சாருநிவேதிதா என்றொரு இசை ஆசிரியர்

This entry is part [part not set] of 24 in the series 20090226_Issue

சேதுபதி அருணாசலம்



‘நான் கடவுள்’ திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இருந்தன. திரைப்படம் வெளியானபின்னும் ஒரு பெரிய பரபரப்பு ஊரெங்கும் நிலவியது. கிட்டத்தட்ட அத்தனை வலைப்பதிவர்களும், வலைப்பதிவு வைத்திருக்கும் எழுத்தாளர்களும் இத்திரைப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை எழுதித் தீர்த்துவிட்டார்கள். பெரும்பாலான பத்திரிகைகளும் ‘நான் கடவுள்’ விமர்சனத்தை வெளியிட்டிருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது கலாகெளமதி என்ற மலையாளப் பத்திரிகையில் வெளியான சாருநிவேதிதாவின் விமர்சனம்.

வெறும் திரைப்படத்தை மட்டுமல்லாமல், ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் இசையையும் மிக விரிவாக ஆராய்ந்திருந்தது அந்த விமர்சனம். அந்த விமர்சனத்தின் வழியாக உலக இசை, இந்திய இசை, விளிம்புநிலை இசை, தமிழக இசை, கரகாட்ட இசை, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, இளையராஜாவின் இசை என அத்தனையையும் என்னால் தெரிந்து கொள்ளமுடிந்தது. எத்தனையோ இசைக்கலைஞர்களைக் கேட்டும், விமர்சனங்களைப் படித்தும், விமர்சகர்களோடும், கலைஞர்களோடும் உரையாடியும் தெரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் அந்த ஒரு விமர்சனத்திலிருந்து மட்டுமே கிடைத்தது.

1) ஒரு ஈரானியப் படம் போலவோ, லத்தீன் அமெரிக்கப்படம் போலவோ, ஸ்லம்டாக் மில்லியனர் போலவோ ஒரு உலகப்படத்துக்குத் தேவையான விஷயம் ‘உலக இசை’. எந்த நாட்டுக்காரர் கேட்டாலும் எந்த யோசனையும் செய்யாமல் உடனே ஏற்றுக்கொள்ளமுடியும் இசை. அப்படிப்பட்டதொரு இசை ‘நான் கடவுள்’ படத்துக்கு கிடைக்கவில்லை. இளையராஜா தன்னுடைய ‘உலகத்தன்மை இல்லாத’ இசையால் ‘நான் கடவுள்’ திரைப்படத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டார்.

2) கரகாட்டக்காரன் போன்ற கரகாட்டக்கலையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படத்துக்குக் கூட நீங்கள் ‘உலக இசை’யை மட்டுமே பின்னணியில் தரவேண்டும். தவில், நாதஸ்வரம் போன்றவையெல்லாம் இசைக்கக் கூடாது. ஏனென்றால் லத்தீன் அமெரிக்கத் திரைப்படங்களிலோ, ‘The Lower depths’ என்ற அகிரா குராசோவாவின் திரைப்படத்திலோ அந்தக் கருவிகள் இசைக்கப்படுவதில்லை.

3) ஏ.ஆர்.ரஹ்மான் குரலைக் கேட்கும்போது விளிம்புநிலையும், இளையராஜாவின் குரலைக் கேட்கும்போது போலியான ஒரு ஆன்மிகவாதியும் உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும். ‘பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்’ என்ற பாடலை மதுபாலகிருஷ்ணன் குரலில் கேட்டாலும் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது இளையராஜாவின் குரலே!

4) அப்படிப்பட்ட இளையராஜாவின் குரலில் ‘பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன்’ என்று பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைக் காட்டும்போது பாடுவது பக்கா ரொமாண்டிசிஸம். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில், ஸ்ரீலங்கன் தமிழ் வம்சாவளியில் வந்த மாதங்கி மாயாவின் ராப் பாடலும் சேர்ந்து, டிஜிட்டல் ரிதம், distorter இதையெல்லாம் வைத்துக் கொண்டு, “She has made me thrifty Like a ninja with speed i am nifty I hope i live till i am fifty See my city go a quick to a drifty” என்ற வரிகளுடன் ஒரு சேரியைக் காண்பிப்பதில் சிறிதளவும் ரொமாண்டிசிஸம் கிடையாது. ஏனென்றால் ரஹ்மானின் குரலைக் கேட்ட அடுத்த கணமே நமக்கு விளிம்புநிலை கண்ணுக்குத் தெரிகிறது. உடம்பெல்லாம் புல்லரித்து நாம் திரைப்படத்தோடு ஒன்றிவிட முடிகிறது. அது நல்ல இசை – ஏனென்றால் அது உலக இசை. Live Flesh என்ற ஸ்பானிய திரைப்படத்தில் நாயகன் தன் மனைவியின் கள்ளக்காதலனைக் காணச் செல்லும்போது கூட இதே போன்ற இசைதான் பின்னணியில் வரும். சுத்தமாக ரொமாண்டிசிஸமே இல்லாத ‘உலக இசை’ ‘ஓ சய்யா’ என்ற பாடல்தான் என்பதில் இன்னும் என்ன சந்தேகம் இருக்க முடியும்?

5) இளையராஜாவின் குரலைக் கேட்கும்போது அமிதாப், அம்பானி போன்ற பெரிய பணக்காரர்கள் கையில் போலித்தனமாக ஒரு சடங்குக்காக பிச்சையெடுப்பது உங்கள் நினைவுக்கு வரவேண்டும். ஏனென்றால் இளையராஜாவின் ஆன்மீகம் முன்பே ஒருமுறை சாருநிவேதிதா சொன்னது போல போலித்தனமானது. ஆனால் ரஹ்மானின் குரலைக் கேட்கும்போதே விளிம்புநிலை நமக்கு நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் சாருநிவேதிதா முன்பே ஒருமுறை சொன்னது போல ரஹ்மானின் ஆன்மிகம் ஏழைகளுடன் புழங்கும், விளிம்புநிலையினரின் தத்துவமான சூஃபியிஸம்.

6) காசி ஒரு மரண நகரம். அந்த நகரத்தைக் காண்பிக்கும்போது மரணத்தை முன்னிருத்தும் இசை மட்டுமே வரவேண்டும். இளையராஜாவோ ‘ஓம் சிவோஹம்’ என்ற ருத்ரவரிகளைக் கொண்ட பாடலைக் கொண்டு படுபயங்கரமாக ரொமாண்டிசைஸ் செய்துவிட்டார். கிட்டத்தட்ட அந்த நகரத்தின் அகோரி ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் ருத்ரத்தைப் பின்னணியாக்கி ரொமாண்டிசைஸ் செய்துவிட்டார். எந்த லத்தீன் அமெரிக்கப் படத்திலும், ஜப்பானியப்படத்திலும், ஈரானியப்படத்திலும் நடக்காத விஷயம் இது. விளைவாக ‘நான் கடவுள்’ உலகத்திரைப்படம் என்ற ஒரு விஷயத்திலிருந்து சர,சரவென்று இறங்கி ஒரு சாதாரண ‘இந்தியப்’படமாகிவிட்டது.

7) செல்லோ, வயோலா, நூற்றுக்கணக்கான வயலின்களுடன் சிம்பனியைப் போல சண்டைக் காட்சிக்குப் பின்னணி இசை அமைத்திருந்தார் இளையராஜா. ஆனால் அது சாருநிவேதிதாவின் காதுகளில் விழவில்லை. ஏனென்றால் இப்படிப்பட்ட இசை இப்போது உலகத் திரைப்படங்களில் காலாவதியாகிவிட்டது. செவ்வியல் இசையெல்லாம் இப்போது அங்கே out-of-fashion. Pianist, Schindler’s list பொன்ற படங்களுடன் அப்படிப்பட்ட இசை காலாவதியாகிவிட்டது. இப்போதெல்லாம் அங்கே ராப்தான் in-thing. மேலும் லத்தீன் அமெரிக்க, ஈரானிய, ஜப்பானியப் படங்களில் சண்டைக்காட்சிகள் இல்லாததால், ஒரு சண்டைக்காட்சிக்குப் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்று சாருநிவேதிதாவுக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால் அதைப் பற்றிப் பேசுவதில்லை என்று முடிவு செய்துவிட்டார்.

8) உலகத் திரைப்படங்களில் இசையமைப்புக்கும், இயக்குநருக்கும் எந்தத் தொடர்புமே இல்லை. அதனால்தான் சாருநிவேதிதா பிச்சைக்காரர்கள் பாடுவது போல பழம்பெரும் பாடகர்களின் ஒரிஜினல் குரலையே தந்ததையும், பின்னணியில் ஆர்க்கெஸ்ட்ரா வாசிப்பதையும் முழுக்க முழுக்க இசையமைப்பாளரின் குற்றமாகச் சொல்கிறார். ஆனால் படத்துக்கு வசனமெழுதியவரோ “பாலா அதை யோசிக்காதவராக இருப்பார் என்று எண்ணி அறிவுரை சொல்லவேண்டியதில்லை. அங்கே அவர் உருவாக்க விரும்பியது ‘ரியலிஸத்தை‘ அல்ல. நக்கலை. அவரது நோக்கம் இதுதான். அந்தக்குரல் பிச்சைக்காரர்களின் குரலே அல்ல. தாயிற்சிறந்த கோயிலும் இல்லை, முருகாமுருகா, சொந்தமில்லை எல்லாமே ‘வெளி‘க்குரல்கள். அவர்களுக்கு ‘தலைக்குமேல்‘ உள்ள உலகில் இருந்து வரும் குரல்கள்.அவர்கள் அதற்கு வாயசைக்கிறார்கள். தங்கள் தொண்டைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். அது அவர்களின் பாட்டு அல்ல. ‘அம்மா தாயே பசிக்குதே சாமீ’ மட்டும்தான் அவர்களின் பாட்டும் குரலும். அந்த வேறுபாட்டை உருவாக்க எண்ணினார் அவர். அது வந்துசேரவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அது பாலாவின் தவறாக இருக்கலாம். உங்கள் தவறாகவும் இருக்கலாம்” என்று சொல்கிறார்[1]. ஆனால் நாம் இதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை. உலகத்திரைப்படங்கள் இப்படி உருவாவதில்லை.

9) பிச்சைக்காரர்களின் உலகத்தைக் காண்பிக்கும்போது பந்துவராளி, ஹம்ஸநந்தி போன்ற ராகங்கள் தெறிக்கும் பின்னணி இசை நம்மை படத்துக்குள் இழுத்துச் செல்லும். அம்ஸவல்லியை பிச்சைக்காரத்தொழிலுக்காக இழுத்துச்செல்லும் போதும் இந்த சாயலில்தான் பின்னணி இசை வரும். கவனம். அது உலக இசையில்லை. ராகங்களை அடிப்படையாகக் கொண்ட, ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் வருவது போலில்லாத, லத்தீன் அமெரிக்க திரைப்படங்களில் கேட்கக் கிடைக்காத படு திராபையான இந்திய மரபிசை. கே.வி.மஹாதேவன், எம்.எஸ்.வி போன்றவர்களெல்லம் இப்படிப்பட்ட மரபிசையை வழங்கி உலக இசையில் இடம்பெறாமல் போனது பெரும் துரதிர்ஷ்டம்.

சாருநிவேதிதாவின் ஒரே ஒரு கட்டுரையிலிருந்தே இசை தொடர்பாக இத்தனை விஷயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பாருங்கள், ஆஸ்கார் விருதை வென்று நமக்கெல்லாம் பெருமைத் தேடித்தந்த ரஹ்மானோ, நேற்று(26-02-2008) அளித்த ஒரு பேட்டியில், உலக இசையைப் பற்றி ஒன்றும் தெரியாத, உலகத்தரமான படத்தைக்கூட ஒரு டப்பாங்குத்து இசையின் மூலம் அதலபாதாளத்துக்குத் தள்ளிவிடக்கூடிய இளையராஜாவைப் பற்றிப் பேசும்போது “இளையராஜாவுக்கு முன்பு இந்த ஆஸ்கர் விருதுகள் சாதாரணமானவை. இளையராஜாவின் இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது. சரியான முறையில் அவரது இசை எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் எப்போதோ அவர் ஆஸ்கர் விருதினை வென்றிருப்பார்” என்று சொல்லியிருக்கிறார்[2]. எனக்கென்னவோ ரஹ்மானுக்கு இன்னும் இந்த ‘உலக இசை’யைப் பற்றி சரிவரத் தெரியவில்லை என்று தோன்றுகிறது. சாருநிவேதிதா எழுதியுள்ள இந்த அரிய கட்டுரையிலிருந்து அவர் ‘உலக இசை’யைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி இசையைப் பற்றி (ரஹ்மான் உட்பட) நாம் எல்லோரும் மேன்மேலும் பலவிஷயங்கள் தெரிந்து கொள்வதற்காவது இளையராஜா தொடர்ந்து இசையமைக்க வேண்டும், அதை சாருநிவேதிதா தொடர்ந்து விமர்சிக்க வேண்டும்.
இந்த விமர்சனத்தை சாருநிவேதிதா கொஞ்சம் முன்னரே வெளியிட்டிருக்கலாம். சாருநிவேதிதாவின் விசிலடிச்சான் குஞ்சுகளிலேயே பலபேர் இந்தத் திரைப்படத்தின் இசையை அவசரப்பட்டு சிலாகித்து இளையராஜாவை மேதை, கீதை என்றெல்லாம் எழுதித் தொலைத்துவிட்டார்கள். அவர்களுடைய நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது!
சுட்டிகள்:
[1] http://jeyamohan.in/?p=1869
[2] http://thatstamil.oneindia.in/movies/specials/2009/02/26-ilayaraja-is-above-oscars-ar-rahman.html

*******
sethupathi.arunachalam@gmail.com

Series Navigation