாரம்!
அரை மாங்கொட்டை போன்ற
தென்கொரியா வுக்கு
மின்னொளி உயிர்நாடி யாகும்,
அணுமின் நிலையங்கள்!
அகில நாடுகள் பல்வேறு விதமான
அணுமின் நிலையத்தைப்
பாதுகாப்பாய் ஓட்டிப்
பகலிரவாய்க் கண்காணித்து,
மின் விளக்குகட்கு
ஒளியேற்றி வைக்கும்!
இரட்டைக் அரணுக்குள் கூடங்குளத்தின்
முரட்டு அணு உலை முடக்கி
நிறுவப் பட்டுள்ளது! அதை அடக்கி
செம்மையாய்ப் பயிர்ச்சி பெற்ற,
பொறியாளர்
நெறி பிறழா தியக்குவர்,
குறிக்கோள் மறவாது.

“சென்னைக் கூடங்குளத்தில் வடிவாகி வரும் ரஷ்யாவின் நான்காம் ஜெனன புதிய டிசைன் மாடல் அணுமின் நிலையம் [VVER-1000 (V392) Fourth Generation Model] உன்னதப் பாதுகாப்பு டிசைன்களில் ஒன்று. நெறிதவறி நிகழும் அபாய விபத்துகளை முறையாகக் கையாளும் வகையில் “விழித்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஓய்வுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளும் [Active & Passive Safety Features] அணுமின்னுலை இயக்க அமைப்புகளுக்குள் பிணைக்கப் பட்டுள்ளன.”

எ.ஐ. சித்திக்குயீ [A.I. Siddiqui, Senior Manager Communications, Nuclear Power Corp India Limited (NPCIL)]

“பெரும்பான்மையான உலக அணுமின் உலைகள் “மூவழிச் சுற்றுப் பாதுகாப்பு” [Triple Channel Safety Protection (Electric Circuits)] முறையை டிசைனில் கொண்டவை. கூடங்குள அணு உலையில் முதன்முதல் புதிதாக ரஷ்யா “நால்வழிச் சுற்றுப் பாதுகாப்பு” [Four Channal Safety Protection] ஏற்பாடு டிசைன் செய்து இணைத்தது.”

மிக்கேல் குவாஷா [Michael Kvasha Technical Director, Atomstroyexpert (Russian Nuclear Design Agency), Kudungulam]

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு திட்டம் இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy (1840-1928)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

முன்னுரை: தமிழ்நாட்டின் தென் கோடியில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் VVER-1000 என்னும் 1000 MWe ஆற்றலுள்ள இரட்டை அழுத்தநீர் அணு மின்சக்தி நிலையம் [Pressurised Light Water Reactor] தற்போது உருவாகி வருகிறது! 2006 மே மாதக் கணிப்புப்படி முதல் யூனிட் 70%, அடுத்த யூனிட் 59% நிறுவகப் பணிகள் முடிந்துள்ளன. அழுத்த நீர் வெப்பக் கடத்தியாகவும், நியூட்ரான் மிதவாக்கியாகவும் [Light Water Coolant & Moderator], செறிவு யுரேனியம் [(2%-4%) U235 Enriched Uranium] அணு எருவாகவும் பயன்படுத்தி இயங்கும் இந்த வெப்ப அணு உலை [Thermal Reactor] பாரதம் வாங்கிய மூன்றாவது அன்னிய மாடல் அணுமின் உலையாகும்! தாராப்பூரில் முதல் மாடல் அமெரிக்க டிசைனிலும், ராஜஸ்தானில் இரண்டாவது மாடல் கனடா டிசைனிலும் அமைக்கப் பட்டன. இந்தியாவில் கட்டப்பட்ட அணுமின் உலைகள் யாவற்றிலும் மிகப் பெரும் ஆற்றல் கொண்டது ரஷ்யாவின் VVER-1000 அணுமின் உலை! 1988 ஏப்ரலில் அங்கீகரிக்கப் பட்ட அத்திட்டம், சோவித் யூனியன் கவிழ்ந்த பிறகு போதிய நிதி உதவியின்றி ஒதுக்கி வைக்கப் பட்டது! மறுபடியும் அது உயிர்ப்பிக்கப் பட்டு, 2001 மார்ச் மாதம் 31 ஆம் தேதி கூடங்குளத்தில் அடித்தளக் கட்டுமான வேலைப்பாடுகள் தொடங்கின! அதன் நிறுவக இயக்கப் பணிகள் யாவும் முடிந்து, 2007 ஆம் ஆண்டில் முதல் யூனிட்டும், 2008 இல் இரண்டாம் யூனிட்டும் மின்சக்தி பரிமாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!

பாரத அணுத்துறை நிபுணர்களின் நீண்ட காலத் திட்டங்கள்

தொழிற் துறைகள் பன்மடங்கு பெருகி வரும் பாரதத்தின் மின்சக்தித் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் அணுமின் சக்தி உற்பத்திப் பங்கை மிகையாக்க பாரதம், இரண்டு 540 MWe அழுத்தக் கனநீர் அணுமின் உலைகளைத் தாராப்பூரில் கட்டித் தற்போது வெற்றிகரமாய் இயக்கி வருகிறது. 2020 ஆண்டுக்குள் 20,000 MWe ஆற்றல் அணுமின் சக்திப் பெருக்கத்தை உற்பத்தி செய்யும் எதிர்நோக்கத்தின் முதற்படியாக, ரஷ்யாவின் இரட்டை 1000 MWe பூத அணுமின் உலைகளை அமைக்கத் திட்டமிட்டு, அதை நிறைவேற்றி வருகிறது. 1986 ஆம் ஆண்டு செர்நோபிள் அணுமின் உலை வெடித்துச் சீர்குலைந்த இரண்டு ஆண்டுக்குள் தேர்ந்தெடுக்கப் பட்ட ரஷ்யப் பூத அணுமின் உலை இது! சோவியத் யூனியன் கவிழ்ந்த பிறகு பனிரெண்டு ஆண்டுகள் நிதிவளம் வற்றி மறந்து போன மாடல் இது! மீண்டும் உயிர்த் தெழுந்து நெல்லை மாவட்ட நிலப் பிரச்சனைப் போராட்டத்தில் பிழைத்து, 2001 மார்ச் 31 இல் அடித்தளமிட்டுக் கூடங்குளத்தில் உருவாகி வருகிறது. 1000 MWe ஆற்றல் கொண்ட ரஷ்ய அணுமின் உலையில் புதிய முற்போக்குப் பாதுகாப்பு முறைகள் எவை எல்லாம் இணைக்கப் பட்டுள்ளன என்பதை இந்தக் கட்டுரையில் கூறப் போகிறேன்.

1974 இல் பாரதம் செய்த பொக்ரான் அடித்தள அணு ஆயுத வெடிப்புக்குப் பிறகு அமெரிக்கா, கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் அணுவியல் துறை விருத்திக்கு எந்த விதத் துணையும் புரிவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டன! 220 MWe ஆற்றலுள்ள அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களை அடுத்தடுத்துக் கட்டிவரும் பாரதம் அலுப்படைந்து, மற்ற உலக நாடுகளைப் போல் தானும் அவற்றை விடப் பெரிய 540 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட மின்சக்தி நிலையங்களை, நிறுவ வேண்டுமென வேட்கை கொண்டது! அந்த முயற்சியில் பேராற்றல் கொண்ட அணுமின் நிலையங்களுக்கு அன்னியக் கூட்டுறவு முறையில் டிசைன், நிறுவகம், இயக்கம் & பராமரிப்பு, நிதிக்கடன் [Design, Construction, Operation & Maintenance & Finance] ஆகிய நான்கு துறைகளில் கைகொடுக்கும் ஓர் அன்னிய நாட்டைப் பாரதம் பல்லாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தது! முன்வந்த பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய இரண்டு தேசங்களில், முடிவாகச் சோவியத் ரஷ்யாவின் கூட்டு உடன்படிக்கை 1988 இல் வெற்றி பெற்றது! ஆனால் அத்திட்டம் முளைத்து எழுவதற்குள், சோவியத் யூனியன் கவிழ்ந்து சிதறிப் போனதால், எஞ்சிய ரஷ்யா பணமுடையில் தனியாய்த் தவித்தது! அமெரிக்க, ஐரோப்பிய உதவியில் மீண்டும் தலைதூக்கிய ரஷ்யா, 2001 ஆண்டில் தனது 1000 MWe ஆற்றல் கொண்ட, புதுப்பிக்கப் பட்ட VVER-1000 மாடல் இரட்டை அணுமின் நிலையத்திற்கு நிதி யளித்துப் பாரதத்தில் கட்டி முடிக்க மறுபடியும் முன்வந்தது!

ரஷ்யாவின் VVER-1000 (V:392) புதிய பாதுகாப்பு மாறுதல்கள்

முற்போக்கான புதிய VVER-1000 அணு உலைகள் IAEA தயாரித்த பாதுகாப்புத் தத்துவங்களைப் பின்பற்றி, அகில நாட்டு அழுத்த நீர் அணு உலைகளின் [International Pressurised Water Reactors (PWR)] மேம்பாடுகளுக்கு இணையானவை என்று ரஷ்ய டிசைன் பதிப்பிதழ்களில் அறியப் படுகிறது. 2001 ஆண்டு வரை ரஷ்யா தனது புதிய VVER அணு உலை இயக்கத்தில் 1000 உலை ஆண்டுகள் [1000 reactor years Operating Experience] அனுபவம் பெற்றிருப்பதாக இறுமாப்புக் கொள்கிறது! 1996 டிசம்பர் வரை இருபது VVER-1000 அணுமின் உலைகள் [ரஷ்யாவில் 7, பல்கேரியாவில் 2, யுக்ரேயனில் 11] இயங்கி வருவதாக அறியப் படுகின்றன! VVER-1000 அணுமின் உலையில் “செறிவு யுரேனியம்” [Enriched Uranium, (2%-4%)U235 rest U238] எருவாகவும், அதில் எழும் வெப்பத்தைத் தணிக்கும் பிரதமக் கடத்தி நீராகவும் [Primary Coolant], நியூட்ரான் மிதவாக்கி [Neutron Moderator] நீராகவும், கொதிகலனில் துவித வெப்பக் கடத்தி [Secondary Coolant] நீராகவும் தனித் தனியாக மூன்று பணிச் சுற்றுகளில் சாதா நீர் பயன்படுகிறது.

VVER-1000 அணு உலைகளில் மாடல் 320, மாடல் 392 என்று இரண்டு மாடல்கள் உள்ளன. இரண்டில் VVER-1000 மாடல் 320 மிகவும் பிற்போக்கானது! அது செர்நோபிள் RMBK-1000 அணு உலை போல் கான்கிரீட் ஸ்டீல் கோட்டை அரண் இல்லாதது! அபாய வெடி விபத்து எதுவும் நேர்ந்தால், மாடல் 320 அணு உலைக் கதிரியக்கப் பொழிவுகள் வெளியேறிச் சூழ்மண்டலக் காற்றில் பரவும் வாய்ப்புள்ளது! ஆனால் VVER-1000 மாடல் 392 பல வேறுபாடுகள், செம்மைப்பாடுகள் கொண்டது. முக்கிய வேறுபாடு, அது இரட்டைக் கான்கிரீட் அரண்களை உடையது. வெளி அரண் ஒன்று கதிரியக்கக் கசிவை முற்றிலும் தடுக்க ஓர் ஸ்டீல் கவசமும் ஒரு மீட்டர் தடிமன் கொண்ட காங்கிரீட் அரணுடன் இணைக்கப் பட்டுள்ளது! இரண்டு அரண்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி சூன்ய மாக்கப் பட்டுக் கீழ் அழுத்தத்தில் [Negative Pressure (Partial Vacuum)] பராமரிக்கப் பட்டு வருகிறது! அவ்வித அமைப்பில் கதிர்வீச்சு வெளியேற்றம் முற்றிலும் தடுக்கப் படும்; அல்லது மிக மிகமிகக் குறைந்த அளவு கட்டுப்பாட்டில் வடிகட்டப்பட்டு வெளியேறும்.

VVER-1000 அணு உலையில் அடுத்த ஓர் மாறுபாடு, தீவிர அபாய விபத்து நேரும் சமயத்தில், அதைத் தடுத்துக் கையாளும் பராமரிப்பு ஏற்பாடுகள், அணு உலையோடு இணைக்கப் பட்டிருப்பது. விபத்து நேர்ந்த முதல் 24 மணி நேரம், நிறுத்தமான அணு உலைச் சூட்டைத் தணிக்க, இயக்குநர் குறுக்கீடு இல்லாமல் தானே நிகழும் “சுய இயக்க வெப்ப நீக்கும் முறைப்பாடு” [Passive Heat Removal System] சேர்க்கப்பட்டுள்ளது. முற்றிலும் அணு உலையை நிறுத்த முதற் தடுப்பு செய்யும் தடைக் கோல்கள் யாவும் தானாக இயங்குபவை! [Automatic First Shutdown System]. ஆறும் பூரணத் தொடரிக்க விளிம்பை [Sub-criticality Margins] நிலைநாட்ட மிகையான அணு உலை ஆட்சிக் கோல்கள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்து போரான் நஞ்சை உட்செலுத்தி [Boron Poison Injection] நியூட்ரான்களை விழுங்கி அணு உலை வெப்ப மீறலைத் நிறுத்த இரண்டாவது விரைவுத் தடுப்பு ஏற்பாடு [Second Quick-Acting Shutdown System] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது!

விபத்து நேர்ந்தால் அணு உலையில் மிஞ்சிச் சேமிக்கப் படும் ஹைடிரஜன் வாயு தீவிரமாய்த் தீப்பிடிக்க வாய்ப்பில்லாமல், “மீள் இணைப்பிகள்” [Hydrogen Recombiners] மூலம் ஆக்ஸிஜனுடன் சேர்க்க வைத்து, நீராக மாற்றப் படுகிறது! அணு உலையின் கதிர்வீசும் மையக்கருவில் [Radioactive Fuel Core] உலை இயங்கினாலும், அன்றி நிறுத்தப் பட்டாலும் தொடர்ந்து உண்டாகும் வெப்பம் எப்போதும் தணிக்கப்பட வேண்டும்! அபாயத் தடுப்பு மின்சாரம் பரிமாறாத [Emergency Power Supply] சமயத்தில் “வெப்பக் கடத்தி இழப்பு விபத்து” [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்தால், எரிக்கோல்களின் கனலை விரைவில் தணிக்க, “அணு உலை மையக்கரு நீர் வீழ்ச்சி ஏற்பாடு” [Reactor Core Flooding System] இணைக்கப் பட்டுள்ளது!

சமீபத்தில் VVER-1000 அணு உலைக்கடியில் செய்யப்பட்ட மாறுதல், விபத்து நேர்ந்த பின்பு, தீவிரக் கதிரியக்கமுள்ள யுரேனியக் கோல்கள் வெப்ப மீறுதலால் உருக ஆரம்பிக்கும் போது அவற்றைப் பிடித்துச் சேமித்துக் கொள்ளும், 100 டன் “எ·குக் கலம்” [Core-Catcher]. அந்த மாபெரும் கலம் எ·கு ஆக்ஸைடு செங்கற்கள் அடுக்கப்பட்டு [Ferrous Oxide Bricks] யுரேனியக் கோல்களின் வெப்பத்தைக் கடத்த [Uranium Melting Point 2800 C] பல லட்சக் கணக்கான காலன் நீர்த் தடாகத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது! மேலும் கூடங்குளம் அணு உலை தடித்த காங்கிரீட் சுவருள்ள இரட்டைக் கோட்டை அரணுக்குள் பாதுகாப்பாய் அமைக்கப் பட்டிருக்கிறது. வேகமாய் மோதும் ஒரு ஜெட் விமானம் கூடச் சிதைக்க முடியாத, முன் முடுக்கப்பட்ட உறுதியாக்கப்பட்ட காங்கிரீட் கோட்டை [Reinforced Pre-stressed Concrete Containment] அது! அகத்தே உள்ள கோட்டை புறத்தே உள்ள அரணை விடத் தடிப்பு சிறிதாயினும், அது தேனிரும்புத் தட்டுகள் சூழப் பிணைக்கப் பட்டது [Welded Carbon Steel Plates].

புதிய அணுமின் உலை டிசைனில் பாதுகாப்பு உறுதிப்பாடுகள்

VVER-1000 அணு உலையை அபாய வெடிப்பிலிருந்து காக்கும் “உள்ளடங்கிய பாதுகாப்புத் திறமைப்பாடுகள்” [Inherent Safety Features] முக்கியமாக இரண்டு:

1. கீழ் நோக்கிக் குன்றிவிடும் வெப்ப ஆற்றல் பண்பு [Negative Power Coefficient]: இம்முறைப்படி, அணு உலையின் வெப்ப உயர்ச்சி எந்த முறையிலும் மீறிவிடாமல் தானாகத் தணிந்து அடங்கிவிடும் தன்மை கொண்டது! [Any abnormal increase in reactor power is self-terminating]. விளக்கமாகச் சொன்னால் ஏதாவது ஒரு சம்பவம் தூண்டி, மிகையான வெப்ப சக்தி கிளம்பி விபத்துக்கள் நேர்வதும், அதனால் அணு உலை மையக்கரு [Reactor Core] உடைந்து போவதும் அபூர்வ நிகழ்ச்சிகள்!

2. கீழ் நோக்கிக் குன்றிவிடும் வெற்றிட ஆற்றல் பண்பு [Negative Void Coefficient]: இம்முறைப்படி, அணு உலையின் பிரதம வெப்பக் கடத்தி நீரில்லாது போனால், மித வேக நியூட்ரான்கள் குன்றிப்போய், அணு உலைத் தானாக நின்றுவிடும். [Loss of Primary Coolant to the Fuel Core causes the Reactor to shutdown by itself due to lack of thermal neutron production]

3. அபாய மின்சக்தி [Emergency Power Supply] இல்லாத சமயத்தில், நிறுத்தமான அணு உலையில் எழும் மிஞ்சிய வெப்பத்தைக் குறைக்க, அழுத்தவிசையில் 24 மணி நேரம் நீர் வெள்ளம் கொட்டும் பாதுகாப்பு ஏற்பாடு தானாக இயங்க அமைக்கப் பட்டுள்ளது.

4. கதிரியக்க வெளியேற்றத்தை அடக்கிக் கொள்ளும், கசிவற்ற இரட்டைக் கான்கிரீட் அரண்கள் உள்ளன. [Prestressed Concrete Containment Design Pressure 0.55 MPa (80 psi) Temperature 155 C]. உள்ளரண் மட்டுமே 1 மீட்டர் [40 அங்குலம்] தடிமன் கொண்டது! அத்துடன் கதிர்வீச்சுக் கசிவுகளை முற்றிலும் தடுக்க அதன் உட்புறம் 8 மி.மீடர் (1/4 அங்குலம்) தடிமன் தேனிரும்புக் கவசம் [Carbon Steel Shielding] பூண்டது.

5. பெரும்பான்மையான உலக அணுமின் உலைகள் “மூவழிச் சுற்றுப் பாதுகாப்பு” [Triple Channel Safety Protection (Electric Circuits)] முறையைக் கொண்டவை. கூடங்குள அணு உலை முதன்முதல் புதிதாக “நால்வழிச் சுற்றுப் பாதுகாப்பு” [Four Channal Safety Protection] ஏற்பாட்டை இணைக்கப் பட்டது. அதாவது அணுமின் உலை ஆட்சி ஏற்பாடும் [Reactor Control System], அணு உலை நிறுத்த ஏற்பாடும் [Reactor Shutdown Sytem] உளவுக் கருவிகளுடன் [Sensor Instruments] நான்கு தனித்தனியான மின்சுற்றுகளில் அமைக்கப் பட்டவை. அனுதினமும் அணு உலையின் நால்வழிச் சுற்றுகளில் ஒவ்வொரு ஆட்சி ஏற்பாட்டிலும், அதுபோல் ஒவ்வொரு உலை நிறுத்த ஏற்பாட்டிலும் பழுதுகள் உள்ளனவா என்று சோதனை செய்யப்படும். பழுதுகள் பிடிபட்டால் உடனே செப்பணிடப்படும். நான்கு வழிச்சுற்றுகளில் ஏதாவது இரண்டு சுற்றுகளில் பழுதுகள் நேர்ந்தாலும் சரி அல்லது அணு உலையில் மெய்யான தவறுகளைக் காட்டினாலும் சரி அணு உலை உடனே நிறுத்தமாகும்.

6. அணு உலை இயங்கும் போது வெப்பப் தணிப்பு பைப்பு பிளந்து நீர் வெள்ளம் வெளியேறினால் [Loss of Coolant Accident (LOCA)] அணு உலைக்கு நீரை உடனே ஈடு செய்து வெப்பத்தைத் தணிக்க அபாயத் தணிப்பு ஏற்பாடு [Energency Core Cooling Water System (ECCS)] தானாக நீரைக் கொட்டும். அடுத்து அணு உலையில் நியூட்ரான் எண்ணிக்கை ஏறாதபடி இருக்க போரான் திரவம் அதிக அழுத்தத்தில் பாய்ச்சப்படும் [Fast Liquid Boron Injection System to Absorb Neutrons].

செர்நோபில் விபத்துபோல் VVER அணுமின் உலையில் அபாயம் நிகழுமா?

சீர்குலைந்த செர்நோபிள் RMBK-1000 அணு உலை VVER-1000 அணு உலையைப் போலின்றி முற்றிலும் வேறுபட்டது! செர்நோபிள் அணு உலையில் நியூட்ரான் மிதவாக்கியாகப் பயன்பட்டது திரள்கரி [Graphite Moderator]. நிகழ்ந்த இரண்டு வெடிப்புகளில் ஒன்று சூடான திரள்கரியால் தூண்டப் பட்டது! திரள்கரிக்குச் சீர் கேடான ஓர் பண்பு உள்ளது. அணு உலைத் தொடர்ந்து இயங்கும் போது நியூட்ரான்கள் திரள்கரியைத் தாக்கி, “விக்னர் சக்தி” விளைவால் [Wigner Energy Effect] அதன் உள் உஷ்ணம் ஏறிக் கொண்டே போகிறது. அணு உலை நிறுத்தப் பட்டாலும், திரள்கரியின் உஷ்ணம் குன்றுவதில்லை! ஆகவே அணு உலை விபத்தின் போது நீரிலிருந்து பிரிவு படும் ஹைடிரஜன் வாயு தீவிரத் தீப்பற்றி வெடிக்க ஏதுவாகிறது! ஆனால் VVER-1000 அணு உலையில் நீர் மிதவாக்கியாகப் பயன்படுவதால், அத்தகைய அபாயம் எதுவும் இல்லை!

அடுத்துச் செர்நோபிள் அணு உலைக்கு காங்கிரீட் அரண் [Concrete Containment] இல்லாததால், வெடி விபத்தின் போது கதிரியக்கப் பொழிவுகள் எளிதாக வெளியே சூழ்மண்டலத்தில் பரவ வழி திறந்தது! VVER-1000 இல் இரட்டை அரண் உள்ளதால், கதிரியக்க விளைவுகள் வெளிக் காற்றில் கலப்பது அறவே தடுக்கப் படுகிறது! செர்நோபிள் வெடி விபத்து மனிதர் செய்த பல தவறுகளால் ஆரம்ப மானது! RMBK-1000 அணு உலை முதலிலே புறக்கணிக்கப் பட்ட பல டிசைன் குறைபாடுகளால் ஏற்பட்டது! சுய இயக்கப் பாதுகாப்பு முறைப்பாடுகள் சோதனை செய்யும் போது நீக்கப் பட்டு, விரைவாக மீறும் அணு உலையைக் கட்டுப்படுத்த மாந்தர் தாமாகக் கையாள முயன்றதால் நிகழ்ந்தது! அபாயத் தடுப்பு வெப்ப நீக்க ஏற்பாடுகளும் சோதனைக்காக ஒதுக்கப் பட்டதால் விபத்து நேர்ந்தது! நிச்சயமாக அவ்விதக் கோர விபத்து, பாரதத்தில் உருவாகும் ரஷ்யாவின் புதிய VVER-1000 அணுமின் உலையில் ஒருபோதும் நிகழவே நிகழாது!

பூகம்பத்தால் எதிர்பார்க்கும் விபத்துகளும் யுரேனியக் எரிக்கோல்கள் பாதுகாப்பும்

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 திண்ணையில் டாக்டர் இரா. இரமேஷ் எம்.பி.பி.எஸ் “நிலவியல் பிரச்சனைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும், கூடங்குளம் அணுமின் நிலையமும்” என்னும் அழுத்தமான ஓர் கட்டுரையை வெளியிட்டுள்ளார்! அவர் எழுதிய “கூடங்குளம் அணுமின் நிலையமும், தென் தமிழகத்தின் பூகம்பவியலும்” என்ற நூலின் சுருக்கமே அந்தக் கட்டுரை. கூடங்குள அணுமின் உலை சம்பந்தமாக அணுவியல் துறையகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் சுட்டிக் காட்டியது யாவும் வரவேற்கத் தக்கதே! அவற்றில் VVER-1000 அணுமின் உலைப் பாதுகாப்பு பற்றிய பெரும்பான்மையான உளவுப் பதிப்பீடுகள் அணுசக்தி துறையகத்தில் உள்ளன என்பது ஆசிரியரின் கருத்து. பூகம்பத்தின் போது பிரதம வெப்பக் கடத்திக் குழாய்கள் உடைந்து போனால், அணு உலையின் கதி என்ன ஆகும் என்றொரு கேள்வி அதில் எழுந்துள்ளது! அதனால் யுரேனிய அணுக்கருவின் வெப்பம் தணியாது, சூடேறி ஒரு கட்டத்தில் உருக ஆரம்பித்து ஒரு பெரு விபத்து ஏற்படச் சூழல் உருவாகுமே என்று டாக்டர் இரமேஷ் கேட்கிறார்.

முதலில் பிரதம வெப்பக் கடத்தி நீர் இழப்பால் [Loss of Coolant Accident (LOCA)], அணு உலைத் தானாக நிறுத்தமாகி, வெப்ப வளர்ச்சி குன்றுகிறது. இரண்டாவது உடனே குறைந்து ஆறும் மையக்கருவின் எஞ்சிய தொடர் வெப்பத்தைத் தணிக்க, 24 மணி நேர அழுத்தநீர் வெள்ளம் பாய்ச்சும் ஏற்பாடுகள், ஈர்ப்பியல் முறையில் [Gravity Flooding] இயங்க அரணுக்குள் அமைக்கப் பட்டுள்ளன. பூகம்ப ஆட்டத்தின் போது எவை உடையும், எப்படி உடையும், எங்கே உடையும் என்பதை உறுதியாக நிர்ணயம் செய்ய முடியாது. அபாயப் பாதுகாப்புக்குக் கூடங்குளத்துக்கு அருகிலே கடல் வெள்ளம் கொட்டிக் கிடப்பதை நாம் மறக்கக் கூடாது! எந்த வித விபத்து நேர்ந்தாலும், அணு உலை வெப்பத்தைத் தணிக்க, கடல் வெள்ளம் கடைசியாகக் கை உதவிக்குக் கண் எதிரே நமக்காகக் காத்துக் கிடக்கிறது! செர்நோபிள் அணு உலை வெடித்து எரியும் போது, ஹெலிகாப்டரில் பல நாட்கள் பறந்து கொண்டு டன் கணக்கில் காங்கிரீட்டைக் கொட்டித் தீயை அணைத்து கதிர்வீச்சைக் குறைத்தார்கள்! கூடங்குளத்தில் கடல் வெள்ளம்தான் கடைசி உதவி! பூத அணுமின் உலை இயங்க ஆரம்பிக்கும் முன்பு, பொது மக்களுக்கு அபாய விளைவுப் பாதுகாப்புப் பயிற்சி முறைபாடுகள் [Emergency Preparedness] அறிவிக்கப்படும் என்றும், அதற்காக அடிக்கடிப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்பதும் எதிர்பார்க்கப் படுகிறது.

[முற்றும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy
[www.world-wire.com/news]

20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

21. Chernobyl’s Legacy: Health Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

23. Chernobyl Reactor Accident 1986 By: Robert Johnson [May 11, 2005]

24. The Nuclear History Site/Historical Safety Record Vi Lenin – Chernobyl

25. Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Accident Sequence, The RBMK Reactor, Events Leading to the Accident, The Graphite Fire [2002 Update]

26 RBMK Reactors – Nuclear Issues Briefing Paper # 64A [Feb 2002]

27. Development of Improved Safety with the Russian VVER-1000 Reactor Plant [Kudungalam Model] Following Three Mile Island & Chernobyl Reactor Accidents By: Valery P. Novak, Alexander K. Podshibyakin & Mikhail P. Rogov.

28. Indo-Russian Seminar on Safety of Kudungulam VVER-1000 Reactors at Chennai [Nov 5-6 1998]

29. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html [Authour’s article on Kudungulam in Thinnai

30. Passion for Safety -Special Feature: Kudungulam Nuclear Power Project By: T.S. Subramanian [April 23, 2004]

31. World Nuclear Association Report: Nuclear Power in Russia [June 2006]

******************

jayabarat@tnt21.com [July 5, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா