சூபியின் முகமூடி மட்டும்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

வஹ்ஹாபி


சூபி முகம்மது என்பவர் திண்ணையில் [http://www.thinnai.com/le0217062.html] என்னுடைய கடிதத்தை [http://www.thinnai.com/le0203061.html] விமர்சித்து ஓர் எதிர் மடல் எழுதியிருக்கிறார்.

அவருடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்த அவருக்கும் அச்சேற்றிய திண்ணைக்கும் முதற்கண் என் நன்றி!

‘வகாபிய கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஹெச்.ஜி.ரசூல் முன்வைத்த பல முக்கியமான விடயங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை ‘ என்பதுதான் சூபியுடைய குற்றச்சாட்டு.

அக்குற்றச்சாட்டுக்கு பதில் தருமுன் ஒரு சிறு திருத்தம்:

வகாபிய கருத்துக்கள் ‘ என்று தனியாக இஸ்லாத்தில் ஏதுமில்லை. எனவே, ‘வஹ்ஹாப் உடைய கருத்துக்கள் ‘ என்று திருத்திப் படித்துக் கொள்க! அதற்கு உடன்பட மனமில்லையெனில், ‘அல்-குர் ஆன் ‘ என்று மாற்றிக் கொள்க!

இனி,

‘பதில் சொல்லப் படாத முக்கிய விடயங்கள் ‘ என்ற குற்றச்சாட்டுகளுக்கு வருவோம்.

(1அ) ‘பிரதேச தன்மைகளை அழித்து (1ஆ ) அரேபிய வகைப்பட்ட ஒற்றைச் சமய அடையாளம் பேசும் அறிவு வாதம் ‘

(2) ‘தனி நபர் மைய வாதம் ‘

(3) ‘லாபக் கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு ‘

மீக்கூறிய மூன்றில் முதலாவதான (1அ,1ஆ) குற்றச்சாட்டுக்கு திண்ணையில் என் முதல் மடலிலேயே http://www.thinnai.com/le0203061.html பதில் உள்ளது:

____

‘… தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது வஹ்ஹாபிஸத்தின் அடிப்படை நோக்கமாகும். இதனை அரபு வகை( ?)ப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும் சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமய மாதிரியாகவும்… ‘ சொல்லலாமாம்.

இஸ்லாத்தில் இல்லாததும் இடையில் வந்து சேர்ந்ததுமான சமாதி வழிபாட்டை (மரபுவழி பண்பாட்டியல் ?) அப்புறப் படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும்.

இதில் ‘அரபுவகை ‘ என்று தனிவகை ஒன்றுமில்லை. கடமையாற்றுகிறவன் தமிழனாக இருப்பதில் கட்டுரையாளருக்கு என்ன நட்டம் ?

____

‘தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள் ‘ என்று கட்டுரையாளர் குறிப்பிட்டதைத்தான் ‘பிரதேசத் தன்மைகள் ‘ என்று சூபி மொழிபெயர்த்து விட்டு, அதற்கு பதில் தரவில்லை என்கிறார்.

‘நான் சொல்ல வந்தவை வேறு ‘ என்று சூபி மறுத்தாரெனில் வேறு ‘பிரதேசத் தன்மை ‘களுக்கும் பதிலுண்டு:

‘உலக மக்களின் மார்க்கம் ‘ (அல்- குர் ஆன் 030:030) என்று பொதுவுடமையோடு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட இஸ்லாம் , பிரதேசத் தன்மைகளான நாடு, மொழி, மரபு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் மீறிச் செம்மாந்து நிற்கும்போது ‘ பிரதேசம் ‘ என்ற குறுகிய வட்டதுக்குள் இஸ்லாத்தை அடக்க முயல்வது பேதைமையேயன்றி வேறென்ன ?

இரண்டாவதாக,

‘தனி நபர் மைய வாதம் ‘ அதாவது, ஒரேயொரு நபருடைய கருத்துகளை/கட்டளைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்றவற்றைப் புறந் தள்ளுவது.

இதுவும் தவறான குற்றச்சாட்டாகும்.

ஒரு முஸ்லிம், இருவருடைய கருத்துகளுக்கும் கட்டளைகளுக்கும் கட்டுப்பட வேண்டும்: 1. அல்லாஹ் 2. அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்). அவன்/அவள்தான் உண்மையான வஹ்ஹாபி.

மூன்றாவதும் முடிவானதுமான குற்றச்சாட்டு நகைப்புக்குரியது: ‘லாபக் கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு ‘

சூபியே குறிப்பிட்டபடி புரிந்து கொள்ளவே ‘சிரமப் படுகின்ற ‘ சொல்லாட்சி( ?). அதற்கும் அவரே காரணம் சொல்கிறார் ‘தமிழுக்கு இவ்விடயங்கள் புதிது ‘. இதுதான் சிக்கல்! வேறென்ன… தமிழில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் என்னைப் போன்ற பாமரனும் ‘சிரமப் படாமல் ‘ புரிந்து கொள்வோம். அதை விடுத்து, கிரேக்கத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் அதன் கருப் பொருளை என் போன்றோர் கருத்திலெடுப்பது கடினமன்றோ !

எனினும், நான் ‘சிரமப் பட்டு ‘ மூன்றாவது குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டது யாதெனில் , ‘தன் பொருளாதாரத்தை முதலீடு செய்யும் ஒவ்வொரு வஹ்ஹாபியும் இலாபத்தை எதிர் பார்ப்பான் ‘ சரியா ?

எனில், மூன்றாவது குற்றச்சாட்டை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

அடுத்து,

‘எவ்வித உழைப்புமின்றி ‘முதலாளி ‘ ஆவதற்குத்தான் இந்தியா முழுதும் சமாதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை; மக்களை ஏய்த்துப் பிழைத்து வாங்கிய கார்களுக்குப் பெட்ரோல் போடக் காசு சேர்வதில்லை ‘ என்று நான் பொத்தாம் பொதுவாகப் பேசுவதாக சூபி குற்றம் சாட்டுகிறார்.

‘கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை ‘ என்பது என் ‘பொத்தாம் பொது ‘க் கருத்தன்று. உண்மை நிலையை, இப்போது உள்ள நிலவரத்தைக் கண்களால் கண்டு எழுதியதே! வேண்டுமெனில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிரம்பிய உண்டியல் வளத்தையும் இப்போதுள்ள வறட்சி நிலையையும் ஒரு சர்வே எடுத்துப் பார்த்து சூபி தெரிந்து கொள்ளட்டும்.

அதற்கு முன்னர், என்றைக்கோ இறந்துபோனவர்களின் சமாதிகளைக் காட்டி, மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் ‘முதலாளி ‘கள் எந்தவகையான உழைப்புச் செய்கிறார்கள் என்று தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

மேலும்,

ஓர் உலவி புத்தகம் எழுதியும் தொலைக் காட்சி விளம்பரங்கள் வழியாகவும் சம்பாதித்துப் பணக்காரராகி விட்டாராம். அந்த உலவி ஓர் ஊழல் பேர்வழியாம். அவையும் என் மடலுக்கு பதிலாம். (திண்ணையின் கட்டுப்பாடுகளுள் ‘Avoid emotional and abusive language ‘ என்பதும் அடங்கும். சூபிக்கு விதிவிலக்கு போலும்)

அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்திருக்கும் சூபியின் நிலையை எண்ணிப் பரிதாபப் படுவதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.

கந்தூரிகளின் வழியே நிரம்பிய தர்கா உண்டியல்கள் தற்போது ஏகத்துவ எழுச்சியால் வறண்டு போனது ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் ஏகத்துவ எழுச்சிக்கு ஈடு கொடுக்க முடியாதவர்களின் இயலாமையினால் இந்த அளவுக்குச் சிந்தனையிலும் வறட்சி ஏற்பட்டிருபதும் பரிதாபத்திற்குரியதே!

நான் யாரைச் சார்ந்தவன் என்பதைத் தெளிவாக http://wahhabipage.blogspot.com/2006/01/blog-post.html என்ற என் வலைப்பூவில் பிரகடனப் படுத்தியிருக்கிறேன்.

மேலும் என்னுடைய இயலாமையைக் கீழ்க்காணும் வகையில் வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறேன்:

____

வகாபிசமும் நவீன முதலாளியமும் என்ற தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை-2

இஸ்லாமிய அடித்தள (அறிவுகூட கற்பிக்கப் படாத பாமர) மக்கள் முன்வைக்கும் பாரம்பரிய (பிறமத) மரபுகள், (மூட)நம்பிக்கைகள், (போலிச்)சம்பிரதாயங்கள் மீதான தீவிரமான அறிவுவாத விமர்சனங்களை வகாபிசம் முன்வைக்கிறது. பகுத்தறிவின் (அடிப்படையான இறை)விசுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லை( ?) வரை சென்று தர்க்க ரீதியாக நிலைநிறுத்த முயல்கிறது. நவீனத்துவத்தின் முக்கிய கூறான அறிவுவாதம் மேற்குலகில் மதவிலக்கக் கூறுகளை கொண்டதாக இயங்கியது. அரபு மற்றும் ஆசிய சூழலில் இது அடித்தள மக்கள் சார்ந்த இஸ்லாத்தின் (பாற்படாத) விளிம்பு நிலை மரபுகளை விலக்க முனைந்தது. மைய நீரோட்ட ஏகத்துவத்தின் மீது மட்டும் தனது பகுத்தறிவு பார்வையை(ப்) பயன்படுத்த(த்) தடைவிதித்தது. எனவேதான் அடித்தள மக்களின் (இஸ்லாத்திற்குத் தொடர்பில்லாத) சிறுமரபுகளின் மீது எதிர்ப்பும், (இஸ்லாத்தின் அடிப்படையான இறைமறை மற்றும் நபிவழிப்) பெருமரபு மீது பரிபூரண நம்பிக்கையும் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டது. ( ‘)விஞ்ஞானங்களின் தாயாக(த்) திருக்குர்ஆன் வாழ்கிறது. இஸ்லாத்தைவிட அறிவு சார்ந்த மார்க்கம் வேறில்லை ‘ என்பதான பிரச்சாரங்களினூடே ஒரு இஸ்லாமியனின் அடிப்படை என்பதே ‘அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளுதலே ஆகும் ‘ என்பதாகச் சொல்லி அறிவின் இடத்தை நம்பிக்கையால் நிரப்பியது.

____

அடைப்புக் குறிகள் தவிர்த்த மேற்காணும் கருத்துகள் ஹெச். ஜி. ரஸூலுக்குச் சொந்தமானவை. அடைப்புப் குறிக்குள் உள்ளவை என்னுடையவை.

‘அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும், மறைபொருளாக இருக்கின்ற மலக்குமார்களின் மீதும், மறுமை வாழ்வு, சொர்க்கம், நரகம் மீதும் ஈமான் கொள்ளும் ஒரு நம்பிக்கையாளன் அறிவாளியாக இருக்க முடியாது அல்லது தன்னை அறிவாளி என்று சொல்லிக் கொள்பவன், மேற்காணும் நம்பிக்கை கொள்ளக் கூடாது ‘ என்பதுதான் கட்டுரையாளர் கூற முனையும் கருத்தாக இருக்க முடியும்.

கட்டுரையாளரின் கற்பனையில் உதித்த போலிஅறிவாளியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.

இறுதியாக, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு இஸ்லாம் (அல்லது வஹ்ஹாபிஸம்) வலியுறுத்துகிறது. சூபிக்காக பிரார்த்தனை செய்வது மட்டுமே இப்போது என்னாலானது.

ஃஃஃ

to.wahhabi@gmail.com

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி