சிந்திக்க ஒரு நொடி – மாண்புமிகு பெருங்குடி மக்கள் தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ஒரு கேலிக் கூத்து

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

வாஸந்தி


‘நான் சொற்ப காலத்திற்கு ஒரு மிக முக்கிய பதவி வகிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.

உங்கள் பார்வைக்குத் தென்படும் எனது இன்றைய செல்வாக்கு விரைவில் போய்விடும். ஆனால் இந்த சிறிய காலத்தில் எனது ஆட்சிக் கொடூரமானதாகவோ அல்லது அறிவுகெட்டத்தனமாகவோ இருக்கும்பட்சத்தில், மக்களாகிய நீங்கள் உங்களுக்கும் சாஸனத்துக்கும் உண்மையாக இருப்பீர்களானால், அப்பாடா,

நல்லவேளை, என்னால் அதிக கேடு விளைவிக்கமுடியாது ‘.– அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது- ஆப்ரஹாம் லிங்கன்.

நீங்கள் வேலை வெட்டி இல்லாதவர். ஐயோ பாவம், ஏன் ?

அந்த வயிற்றெரிச்சலைக் கேட்காதீர்கள். படிக்கவேண்டிய காலத்திலே அரசியல், கூட்டம்னு பொழுதைக்கழிச்சதிலே…சரியான பட்டமோ தகுதியோ இல்லாதபோது…

புரிகிறது. அரசியல் கூட்டத்திற்குப்போய் பழக்கம் என்றால் பேச்சுத் திறன் இருக்குமே ?

ஆகா, அதுக்கு ஒண்ணும் குரைச்சலில்லே.

பிறகு என்ன, கவலை வேண்டாம். மிக சுபிட்சமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது. ஒரு அரசியல் கட்சியில் சேருங்கள் அல்லது ஆரம்பியுங்கள். ஒரு சிக்கென்ற கோஷத்தைக் கையிலெடுங்கள். தேர்தலில் வேட்பாளராக நிற்க உங்களை ஆயத்தப்படுத்திகொள்வது மட்டுமே உங்கள் வேலை.கட்சித் தலைவர்களுக்குக் கும்பிடு போடுவதை மறக்கக் கூடாது. அதில் ஒரு தப்பும் இல்லை.ஆனால் எந்தக்கட்சி ஜெயிக்கும் என்பதை நிர்ணயித்து அதில் சேர்ந்து கொள்வது உத்தமம்.

ஜெயித்து வந்துவிட்டாலோ, ஆகா,குறைந்த பட்சம் அடுத்த தேர்தல் வரும் வரை உங்களைக் கட்டிப்

பிடிக்க ஆளில்லை.எதிர் கட்சித் தலைவராக இருந்தால் இன்னும் உத்தமம். நீங்கள் சட்டமன்றத்திற்கு வரத் தேவை இல்லை. யாரும் அதைத் தவறாக நினைக்கமாட்டார்கள். அது மட்டுமல்ல, வராமல் போனாலும் உங்கள் சம்பளம் இரட்டிப்பாக உயர்த்தப்படும். எந்த நாட்டிலாவது இது நடக்குமா ?

தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இப்போது பொற்காலம்.தொலைக்காட்சி செய்திகளைத் தவறாமல் நீங்கள் பார்ப்பவராக இருந்தால், மக்கள் பிரதினிதிகளாகப் போகிறோமே என்னென்ன பொறுப்பிருக்குமோ என்று கவலைப் பட மாட்டார்கள். உங்களுக்குக் கைகளும் கால்களும் பலமாக இருக்கின்றனவா என்று மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் ஆளும் கட்சியாக இருந்தால் முதலமைச்சர் பேசும்போதெல்லாம் நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜையை பலமாக, உற்சாகமாகத் தட்டவேண்டும். எதிர் கட்சியாக இருந்தால், முதலமைச்சர் சொல்லும் எல்லாவற்றிர்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கிடுகிடுவென்று வெளிநடப்பு செய்ய வேண்டும். ஆ, இன்னொரு வேலையும் உண்டு. வெளியில் தயாராக நிற்கும் எதிர்கட்சி ஆதரவு டி.வி.காமராக்களின் முன் உங்கள் எதிர்ப்பின் காரணத்தைப் பதிவு செய்யவேண்டும். ஆளும் கட்சி அமைச்சரா நீங்கள் ? அதுவும் ஒன்றும் கடின வேலை இல்லை. அம்மாவே

சரணம் என்ற தாரக மந்திரம் கைகொடுக்கும். வாயே திறக்காத, சொன்ன வேலையைக் கச்சிதமாகச் செய்ய அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகள் வேறு இருக்க என்ன கவலை ?

இத்தனை சுலுவான வேலைக்கு நீங்கள் வந்த வேளை நல்ல வேளை.உங்களுக்கு இருக்கும் இந்த

மகத்தான பொறுப்புகளுக்குக் கிடைத்த ரூ. 12,000 மற்றும் இதர பல சலுகைகள் போதாது என்று அரசின் நிதி நிலைமை மிக மோசம் என்று சொல்லப்பட்ட 2001-ம் ஆண்டே பாவம் நீங்கள் கோரிக்கை

வைத்தீர்கள். நீங்கள் செய்த புண்ணியம் பாருங்கள், இப்போது ஆச்சர்யகரமாக அரசின் நிதி நிலைமை ‘ஓரளவு சீர்பட்டு முன்னேற்றப் பாதையில் செல்கிறது ‘. ஆகையால் தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் அவருக்கே உரிய பாசத்துடன், 12,000 த்தை 16,000 மாக அதிகரித்துவிட்டார். அதுமட்டுமல்ல, அந்த உயர்வு 15.9.2001 முதல் கணக்கிட்டுக் கொடுக்கப்படும். என்னே உங்களது அதிர்ஷ்டம். என்னே அம்மாவின் கருணை! இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்குரூ.1.58 கோடி கூடுதல் செலவாகும். முன் தேதியிட்டு வேறு வழங்கப்படுவதில் நிலுவைத் தொகைக்காக ரூ.5.6 கோடி செலவாகும்.

ஆகட்டுமே! தமிழகத்து மக்களின் பிரதினிதிகள் நீங்கள். தங்களுக்காக நீங்கள் ஏதோ மலையைக்கெல்லி, கல்லை நாறாக உறித்து,அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்ச்சியில் இருப்பதாக

நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த பிரமையைத் தக்கவைத்துக்கொள்ளவாவது உங்களுக்குச் சில தோரணைகள், பாவனைகள் தேவை.அதற்கு இந்த சம்பள உயர்வு தேவைப்படும். ரொக்கமாகக் கிடைக்கும் நிலுவைத்தொகையை எதிலாவது முதலீடு செய்யுங்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். அட, உங்களுக்குத் தெரியாததா ?

சலுகைகள் ராஜ்ஜியமாகப் போய்விட்ட தமிழகத்தில், அரசின் நிதி நிலைமை எப்படி உயர்ந்தது என்பது ஆண்டவனுக்கு வெளிச்சம்.உங்கள் பகுதி முன்னேற்றத்திற்குக் கொடுக்கப்படும் தொகை உண்மையிலேயே முன்னேற்றத்திற்குச் செலவழிக்கப்படுகிறதா என்பதும் ஆண்டவனுக்கே வெளிச்சம் என்பதால் நீங்கள் அனாவசிய கேள்விகளில் நேரத்தை செலவிடமாட்டார்கள். நீங்கள் சட்ட மன்ற உறுப்பினர். சட்டப்பாதுகாவலர். ஆனால் நீங்கள் சட்டத்தை கடைப் பிடிக்கவேண்டும் என்ற நிர்பந்தமில்லை. ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தால் முதலமைச்சருடைய பாதுகாப்பும் அரவணைப்பும் நிச்சயம் கிடைக்கும் நீங்கள் அடாவடித்தனம் செய்தாலும். எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ற தகுதியில் நீங்கள் அவை நடப்பில் கலந்து கொள்ளாமல் வெளி நடப்பு செய்தால் சாஸனத்தை மதிக்காதவர்கள் என்று விமர்சகர்கள் சொல்வார்கள். அதற்கெல்லாம் ரோசப்படுபவர்கள் நீங்கள் இல்லை.அவையில் உங்களைப் பேசவே விடாவிட்டால் நீங்கள் தான் என்ன செய்வீர்கள் ? பேச வாய்ப்பு கிடைத்தாலும் தான் என்ன நீங்கள் எல்லோரும் பரஸ்பரம் சாடுவதும் ஏசுவதும் காது கொண்டு கேட்கும்படியாகவா இருக்கிறது ? அதற்கு வெளி நடப்பே மேல்.

மிக எளிய குடும்பத்தில் பிறந்து அதிபர் பதவி எட்டிய போது ஆப்ரஹாம் லிங்கன் அப்பாடா இனி செளகர்யமாக வாழலாம் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்க மாட்டார் நிச்சயம்.அவரது சம்பளம் என்ன என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகள் சொல்லவில்லை,அது முக்கியமானது இல்லை என்பதுபோல.மக்கள் தேர்ந்தெடுத்த பிரதினிதி தான் என்கிற விஷயம் அவரை பணிவின் உறைவிடமாக்கியது.மக்களது நம்பிக்கை ஏற்படுத்திய சுமை அவரது அதிபர் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ஆக்கிரமித்து மக்களுக்காகவே செயல் படவைத்தது. முன்பொரு காலத்தில் மக்கள் சேவை என்பதே அரசியலில் நுழையத் தேவையான உந்துசக்தியாக இருந்தது.

நமது மாண்புமிகு அவை உறுப்பினர்களுக்கு லெளகீக சிந்தனைகள் இருக்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. மக்களைப் பற்றிய சிந்தனையே இல்லையே என்றுதான் சொல்கிறோம்.

—-

Series Navigation