சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

புதியமாதவி


மும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 மாலை எட்டு மணிக்கு இலெமுரியா பதிப்பகம் தானே தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய இயல்-இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சீமான். இலெமுரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிஞர் கலைக்கூத்தனின் பாடல்கள்- குறுந்தகடு, எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனின் வாழ்வின் சுவடுகள் என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்திய நகர மேயர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த நெல்லை மாவட்ட மேயர்
ஏ.எல்.சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வழக்கம்போல மாலை 8 மணிக்கு என்று அழைப்பிதழில் போட்டு கூட்டம் பொறுமையிழந்து காத்திருக்க 8.50க்கு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இனி, சீமானின் பேச்சிலிருந்து சிலத் துளிகள்:

பொறுமையிழந்து தவிக்கும் மக்கள் அரங்கைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீமான் பாட்டுப்பாட வேண்டி இருந்தது. விசில் சத்தமும் கைதட்டலும் கட்டுப்ப்பாட்டுக்குள் வந்தவுடன் சீமான் தன் பாணியில் இறங்கினார்.

> வாழ்த்துகள் திரைப்படம் 3 வாரத்திற்குள் பெட்டிக்குள் போய்விட்டது.
மக்களுக்கு படம் முழுக்கவும் தமிழிலேயே இருந்ததால் புரியவில்லையாம்!

> தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலம் அல்ல, அது இங்கிலாந்துக்குள் இருக்கும் ஒரு மாநிலமாக இருக்கிறது.

> வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்கிறான். எல்லோருக்கும் இடம் கொடுத்தான் தன் மண்ணில். இப்போ எல்லோரும் இவன் மேலே ஏறி மிதிக்கிறான்.

>பர்மா, பம்பாய், கர்நாடகம், கேரளா, இலங்கை இப்போ மலேசியா எல்லா இடத்திலும் தமிழன் அடிப்பட்டுச் சாகிறான். இதிலே ஒரே ஒரு இடத்தில்தான் தமிழன் திருப்பி அடிச்சான்! அவன் திருப்பி அடிச்சவுடனே எல்லாரும் சொல்றான்..இது வன்முறை, தீவிரவாதம்னு.

> கங்கைக் கொண்டான், கடாரம் வென்றான்னு சொல்லிக்கிட்டே இருக்கியே இன்னிக்கு உன் இனம் ராமேசுவரத்தில் குப்பறப்படுத்திருக்கே.. அனாதையா, அகதியா..ஏன்?

> எங்கே போச்சு உன் வீரம்?

> சோறுதின்னாமா ரைஸ் தின்னா எப்படிடா உனக்கு சுயமரியாதை ஏற்படும்?

> நான் இவ்வளவு பேசிக்கிட்டிருக்கேன், அவன் “பாட்டுப்பாடு”னு கத்தறான். நீ விளங்கமாட்டே. உன்னை வெறிநாய் மாதிரி அடிச்சியே கொல்லப்போறான். இப்போ உனக்குப் பாட்டு கேட்குது.. அப்படித்தானே.. பாட்டுப் பாடறேன் கேட்டுட்டு செத்துப்போ.!!

>உன் தோட்டத்திலே உன் மண்ணிலே காய்க்கிற இளநீரை நீ வாங்கிகுடிக்கமாட்டே. உனக்கு கோக் குடிச்சாதான் பெருமை. சச்சின் 2 கோடி ரூபாய் வாங்கிட்டு குடிக்கிறான். அட குடிக்கிற மாதிரி நடிக்கிறான். நீ அந்தப் பூச்சி மண்டின பாட்டிலை வாங்கிக் குடிக்கிறே.

> உன் பாட்டன் செத்துப்போனதை அவன் சொன்னானு மத்தாப்பு கொளுத்தி பலகாரம் சாப்பிட்டு தீபாவளினு கொண்டாடிக்கிட்டிருக்கியே.

> கடந்த காலத்தில் நீ சூத்திரன், நிகழ்காலத்தில் நீ அகதி.. நீ எப்போ தமிழனா இருந்திருக்கே.

> நீ எங்களை நாத்திகன்னு சொல்றியே , உண்மையில் பார்க்கப்போன நீதான் நாத்திகன், உனக்குத்தான் உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. அட உனக்கு உன் கடவுள் மீது நம்பிக்கை இருந்தா ஏன் கோவில் வாசலைப் பூட்டிட்டு போறெ. உன் கடவுள் காலடியில் இருக்கிற உண்டியலுக்கு ஏன் பூட்டு போட்டு பூட்டி வச்சிருக்கே. உனக்கே உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் தானே.
தன் காலடியில் இருக்கும் தன் உண்டியலைக் காப்பாத்த வக்கத்த கடவுள் இந்த ஊரெல்லாம் காப்பாத்தும்னு நம்புறியா?
ஊரெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே உன் உண்டியலைக் காப்பாற்று தாண்டவக்கோனே

> நடு செண்டர் னு சொல்றே ஓகே ரைட் சரினு சொல்றியே.. இது என்ன மொழி?

> சொந்தமொழி தெரியாதவன் முட்டாள்

> பிறமொழிகள் கற்க வேண்டாம்னு சொல்லலை. பிறமொழிகள் எத்துணை வேண்டுமானாலும் கத்துக்கோ. ஆனால் அதெல்லாம் உன் வீட்டு சன்னல்கதவுகளாக இருக்கட்டும். உன் வீட்டு நுழைவாயிலாக உன் தாய்மொழி இருக்கட்டும்.

> நீ என்ன பண்றே.. உன் தாய்மொழியை உன் கழிவறைச் சன்னலாக வச்சிருக்கியே.

சீமான் இதெல்லாம் சரிதான்.
உங்கள் பேச்சு உங்கள் சீற்றம் உங்கள் அடிமனசிலிருந்து எரிகின்ற
தீக்குச்சி..
ஒரு தீக்குச்சி எரியாமல்
தீப்பந்தம் எரியாது என்று நீங்கள் மேத்தாவின் கவிதை வரிகளைச் சொன்னது
மிகவும் சரிதான். “நான் நெருப்பு, புரட்சி தீக்குச்சி உரசலுக்காக காத்திருக்கிறது என்று உங்களைப் பற்றிய உங்கள் சுயவிமர்சனம் மிகையானதும் அல்ல.

அன்றைய உங்கள் பேச்சில் நீங்கள் நரிக்குறவர்கள் குறித்து சொன்ன கருத்தை மீண்டும் ஒரு முறை தீக்குச்சி வெளிச்சத்தில் பாருங்கள், அண்ணன் அறிவுமதி, மற்றும் தோழர் சுப.வீ யிடம் கேட்டுப்பாருங்கள். அல்லது நரிக்குறவர் இனவரைவியல் குறித்த ஆய்வுகளைக் (தமிழினிப் பதிப்பகம் வெளியிட்டிருப்பதாக நினைவு) கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

சீமான் எனக்குச் சின்னதா ஒரு சந்தேகம்.

உங்களை எப்படி அழைக்கவேண்டும்?
இயக்குநர் சீமான் என்றா?
அப்படி அழைத்தால் தான் கூட்டம் சேரும். அப்படி அச்சடித்தால்தான் விழாக்கள் வெற்றி பெறும். அப்படியானால் உங்களுக்கிருக்கும் முகம், உங்களுக்கிருக்கும் அடையாளம், உங்களுக்கிருக்கும் முகவரி திரைப்படத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. உங்கள் சீற்றம் எனக்குப் பிடித்திருந்தது. உங்களை உங்களுக்கான மேற்கண்ட அடையாளங்களுக்கு அப்பால் ஒரு பகுத்தறிவு மனிதனாக, சொந்தமொழி மீதும், தமிழ் மண், தமிழ் உறவுகள் மீதும் எல்லையில்லாத பாசமும் அக்கறையும் கொண்ட தமிழனாக மட்டுமே அடையாளப்படுத்த முடியவில்லையே என்பதில் என்னைப் போன்றவர்களுக்கு வருத்தம் தான்.
நீங்கள் பேசிய கருத்துகளை, உங்களை விடவும் ஆணித்தரமாக பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரை அழைத்தாலும் அவர்களிடன் “ஆட்டோகிராப்” வாங்கவும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் எந்தத் தமிழனும் ஓடிவருவதில்லை. இதெல்லாமே திரைப்பட முகவரி உங்களுக்கு கொடுத்திருக்கும் அடையாளங்களால் கிடைத்த வெளிச்சம்.

மேலே சொன்ன இனமானக் கருத்துகளைச் சொல்லவும் இந்த மின்மினி வெளிச்சங்கள் தேவைப்படுகிறதே.. இதுதான் தமிழனின் சாபக்கேடு.

இத்தனையும் பேசிய/பேசுகின்ற நீங்கள் இதற்கெல்லாம் காரணமானவர்களைப் பற்றி ஏன் மவுனம் காக்கிறீர்கள்?

எய்தவன் இருக்க அங்கே அரங்கில் விசிலடித்த அம்புகளைக் கண்டு ஏன் சீற்றம்? ரஜினி என்ற நடிகரின் ஆதரவு/ கண் அசைவு எந்தப் பக்கமிருக்கிறது என்று தலைமுதல் வால்வரை நம் தலைவர்கள் தலைகீழாக நின்று தவமிருக்கிறார்களே! ஏன்? ரஜினிகாந்த என்ற சினிமா நடிப்புத்தொழிலைச் செய்யும் ஒரு மனிதனை “சூப்பர் ஸ்டாராக” உயர்த்திப் பிடித்திருப்பவர்கள் இந்த உள்ளீடு இல்லாத
வெறும் காகிதக் குப்பைகளா? உங்களுக்குத் தெரியும் யார் என்று? ஆனாலும் உங்கள் தீக்குச்சிகள் வெறும் குப்பைகளைக் காகிதங்களை மட்டுமே எரித்துக் கொண்டிருக்கிறது! அதனால் எரிக்க எரிக்க குப்பைகள் வேகமாக பன்மடங்குப் பெருகிக்கொண்டும்
இருக்கிறது!

தீபாவளிப் பண்டிகைக் குறித்து நீங்கள் சொன்னதில் எனக்கொன்றும் கருத்து வேறுபாடில்லை. என் “பெரியாரிஸ்டின் தீபாவளி” சிறுகதையை உங்கள் பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு நடுவிலும் முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசிக்க :
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10412023&format=html

நம் தலைவர்கள் அவரவர்களின் குடும்ப வாரிசு தொலைக்காட்சிகளில் தோன்றி தீபாவளி வாழ்த்து சொல்வதைக் கண்டித்து சின்னதாக தமிழ்நாட்டில் ஓர் அறிக்கை வெளியிட்டுப் பாருங்களேன்!

தீக்குச்சிகள்
எரித்த காகிதக் குப்பைகள்
எரிந்து கொண்டே இருக்கிறது
தீப்பந்தம் எரிவதாக
கனவுகளில்
தீக்குச்சிகள்.
புரட்சி வந்துவிடும்
காத்திருக்கிறது
தீப்பெட்டி.
ஒவ்வொரு குச்சியாக
எரிந்து முடிந்து
காலியவதற்குள்
விழித்துக்கொள்ள வேண்டும்
தீப்பெட்டிகள்.
நம் மண்ணை
நம் மனிதர்களைக்
குப்பைகளாக்கிய
கோமாளிகளின்
கூடாரங்களை
கூண்டோடு அழிப்பதற்கு.

தாள் பொறுக்கும் தமிழச்சியாக
தமிழகம்
அரபிக்கடலோரம் வீசி எறிந்த
இந்திய அகதிகளின்
முகாமிலிருந்து
உங்கள் தீக்குச்சி உரசலில்
எரியும் காகிதக்குப்பைகளுக்கு நடுவில்
எரியக் காத்திருக்கும் தீப்பந்தம்..

மீண்டும் மீண்டும்
வந்துக் குவியும்
காகிதக் குப்பைகள்.
எரித்துக் கொண்டே
இருந்த தீக்குச்சிகள்
அணைந்து போவதற்குள்
அறிந்து கொள்ள வேண்டும்


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation