சில விவாதங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

சேவியர்


0

என்னையே நான்
கேட்டுக் கொள்வதுண்டு.
என்
வாக்குவாதங்களின்
உண்மை விகிதங்கள் பற்றி.

முடிவுகளுக்குள்
வேர்விட்டு,
பின்
வாக்குவாத கிளைகளை
வெளியிடும் பலகீனம் பற்றி.

என்னை நோக்கி
கடந்துவரும்
கருத்துக் கால்வாய்களை
என்
காலணி ஆதிக்க அணைகள்
ஏற்றுக் கொள்ள மறுப்பதுண்டு.

என்
முகத்துக்கான
அறிவு ஜீவித் தோற்றம்
அவிழ்ந்து விடுமோ எனும்
அச்சமும்,

அவன் என்ன அறிவு ஜீவியா எனும்
துச்சமும்.
என் மேகங்களை எனக்காய்
தயாரித்துத் தருகின்றன.

தனிமையின் தலையணைகள்
தவறாமல் தகராறு செய்யும்
ஆனாலும்
என் தற்பெருமை பெய்யும்
இதயம் அதன்
தலைகளைக் கொய்யும்.

எல்லோரும்
விவாதிக்கிறார்கள்
என்னைப்போலவே,
அவரவர் வட்டத்துக்ளுள்
பாதுகாப்பாய் நின்றுகொண்டு.

கோடுகளைத் தாண்டினால்
கேடு வரும் எனும்
இதிகாசக் கதையின்
பாதிப்போ என்னவோ ?

அவரவர் நிலங்களில்
அவரவர் விதைகளில்
அவரவர் வேர் விட்டு
அடுத்தவர் தோட்டத்தில்
இலை உதிர்க்கிறார்கள்.

என் இலைகள் மட்டுமே
சரித்திரமாகும் என்று
நானும்
சவால் விட்டுக் கொண்டிருக்கிறேன்.
எல்லோரையும் போலவே.

0

Xavier_Dasaian@efunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்