சிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

கே ஆர் மணி


சிவப்பு ரிப்பனும், குப்பை குறுஞ்செய்திகளும்

மனைவிக்கு நான்கைந்து தொலைபேசிகள் வந்தது. நிறைய குறுஞ்செய்திகள் வந்தன. நட்புதின
வாழ்த்துகளின் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன அவளுக்கு. நானும் என் தொலைபேசியும்
அமைதியாயிருந்தோம். நேற்று ஆர்ச்சிஸ் காலரின் கூட்டத்தை முன்னிட்டு பத்துநிமிடம்
ட்ராபிக் ஜாமானது. மின்னஞ்சல்களிலும் நிறைய சிறு செய்திகள், உருக்கமான சின்ன
கட்டுரைகள், செய்திகள் தொடரும். நிறைய பேர் ஒரே செய்தியை அவர்களின் மின்னஞ்சலிளுள்ள
மற்ற மின்முகவரிகளுக்கு ஒரே அழுத்தலில் அனுப்ப முனைவார்கள். மற்றவர்கள் அனுப்பியதும்
குப்பையாய் மின்னஞ்சல் பெட்டியின் இன்பாக்சில் குவியும்.

யோசித்து பார்க்கிறேன், எனக்கு நட்பு என, தோழர்களென யாராவதிருக்கிறார்களாயென்ன ?

*
துரியோதனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. கர்ணண் அதை திறக்காமலே அவளைப்பற்றி
யோசித்துக்கொண்டிருந்தான்.

‘அப்பா, இவள்தான் என்ன அழகு, கருப்புதான் ஆனாலும் அழகு. அரச வம்சம்.
கொஞ்சம் கூட அகம்பாவமில்லாத அழகு. சின்னதாய் மார்புகள், அவளது
சின்ன வார்த்தைகள் போல. மார்பைவிட பெரிதான காம்புகள். சொன்னபோது
சிரித்துகொள்கிறாள். அதீத வெட்கமோ, கோபமோயற்று. உடம்பா அழகு.
துரியோதனிடம் சொல்லி சிரிக்கவேறு செய்கிறாள். அவனும் சிரித்து என்னை
வெட்கப்படுத்துகிறாள்.

இது உடல் காமமா ?இல்லை. தனது வீதியில் இதைவிட கொட்டிக்கிடைக்கிறது. உயிர்ச்சக்தி
வெளியேற்றும் உபத்திரவம் மட்டுமே பெண்களின் வேலையாயிருக்கும் பட்சத்தில் தனது
தெருப்பெண்களே போதும். அதுவும் நரம்புதடவி, எச்சிலால் ஈரப்படுத்தி, காமக்கெட்ட
வார்த்தைகள் பேசி, மது செலுத்தி, தான் பேசக்கூசும் வார்த்தைகள் கூட பேசி அதனால்
குசிப்படுத்தி மறுபடியும் படுக்கை போருக்கு தயார்படுத்தி தனது உடல் சோரவைத்து அதுவும்
அசந்து தூங்கும்போது – ஏதோ இது அகப்போர்போலத்தானிருக்கிறது. உடல் வெறும் கருவிமட்டும்தான்
போலும். ஆனாலும் எனது தெருவில் எவளும் உனது காம்பு பெரிது என்று சொன்னால் சிரிக்கமாட்டாள்.

நீ கொடைவள்ளலாய் இருடா அதுதான் உன் பலமே… அவள் தலைதடவி சொன்னபோது
என்ன சுகம். இவளிடமான பேச்சும், அன்புமே போதுமானதாயிருக்கிறதே. காமம் கேட்டிருந்தாலும்
கொடுத்திருப்பாள். அவளுக்கு தேவையான உடல் தொடுகைகளை அவள் கேட்டு வாங்கியிருந்தபோதிலும்
எனக்கும் கொடுத்திருப்பாள். வார்த்தைகளால் சொல்லமுடியாத கட்டங்களில் மட்டுமே அவளுக்கு
தொடுகை தேவைப்பட்டதாயிருந்திருக்கிறது. காட்டில் வாழும் ரிஸி உயிரின் கடைசிச்சொட்டை
காபந்து செய்வதற்காக உணவை எடுத்துக்கொள்வதைப்போல. அப்படிச்செய்வதின் மூலமே அவள்
என்னை உயர்த்திருக்கிறாள்.

சாதிகெட்ட சாரதிப்பயலே -அந்த சபை வார்த்தைக்கு எத்தனை தேசங்கள் தந்தாலும் துரியோதனா
அதுதான் உண்மை. பிறப்பின் வித்தியாசங்களை அழிக்கவேமுடிவதேயில்லை. ஆனாலும் அது என்
அகஓளிக்கும், அக உணர்தலுக்கும் தடையேயிருப்பதில்லை. அது தேசங்கள் கொடுப்பதனால் வருவதில்லை.
அது வெறும் மண். உனக்கு பக்கத்தினாலான இருக்கைக்கு தேவையான அநுமதிச்சீட்டு. என்றைக்காவது
இந்த பஞ்ச பாண்டவ நாய்களை மிதிக்க ஒருவன் தேவையென நீ கருதியிருக்கலாம். அன்று உடுக்கை
இழந்தவன் கையாக நீ வந்தது வெறும் எதிர்ப்பு உணர்ச்சியாகத்தானிருக்க முடியும். எதற்கும் ஒரு ஆளிருக்கட்டுமே
என்கிற ஒரு சந்தர்ப்பவாத எண்ணமாகக்கூடயிருக்கலாம். Nothing wrong in it.

இருந்துவிட்டு போகட்டும். மனித எண்ணங்களின் எந்த மூலமும் பார்ப்பது தவறென்றே வாழ்க்கை
கற்றுக்கொடுத்திருக்கிறது. ஆனாலும் நமது நட்புப்பலம் நாளுக்கு நாள் பெருகிகொண்டுதான் வந்தது.
எதையும் எதிர்பார்க்காதது நட்பு என்று நமது அரசவைக் கவிஞர்களின் அற்பக்கவிதைகளை கேட்கும்
போதுதான் – அதுவும் நட்பு தினமும் அதுவுமாய் நம்மிருவரையும் சிம்மாசனத்தில் ஏற்றி அவர்கள்
பாடுகிற துதி காதை அடைத்து, நெஞ்சை அறுக்கிறது.

நமது நட்பும் எதையும் எதிர்ப்பார்க்காததா என்ன, செஞ்சோற்றுக்கடன் என்பதே எழுதப்படாத எதிர்ப்பார்ப்பின்
மீது எழுப்பப்பட்ட கட்டிடம்தானே, ஆனாலும் நமது பலவீனங்களை தாண்டியோ சகித்துக்கொண்டோ நம்மை
ஏற்றுக்கொண்டோம். ஆனாலும் அதற்குப்பின் நாமெல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம். என்னை உன்
வரவேற்பறையோடு நிறுத்திருக்கலாம். அப்போதும் நான் செஞ்சோற்றுக்கடனுக்காக இன்ஸ்டால்மெண்டில்
வருடம் முழுவதும் தவணை(EMI) செலுத்திகொண்டிதானிருந்திருப்பேன். நீ எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாய்.

நீ கொடுத்த பரிசில் என்னை அக உணரச்செய்தது உன் மனைவியின் நட்புதான். உடல், மனம், மொழி
என்ற எந்த தடைகளுமற்ற நட்பு. எடுத்தை கோர்க்கவும், கோர்த்ததை மெளனமாய் என்னிடமே கொடுத்துவிட்டு
நீ நகர்ந்ததையும் பெரிதாய் பேசும் இவர்கள், அதனால் நீயும் எவ்வளவு சந்தோசப்பட்டாய் என்பதை
சொல்லவே மறந்துவிடுகிறார்கள். நம்மையெல்லாம்விட உன் மனைவியைப்பற்றியும் யாரும் பாராட்டி கவிதை
எழுதுவதுமில்லை. அவளுக்குத்தான் நம்மையெல்லாம் விட நட்பு நூலின் பலந்தெரிந்திருக்கிறது.

தனிமனித விடுதலை தான் அத்தனையிலும் மிகச்சிறந்த விடுதலை. நீங்கள் மண்ணுக்கும், பெண்ணுக்கும் செய்கிறதெல்லாம்
கீழ்மட்ட போராட்டங்கள் என்று எந்த அத்வைத தத்துவங்களில்லாமலே அமைதியாய் வாழ்ந்துகாட்டிவிட்டு
போய்விடுவாள் அவள். எனது தாழ்வு மனப்பான்மையையும், அதை அழிக்க நானே வளர்த்துக்கொண்ட
கொடைவள்ளல் என்கிற பெருந்தீயும் என் மனக்குருசேத்திரத்தில் மோதிக்கொண்ட போதும், எனது மன விடுதலைக்கு
தடைபோட்டபோதும் அவளல்லவா இருட்டின் மீது ஒளிபாய்ச்சியவள். மற்றவர்களை எதிர்கொள்ள நீ
கொடுத்த நாற்காலியும், மண்ணும் உதவிய போது, என்னை நானே உற்றுப்பார்த்துக்கொள்ள என் அகச்சங்கலிகளை
உடைக்க அவளின் உதவியின்றி சாத்தியப்பட்டிருக்காது.

நான் கைதவறியாய் இழுத்தேன் ? விழுந்து சிதறியது குண்டுமணிகள். நிர்வாணத்தில் என் அகப்பூட்டுகளும்
எரிந்து கருகின. என்னை எனக்குள் எரித்துக்கொள்ளவே அவள் என்னோடு விளையாடிக்கொண்டேயிருக்கிறாள்.
ஓவ்வொன்றாய் எரித்துக்கொண்டேயிருக்கிறாள். நட்பு ஏற்றுக்கொள்ளல், விட்டுக்கொடுத்தல், வழிநடத்துதல்,
வாழ்ந்து காட்டுதல் – எல்லாமும் தாண்டி.. ஹ¥ம் எனக்கு எழுதத்தெரியவில்லை. புத்தகங்களில் நீயும், நானும்
நண்பர்களாக போஸ் கொடுத்து சிரித்துக்கொள்வோம். என் அகத்தில் அவளும் நானும்.. அது உனக்கும் தெரியும்.

துரியோதனா, அப்படி என்னதான் அனுப்பியிருக்கிறாய் ?

Friendship is all about three things – winning, losing and sharing.
wining your frineds, losing your self ego and sharing joys and sorrow.

நன்றாகத்தானிருக்கிறது. ஹ¥ம்.
அதற்குமேலே நாலுவது ஒன்று. helping self liberation.. என்னிலிருந்து எனக்கான விடுதலை..
குண்டுமணி உருளவேண்டும். அவள்தான்..

**

அவன் போன் செய்தான்.

‘ஹாய்.. ஹோப்பி பிரெண்ட்சிப் டே..’ தொடர்ந்தான். எங்கு போவான் என்று தெரியும். நினைத்தபடியே அவன்
புதிதாய் சந்தைக்கு வந்திருந்த குழந்தைக்கான காப்பீடு பற்றி அவன் அனுப்பிய மின்னஞ்சலை நினைவு கூர்ந்தான்.

அந்த எழுத்தாள நண்பன் போன் செய்திருந்தான். திருப்பி கூப்பிட்டதில் அவன் எழுதிய கதையின் படிப்பனுவத்தை
ஒரு சில பத்திகள் எழுதி அனுப்பச்சொன்னான்.

அலுவலக நண்பர்கள் சிலரிடமிருந்து, யாரோ அனுப்பியதை பெயர் மாற்ற தேவையின்றி மற்றவருக்கு அனுப்புதல்
தொடர்கிறது. நான் யோசித்து கொண்டேயிருந்தேன். எனக்கு நண்பர்களாயிருந்தார்களா, இருக்கிறார்களா.
நான் நண்பனாயிருந்திருக்கிறேனா.. இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஆழமாய் யோசித்தால்
யாராவது தென்படலாம்.

பால்ய தோழர்கள், சிறுவயதில் கிடைக்கும் வெற்றிடத்தை நிரப்பியவர்கள்.

வீரமணி – ஊர் சுற்ற, பயந்த இடங்களுக்கு கூட்டிச்செல்ல, அவன் அக்கா பெருந்தனக்காரி, என்னை ரொம்ப பிடிக்கும்
அவளுக்கு ; பட்டாம்பூச்சி பிடிக்க, பிடித்த எலியை துடிதுடிக்க கொல்ல, தவளையை கவுத்துப்போட்டு அறுக்க, முட்டை
சாப்பிட, அதன் கவுச்சம் பழகிட

ஆனந்து – ப்ளேபாய் கதைகளை சொல்ல, பாஸ்ட் பெளலிங் போட, என் அப்பாவும் அவன் அப்பாவும் நண்பர்கள்,
அவனின் மாமா பெண்ணின் தாவணிக்குள் கைவிட்ட கதையை அகிரா குரோசாவின் கதையைவிட சுவாரச்சியமாக சொல்லுபவன்,
கெட்ட நேரம் பேராசிரியராகி பெண்ணிடம் மாட்டி கட்டாய கல்யாணமாகிவிட்டதாகவும் தெரிகிறது. பதினைந்து வயதில்
வயதுக்கு வந்தபோது அணைத்து, ஆறுதல் படுத்தி எந்த பீசுமில்லாமல் சேவைசெய்த மாத்ருபூதம் ; ராமு – நான் பேசமுடியாத
கெட்ட வார்த்தைகளை அவன் பேச, நான் அதை பிடிக்காததுபோல நடித்து அதில் அற்ப சுகமடைய ;

அப்துல் – விட்ட பாடங்களை ஞாபகப்படுத்த மற்றும் நோட்ஸ் கொடுக்க, டியுசன் வாத்தியார்களிடமிருந்து கேள்விப்பேப்பரை
திருடிக்கொடுக்க. என் வீட்டிற்கு திவச நாளைத்தவிர வீட்டின் வரவேற்பறைவரும் அவனது பண்ணையா ராவுத்தர் பங்களாவீட்டிற்கு
ஓருமுறை கூட அநுமதித்தேயில்லை. வெளியிலிருந்து குரல் கொடுக்க வெளியில் நின்று கால் கடுக்க ஒருமணி நேரம் பேசுவோம்.
அந்த பண்ணையாராவுத்தரின் சாய்வு நாற்காலி இன்றுமிருக்கலாம் ;

பாலசுப்ரமணியம் – அவன் வீடும், பேட்டும், கார்க் பாலும், ஆங்கிலப்பட அறிமுகமும், டிக்கெட் வாங்கிவிட்டு அதற்கான காசு
கேட்க மறந்துவிடும் பெருந்தன்மையும் ; நடராஜன் – கல்லூரியில் சைக்கிளில் கொண்டு போக, போகும் வழியில் பேசிக்கொண்டே
போக, புரியாத கணக்குகளை சொல்லிக்கொடுக்க, படித்ததை அவன் சொல்ல அதை கேட்டு எழுது வாங்கும் மதிப்பெண்ணே எனக்கு
போதும் என்கிற பொன் செய்யும் மனசை அடையச் செய்தவன். திருடன் பாஸ் வாங்கும் அளவிற்கே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பான் ;

அச்சு – புத்தகங்கள் பரிமாறக்கொள்ள, வீட்டிக்குள் மதிக்கிற சில நண்பர்களின் வரிசையில் முக்கியமானவனாக ;
கண்ணன் – நேரம் கொல்லி, பெண்கள் அவனிடம்வந்து பேசுவார்கள், எல்லா நூலகங்களிலும் அவன் உறுப்பினன், அவன் அம்மாவின்
சாப்பாடு நன்றாகயிருக்கும், சிரிகாந்த் – அவன் அப்பா பணக்காரர், அவனிடம் துட்டு புரளும், கண்ணன் – நல்ல நண்பன், அவன் வீட்டில்
சனி, ஞாயிறைக்கழிக்கலாம், அவன் அம்மாவிற்கும் வீட்டைவிட்டு வெளியில் போகாமல் தனது மகனை குஸிப்படுத்தும் சமர்த்து நண்பர்கள்
தேவைப்பட்டது ;

இப்படி நிறைய, ஆனாலும் கோடிட்டயிடங்களை நிரப்புவதுபோல அவர்கள் பெயருக்கு முன்னால் ஏதோ சில பயன்பட்டுவிதிகள்
வந்துவிடுகின்றன, X = A + B + C என்பதைப்போல. எந்தவிதிகளுமற்ற தோழமை, மறுபடியும் ஞாபக குப்பையில் தோண்ட ஆரம்பித்தேன்.

***
சுதாமா அந்த நாட்கள் ஞாபகமிருக்கிறதா, எதுவுமே கவலையற்ற நாட்கள், சாப்பாடும் கல்வியுமாய் நாம் முகிழ்ந்து
வளர்ந்த நாட்கள், நீ யாரென்று உனக்கும், நான் யாரென்று உனக்கும் தெரியாத பால நாட்கள். தெரிந்தாலும் அது
நம்மை துன்புறுத்தாத நாட்கள். அப்போது அதன் சுகம் தெரியவில்லை.. என் அடுத்த நண்பன் வந்தபின்புதான் உன்
நிழலின் அருமை தெரிந்தது. அவனுக்கு என் சகோதரி தேவைப்பட்டாள். அவனின் காம அலைச்சலை என்னால்
புரிந்துகொள்ளமுடிந்தது. அவன் நல்லவந்தான். தனக்கென யாரோடு பகிர்ந்துகொள்ளாத பெண் துணை தேவைப்பட்டது.

காமம் தாண்டி தன்னை மிரட்ட, தானே தன்னுள் அடங்க என பெண் தேவைப்பட்டாள். அதற்குநான் தேவைப்பட்டேன்.
அவன் குடும்பத்திற்கும் நான் தேவைப்பட்டேன். எனக்கும் அந்த சமரச வேலை பிடித்திருந்தது. என் பலம் மேலும் பலப்பட்டது.
எங்களின் நட்புறவு கதைகளுக்கு எல்லோரும் புதுபுதுச்சாயங்கள் பூசுகிறார்கள். எனக்கென்னவோ தேவையின் பொருட்டு
முகிழ்ந்ததாய்த்தான் பட்டது. அதனால் ஒன்னும் தவறில்லை. friend indeed is friend in need..

நமது நட்பும் அப்படித்தானிருந்திருக்க முடியும், நீ அவல் கொண்டுவராததுவரை, உன் அவல் மூட்டையோடு நமது
நட்பிலும் ஏதோ எதிர்ப்பார்ப்பும், தேவையும் ஓட்டிக்கொண்டது. அது என்னை ரொம்பநாளாய் உறுத்திக்கொண்டிருக்கிறது.
இதை யாரிடமும் சொன்னதுமில்லை. எல்லா கோபிகளும் எனக்கு நட்பு நாளில் பட்டை கட்டுகிறார்கள். எல்லாம்
சிவப்பு பட்டிகள்.

எனக்கு நண்பன் யாராகயிருக்கமுடியும் ? அதோ அதோ அவன் வருகிறான். ஆகா.. அவனுக்காகத்தான் காத்திருந்தேன்.
அவன் கையில் விடம் தோய்ந்த அம்பு, அகத்திலிருந்து விடுபட்ட என்னை இந்த புற உலகத்திலிருந்து விடுவிக்க
வருகிறான். அந்த வில் என் பாதகமலங்களை துளைக்கிறது. என்னிலிருந்து விடுபட்ட நான், இங்கிருந்து விடுபடுகிறேன்.

நன்றி வேடவா நண்பனே !

சுதாமா, அர்ஜுனா விடம் தலைக்கேறுவதற்கு முன் உங்களுக்கும் பார்மாலிடிக்காய் ஒரு குறுஞ்செய்தி – ஹாப்பி நட்பு தினம்!

****

சரவணண் – வேலை நண்பன். அடுத்த நிறுவனத்தில் அப்ளை செய்ததை சொல்லாதவன். வீடு வாங்குவதையும்
எல்லா ரிஜுஸ்ட்ரேசன் முடிந்தவுடன் சொன்னவன், அமெரிக்கா போய்விட்டு வந்தவுடன் மட்டுமே சொல்வதில் நிபுணன்,
அடக்கம் என்று அதற்கு நான் பொருள் செய்துகொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவன் ;

ரொம்ப நாளைய பேசாத அந்த நண்பனின், சாகரின் தொலைபேசி எனக்கு ஆச்சரியமளித்தது. நான் அதை
எடுக்கவில்லை. அவனது நிறுவனத்திற்கு விளம்பர காண்ட்ராக்ட் கொடுக்காததால் கோபம் கொண்டு மெல்லிய
குடிக்கோபத்தில் அவன் ஒரு வருடங்களுக்கு முன் விளாசியிருக்கிறான். அதற்குப்பிறகு அவனது நிறுவனத்துடன்
தொடர்பிருந்தாலும் அவனுடான தொடர்பை தவிர்த்து அவனது உதவியாளர்களிடம் பேசுவதிலும் மின்னஞ்சல்
உதவி கொண்டும் வாய் வார்த்தைகளை தவிர்த்து வந்தேன். அதுவும் நல்லதாகப்போனது.

அவனது உதவியாளர் வித்யா என்னோடு வந்தாள். அளவுக்கதிகமாக ஆறுமாசம் அது நீடித்தது. அந்த
கம்பெனிக்கு மறுபடியும் விளம்பர காண்ட்ராக்ட் கொஞ்சம் கொடுத்தேன். ஆனாலும் சாகரோடு பேசுவதேயில்லை.
ஒரு மிஸ்ட் கால் – சாகர் என்ற எழுத்தை பார்த்துக்கொண்டேயிருந்தேன். பேசியிருக்கலாமோ.. அன்றைய
தினத்தை தவிர்த்து சாகர் ஒண்ணும் அவ்வளவு மோசமானவனில்லை.

வித்யா இன்னொரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறாள். அவளுக்கு தெரியும் – அவளது உதவியாளரை அனுப்பினாள்.
சோனியாவின் இனிய நட்பு தொடங்கட்டும் என்கிற குறுஞ்செய்தி வந்திருந்தது. என்னிக்கி போகலாம், விளம்பர பட்ஜெட்
ஏற்கனவே சுருங்கியிருந்தது. இதில் சாகருக்கும் வித்யாவுக்கும் எப்படி பிரித்துக்கொடுப்பது என்ற கவலையைத்தாண்டி
சோனியாவை – அது அப்புறம், முதலில் குறுஞ்செய்தி அனுப்பு.. ” விரைவில் தொடங்கும் சோனியா.. ” கிளிக்கு..

கொஞ்சம் சந்தோசமாகயிருந்தது. நன்றாக மாலிஸ் செய்யப்பட்ட கைகள், நீண்ட பஞ்சாபி விரல்கள். ஆடைகள்
மறைத்த பகுதிகள் அவர்களுக்கு அளவுக்கதிகமாக சிகப்பாயிருக்கும். நிறைய பஞ்சாபி படுக்கை ஜோக்குகள் கைவசமிருக்கின்றன.
கவலையில்லை. இரண்டு நாள் ஓப்பேத்திவிடலாம். ஒரு நாலைந்து டிரிப் போதும். வயித்துக்கடியில் வண்ணத்துப்பூச்சி
சிறகு விரித்தது. நாற்பத்தைந்தில் இதெல்லாம் அதிகமானதாக படவில்லை. வித்யா நல்ல பிரெண்டுதான். எதிர்பார்த்து
உதவி செய்தல் தவறென்றால் அது தவறுதான். வித்யா என் உடல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த போனபின் ஒரு நல்ல
நண்பியாக மலரலாம். ‘அதற்கு வாய்ப்பேயில்லை ரமணி, நீ சாகும்வரையில் வயக்ராவோடுதான் வாழ்வாய்’ என்று
சிரிப்போடு சொல்லுவாள்.

நரைகூடி, கிழப்பருவமெய்திஅப்போது யார் நண்பர்களாயிருப்பார்கள். ? யாராவது கிடைக்காமலா போய்விடுவார்கள்.
ஒரு கிழடுக்கு இன்னொரு கிழடு பிரெண்டு. பழைய நண்பர்கள் யாராவது.. ஹ¥ஹ¥ம்.. ஏன் வித்யாவோடோ நல்ல நண்பனாயிருக்கலாம்.
ஓளவையார், அதியமான் போல. அவளோடு சின்னதாய் ரெட் ஓயின் சாப்பிட்டுக்கொண்டு, தொட்டுக்க பாலக்காட்டு
அவியலுமாய் மெல்லிய சீண்டலோடு – நல்ல நட்பாயிருக்கலாம்தான். ஆனாலும் அவளுக்கு ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும்,
லிண்டஸை விட ஓ அண்ட் எம்மை விட பெரிய விளம்பரநிறுவனம் இந்திய மண்ணிலிருந்து என்கிற கனா – எத்தனை
தோல்களை வேணாலும் அவள் விலைக்கு கொடுப்பாள். வயதானவுடன் அடங்குகிறோமோ என்னவோ ?
கண்டிப்பாய் யாருக்காகவும் வடக்கிருந்து நோன்பிருந்து உயிர் நீக்கவும் முடியாது. பிபி, டயாபடிச் தொந்திரவில்
அதெல்லாம் சாத்தியமுமில்லை. ஆனாலும் வித்யாவின் மார்புக்கிடையேயான சூடு நட்பு மிக்கது. சளைத்த உடலுக்கு,
கலைத்த மனதிற்கும், தோற்றுப்போன கனவுகளில் கசப்பிற்கும், வாழ்க்கையை அடுத்த பக்கத்திற்கு திருப்பி கொண்டுபோவதற்கும்
அந்த சூடு தேவைப்படுகிறது.

வித்யாவிடம் கேட்கவேண்டும். எடுத்ததை கோர்க்க, கோர்த்ததை இழுக்க.. பின் கோர்க்க..

*****
மனைவிக்காக மால்களில் காத்திருப்பது என்பது மரணதண்டனைக்கு ஓப்பானது. எவ்வளவு நேரந்தான் அழகான
பெண்களையே பார்த்துக்கொண்டிருப்பது. சில நேரங்களில் டிராபிக், அடுத்த மாச டார்கெட், மனைவியினூடனான
சண்டை, குழந்தையின் குறைந்த கிரேடுகள், அம்மாவின் உடம்பு, மால்குடி ஜெயராமன், நித்யஸீ, பாரதி, சுந்தர ராமசாமி,
சுஜாதா தாண்டியும் – அழுக்கான அழுத்தமான தனிமை கவ்வி விடுகிறது.

ஏதோ செய்வது தெரியாமல் மனைவியின் கைப்பையை நோண்டினேன்.

பிங்க் கலரில், மஞ்சள் கலரில் ரிப்பன்கள் – நட்புத்தினத்திற்காக. அடியில் சிவப்பு கலரில் ஒன்று, சின்ன கடிதத்துடன்
“மூன்று வருடமாய். முதல் வருடத்தில் பிங்காயிருந்து, அப்புறம் மஞ்சளாகி இப்போது சிவப்பாயிருக்கிறோமென
நினைக்கிறேன் ” கபில்.

[பிங்க் – உன்னை பிடித்திருக்கிறது ; மஞ்சள் – நண்பனே ; சிவப்பு – அதையும் தாண்டி புனிதமான.. காதல். அகவிடுதலை]

நான் துரியோதனில்லையென்றாலும், யாராவது கர்ணணாயிருக்கலாம்..

******

‘அப்பா ரிப்பன் லெக்கே தேநா ‘ [ ரிப்பன் வாங்கித்தா ]
‘என்ன ரிப்பண்டா’
‘ரெட் கலர்’
‘ஹேய், எந்த பிரெண்டுக்குடா
‘நம்பளோட எர்த்திருக்கில்லா .. உச்சுகோ பேந்நேகா ( நம்மளோட பூமியை சிவப்பு ரிப்பனால கட்டணும்)

முட்டாப்பய மவனே..

*****************
நன்றி : யுகமாயினி, செப்டம்பர் 2008

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி