சிங்கிநாதம்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

எஸ்ஸார்சி


அவனுக்கு வாய் கொஞ்சம் நீளம். அந்த நீளம் அவனை சும்மா இருக்க விடுவதே இல்லை ,அதை வைத்துக்கொண்டு சிவனே என்று எப்படி சாத்தியம். முடியாதது தான்.

‘உங்க விருப்பப்படியே புத்தகக்கடை போாடச்சொல்றேன். நீங்க ஒண்ணும் கவலைப்படவேண்டாம். அதுக்கு நான் பொறுப்பு. ? ‘ நண்பன் சிவத்திடம் சொல்லி இருந்தான். இந்தப்படிக்கு தோது மாது செய்யாமல் விட்டால் ஒரு ஐநூறு ரூபாயுக்கு சீட்டுக் கிழித்து அவன் தலையில் கட்டியிருப்பார்கள். சிந்திசந்தி..இலக்கியக்கூட்டம் நடத்தும் அந்த உள்ளூர் சிவம் தான் லேசுபட்டவரா. விட்டு விடுவதாவது. ஆக நிர்பந்தம். அவர்களுக்கும் ஆட்கள் வேண்டுமே. எங்கே தேறுகிறது. தேடி தேடித்தான் ஆட்களைப்பிடிக்க வேண்டும்.

எப்படியோ முகம் காட்டிக்கொடுத்து விடுகிறது. மார்க்கெட்டில் கறிகாய்கூறு கூறு கட்டி விற்கும்ஆயாக்கள் கூட எந்த மூஞ்சிக்கு கிடா நார்த்தங்காய், கோலி,உருண்டை சுண்டைக்காய்., அகத்திக்கீரை, இதுகள் போணியாகும் என்று கணக்குப்போட்டு வைத்து விடுகிறார்கள் ..( முகம், மூஞ்சி, முகரை இதுகள் வித்யாசம் அறிய அவசியம் பாவாணரைப் பயிலவும் இது நிற்க ) உள்ளூர் நகர் மன்ற அரங்கில் கூட்டம். தமிழ்ப்பொடி,யின் பிரசங்கம்,. ‘ எங்கே போயிற்று தமிழ் உணர்வு ? ‘ தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் கிருபாநந்த வாரியார் சுவாமிகள் கச்சேரி கேட்டவர்கள் தமிழ்ப்பொடியின் பேச்சும் கேட்கலாம் தப்பில்லை. குதர்க்கமாய்ச் சொல்லவில்லை. கர்நாடக சங்கீதத்தை கை பிடியில் வைத்துக்கொண்டால் தாடிக்கார சுயமரியாதை சேதிகள் எப்படிப் போணியாகிறது என்பது பிரத்யட்சமாய் ரசவாதத்தில் பார்க்கவேன்டுமா அது இங்கே சித்திக்கிறது. கர்நாடக சங்கீதமே தமிழ்தான் அதை மேற்படியார் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்.

அந்த கொனஷ்டை ஆலாபனைகள் வேறு சமாச்சாம்.

அவனின் நண்பன் புத்தகக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தான். எப்போதேனும் அவை விற்கும். நல்ல புத்தகங்கள் என்றால் அப்படித்தானே. மூட்டை மூட்டையாய் வெத்துவேட்டுப் புத்தகங்களையும் சுமந்து திரியவேண்டும். கலம் உமி தின்றால் ஒரு அரிசி வாயில் அகப்படுமாம். அந்தக்கதைதான். என்ன செய்வது .ஆனால் ஒரு சூட்சுமம் உமிகளே நெற்களின் உயிர்களை காப்பற்றி வைத்திருக்கின்றன. கெட்ட பெயர் வந்தால்தான் நல்லது செய்ததாய் ருசு.

தமிழ்ப்பொடி கூட்டம் இருக்கு.தம்பி புத்தகக்கடை போடணும்

நல்ல புத்தகங்க நாலு விக்கும். அவசியம் வரணும். நானும் அவங்க கிட்ட சொல்லிப்புட்டேன் ?

எண்ணைக்கு சாரு ? புத்தகக்கடைக்காரன் இழுத்தான்

வர்ர ஞாயிறு தான்

ஏதும் விற்குமா சாரு இல்ல டுபாக்குரு ஆயிடுமா

விற்காதா பின்ன. தமிழ்ப்பொடி ல்ல வர்ராரு .சின்ன சமாச்சாரமா

சாரு, ஆயிரம் ரூவாயுக்கு வித்தா இரு நூரு தேரும். ஆனா கடைபோட்டா தள்ளுபடி கொடுக்கணும்பாங்க வேற. அதுல பேர் பாதி பூடும். அப்படின்னாலும் சரித்தான் . யோசித்தான் .

ஐயாயிரத்துக்கு போணி யாகும். தம்பி ஐநூறு ரூவாயாது தேரும்.சிரமம் இருக்காது. அவசியம் வந்துடுங்க ? என்றான்.

சிந்தி-சந்தி க்காரர்கள் கேட்டு தான் நன்கொடை கொடுத்திருந்தாலும் ஐநூ று ரூபாய் கைபிடிப்பு வரும்தான்.

தப்பித்தோம் நாம் எண்ணிக்கொண்டான்

எத்தினி மணிக்கு வருணும்

ஆறு மணிக்கு

அப்ப ஒரு மணி மின்னாடியே வந்துடறேன்

ரொம்ப சவுகரியம். டவுன் ஹால்தான், பெரிய தபால் அலுவலகம்னு இறங்கிகணும் தெரியும்ல

சரி சார், நாலு சாக்கு பையுங்க இருக்கு புத்தகம் அப்படியே கொண்டாந்துடுவேன்

நம்ப புத்தகமும் ஞாபகம் வச்சிகுங்க தம்பி

உங்க புத்தகம் இல்லாமலா சரியா போச்சி கத குறுக்க நெடுக்க மெனக்கிடறதுன்னா சும்மாவா சாரு

அவனுக்கு கொஞ்சம் லஜ்ஜையாகவும் இருந்தது. இதெல்லாம் பார்த்தால் இந்தக்கலி காலத்தில் நடக்குமா சமாதானம் சொல்லிக்கொண்டான்.

உள்ளூர் டவுன்ஹாலில் சிந்தி-சந்தி இலக்கிய க்கூட்டம் ஆரம்பமானது.

எங்கே போயிற்று தமிழ் உணர்வு ? பேச ஆரம்பித்தார் தமிழ்ப்பொடி. அந்த புத்தகக்கடைகாரத்தம்பி சொன்னது சொன்னபடி கடை விரித்திருந்தான். நான்கு காலியான சாக்குப்பைகள் நாய்குட்டிகள் போல் தரையில் படுத்துக்கிடந்தன.

ஆகா அவன் வந்தாயிற்று. மனம் நிம்மதிகொண்டது. கூட்ட அமைப்பாளர் சிவத்தைக்கண்டு பிடித்தான்

கடை போட்டாச்சி பாத்திங்களா. புத்தகம் எல்லாமே வந்திருக்கு ?

நீங்க சொன்னா சொன்னதுதான் எப்பவும். எனக்கு தெரியாதா சாரு

என்றார் சிவம்

கடையைப்பார்த்து நோட்டம் விட்டு வந்தான். அவனின் புத்தகம் ; படித்தலும் படைத்தலும்;

மையமாய் பதவிசாய் எல்லாம் அவன் செயல் என்று கிடந்தது.

தமிழ்ப்பொடி பேசிக்கொண்டிருந்தார். ; சென்னை யில் இருந்த சாகித்ய அகாடெமியின் மண்டல அலுவலகம் நமக்கு பெப்பெ காட்டி விட்டு கருநாடக பெங்களூருக்கு குடி மாறியபோது எங்கே போனது தமிழ் உணர்வு.

திராவிடப் பல்கலைக்கழகம் அமைத்திட மைய அரசு நூறு ஏக்கர் ,நிலம் வேண்டி நம்மை கேட்டபோது நாம் ஆகாயம் பார்க்க அது தெலுங்கு சித்தூருக்கு போனதே எங்கே போனது

தமிழ் உணர்வு ?

மண்ணின் மொழியே அறியாமல் பட்டமும் பதவியும் கச்சிதமாய் சித்திககிறது இங்கே எங்கே போனது தமிழ் உணர்வு.

கனக விசயர் தலையில் கல் சுமந்து கொண்டு வரப்பட்ட ஆகப்பெரும் பண்பாட்டு விஷயங்கள்

பொடிந்து இன்று சென்னைக் குரங்குகள் ஏறி விளையாடும் பொம்மையானதே அந்தகற்புக்கரசியின் உரு எங்கே போனது தமிழ் உணர்வு.

கீரிப்பட்டி .பாப்பாபட்டி ,நாட்டார்மங்லம் என நியாயங்கள் நிர்வாணமாய். வள்ளுவர் சிலையோ

வானாளவ நமக்கு. எங்கேதான் போனது தமிழ் உணர்வு.

அடுக்கிக்கொண்டே போனார் தமிழ்ப்பொடி.கூட்டம் அவர் பேச்சை க்கேட்டு கிறுகிறுத்து நின்றது.

கரகோஷங்கள் வர்ஷித்தன.

பிரச்சார நெடி அதிகம்தான்.இப்படி பேசித்தான் ஆகவேண்டும் என்றால் பிறகென்ன செய்ய.. எல்லாமே பேசித்தான் முடிகிறது. இல்லை முடியாமல் போகிறது.

உற்றாரை யான் வேண்டேன்,ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்,கற்றாரை யான் வேன்டேன் என்று சொல்ல வந்துவிட்டால் பிறகு நமக்கெல்லாம் என்ன வேலை வேண்டி கிடக்கிறது என்று அவன் அத்வைதமாய் சிந்தித்துப்பார்த்தான்.

துண்டு நோட்டாசு அச்சடித்து உணர்வுகளுக்கு உருவம் கொடுத்தவர்கள் அங்குமிங்குமாய் அலைந்து அதை விநியோகித்துக்கொன்டு இருந்தார்கள் .தமிழ்ப்பொடிக்கூட்டத்திற்கு பத்து செலவானது பெரிய பத்துதான் ஒ ன்றும் தப்பில்லை. யாரோ எழுதி யாரோ படித்து யாரோ வாயசைக்க நெளித்து நிற்பதற்கே கோடிகோடியாய் கொட்டிக்கொடுத்து கும்பிட்டு நிற்கும் பாக்கியசாலிகள் அல்லவோ நாம்.

வருது கொடுக்கிறான் இதுல என்ன்ன்ன இருக்கு ? ஒரு மா ?திரி நியாயம் பேசுபவர்களும் உண்டு.

கூட்டம் முடியும் தருவாயில் இருந்தது .நன்றியுரை சொல்பவர் மேடை ஏறிக்கொண்டார்.

அவன் புத்தகக்கடையை நோக்கினா ன். பையன் புத்தகங்களை அசமடக்கிக்கொண்டு இருந்தான்

ஏதேனும் விற்று இருக்குமோ அவன் தலைசுற்ற ஆரம்பித்தது..

என்ன தம்பி என்றான்

சாரு ஒண்ணும் சரியா போணி ஆவுல. ரெண்டு புத்தகம் வித்துது. ஒண்ணு கோலபுத்தகம் இன்னொண்ணு ஊறுகாயி போடுறது எப்பிடிங்கறது கையில இருபத்திஞ்சி ரூவா இருந்திச்சி, மண்டபக்கார

மானேஜர் டா செலவுக்கு அஞ்சி ன்னு வாங்கிம் போனாறு.

என்ன தம்பி இப்பிடி சொல்லுற ?

ஆமாம் சார் அவ்வளவுதான் கத நாம என்ன செய்ய ?

அவனுக்கு ஆத்திரமாக வந்தது ,கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கை நிறைய சம்பாதிப்பவர்கள்தான்.

குறைச்சல் எதுவும் இல்லை. தமிழ்ப்பொடி என்ன கொம்பா என்று புத்தகமும் வாங்கவில்லை.

சாரு ஊருக்குப்போக இருபது. இங்க ஆட்டோவுக்கு இருபது எப்பிடியும் நாற்பது ரூவா வேணும்

சாப்பாடு

அதெல்லாம் வேணாஞ்சார் வூட்டுக்கு போயி பாத்துக்கலாம்.

அவன் சட்டைப்பையைத்துழாவி ஒரு ஐநூறு ருவாயை கையில் எடுத்துக்கொண்டான் மளிகை ஜாபிதா பைக்குள்ளேயே கிடந்தது. வாங்க வேண்டிய பொன்னி அரிசி ஐம்பது கிலோவுக்கு பதில் இருபத்தைந்து மட்டும் வாங்கிக்கொண்டு, நல்ல அரிசி க்கு கொஞ்சம் அவகாசம் கடை செட்டியாரே கேட்டதாக சொல்லிவிட முடிவு செய்தான். அதுவுமே நாளைக்குத்தான் சாத்தியம்.

சார் என்ன யோசனை

இந்தா ஐநூறு ரூவா. நானும் புத்தகம் எடுத்துக்கறேன்பா

தி.ஜா வின் மோகமுள் தெரிந்தநண்பர் பாவண்ணனின் மொழிபெயர்ப்பு பைரப்பாவின் பருவம் அவ்வளவுதான் வந்தது.

ரெண்டயும் ஒண்னா கட்டிடு

சார் நீங்க வாங்கணும்னு இல்லெ

புத்தகக்கடைகாரன் முகம் மலர்ந்துகொண்டது.. ரெண்டையும் கட்டிமுடித்தான்.

சிவம் வேகு வேகு என்று வந்து.

கடை ஏற்பாட்டுக்கு ரொம்ப நன்றி என்று அவன் கையைப்பிடித்துக்கொண்டான்.

கெடக்கு வுடுங்க .இதெல்லாம் நம்ப கடமை

கையில் புத்தகக்கட்டோடு ஏதோ புரட்சி செய்து விட்ட மனோபாவத்தில் சிவத்தைப் பார்த்தான்.

நீ புறப்படு தம்பி. இங்கயே சாப்பிடு அப்புறம் போ தெரிதா

கையில் இருந்த புத்தகக்கட்டை தன் சைக்கிள் காரியரில் வைத்துத்தள்ளினான்.. புத்தகங்கள் இரண்டையும் அலுவலகத்திலேயே வைத்துவிட்டுப் போவதே சரி. ஒவ்வொன்றாய் மட்டுமே வீடு கொண்டு சேர்க்கலாம்

அலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்த செக்யூரிடி யிடம் கொடுத்து அவைகளைப் பத்திரம் செய்தான்.

வீட்டில் நுழைந்ததுமே:; ஏன் மளிகை ஜாமான் வாங்கியார்ல ? என்றாள்.

செட்டியார்தான் நாளைக்கு ஆவட்டும் புது சரக்குவ வருதுன்னாறு. அதான் வந்துட்டேன்

இல்ல நாராயனாங்க இம்புட்டு நாழியா

அப்பறம் போவறது வர்றது இல்லயா. .சமாளித்தான்.

எங்கனா கெழவனுங்க வாய பாத்து நின்னுகிகினா இப்பிடிதான்

அமைதியாய் பேசாமல் இருந்தான் ?

இப்படியாகத்தானே பலப்பல திப்பிசங்கள் செய்து அவன் வீட்டு அலமாரியே ரொம்பி இருக்கிறது.


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி