சித்திரவதை

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

ஞாநி


இராக்கின் அபு க்ராய்ப் சிறையில் இராக்கி கைதிகளை அமெரிக்க ராணுவத்தினர் சிலர் இழிவுபடுத்தியும் சித்திரவதை செய்தும் வந்துள்ள காட்சிகளைக் கண்ட எந்த நேர்மையான மனமும் அமெரிக்க அரசை சபிக்கும்.

இராக்கியர்களை நிர்வாணப்படுத்தியும் ஓரின பாலுறவு கொள்ளக் கட்டாயப்படுத்தியும், நாய்களை ஏவி மிரட்டியும் செய்யப்பட்டுள்ள கொடுமைகள் நவீன ஹை டெக் தேசம் என்று நம்பப்படும் அமெரிக்காவின் கொடூரப் பழமைவாத முகத்தை அம்பலப்படுத்தியுள்ளன.

இது நான் அறிந்த அமெரிக்க வாழ்க்கை முறையே அல்ல. இது கண்டிக்கத்தக்கது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்தார். தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொன்னார். இதற்காக நம்ம ஊர் சோ உருகி உருகி அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார். அதுதான் அமெரிக்கா. தப்பு நடந்தாலும், அவங்களே அதை ஒத்துகிட்டு ஆக்ஷன் எடுத்துடறாங்க. அந்த நேர்மை முக்கியம் இல்லியா என்ற ரீதியில் அவர் போன்றோர் சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிஜம் என்ன ?

இது ஏதோ வித்யாசமாக அபூர்வமாக நடந்து விட்ட கொடுமையா ?

இல்லை. இதுதான் அமெரிக்க அரசின் வாழ்க்கை முறை. குறிப்பாக புஷ் ஆட்சியின் அணுகுமுறை என்பதற்குப் பல ஆதாரங்களைக் காட்டியுள்ளார் ஃபிரண்ட்லைன் இதழில் எழுதி வரும் விஜய் ப்ரசாத்.

ஜனாதிபதியாவதற்கு முன்பு டெக்சாஸ் மாநில முதல்வராக புஷ் இருந்தபோது ஐந்தாண்டுகளில், 152 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார். புஷ் ஆட்சிக் காலத்தில் டெக்சாஸ் மாநில சிறைச்சாலைகளில் இப்போது அபு க்ராய்ப் முகாமில் நடந்த அதே மாதிரி கொடுமைகள் நடந்தன. பாலியல் வன்முறைகள், நாயை ஏவிவிடுவது, ஸ்டென் கன்களால் சுடுவது எல்லாம் நடந்திருக்கின்றன. பெண் கைதிகளை கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து தண்ணீர் தராம்ல் துண்புறுத்துவது, அழுக்கிலும், சகதியிலும் முட்டியிட்டு ஊர்ந்து வரச் செய்வது என்று கொடுமைகளுக்குக் குறைவில்லை.

தற்போது அமெரிக்கச் சிறைகளில் மொத்தம் 20 லட்சம் கைதிகள் உள்ளனர். மேலும் 50 லசம் பேர் நீதி மன்றக் கண்காணிப்பில் உள்ளனர்.

கல்லூரிகளில் படிக்கும் அமெர்ிக்கக் கறுப்பின இளைஞர்கள் எண்ணிக்கையை விட சிறையில் உள்ள கறுப்பு இளைஞர்கள் அதிகம். சிறையில் உள்ளவர்களில் பாதி பேர் கைதானபோது எந்த வேலையிலும் இல்லாத ஏழைகளாக இருந்தவர்கள்.

அமெரிக்க சிறைக் கொடுமைகள் பற்றி அம்னெஸ்ட்டி இண்ட்டர் நேஷனல் தொடர்ந்து தகவல்கள் வெளியிட்டு வருகிறது. 1999ல் புளோரிடா சிறையில் காவலர்கள் அடித்து இறந்த வால்டெஸ் என்பவர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு இறந்ததாக பொய் சொல்லப்படது. 2000த்தில் இந்த வழக்கில் காவலர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. கலிபோர்னியாவில் 2001ல் கைதிகளைக் கொண்டு யாராவது ஒருவர் இறக்கும்வரை ஒருவரோடொருவர் பழைய ரோமாபுரி பாணியில் சண்டையிட வைக்கும் ‘விளையாட்டை ‘ காவல்ர்கள் நடத்தி வந்தனர்.

பெண் கைதிகள் உள்ள சிறைகளில் அவர்களிடம் வன்புணர்ச்சியில் ஈடுபட்டது, முறைகேடு முதலிய குற்றங்களுக்காக 11 பேருக்கு மேல் தண்டிக்கப்பட்டுள்ளனர். தெற்கு டகோடாவில், சிறுமிக் கைதிகளை தரையில் கை காலைப் பரப்பிய நிலையில் படுக்க வைத்து, ஆடைகளைக் கிழித்து, நிர்வாணப்படுத்தி, உடலின் மீது மிளகுத் தூளை தூவியும், தினசரி 23 மணி நேரம் தனிமைச் சிறையில் வைத்துக் கொடுமைப்படுத்தியும் வந்ததாக காவலர்கள் மீது வழக்கு உள்ளது.

அமெரிக்காவுக்குள் முறையான விசா பத்திரங்கள் இல்லாமல் வந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவ்ர்களும் கொடுமைக்குள்ளாகியுள்ளனர். 1995ல் கைதான ஒரு இந்தியக் கைதி, காவலர்கள் சிறு இடுக்கியால் தன் ஆண் குறியின் தோலைப் பிடித்துக் கிழித்ததாகவும், தன் நாக்கை அடிக்கடி நசுக்கியதாகவும் கூறியுள்ளார். செப்டம்பர் 11க்குப் பிறகு விசா குற்றங்களுக்காகக் கைதாவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிவிட்டது. இவர்கள் யாருக்கும் சொந்த ஊரில் இருக்கும் குடும்பத்துடன் தொடர்புக்கு அனுமதி இல்லை. வக்கீல் உதவி இல்லை.

இராக் கைதி முகாமைப் போலவே கியூபாவிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ராணுவ கைதி முகாம்களில் கொடுமைகள் பதிவாகியுள்ளன. இவையெல்லாம் அமெரிக்க சிறைகளில் வழக்கமாக என்ன நடக்கிறதோ அதன் பிரதிபலிப்புதான். தற்போது இராக் கைதி முகாம் சித்திரவதையில் சம்பந்தப்பட்டுள்ள ராணுவ அதிகாரிகள் சிலர், முன்னர் அமெரிக்க சிறைத்துறையில் பணியாற்றியவர்கள்தான்.

கடந்த அக்டோபரில் புஷ் அறிவித்தார் – ‘ எங்கள் நாட்டில் யாரையும் சித்திரவதை செய்வது என்பதே கிடையாது. அப்படிச் சொல்பவர்களுக்கு அமெரிக்காவைப் பற்றித் தெரியவில்லை ! ‘

புஷ்ஷின் அகராதியில் அப்படியானால் சித்திரவதை என்பது என்ன ?

—-

உலகில் எல்லா நாடுகளிலும் சிறைச் சித்திரவதைகளும் காவல் விசாரணை, ராணுவ விசாரனைச் சித்திரவதைகளும் நடந்தபடிதான் இருக்கின்றன. மனிதன் மீது மனிதன் அன்பு செலுத்தமல் அதிகாரம் செலுத்த ஆசைப்படும் வரை இது நடந்துகொண்டுதான் இருக்கும்.

அமெரிக்க ராணுவம் இராக்கில் செய்தது கொடூரமானதுதான். ஆனால் அது போல வேறெங்கும் நடப்பதில்லை ; இந்தியாவில் எல்லாம் அப்படி எதுவும் நடக்காது என்று நினைத்துக் கொள்வது அர்த்தமற்றது.

காஷ்மீரில் உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் ஏழு சிறைச்சாலைகளின் நிலைமைகளை ஆய்வு செய்ய காஷ்மீர் உயர் நீதி மன்ற பார் அசோசியேஷனின் தலைவர் உள்ளிட்ட ஒன்பது பேர் குழு அனுப்பப்பட்டது. ஏப்ரலில் தரப்பட்ட குழுவின் அறிக்கையை தெஹெல்கா வார இதழ் வெளிப்படுத்தியுள்ளது.

பல சிறைகளில் டாக்டர் கூட கிடையாது. சித்திரவதையில் கை துண்டிக்கப்பட்ட ஒரு கைதிக்கு சிகிச்சையே இன்னும் தரப்படவில்லை. நெஞ்சு வலிக்கு சிகிச்சை கேட்டு மன்றாடி கிடைக்காத இன்னொரு கைதி தற்கொலைக்கு முயற்சித்தார். நூற்றுக்கணக்கான கைதிகள் மனப் பிறழ்வு ஏற்பட்டு மன நோய்க்கு சிகிச்சை இல்லாமல் அவலமான நிலையில் கிடக்கின்றனர் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏழாண்டுகளுக்கு முன்னர் இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லி வெளியிட்ட ஒரு செய்தியின்படி ஸ்ரீநகரில் உள்ள செளரா மருத்துவ கழகத்தின் மருத்துவர்கள், சித்திரவதை செய்யப்பட்ட கைதிகளுக்கு ஏற்படும் உடல் பாதிப்பை torture nephropathy என்று வகைப்படுத்தியுள்ளனர். சித்திரவதையின்போது ஏற்பட்ட காயங்களினாலும், நீரிழப்பினாலும், மெல்லிய திசுக்கள் பலவீனமடைந்து, சிறு நீரகங்கள் செயலிழந்த நிலையில் 1997ல் 150 பேர் அந்த கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மனிதனுக்கு எதிராக மனிதன் செய்யும் பல வன்முறைகளில் சித்திரவதையும் ஒன்று. இதற்கெதிராக படைப்பாளிகள் தங்கள் கலை இலக்கிய வெளிப்பாடுகளில் சித்ரவதைக்கு எதிர்க்குரலை தெரிவித்து வருகிறார்கள். மனித உரிமை ஆதரவாளரும் ஆங்கில நாடகாசிரியருமான ஹெரால்ட் பிண்ட்டர் ( 74) உலகில் 90 நாடுகளில் சித்திரவதை நடப்பதாகச் சொல்கிறார். இராக்கிற்கு அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் செல்வதைக் கண்டித்த பிண்ட்டரின் ‘ஒன் ஃபார் தி ரோட் ‘ என்ற

நா டகம் சித்திரவதை பற்றிய உளவியல் பார்வையிலானது. இதைத் தமிழில் ‘போதை ‘ என்ற தலைப்பில் பரீக்ஷா குழுவில் சென்னையில் இதை சில முறை நிகழ்த்தியுள்ளோம்.

dheemtharikida june 2004

dheemtharikida @hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி