சி (று) ரிப்புப் பத்திரிகைகளாய நமஹ

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

சொதப்பப்பா


நான் பொதுவாக சிறு பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் , வருடத்திற்கு ஒரு முறை வரும் காலாண்டிதழ்களைப் படிப்பதில்லை. முதல் காரணம் அதில் படங்கள் இல்லாதது. அப்படியே தப்பித் தவறி படங்கள் வந்தாலும் தலை இருக்கும் இடத்தில் கை, வயிறு இருக்கும் இடத்தில் வாய் என்று ஏடாகூடமாக இருக்கும். இரண்டாவது காரணம்அதில் எழுதும் ஆட்களின் தமிழ் எனக்குப் புரியாதது. அவர்கள் எல்லாம் தமிழை ரஷ்யன் மொழியின் வழியாகப் படித்தவர்கள் என்பது என் அபிப்பிராயம். நான்காவது அதில் குறிப்பிடப்படும் போர்ஹே, கால்வினோ என்றெல்லாம் நான் கேள்விப்பட்டிராத ஆட்களைப் பற்றி அர்ஜெண்டினாவின் அதிசயப் பிறவி, கொலம்பியாவின் கோப்பெருந்தேவன் என்று ஏதாவது சொல்லியிருப்பார்கள். நான்காவது காரணம் அதன் ஓர் இதழைப் படித்தால் மற்ற எந்த இதழையும் படிக்கவேண்டாத படி இருப்பது. ஐந்தாவது மிக மிக முக்கியமான காரணம் : நகைச்சுவை இல்லாதது.

தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு மிகமிக அதிகம். அதில்லாமல் எப்படி அவனால் கோமாளித்தனமான அரசியல் வாதிகளையும் , அதைவிட கோமாளித்தனமான நடிகர்களையும் சகித்துக் கொள்வது மட்டுமல்லாமல், அவர்களுக்குக் கோயில் கட்டவும் கும்பிடவும் முடியும். கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் மாறி மாறி ஓட்டுப் போடுவதற்கு நகைச்சுவை உணர்வு இல்லாதிருந்தால் முடியுமா ? சிரிக்கமுடியாத எந்த ஆளையும் நான் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்பதால் சிறு பத்திரிகைகளை விட்டு விலகியே இருந்தேன்.

ஆனால் என் நண்பர் அடிக்கடி என்னிடம் சிறு பத்திரிகைகளைக் கொடுத்து தமிழ்நாட்டில் வாழத் தகுதி பெற வேண்டுமென்றால் இதையெல்லாம் படி என்று சொல்வது வழக்கம். எனக்குத் தற்கொலை எண்ணம் சிறிதும் இல்லாததால் அவர் கொடுத்துச் சென்ற உடனேயே தூக்கிக் கடாசிவிட்டு, ராணி , தேவி என்று தாவிவிடுவேன். இம்முறை என்ன தான் இதில் இருக்கிறது என்று சபலம் மேலோங்க அதையும் புரட்டினேன். அசந்து போனேன். என்ன ஒரு நகைச்சுவை உணர்வு. ஜேம்ஸ் தர்பர், மார்க் ட்வெயின், சுஜாதா, ராஜ நாராயணன், பாக்கியம் ராமஸ்வாமி, எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிற அளவு நகைச்சுவை கொண்ட இந்தச் சிற்றேடுகளைப் படிக்காமல் இருந்த பாவத்துக்கு வருந்தினேன்.

நகைச்சுவையில் மூன்ற ரகங்கள் உண்டு. ஒன்று உணர்வு பூர்வமாய் செய்யப் படும் நகைச்சுவை. சார்லி சாப்ளின், விவேக், கவுண்டமணி, என் எஸ் கிருஷ்ணன் , டி எஸ் பாலையா எல்லாம் இந்த ரகம். இவர்கள் தாம் சிரிப்புவரவழைக்குமாறு நடிக்கிறோம் என்று உணர்ந்தவர்கள் அந்த நோக்கத்துடனேயே சேட்டை புரிகிறவர்கள், சிரிப்பு வசனங்கள் பேசுகிறவர்கள். இரண்டாவது ரகம், செந்தில் , பஸ்டர் கீட்டன் போன்றவர்கள். இவர்கள் முகத்தில் எந்த உணர்ச்சி வெளிப்பாடும் இருக்காது. மிக சீரியசான தோற்றம் இருக்கும். ஆனால் சூழலில் அதைப் பொருத்திப் பார்க்கும்போது சிரிப்பு வரும். மூன்றாவது ரகம் : தன்னை ரொம்ப சீரியஸாய் எடுத்துக் கொண்டு நாம் சிரிக்கச் சிரிக்க பேசுகிறோம் , எழுதுகிறோம் என்று உணராத ரகம். சினிமாவில் விக்கி விக்கி அழும் தமிழ் ?ீரோக்கள் இந்த ரகம். இவர் அழுவார். தியேட்டரில் சிரிப்பொலி எழும். ஒரு பக்கெட் கொண்டு வாப்பா என்று குரல் கேட்கும். இந்தச் சிறு பத்திரிகைக்காரர்கள் எந்த ரகம் என்று உங்களுக்கே புரியும் :

புதிய கோடாங்கி :

தழிஃ(ழ்) இனிமை, தமிஃ(ழ்) செம்மொழி என்று தமிஃஉ(ழு)க்கு பெருமை சூட்டி தமிஃழ் பேசி வரும் தலித்துகளை சிறுமைப்படுத்திவரும் பிற சாதியர் கவனத்திற்கு.

இனி தலித்துகள் தமிஃ(மை) தமிஃ என்றே எழுதி, தமிஃ(ழ்) மொழியை ஆயுதமாக்க வேண்டும்.

சாதி உள்ள தமிழை மேல் கீழ் வரிசையில் த

மி

என்றே எழுதுவார்களாக. இடமிருந்து வலமாக எழுதுவது தமிழ்(ழி)ல் வழக்கம். சாதிஅயைக் காப்பாற்றுவதும் இங்கே வழக்கம். எனவே தலித்துகள் இனி வலமிருந்து இடமாக எழுதலாம். ‘

சிலேட்

‘விக்ரமாதித்தன், நகுலன், சி மோகன், கோணங்கி, சி சொக்கலிங்கம், என் டி ராஜ் குமார் இவர்கள் ஒவ்வொருவருக்குமே குடிப்பது தொடர்பாக அவர்களுக்கே உரிய தனித்தன்மையும் அகங்காரமும் உண்டு. தனித்துவமான சுபாவம் உண்டு. தனித்துவமான போதை உண்டு. இவர்களில் ஒருவரின் போதையை மற்றொருவர் அடைய இயலாது. தனித்தனியான குவளைகள் இவை. இவர்களுக்கான குவளையை எடுத்து நீங்கள் பருகுவீர்களென்றால் கூட அதை உங்களுக்கு உருமாற்றிக் கொள்ள இயலாது. ஏனெனில் அந்தத் தனிக்குவளைகளின் உருமாற்றமே அவர்கள் ஆனது. ‘

காலச்சுவடு :

26-01-03 அன்று காலை சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் சாமி முன்னிலையில் நஞ்சுண்டன் மொழிபெயர்த்து காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மரணம் மற்றும் .. ‘ கன்னடச் சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியிடப் பட்டது.

கன்னட எழுத்தாளர் அக்ரஹார கிருஷ்ண மூர்த்தி நூலை வெளியிட்டுப் பேசினார்.

.. முனியப்பன் சிலைகள் கையில் அரிவாளுடன் வீற்றிருக்க எந்தப் பயமும் இல்லாமல் மக்கள் லாரிகளில் கூட்டம் கூட்டமாக வந்து ஆடு வெட்டிப் பலி கொடுத்து சமைத்துச் சாப்பிட்டுச் சென்றனர்.

மரணம் மற்றும்.. நூலுக்காக ஒரு ஆட்டைப் பலி கொடுத்து கறி பிரியாணியும் மது விருந்தும் கொடுத்தார் நஞ்சுண்டன். நண்பர்கள் உறவினர்கள் என்று குடும்ப விழாவாகக் களை கட்டியது விழா . மொய்க்குப் பதிலாகப் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்… பெருமாள் முருகன் மரண வீட்டிற்குச் செல்வதாக நினைத்து வேட்டியுடன் வந்ததாகச் சொன்னார். ‘

தமிழ் நேயம் :

பண்டைத் தமிழ் மக்கள் தனிப் பண்பாட்டுடன் திகழ்ந்தமையால், அவர்களைப் பிற மக்கள் ‘தனியர் ‘ என்று வியந்து சுட்டினர்; தனியர் – என்பதே தமியர் – தமிழர் எனப் பயிலப்பட்டதாம். தமிழர் பேசிய மொழியும் தமிழ் எனப் பெயர் பெற்றதாம்.

ஞால முதன் மாந்தரிடை இயல்பாக முகிழ்த்துத் தழைத்தோங்கி – உலகின் பன்மொழிகளீன்று – பன்மொழிகளுக்கும் வேற்சொற்களீந்து – பகைவரின் சதிகளை யெல்லாம் முறியடித்து வென்று பல்லாயிரமாண்டுக் காலமாக நிலைத்து – இலக்கிய, இலக்கணச் சீர்மையுடன் ஒளிர்ந்து – ஐந்திணை , ஐம்பால் எனப் புவிமொழி எதற்குமில்லாப் புகழோங்கி விளங்கி –

இயன்மை, இறைமை, முன்மை, தொன்மை, தமிமை, தாய்மை, தூய்மை, ஒண்மை, எண்மை, செம்மை, மும்மை, வியன்மை, இளமை, இனிமை, வளமை பெருமை – என ஈரெட்டியல்பு செழித்தோங்கத் திகழும் அமிழ்தாம் தமிழ் – நமக்குத் தாய்மொழி மட்டுமின்று , உயிரேயாம்!

..பெரியார் ஈ வெ இரா அவர்கள் .. மொழியியலறிஞரோ, வரலாற்றியலறிவரோ வன்று. பெரியாரின் செயற்பாட்டின் மறுவிளைவாகத் தமிழ்த்தேய ஓர்மை குலைத்தழிக்கப் பட்டதென்பதே உண்மையாம்!

இன்று திராவிடம் பேசிவரும் – பெரியாரைத் தந்தையெனக் கொண்டாடும் மகன்களெல்லாம் , அவரது கோவணத்தை ஆளாளுக்குக் கிழித்து வைத்துக்கொண்டு, அதனையே கொடியெனக் கொண்டு அரசியல் வணிகம் நடத்தித் தமிழ்த்தேய ஓர்மையின் கூர்முனையை முறித்துவருகின்றனர்.! ‘

(மி அமலன்)

பன்முகம்:

ஒரு பிரதியை ‘minimum possible lexias ‘ ஆக பிரித்து ஆராய நவீன விமர்சனம் நமக்கு லைசென்ஸ் அளிக்கிறது. அதன்படி கோணங்கியின் பிரதான அடிநாதமானப் படிமங்களான அல்லது சொற்களான கல்-கள்-கருப்பு-நீலம்-மஞ்சள் போன்றவைகளின் இனமைய அர்த்த உறுப்புகள் அவரது பிரதியில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. .. கருப்பு என்பது ஆதிக் கள்ளர்களின் கடவுள்; மஞ்சள் நிறம் தேவர் சாதி சமூகத்தின் அரசியல் கொடியாகும். இந்த குறிகளின் உடனேயே ‘ஒளி ‘ குறித்த ஆரிய மைய/ நார்டிக் மேட்டிமை வாதப் படிமங்களும் கூடவே வருகின்றன. ..கோணங்கியும் மியூசியம் கட்டலாம், ஆனால் தன்னொத்த இன மூலங்களை மட்டுமே அதில் பிரதிநிதித்துவம் செய்யக் கூடாது. ஆனால் கோணங்கியோ தன் ‘இனமியூசியத்தையே ‘ கட்டமைக்க முயல்கிறார். இதில் அர்த்தமற்ற bric-a-brac குறிப்புகளைத் தவிர வேறெதுவும் இல்லை. (ஆர் முத்துக்குமார்)

சிலேட்:

நிறவடிவமண் இமை தாழ்த்தி நின்றாள் ஒரு முலை குறைந்த தாரை. ரெப்பைவரிமேல் அகப்பேய் பூட்டிய தாழ் பூட்டித் திறந்ததோர் ஆகாசம். வெள்வாளுழத்தி கண்புகுந்த கதை பேசி ஊடுருவிப் பின்னிக் கிடந்த நிர்மலமான சொல் அதிர பிரபஞ்சம் அவள் அது. கூளியோடாடி சுரைவிதைப்பல் துருத்திய காரைக்கால் இடம் அது. எரி போன்ற பூவுடைய வேங்கை மரத்தில் கட்டுப்பரணுக்கருகில் நின்றாள் கண்ணகை.

(கோணங்கி)

கவிதாசரண்

அம்பேத்கரை குறித்து எந்த முஸ்லிம் அறிஞரும் விமர்சிப்பதில்லை. மாறாக அவருக்காக பரிதாபப்பட்டு தான் உள்ளனர். ஏனெனில் இஸ்லாமிய கொள்கையின் படி ‘உலகில் பிறந்த அனைத்து மனிதனும் , ‘ தன்னைப் படைத்த இறைவன் இருக்கிறான் ‘ என்பதை உணர்ந்து ‘வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே ‘ என்றும் அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்வேன் என்றும் உறுதியளிக்க வேண்டும். அப்பொழுது தான் ‘மறுமை வாழ்வில் ‘ வெற்றிப் பெற முடியும் என்பது முக்கிய நம்பிக்கை. ஆகவே ‘மறுமை வெற்றிக்கான ‘ வழியை அறியாமல் போய்விட்டாரே! என்ற பரிதாபம் தான் அடைகிறார்கள். ஏனெனில் இஸ்லாத்தின் நோக்கம் இன இழிவை நீக்குவது மட்டுமல்ல; இறைவனை அறிவதும் தான். அதற்கான வாய்ப்பு இருந்தும் , அன்றைய நிலையில் இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாத வகையில் தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருந்த தங்களை மு ?லிம்களாகக் கூறிக் கொண்டவர்களின் செயல்பாடுகளும் இதற்கு தடை ஏற்படுத்தியுள்ளன என்று அறியமுடிவதால் அனுதாபப்படுகிறார்கள். ‘

(ஹமீது)

*****

தலித் முரசு :

தமிழ் வழிக்கல்வி வேண்டும் என்ற கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கொண்டு இருக்கும்போதே, சமஸ்கிருதத்தில் நிறைய மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, ஊக்கப் படுத்துகிறார் ஒரு பச்சைத் தமிழர். யார் அந்தப் பச்சை ?

ஜெயேந்திர சரஸ்வதி.

பிறகு சமஸ்கிருதத்தின் மேன்மைகளைப் புகழ்ந்து தமிழில் பேசுகிறார். ஆகவே அவர் பச்சைத் தமிழராகிறார். ‘

**********

இதெல்லாம் வெறும் சாம்பிள் மட்டுமே . இன்னமும் படித்து இன்புற வேண்டிய ஆர்வம் உள்ளவர்கள் சிறுபத்திரிகைகளை வாங்கி, கலகப் பேட்டை பின்நவீனத்துவசாமி, பம்மாத்துபுரத்தின் பெண்ணியஅம்பாள் , உன்னத இலக்கியச்சிகர பீடத்துக் கொலுவேற்றிருக்கும் மார்க்வெஸ்-போர்ஹேயின் அடிப்பொடிகளின் கைங்கரிய உபயத்தில் எட்டாத சிகரத்தையெல்லாம் எட்டிவிடுவீர்கள். நாற்பது நாட்கள் காலை எழுந்து இந்தப் பத்திரிகைகளின் முகத்தில் விழித்து ஜெபம் செய்வீர்களானால், புரட்சிப் பூங்காற்றின் புல்லரிப்புத் தேவதூதர்கள் கதவைத்தட்டி பூச்செண்டுகள் வழங்குவார்கள். சிறு(பத்திரிகை)த் தேவதைகளின் ஆசியைப் பெறுவீர்களாக. இலக்கிய உன்னதத் தேவாலயங்களில் ஞானஸ்நானம் பெறுவீர்களாக. ஒரு மண்டலம் மதுவையே அருந்தி விரதம் இருந்து , சிறுபத்திரிகைச் செம்மல்களையெல்லாம் தரிசனம் செய்து, மனதார வேண்டி விரும்பி, பிரார்த்தனை செய்தீர்கள் என்றால், இலக்கிய உலகில் நினைத்த காரியம் கைகூடும்- அறுபது வருஷம் கழித்து. உங்களுக்கே அர்த்தமாகாத கிறுக்கல்கள் அரங்கேறும். பெண்டாட்டியின் தாலிக்கொடி அடகுக் கடைக்குப் போகும். தீர்த்தங்கள் நினைத்த மாத்திரத்தில் குப்பியில் அல்லது குவளையில் ஊற்றப்பட்டு கைக்கு வரும். தத்துவ(மலச்)சிக்கல் பிரசினைகள் தீரும். ஆமென்.

*************

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா