சிவராமனின் சோகக் கதை

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

ராமசந்திரன் உஷா


சிவராமன் சிறிது அப்பாவி,பேக்கு என்றும் சொல்லலாம்.அவன் இப்படி ஆனதற்கு

முதல் காரணம் அவன் அம்மா.அடுத்த காரணம் தாய்க்கு பின் தாரம்தானே!

சிவாவுக்கு ஒருகால் போலியோவால் பாதிக்கப்பட்டு இருக்கும்.அதனால் ஏற்ப்பட்ட தாழ்வுமனபான்மையால் அதிகம் யாரோடவும் பழக மாட்டான்.ஏதோ பி.ஏ என்று ஒரு பட்டம் வாங்கிவிட்டு,ஊனமுற்றோர் கோட்டாவில் அரசாங்க வேலையிலும்சேர்ந்துவிட்டான்.

அவன் அம்மாவும் அவனுக்கு பெண்பார்க்க ஆரம்பித்தாள்.மகனுக்கு ஒன்றுமே தெரியாது,அதனால் புத்திசாலி பெண் வேண்டும் என்று சொல்லியே பெண்

தேடினாள்.கிடைத்தவளோ அதி புத்திசாலி.அந்த புத்திசாலிதனத்தை தன்

மாமியார்,மாமனார் மேலேயே பிரயோகித்தாள். ஆறே மாதத்தில் அவளுக்கு

ஈடு குடுக்க முடியாமல் இருவரும் கிராமத்துக்கு போய் போய்விட்டனர்.

சிவாவோ இவ்வளவு நாள் தாயின் முந்தானையை பிடித்துக்கொண்டிருந்தவன்

இப்போது மனைவிலீலாவின் முந்தானைக்கு மாறிவிட்டான்.சம்பள பணத்தைக் கொண்டு வந்து லீலாவிடம் கொடுத்துவிட்டு அவன் உண்டு மெகாசிரியல் உண்டு என்று இருந்தவன் வாழ்க்கையிலும் புயல் வீச ஆரம்பித்தது.

விஷயம் இதுதான்,அவன் இருப்பதோ அரசாங்க வேலையில்.அதுவும் நல்ல பசையான துறை. கடைநிலை ஊழியன் என்றாலும் இவன் பங்காக வருஷத்துக்கு

இரண்டு,மூன்று முறை பணமாகவோ,பொருளாகவோ ஏதாவதுகிடைக்கும்.இவ்வளவு

நாள் அதை அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிடுவான்.அவளும் இரண்டு கையில்

சம்பாதித்த தன் தந்தையை நினைத்துக்கொண்டு அதை வாங்கிவைப்பாள்.இந்த

முறை ரூபாய் ஐந்தாயிரத்தை அவனிடம் கொடுத்து ஜமாய் ராஜா என்று ஆசிர்வதித்தார் ஹெட்கிளார்க் சங்கரன்.சிவாவும் அதை பத்திரமாய் கொண்டுவந்துமனைவியிடம் சேர்பித்தான்.அப்போதுதான் ஆரம்பித்தது பிரச்சனை.லீலாவுக்கு ஒரு நல்ல குணம் யார் எது சொன்னாலும் எதிராகதான்

பேசுவாள்.

ஏது இவ்வளவு பணம் என்றுக்கேட்டாள் சகதர்மிணி.

சிவராமனும் பணம் வந்த சோர்ஸ்ஸை சொன்னான்.அவ்வளவுதான் ருத்ரதாண்டவம்

ஆடத்தொடங்கிவிட்டாள் லீலா.தன் தாத்தா சுதந்தர போரட்டதியாகி என்றும்,

லஞ்சப்பணம் இந்த வீட்டினுள் நுழையக்கூடாது என்று கூச்சல் இட்டாள்.

இதுவரை கமுக்கமாய் அந்த பணத்தை வாங்கிவைத்துக்கொண்ட மாமியாரையும்

நன்றாக திட்டினாள்.

இதில் ஒருதமாஷ் என்னவென்றால் அவளுடைய தாத்தா போர்ஜரி செய்து

ஆறுமாதம் ஜெயிலில் இருந்தவர்.அவரை குறிப்பிடும் போது கள்ள கையெழுத்து நாணா என்றுதான் சொல்வார்கள்.இந்த ஊர் அறிந்த ரகசியம் சிவாவுக்கும் தெரியும்.ஆனால் அதை சொல்லும் தைரியம் அவனுக்கு ஏது ?

மறுநாள் அதை ஹெட்கிளார்க்கிடம் பணத்தைத் திருப்பிதந்துவிட என்று முடிவு செய்தான்.சங்கரனுக்கு அவன் சொன்னதே முதலில் புரியவில்லை. பிறகு பணத்தைஎப்படி மனைவிக்கு தெரியாமல் செலழிக்கலாம் என்று பலவகையான ஆலோசனைகள் வழங்கினார்.புத்திசாலிதனமாய் இரு என்று அறிவுரையும் சொன்னார்.பணத்தை ஆபிசுக்கு கொண்டு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

வீட்டுக்குவந்தால் லீலாவே இதை பெரியஇஷ்யூ ஆக்குகிறாள்.அம்மாவிடம் கொடுத்துவிடலாம் என்றால் லீலாவுக்கு தெரியாமல் எப்படி கிராமத்துக்கு போவது ? வாழ்க்கையில் முதல்தடவையாக யோசிக்க ஆரம்பித்தான் சிவராமன்.

லீலா லஞ்சலாவண்யங்களால் நம் நாடு எப்படி கெடுகிறது என்றும்,அந்த காலத்தில் தேச தலைவர்கள் அவளுடைய தாத்தா உட்பட நாட்டுக்காக என்ன என்ன தியாகங்கள் செய்தார்கள் என்றும் ஸ்பீச் கொடுத்துக்கொண்டு இருந்தாள். ஏதாவது பிரச்சனை ஆகி போலீஸ் வீட்டுக்கு வந்தால் வேலையும் போகும்,மானமும் போகும் என்று எடுத்துச் சொன்னாள்.சிவாவும் எதிர் கேள்வி கேட்காமல் தெய்வமே என்றுஅவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தான்..

இதன் நடுவில் லீலாவின் அக்காதன் குடும்பத்துடன் டில்லியில் இருந்து வந்துவிட்டாள்.

விருந்தினரை உபசரிப்பதில் இருந்த லீலா இந்த விஷயத்தை ஒத்தி போட்டாள்.

சிவராமனே திரும்ப,திரும்ப சங்கரனை பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வற்புறுத்திக்கொண்டிருந்தான்.சங்கரனும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் சிவாவின் உறுதியை குலைக்க முடியவில்லை.முடிவாக அவரே விரைவில் அவன் வீட்டுக்குவந்துபணத்தை பெற்றுக்கொள்வதாக சொன்னார்.

சொன்னப்படி சங்கரனும் ஒருநாள் சாயந்தரம் அவனோடு அவன் வீட்டுக்கு வந்தார்.

வைத்த இடத்தில் பார்த்தால் பணத்தை காணவில்லை.லீலாவை மெதுவாகக்

கூப்பிட்டு கேட்டான்.லீலா, ‘அதுவா! நானும் ஒரு மாசமா கத்திக்கிட்டு இருக்கேன்,

நீங்க காதிலேயே போட்டுக்கல! இன்னைக்கு அக்காவோட போதீஸ் போயிருந்தனா,அந்த பணத்துல எனக்கு ரெண்டு பட்டுபுடவையும் உங்களுக்கு

ஒரு சர்ட்பிட்டும் எடுத்துட்டேன்! ‘ என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு,உள்ளே போய்விட்டாள்.

வெளியே சங்கரன் கூப்பிடும் குரல் கேட்டது.

***

ramachandranusha@rediffmail.com

Series Navigation