சூத்ரதாரியின் மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

சூத்ரதாரிஉள்ளங்கை பூமி

நகக்கண் துளை பிளந்து
உருவியெடுத்தேன் உள்ளங்கை ரேகைகளை
பிடுங்கிய செடியின் வேர்கள்என
பிறவிச்சிக்கல்கள்

செத்துப்போயிருந்தது தன ரேகை
பாதியாய் ஆயுள் ரேகை
முடிச்சுகள் நிறைந்து புத்திர ரேகை ஒருபக்கம்
கந்திப்போய் அதிர்ஷ்ட ரேகை மறுபக்கம்

உதறியெறிய சிதறி விழுந்தன அத்தனையும்
நிதானமாய்
நிபுணத்துவத்துடன்
உள்ளங்கை விரிப்பின் மத்தியில்
வகிடெனப்பதித்தேன் பூமத்திய ரேகையை
வரி வரியாய் அட்ச ரேகைகளை அடுக்கியபின்
வெட்டி வெட்டி ஒட்டினேன் தீர்க்க ரேகைகளை

விரல்களின் நீட்சியில் புதுப்பலம் பெற்று
என் விதி அதன் விதியாகி
சுழலத் தொடங்கியது
உள்ளங்கை பூமி

8888


அபேதம்

கரையெங்கும்
உதிர்ந்த நட்சத்திரங்களின் உடல்கள்
ததும்பும் துயரத்தின்
துளி உண்டு
அலைகள் உயிரடங்கும்
கட்டுமரங்களின் விளிம்பில்
தத்தும் கடல்பறவை
அதன் கண்களில்
மணல்வெளி மீன்கள்

ருசியறியா தவிப்பும் தயக்கமும்
உடல்குலைக்க
பூமியை முத்தமிட்டு மீளும் மின்னலென
சட்டென்று சரிந்திறங்கி
கவ்வியெடுத்து காற்றிலேறும்
அதன் அலகில் மின்னுகிறது
சற்றே ஒளிரும் ஒரு நட்சத்திரம்.


அநேகமாய் அவன்

இப்புவியை வண்ணங்களால் நிரப்பிய அவன்
அநேகமாய் குருடனாய் இருக்கவேண்டும்

காற்றுவெளியை இசைமயமாக்கிய அவன்
அனேகமாய் காது கேளாதவனாய் இருக வேண்டும்

உன்னத மெளனத்தை
உரத்த வார்த்தைகளாக்கிய அவன்
அநேகமாய் ஊமையாய் இருக்கவேண்டும்

எழில்தொலைவும்
எட்டாத சிகரமுமாய்
திசைகளை தீட்டிய அவன்
அநேகமாய் முடவனாய் இருக்கவேண்டும்

நிலையற்ற பிறப்பையும்
நிறைவற்ற இருப்பையும்
தாட்சண்யமின்றி ஒன்றுபோல் எழுதிய அவன்
அநேகமாய் பூரணமாய் இருக்கவேண்டும்

[நன்றி ‘குரல்களின் வேட்டை ‘. சொல்புதிது வெளியீடு
தட்டச்சு ஜெயமோகன்]

***
jeyamohanb@rediffmail.com

Series Navigation

சூத்ரதாரி

சூத்ரதாரி