சிகுமாரபாரதியின் கட்டுரை பற்றிய கருத்து:

0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 16 in the series 20010602_Issue

கிரிஸ்


நுகர்பொருள் பரிமாண மாற்றம் ஒரு சங்கிலித்தொடர் என்பதை விட சுழற்சி (cycle) என்பது பொருத்தமாக இருக்கக் கூடுமோ என்பது நான் முன் வைக்கும் கேள்வி.

இங்குள்ள மீனும் வறுவலும் கடைகளிலும், பெர்கர் கடைகளிலும், உணவு பதார்த்தங்களை, காகிதத்தில் சுற்றித் தருகிறார்கள். இதன் தொடர் வினையாக இந்தியாவிலும் ‘kick the plastic ‘ கோஷங்கள் கேட்க இயலுகிறது. காகிதம் காரணம் மரம் வீணாகுமே ? அடுத்து மண்சட்டியா சொந்த பாத்திரமா ?

short couse guide புத்தகங்கள் கண்டால், கார் சரி செய்வது எப்படி, கம்ப்யூட்டர் பராமரிப்பு, கம்ப்யூட்டர் தெரியாதவருக்கு கம்யூட்டர் அறிமுகம், இன்னும் பல நிரல் வகுப்புக்கள், பாட்டி வைத்தியம், இந்திய முறையில் தலை மஸாஜ், ஜப்பானிய மஸாஜ், தம்பதியராக செய்து கொள்ளும் மஸாஜ் (தம்பதியராக விண்ணப்பிக்க வேண்டும், தனி அறையில் ஒவ்வொரு தம்பதியருக்கும் வகுப்பு நடக்கும், குறிப்பிட்ட நுழைவுக்கட்டணம் தம்பதியர் இருவரும் தனியாகக் கட்ட வேண்டியது என்ற குறிப்புக்களுடன்), பணம் சேமிக்க வேண்டுமா ? வாருங்கள் நாங்கள் படிப்பித்து தருகிறோம், போன்ற வகுப்புக்கள்.

இறுதியாகக் குறிப்பிட்ட வகுப்புக்கு நுழைவுக் கட்டணத்தை க்ரெடிட் கார்டில் செலுத்தி, வகுப்புக்குப் போனால், நீண்ட விரிவுரைகளும், வெற்றிக் கதைகளும். சாராம்சம் என்னவெனில் க்ரெடிட் கார்டை கத்தரி கொண்டு வெட்டி, சப்பு தொட்டியில் சேர்க்கவேண்டும் என்பதே. சரி, கொஞ்ச நாள் கடங்கார அட்டை இல்லை என்ற் நினைத்துக் காலம் தள்ளிப் பார்ப்போமே என்ற நப்பாசை நடைமுறைக்கு வந்தது. ஒரு சிறு வாலெட்டினுள் பணம் எடுட்து, கையில் உள்ள பணத்துக்கு ஏற்ற வாறு கணக்கு போட்டு கணக்குப் போட்டு, மாத சாமான் வாங்கி, கார் டிக்கியுள் வைத்து, மிஞ்சிய அம்பது டாலர் உள்ள வாலெட்டை ஏதோ ஒரு அலட்சியத்தோடு சீட்டில் எறிந்து, மறந்து விட்ட ட்ராலியை ட்ராலி பேயினுள் தள்ளிவிட்ட ஒரு நிமிடத்தில், வாலெட் காணும். ஏழை இந்தியாவில் பணம் தொலைந்து போக இரண்டு நிமிடமாவது எடுக்குமே என்று ஒரு நிம்மதி. அடுத்த நிம்மதி நல்லவேளை, அதிக பணத்தை சீட்டுக்கு அடியில் ஒரு வாலெட்டினு வைத்தோமே என்று. வழக்கமாக பாட்டில் கடை நோக்கி திரும்பும் கார், சீட்டுக்கடியினுள் இருந்து பணம் எடுக்கும் பிரயத்தனம் உத்தேசித்து வீடு திரும்பியது. அடுத்த மாதம் செலவு கணக்கு பார்த்தால் ‘அட திருட்டுக் கொடுத்த அம்பது டாலரும் சேர்த்து செலவு எத்தனை குறைச்சல் ? தொந்தியும் ? ‘ ஏடிஎம்க்கு ஏன் தண்டம் ? நிறுத்து அதை. போணியாகும் ஒவ்வொரு காசோலைக்கும் கட்டணம் வசூலித்து லாபத்தில் கொழிக்கும் வங்கிகள் உள்ள தேசம் இது. ஏன் தனித்தனி காசோலை. மொத்தமாக பணத்தை எடு. நிலவறை செய்து புதைத்து வை. சூட்கேஸ், அட்டைப் பெட்டி, பழந்துணி, இன்னும் பல புராதான பொருட்கள் நீக்கி, தொல்பொருள் இலாகாவாக நிலவறையிலிருந்து பணம் எடுக்கும் பிரயத்தனங்கள் செலவை ஏகத்துக்கும் குறைத்தது. ஓரளவு ஒத்துப் போகும் ஆறு நண்பர்கள் உள்ளவன் நான். ஒவ்வொருவரும் மொத்த சாமான் வாங்கி ஏழு குடும்பங்களும் பகிர்ந்து கொள்ளும் பண்ட மாற்று (bartenter system) நடை பெறத் துவங்கியது. இந்தியாவிலிருந்து வருகை தந்த தாயார் நிச்சயம் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன்.

ஊருக்குத் திரும்பும் முன் தினம் தாயார் சில பழங்கதைகள் பேசலானார். பழங்கதை என்னவோ எப்போதும் மிகவும் பெருமையுடைய விஷயங்களை மாத்திரம் உள்ளடக்கியதாக விளங்குகிறது. ரோல்ஸ்ராய்ஸ் வாங்கிய முப்பாட்டன், ரேடியோ, கிராமஃபோன், டிவி, விசிஆர் என்னும் என்னென்னவோ முந்திரிக்கொட்டையாக வாங்கி வைத்த அப்புப்பன், பெரியப்பன் போன்ற விஷயங்கள்தான். (எனக்கு நினைவு தெரிந்து இரண்டு பேண்ட், இரண்டு சர்ட்டுடன், கால் சுண்டு விரல் அழுத்தும் ஷ்ஊ அணிந்து குமாஸ்தாவாகவே இருந்த என் தந்தை பற்றி எதுவும் வரவில்லை). ரோல்ஸ்ராய்ஸ் நின்ற ஷெட்டை, இடிபாடுகளிலும், ஓட்டை உடைசலிலும் ஒரு அழகியல் ரசனையைக் காணும் கவிஞனால் மாத்திரமே ரசிக்க இயலும். என் அம்மைக்கு நான் முப்பாட்டனையோ, அப்புப்பனையோ, பெரியப்பனையோ கொள்ளாது அப்பனைக் கொண்டு பிறந்து விட்டதில் ஏகப்பட்ட வருத்தம் என்று கூறினார்கள். இந்தியாவிலேயே, அவரவர் ஏடிஎம் என்ன, க்ரெடிட் கார்ட் என்ன, ஃப்ரிஜ்ஜைத் திறந்தால், கோக்கும், வைனும், பியரும் வெள்ளமாக ஒட நான் வெறும் குழாய் வெள்ளத்தோடு இருப்பது குறித்தும், ப்யோஃப்ரெண்ட்லி சோப் என்று ஒரு கல்லை உபயோகிப்பதும் குறித்தும் ஏகப்பட்ட முறையீடுகள். இத்தனைக்கும் நடுவில் ஒரே ஒரு ஆறுதலாக என் தாயார் உணர்ந்தது- ஐக்கிய அமெரிக்கா சென்று ஜாம் ஜாம் என்று இல்லையானாலும், நல்ல வேளை தன் மகன் இந்தியாவில் தங்கி விடாதது எத்தனை நிம்மதியாக இருக்கிறது ?

அம்மையை அழைத்து சூப்பர் மார்க்கெட் சென்று, இந்தியாவுக்காக டாய்லெட் பேப்பர்( ?), கை துடைக்கும் பேப்பர், சாண்ட்விச் சுற்றும் தாள் (ஏ.., காயிதம் வேண்டாம். அழகா பாலிதீனில் வாங்கிச்சு தா), சாக்லேட், கத்தரிக்காய், சுகினி, தக்காளி, காரட் போன்ற அதிசய காய்கறிகள் அனைத்தும் வாங்கி, க்ரெடிட் கார்டில் பணம் செலுத்தவும் நிம்மதியாக பாக் செய்து ஊர் கிளம்பினார். ஆங்கில செய்தித்தாளும், ஆங்கில பத்திரிகைகளும் மாத்திரம் வாசிக்கும் அம்மையால், ரோல்ஸ்ராய்ஸ் பாட்டனின் ஜீன் என்னுள் இருப்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆம், இங்கு நான் கேள்விப்படும், முக்கியமாக ஓரளவு எலைட் கும்பல்களில் கேள்வியுரும், பிராமி செடி பிராபல்யம், மூலிகை மருத்துவ மகிமை, ஹெல்த் ஃபுட் கடைகள் போன்றவை, நான் மைய நீரோட்டத்திலிருந்து அதிகம் விலகி விடவில்லை என்பதையும் உணர்த்தியது. வெகுஜன ரசனை இந்த எலைட் கும்பலின் ரசனையைப் பின் தொடருவதை நாம் எங்கும் காண முடியும். அவர்கள் சுழற்சியில் இன்னும் பின் தங்கியுள்ளனர்.

ஆனால் கணினி நுட்பம் என்பது சங்கிலித்தொடர் மாத்திரமா, சுழற்சியா என்ற ஐயம் எழுகிறது. டாட் மேட்ரிக்ஸ் ப்ரிண்டர் விண்டோஸில் வேலை செய்யவில்லையே, வாங்கு லேசர். டாட் மேட்ரிக்ஸின் ட்யூப்ளிகேட்டிங் வசதி லேசரில் இல்லையே ? வாங்கு ஒரு டிஜிட்டல் ப்ரிண்டர் என்ற ரீதி. (பாங்க் நோட்டாக கொடுத்து வாங்கினால், கொஞ்சம் விலையும் சஸ்தாவாக உள்ளது). ஒருவேளை நுகர் பொருள் பரிமாணம் என்பது எண்ணெய்க்கும் சீயக்காய்க்கும், பண்டமாற்றுக்கும் சென்ற பிறகு, கணக்குப் போட கம்ப்யூட்டர் என்னத்துக்கு என்று என் பேரனின் பேரன், இறகு கூராக்கி, மயில் துத்தம் கரைசலில் முக்கி எழுதத் தொடங்குவானோ ?

Series Navigation

author

கிரிஸ்

கிரிஸ்

Similar Posts