சுயம்பிரகாசம்

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

கௌரி கிருபானந்தன்



லேசாகக் கசங்கியிருந்த காட்டன் புடவையில் தலையில் கோடாலி முடிச்சுடன், கையில் காய்கறிப் பையுடன் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்து பெண்மணியை பானுமதி என்று உடனே என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சாலையின் மறு பக்கம் காரை நிறுத்திவிட்டு பழங்களை வாங்கிக் கொண்டிருந்த எனக்கு, அந்தப் பக்கத்திலிருந்து கவனமாக சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வந்து கொண்டிருக்கும் அவளைப் பார்க்கும் போது பானுமதிதான் உறுதியாகத் தெரிந்த பிறகும் ஏதோ ஒரு சந்தேகம் என்னை விட்டுப் போகவில்லை.
ஏனென்றால் இருபத்தி ஐந்து ஆண்டுகளாகப் பழகிய ஆழமான நட்பில் பானுமதி இவ்வளவு சாதாரணமான புடவையை உடுத்திக் கொண்டு நான் பார்த்ததே இல்லை. பானுமதி என்றதுமே யாருக்குமே மொட மொடவென்று கஞ்சி போட்டு இஸ்திரி செய்த காட்டன் புடவையில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்மணியின் உருவம்தான் கண்முன்னே தோன்றும்.
அவள் சாலையைக் கடந்து, இந்தப் பக்கம் வந்ததும் ‘பானுமதீ!’ என்று அழைக்கப் போனேன். சரியாக அதே நேரத்தில் அவளும் என்னைப் பார்த்தாள்.
“இந்தூ! எங்கே இந்தப் பக்கம்?” என்று கேட்டுக் கொண்டே வேகமாக அருகில் வந்தாள். அந்த வேகத்தைப் பார்த்த பிறகு அவள் பானுமதிதான் என்ற நம்பிக்கை வந்தது எனக்கு. ஐம்பது வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படுவது அவள் ஒருத்திக்குத்தான் சாத்தியம்.
“உனக்காகத்தான் தாயே! உங்க வீட்டுக்குத்தான் கிளம்பினேன்” என்றேன்.
வீட்டுக்குப் போனதும் பூட்டைத் திறந்தாள். நான் சோபாவில் அமர்ந்துகொண்ட பிறகு ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். பிறகு சமையலறை வாசலில் ஒரு மடக்கு நாற்காலியைப் போட்டு “இங்கே வா. இப்படி உட்கார்ந்து கொண்டு உன் சமாச்சாரங்களைச் சொல்லு. கேட்டுக் கொண்டே டிபனைத் தயாரிக்கிறேன்” என்றாள்.
தண்ணீர் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு பானுமதியின் அறைக்குப் போக எண்ணியிருந்த நான் அப்படியே நின்றுவிட்டேன். என்னைப் போறுத்தவரையில் பானுமதியின் அறை சுவர்க்கத்திற்கு சமம். ஒரு அரை மணி நேரம் அந்த அறையில் உட்கார்ந்துகொண்டால் ஒரு மாதத்திற்கு உற்சாகமாக வேலை செய்யக் கூடிய சக்தி எனக்குக் கிடைத்துவிடும்.
மெலிதாக ஒலிக்கும் கர்நாடக இசை, ஜன்னல் வழியாக வீசும் பவழமல்லி மலரின் நறுமணம், அழகான விரிப்புடன் கட்டில், பக்கத்திலேயே மேஜை மீது மார்க்கெட்டில் புதிதாக வெளியான புத்தகங்கள்.
எப்போ இங்கே வந்தாலும் அந்த அறைக்குள் அடைக்கலமாகி, கட்டில் மீது சாய்ந்துகொண்டு இசையை ரசித்தபடி, புத்தகங்களைப் புரட்டிக் கொண்டே பானுமதியின் பேச்சைக் கேட்கும் எனக்கு இன்று சமையலறை வாசலில் என்னை உட்காரச் சொன்னது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.
“இப்போ டிபன் எதுவும் வேண்டாம். கொஞ்ச நேரம் உன் அறையில் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருப்போம்” என்றேன்.
“சரி. நீ போய் உட்காரு. பத்து நிமிடங்களில் வருகிறேன். குழந்தைகள் பசியோடு வருவார்கள்” என்றாள்.
“குழந்தைகளுக்காகவா டிபன்?”
பானுமதி சிரித்தாள். “உனக்கும் சேர்த்துதான்” என்றாள் என் கோபத்தைப் புரிந்துகொண்டவள் போல்.
“சரி, சீக்ரமாக செய்து முடி.” ஹால் சோபாவிலேயே அமர்ந்துகொண்டேன்.
“ஆனந்த் எப்போ வருவான்?” பக்கோடாவுக்காக மாவு பிசைந்துகொண்டிருந்த பானுமதியைப் பார்த்துக்கொண்டே கேட்டேன்.
“அவனா? குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் இல்லை அவனுக்கு. ஒருநாள் ஏழுமணி என்றால் இன்னொரு நாள் எட்டு மணி. எல்லாமே அவன் விருப்பம்.”
“பின்னே இப்போ இந்த டிபன் கிபன் எதுக்கு? இப்போ மணி ஐந்துதானே ஆகிறது?” என்றேன் வியப்புடன்.
“அவனுக்காக யார் செய்கிறார்கள்?” பானுமதி அதைவிட வியப்புடன் கேட்டாள். “மருமகளும், பேரனும் இப்போது வந்து விடுவார்கள் இல்லையா?”
அவள் வார்த்தை இன்னும் முடியும் முன்பே சுகுணா உள்ளே வந்தாள். “சௌக்யம்தானே?” ஏதோ மரியாதைக்குக் கேட்க வேண்டும் என்பது போல் அரை முறுவலுடன் கேட்டாள்.
“ஊம்” என்றேன் ஆர்வமில்லாத குரலில். எனக்கு ஏனோ அந்தப் பெண்ணைப் பார்த்தால் குசலம் விசாரிக்கக் கூடத் தோன்றாது. முகத்தைத் திருப்பிக் கொண்டே பின்னாலேயே வந்த பேரனை விசாரித்தேன். செருப்புகளை கழற்றி விட்டு முகம் அலம்பிக் கொண்டு வந்து சோபாவில் சரிந்தாள் சுகுணா. பானுமதி கைக்காரியத்தை நிறுத்திவிட்டு மருமகளுக்கும் பேரனுக்கும் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள்.
பேரனுக்குப் பள்ளி உடைகளை மாற்றி வேறு உடைகளை அணிவித்தாள். முகத்தை ஈரத்துணியால் துடைத்துவிட்டாள். எல்லோருக்கும் தட்டுகளில் பக்கோடாவை பரிமாறினாள்.
அவள் இந்தக் காரியங்களைச் செய்துகொண்டிருந்த போது சுகுணா கால்களை டீபாய் மீது வைத்துக் கொண்டு சோபாவில் பின்னால் தலையைச் சாய்த்து கண்களை மூடிய நிலையில் அப்படியே அமர்ந்திருந்தாள். மருமகளுக்கு பானுமதி செய்யும் பணிவிடைகளைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. இந்த வயதில் அவள் விழுந்து விழுந்து காரியங்களைச் செய்யும் பொது என் கண்களில் நீர் சுழன்றது. வாழ்நாள் முழுவதும் இவளுக்கு இவ்வளவு கஷ்டங்கள் ஏன்?
இருபத்தி ஐந்து வயதில் கல்யாணமாகி சரியாக ஒரு வருடம் முடியும் போது சாலை விபத்தில் கணவன் இறந்து போய் விட்டான். அதற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து ஆனந்த் பிறந்தான். இத்தனை நாட்களும், இத்தனை வருடங்களும் தனியாக அந்த மகனைப் பார்த்துக் கொண்டே வாழ்ந்தாள். அவனைப் படிக்கவைத்தாள். நல்ல வேலை கிடைத்ததும் பொருத்தமான பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள்.
இனி மேலாவது நிம்மதியாக இருக்கப் போகிறாள் என்று நினைத்தால் இப்பவும் செக்குமாடு போல் வீட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறாள்.
பானுமதி கொண்டு தந்த காபி டம்ளரை வாங்கிக் கொண்டே “அவருடைய நண்பரும் சாப்பிட வருவாராம். ஆபீசுக்குப் போன் செய்து சொன்னார். புதுசாக சமைக்கணும் இப்போ” சுகுணா தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் சொன்னாள்.
அவள் யாரிடம் சொல்லிக்கொண்டிருந்தாளோ எனக்குப் புரியவில்லை. மாமியாரிடம் சமையல் பொறுப்பை ஒப்படைக்கும் சாமர்த்தியமோ என்று நினைக்கத் தோன்றியது. பானுமதியின் பக்கம் கோபமாகப் பார்த்துக்கொண்டே “உன்னுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருப்போம் என்று வந்திருக்கிறேன். இனி மேலாவது உன் அறைக்குப் போய் பேசுவோமா?” என்றோன்.
என் கோபத்தைப் புரிந்துகொண்டவள் போல் முறுவலித்துவிட்டு, மறுபடியும் சுகுணாவின் பக்கம் திரும்பினாள்.
“என்ன காய்கறி நறுக்கணுமோ எடுத்துக் கொடு. நறுக்கித் தருகிறேன்” என்றாள் பானுமதி.
சுகுணா பையிலிருந்து காய்கறியை வெளியே எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது பானுமதி மறுபடியும் சமையலறைக்குச் சென்று எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். நானும் சமையலறையில் நின்றுகொண்டேன்.
பானுமதி பாலும், டிகாஷனும் கலப்பதைப் பார்த்துவிட்டு “இன்னும் யாருக்கு காபி?” என்றேன்.
“உனக்குத்தான். கெஞ்ச நேரம் கழித்து மறுபடியும் குடிப்பாய் இல்லையா?” என்றாள்.
அரைமணிக்கு ஒரு தடவை காபி குடிக்கும் பழக்கம் எனக்கு.
“எப்போ வேண்டுமோ அப்போ கலந்து கொள்ளலாமே?” என்றேன்.
“கலந்து வைத்துவிட்டால் வேண்டும் என்ற போது சுகுணா சுட வைத்துத் தருவாள்” என்றாள், பானுமதி அதில் சர்க்கரையும் போட்டுக் கொண்டே.
அதற்குப் பிறகு சுகுணா எடுத்து வைத்த காய்கறியை, கத்தியை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தாள்.
நான் கட்டில் மீது அமர்ந்துகொண்டேன். அவள் மேஜை முன்னால் உட்கார்ந்துகொண்டு காயை நறுக்கத் தொடங்கினாள்.
மலர்களின் நறுமணத்துடன், இனிமையான இசையுடன் அதேதோ புதிய உலகம் என்பது போல் இருந்த அந்த அறையில் பானுமதி உருளைக்கிழங்கின் தோலியை சீவிக்கொண்டிருப்பது என் மனதை உறுத்தியது.
“சாப்பாட்டுக்கு ஒரு ஆள் கூட வந்தால் உன் மருமகளால் சமைக்க முடியாதா?” எரிச்சலுடன் கேட்டேன்.
“ஏன் சமைக்க முடியாது? சமைப்பாளே.” நிமிர்ந்து பார்க்காமலேயே சொன்னாள்.
“எங்கே? பாதி வேலையை நீதான் செய்துகொண்டிருக்கிறாயே?” என்றேன்.
பானுமதி என் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். “நன்றாகச் சொன்னாய் போ. பாதி வேலையை நான் செய்கிறேனா? கறிகாய் நறுக்கித் தருகிறேன். அவ்வளவுதானே?” என்றாள்.
“உன் மருமகள் இன்னும் சமையல் அறைக்குள் போகவே இல்லையே? சோபாவில் உட்கார்ந்துகொண்டு சமைக்கணும் சமைக்கணும் என்று ஜபம்தானே செய்கிறாள்.” இந்த முறை என் குரலில் கடுமை ஸ்பஷ்டமாக வெளிப்பட்டது.
பானுமதி வியப்புடன் என் பக்கம் பார்த்தாள். “அந்தப் பெண்ணைக் கண்டால் உனக்கு அவ்வளவு எரிச்சல் ஏன்?” என்றாள் லேசாகக் கடிந்துகொள்வது போல். “சமையல் அறைக்குப் போகமல் எப்படி இருக்க முடியும்? சமையலறைக்குள் போகணும். விதவிதமாக சமைக்கணும். ஆனந்த் தன்னுடைய நண்பனை அழைத்துக் கொண்டு வருவான். அவர்கள் ஊர்க்கதைகள் எல்லாம் பேசிவிட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் சாப்பிட வந்தால் பொறுமையாக நின்றுகொண்டு பரிமாறணும். அதற்கு மேல் சமையல் அறையை ஒழுங்குப்படுத்தணும். மறுபடியும் காலையிலேயே எழுந்து ஆபீசுக்கு ஓடணும். குழந்தையைச் சமாளிப்பது, அவனுக்கு வேண்டியதை எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்வது, இதெல்லாம் எப்படியும் இருக்கும்.”
பேசிக்கொண்டே பானுமதி வேகவேகமாக காயை நறுக்கினாள். பதற்றத்துடன் காய்கறி குப்பையை எடுத்துப் போட்டுக்கொண்டே “அவன் வந்து விடுவானோ என்னவோ” என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல் சொன்னாள். மறுபடியும் அதே வேகத்துடன் சமையலறைக்குப் போய் நறுக்கிய காய்களை சுகுணாவிடம் கொடுத்தாள்.
பிறகு நிதானமாக வந்து என் எதிரில் அமர்ந்துகொண்டு “ஊம். இப்போ சொல்லு உன் சமாச்சாரங்களை” என்றாள்.
நான் முகத்தில் பெரிய கேள்விக்குறியை வைத்துக்கொண்டு “என்ன பானூ இதெல்லாம்?” என்றேன்.
“எதைச் சொல்கிறாய்?” புரியாதவள் போல் கெட்டாள்.
“ஆனந்தைப் பார்த்து நீ பயப்படுகிறாயா?” உலகத்தின் எட்டாவது அதிசியத்தைப் பார்ப்பது போல் கேட்டேன்.
பானுமதி சிரித்துவிட்டாள். “பயம் இல்லை. அவன் வரும்போது நான் ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டால் ரகளை செய்வான். ‘எங்க அம்மாவிடம் வேலை வாங்குகிறாயா?’ என்று நான்கு நாட்கள் அவளைச் சொல்லிக் காட்டுவான். அதனால் அவன் எதிரில் எதுவும் செய்யமாட்டேன். எந்த உதவி செய்தாலும் அவன் இல்லாத போதுதான். அவன் வந்துவிட்டான் என்றால் இனி வீட்டு வேலைகளை எல்லாம் அவளே செய்துகொள்வாள் பாவம்!” என்றாள்.
எனக்கு மறுபடியும் எரிச்சல் ஏற்பட்டது. “பாவம் என்று நீ இரக்கப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. கணவனுக்கும், குழந்தைக்கும் சமைத்துப் போடுவதுகூட ஒரு கஷ்டமா என்ன? அப்படிப் பார்த்தால் நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாய் இத்தனை வருடங்களாக?” என்றேன்.
பானுமதி வித்தியாசமாகச் சிரித்தாள். “நீ கூட அதே வார்த்தையைச் சொல்கிறாயா?” என்றாள் விரக்தி கலந்த குரலில். “அதனால்தான் ஆனந்தை எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நீ என்னுடைய உயிர் சிநேகிதி. ஆதியிலிருந்தே என்னைக் கவனித்துக் கொண்டிருப்பவள். நீ கூட என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் … நான் கஷ்ப்பட்டதாகச் சொல்கிறாய் என்றால், இனி அவன் சொல்வதில் வியப்பென்ன இருக்கு?”
பானுமதி என்ன சொல்கிறாளோ எனக்குப் புரியவில்லை. “ஆதியிலிருந்து கவனித்து வந்ததினால்தானே நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாய் என்று புரிந்துகொண்டேன்” என்றேன் வியப்புடன்.
“என்ன புரிந்துகொண்டாய்? நீ எதையும் புரிந்துகொள்ளவில்லை. இத்தனை நாளும் என்னை சரியாக கவனிக்கவில்லை என்றும், என் வாழ்க்கையின் போக்கை, எண்ணங்களை, தீட்சையை ….. எதையுமே நீ உணரவில்லை என்றும் இன்று புரிந்துகொண்டேன்.” பானுமதி சொன்னாள்.
“அப்படி என்றால்?” வியப்புடன் அவள் பக்கம் பார்த்தேன். “நீ கஷ்டப்படவே இல்லை என்று சொல்கிறாயா?”
என் வியப்பைப் பார்த்து பானுமதி முறுவலித்தாள். “எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை உங்கள் எல்லோருக்கும், வாழ்க்கையில் நான் ரொம்ப கஷ்டங்களை அனுபவித்தேன் என்று. ஆனந்த ஒரு நாளைக்குப் பத்து தடவையாவது சொல்லுவான், ‘எங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறாள். … ரொம்ப துன்பங்களை அனுபவித்திருக்கிறாள்’ என்று. அது அவனுக்கு தினப்படி பாராயண மந்திரம். நான் ஏதாவது வேலை செய்வது அவன் கண்ணில்பட்டால் போதும் ‘அம்மா! நீ உட்காரு முதலில்’ என்று ரகளை செய்வான். சுகுணாவை அழைத்து ‘எங்க அம்மாவை இன்னும் கஷ்டப்படச் சொல்கிறாயா?’ என்று எரிந்து விழுவான். அதைப் பார்க்கும் போது எனக்கு வேடிக்கையாக இருக்கும். அந்தப் பெண்ணும் உடலால் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். காலையில் எழுந்தது முதல் இரவு படுத்துக்கொள்ளும் வரையில் பம்பரமாகச் சுழன்றுகொண்டே இருப்பாள். அதெல்லாம் அவன் கண்ணில் படவே படாது. நீ இப்போ சொன்னாயே, அது போல் கணவனுக்குச் சமைத்துப் பொடுவதுகூட கஷ்டமா உனக்கு என்று அவளைச் சாதிப்பான். அப்படி பார்க்கப் போனால் நான் அந்த சிரமமும் படவில்லையே? ஏன் என்றால் சமைத்துப் போடுவதற்கு எனக்குக் கணவனே இல்லையே? பின்னே அவன் ஏன் இப்படி சொல்கிறானோ எனக்குப் புரியவில்லை. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாள் என்று அவன் அடிக்கடி சொல்லும் பொது அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.”
நான் அவள் பக்கம் நேராகப் பார்த்தேன். “கணவன் இல்லாமல் போனது, தாம்பத்திய சுகத்தை இழந்துவிட்டு, விருப்பங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழ வேண்டி வருவது கஷ்டமான விஷயம் இல்லையா?” இடுக்கிப் பிடி போட்டது போல் கேட்டேன்.
“அவன் அந்தக் கஷ்டத்தைப் பற்றிப் பேசுகிறான் என்றால் அது உண்மையிலேயே தாங்கிக் கொள்ள முடியாத விஷயம்” என்றாள் பானுமதி.
அந்தப் பதிலைக் கேட்டு வாயடைத்துவிட்டவள் போல் ஆகிவிட்டேன். உண்மைதான். அந்தக் கஷ்டத்தைப் பற்றி மகன் பேசினால் எந்தத் தாய்க்கும் சங்கடமாக இருப்பது சகஜம்தான். ஆனால் அதைவிட பானுமதி எந்த கஷ்டமும் படவில்லையா?
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது மேலும் அவள் குரல் கேட்டது. “நீங்க எல்லோரும் நினைப்பது போல் நான் ஒன்றும் கஷ்டப்படவில்லை. என் வாழ்க்கையில் ஒரு இடைஞ்சல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அதற்காக வேதனையில் மூழ்கிவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சந்தோஷமாக இருக்கணும் என்று நான் முடிவு செய்துவிட்டால் என்னை வேதனைப்படுத்தக் கூடிய சூழ்நிலை என்ன இருக்க முடியும்? சிரித்துக்கொண்டே இருக்கணும் என்று நான் தீர்மானம் செய்து கொண்டால் என் இதழ்கள் மீது முறுவல் மலராமல் தடுக்கும் சக்தி யாருக்கு இருக்கிறது? சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது என் மனதில் ஏற்பட்ட முடிவு. என் மனதிற்கும், என் இதழ்களுக்கும் நடுவில் வேறு யாரும் இல்லாத போது என்னிடமிருந்து சிரிப்பு எப்படி விலகிப் போகும்?” பானுமதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
“ஸ்ரீதர் இறந்து போய்விட்டான் என்று தெரிந்த போது முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் உடனே தேறிக் கொண்டேன். என்னை நான் வருத்திக் கொள்ளக் கூடாது என்றும், அடுத்தவர் இரக்கம் காட்டுவது போல் இருக்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டேன். என் வாழ்க்கையை கவனமாக திசை திருப்பிக் கொண்டு இலக்கியம், இசை என்று உலகத்தில் எனக்குப் பிடித்த எல்லா விஷயங்களையும் என் வீட்டுக்குள் கொண்டு வந்து சந்தோஷமாக வாழ்ந்தேன். எனக்கு வந்த கஷ்டத்தை நான் ஜெயித்தேன். அந்த வெற்றியை நீங்க யாருமே புரிந்துகொள்ளாமல் போனது துரதிர்ஷ்டம்தான். சும்மா சும்மா ‘நீ கஷ்டப்பட்டாய் … வேதனையில் இருக்கிறாய்’ என்று இரக்கம் காட்டுவது எனக்குச் சந்தோஷத்தைத் தராததோடு அவமானமாக இருக்கும்.”
தலையைக் குனிந்துகொண்டு பானுமதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நான் ஒரு விதமான உத்வேகம் மனதில் பரவ மெதுவாக நிமிர்ந்து பார்த்தேன்.
பானுமதி சொன்னது உண்மைதான். அவளுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் போது இப்பொழுது புரிகிறது. அவள் ஒரு நாளும் கஷ்டப்படவில்லை. கஷ்டங்கள் வந்தது உண்மைதான். ஆனால் அவள் கஷ்டப்படவே இல்லை. இவ்வளவு நெருங்கி தோழியாக இருந்தும் அவளிடம் இருந்த சாமர்த்தியத்தை, திறமையைப் புரிந்துகொள்ளாமல் போனது எவ்வளவு பெரிய தவறோ உணர்ந்து கொண்டேன். மெதுவாக எப்படியோ வாயைத் திறந்து “சாரி” என்றேன். “நான் அவ்வளவு தூரம் யோசிக்கவில்லை. கஷ்டம் வருவதற்கும், கஷ்டப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கும் என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை.”
என் பேச்சைக் கேட்டதும் பானுமதியின் இதழ்களில் மறுபடியும் அழகான முறுவல் மலர்ந்தது. “நீ ஆழமாக யோசிக்காமல் அந்த வார்த்தையைச் சொன்னாய். அது எனக்கும் தெரியும். அதனால்தான் உன் பேச்சு என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் ஆனந்த் அப்படிச் சொல்லும் போது, அதில் அர்த்தம் இல்லாததோடு அவனுடைய சுயநலமும் இருப்பது தெரியும். அதனால்தான் அம்மா கஷ்டப்பட்டாள் என்று அவன் சொல்லும் போது இன்னும் அவமானமாக உணருகிறேன்.”
“சுயநலமா?” வியந்து கொண்டே கேட்டேன்.
“ஆமாம். மனைவியை நேசிப்பது பலவீனம் என்றும், தாயை நேசிப்பது நல்ல குணம் என்று நம்புவது சமுதாய விதிகளில் ஒன்றல்லவா. அவனும் அதற்கு அப்பாற்பட்டவன் இல்லை. அதனால் மனைவி எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அவனிடமிருந்து கனிவான ஒரு வார்த்தையை எதிர்பார்த்தாலும் அவன் பொருட்படுத்த மாட்டான். மனைவி படும் சிரமத்திற்கு ஆறதலாக ஒரு வார்த்தை சொல்ல மாட்டான். தாய் சந்தோஷமாக வளைய வந்தாலும், இரக்கம் காட்ட வேண்டாம் என்று அடிக்கடி சொல்லி வந்தாலும் அவள் மீது இரக்கம் காட்டிக் கொண்டே இருப்பான். தான் நல்லவன் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்ற தவிப்புதானே தவிர யாருக்கு வேண்டியதை அவர்களுக்குத் தருவோம் என்ற எண்ணமே அவனுக்கு இல்லை.”
பானுமதியிடம் எப்போ வந்தாலும் இப்படித்தான். வரும்போது கலகலவென்று பேசிக் கொண்டே வருவேன். இங்கே வந்த பிறகு அறிவு செறிந்த அவளுடைய பேச்சில் முற்றிலும் நனைந்து, மனம் பாரமாகி, குரல் அடைத்துக் கொண்டு போன நிலையில் வெளியேறுவேன்.
இன்றும் அதே நிலையில் விடைபெற்றுக்கொண்டு எழுந்துகொண்டேன். அறையிலிருந்து வெளியே வரும்போது, “ஆன்டீ! ஒரு நிமிஷம். காபி கொண்டு வருகிறேன்” என்று சுகுணாவின் குரல் கேட்டது. பின்னாலேயே ட்ரேயில் இரண்டு கோப்பைகளுடன் சமையலறையிலிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்த சுகுணா தென்பட்டாள். அவளைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுகுணாவிடம் இவ்வளவு அழகு இருந்ததென்று நான் எப்போதும் நினைக்கவில்லை. அவள் நடந்து வருவதில், ட்ரேயைப் பிடித்துக் கொண்ட விதத்தில், முகத்தில் மலர்ந்த முறுவலில், ஒளி வீசும் கண்களில் ஏதோ புதிய அழகு மிளிர்ந்தது.
நான் அவளை வியப்புடன் பார்த்துக் கொண்டே “ரொம்ப நேரமாகிவிட்டது. இனி மேல் காபி எதுக்கு புறப்படும் நேரத்தில்?” என்றேன்.
“பேச்சில் ஆழ்ந்துவிட்டதில் மறந்துபோய்விட்டேன். முன்னாடியே கொடுத்திருக்க வேண்டும்.” பானுமதி நொந்து கொள்வது போல் சொன்னாள். “போகட்டும். கொண்டு வந்துவிட்டாள் இல்லையா. குடித்துவிட்டு கிளம்பலாம்” என்று சொல்லிக்கொண்டே என்னிடம் ஒரு கோப்பை¨யைத் தந்துவிட்டு இன்னொரு கோப்பையை எடுத்துக் கொண்டாள்.
“சற்று முன்னாடியே கொண்டு வந்தேன் அத்தை! ஆனால் கதவு அருகில் வந்த போது உங்களுடைய பேச்சுக் குரல் கேட்டது. கேட்டுக் கொண்டு அப்படியே நின்று விட்டேன்.”
சுகுணா சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டவளாக பானுமதியின் பக்கம் பார்த்தேன்.
“நம் கஷ்டங்களை பார்த்து நாமே குன்றிப் போவது அனாவசியம் என்றால், எதிரில் இருப்பவர்கள் நமக்காக வருத்தப்படணும் என்று விரும்புவது எவ்வளவு அருவருப்பான விஷயம் என்று உங்களுடைய பேச்சைக் கேட்கும் போது புரிந்துகொண்டேன். அத்தனை பெரிய விஷயத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் …” தோள்களைக் குலுக்கிக்கொண்டே சிரித்தாள் சுகுணா. “காபி சூடு ஆறிப் போய்விட்டது. அதான் மறுபடியும் சுட வைத்துக் கொண்டு வந்தேன்.” சொல்லி முடித்துவிட்டு சுகுணா சமையலறைக்குப் போய்விட்டாள்.
திடீரென்று அவளிடம் அழகு மிளிர்ந்த காரணம் புரிந்தது. எதிராளியிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்காத மனிதர்களின் தேஜஸ் எப்படி இருக்குமோ அனுபவத்திற்கு வந்தது.

முற்றும்

தெலுங்கில் T.Sreevalli Radhika
தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்
email id tkgowri@gmail.com
கணையாழி பிப்ரவரி 2006

Series Navigation