இரா முருகன்
உட்கார்த்தின மாதிரி அமர்த்திப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். ஆம்புலன்ஸில் படுக்க வைக்கும்போது தான் முகத்தைப் பார்த்தேன்.
வெள்ளைக்காரன். வயது நாற்பதுக்கு அந்தப் பக்கம். அது ஐம்பதா அறுபதா என்று முகத்தை வைத்துச் சொல்ல முடியாது. இவர்கள் எல்லோருக்குமே நாற்பதுக்கு அப்புறம் முகத்தில் சுருக்கம் தட்டி, கண்ணைச் சுற்றிக் காக்கைக் கால் அடையாளம் விழுந்து போவதால் ஏற்படும் குழப்பம் அது.
கொஞ்சம் பருத்த வயிறு கூட உண்டு. நித்தமும் அல்லது வாரக் கடைசியில் அதாவது வியாழக்கிழமை சாயங்காலத்துக்கு அப்புறம் பியர்க்கடையில் வாயகலமான கண்ணாடிக் குவளைகளில் மாந்தி மாந்தி வளர்த்துக் கொண்டது அது.
தலை இன்னும் ஈரமாக இருக்கிறது. இப்போது தான் சாயம் தேய்த்து உலர வைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் கைகளில் ஒட்டாமல் ஜாக்கிரதையாக எடுத்துப் போங்கள்.
முடிவெட்டும் கடையில் இருந்து கழுத்தில் தொங்கிய ஏப்ரனோடு வெளிப்பட்ட முடிதிருத்தும் பெண்மணி ஆம்புலன்ஸின் வந்தவர்களைப் பார்த்துச் சொன்னாள்.
வந்தவர்களின் ஒருத்தன் மாத்திரம் தலைப் பக்கம் பிடித்துத் தூக்கி இருந்ததால் அவன் கை அங்கங்கே தங்க நிறமாக மினுமினுத்தது. டிஷ்யூ பேப்பரில் அதைத் துடைத்து அவன் வீசி எறிந்தது என் காலணியில் பட்டுத் தெருவில் உருண்டு ஓடியது.
இது பெரும்பாலும் சீமாட்டிகளின் புழக்கத்துக்காக ஏற்பட்ட கடை. பெண்களேஅவர்களுக்கு முடி திருத்தி விடுவார்கள். சாயம் தேய்ப்பார்கள். குழல் கற்றைகளைச் வெள்ளிக் காகிதத்தில் பொதிந்து சூடான காற்றில் அவற்றை வளைத்துச் சுருள வைப்பார்கள்.
இங்கே ஆண்கள் முடிவெட்டிக் கொள்ளப் பெரும்பாலும் வருவதில்லை. முப்பது பவுண்ட் கொடுத்துச் செய்து கொள்ள வேண்டிய காரியம் அது.
இங்கே நுழையாமல், தெருமுனையில் கருப்பர்களும், ஆசியர்களும் கத்திரி பிடித்து வெட்டும் கடையில் இரண்டு பவுண்டுக்கு எலி கடித்தாற்போல் அவசர அவசரமாக வேலையை முடித்துக் கொண்டு மீதி இருபத்தெட்டு பவுண்டுக்கு நாலு நாளைக்கு நிம்மதியாகக் குடிக்கலாம். நான் அப்படித்தான் செய்கிறேன். மற்ற எல்லாரும் கூடத்தான்.
என்றால், இந்த மனுஷன் கொஞ்சம் வினோதமான வெள்ளைக்காரனாக இருக்க வேண்டும்.
முப்பது பவுண்ட் கொடுத்துத் தலைமுடி வெட்டிக் கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும். பவுன் கலர் சாயம். அதைத் தலையில் தேய்த்துக் கொள்வது வீட்டு விலக்கு நின்ற பெண்கள் மாத்திரம் இல்லையோ.
இந்த வயதில் பொன்நிறத் தலைச் சாயத்தை உபயோகிக்க வேண்டும் என்று இவனுக்குப் பட்டதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு கோப்பை தேநீர் குடிக்கிறீர்களா ?
நடு மத்தியானத்தில் இவன் தலையில் சாயம் தேய்த்து முடித்தபின் குனிந்து காதருகில் கேட்டு விட்டு முடிவெட்டும் பெண்மணி ஒரு நிமிடம் நிறுத்தி இருப்பாள். இவன் வேண்டாம் என்றோ வேணும் என்றோ சொன்னதற்குத் தக்கது போல் உள்ளே நோக்கிக் குரல் கொடுத்திருப்பாள். பெண்மையின் மென்மையும் மெல்லிய சாக்லெட் வாடையும் கொண்டதாக ஒரு சிகரெட் பற்ற வைத்தபடி கனிவாகச் சிரித்திருப்பாள்.
இவன் நன்றி சொல்லி விட்டு உயிரை விட்டிருக்கிறான்.
முடி வெட்டும் இடத்தில் உயிரை விட நேர்ந்தது துரதிருஷ்ட வசமானதுதான். அல்லது அவன் திட்டமிட்டு இப்படித் தான் உயிர் துறக்க வேண்டும் என்று தீர்மானித்து வந்தவனோ ?
சாயம் தோய்த்து உலர்ந்து கொண்டிருக்கும் தலைமுடியோடு இவனைச் சவப்பெட்டிக்குள் வைக்க முடியாது. முகத்தில் ஒழுகிப் படிந்திருக்கும் சாயக் கோடுகள் புகைப்படம் எடுக்க முற்படுகிறவர்களுக்கு உறுத்தலாக இருக்கும்.
மாதா கோயிலும், மெழுகு வர்த்தியும், அமைதியே உருவான மதகுருவும், துக்க உடுப்பு அணிந்த குடும்பத்தினரும், வேலைப்பாடமைந்த சவப் பெட்டியில் கண்ணியமும் சமாதானமுமாகப் படுத்திருக்கும் இவனுமாக எடுக்கப் பட்டு வீடுகளில் இன்னும் பல தலைமுறைகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய புகைப்படத்தை, முகத்தில் வழிந்து ஒழுகும் தலைச் சாயம் கெடுத்து விடலாம்.
படத்தில் சீரான ஒழுங்கமைப்பும், சோகமும், சாவால் ஏற்பட்ட புனிதமும் காணாமல் போவதோடு, அது முகத்தில் ரத்தம் வடிவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். அமைதியான இந்தப் பகல் பொழுதில் ஏற்பட்ட இறப்பை அது கொலையாகவோ, விபத்தில் ஏற்பட்ட மரணமாகவோ திரித்துச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.
வீட்டுப் புகைப்படங்களைப் புதிய சிநேகிதர்களுக்கும், திருமணம் மூலம் உறவானவர்களுக்கும் காட்டும்போது இது சம்பந்தமான கேள்வியை எந்தக் கணமும் எதிர்பார்த்துச் சங்கடத்தோடு உட்கார்ந்திருப்பது போல் மனதுக்கு ஒவ்வாத வேலை வேறு இருக்க முடியாது.
சுற்றிலும் பார்த்தேன். வெள்ளைக்கார இளைஞர்களும், பல்பொருள் அங்காடியில் உறைய வைக்கப்பட்ட இறைச்சியும், வாழைப்பழமும் வாங்கிச் சிறிய கைவண்டிகளில் நிறைத்துக் கொண்டு டாக்சிக்காகக் காத்திருக்கும் வெள்ளை மூதாட்டிகளும் ஆம்புலன்ஸைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.
கொஞ்ச தூரத்தில் மருந்துக் கடை சுவரில் சாய்ந்து தரையில் தொப்பியைக் கவிழ்த்து வைத்துவிட்டு அக்கார்டியனும் முரசும் வாசித்துக் கொண்டிருந்த இரண்டு கருப்பர்கள் தொப்பியில் அவ்வப்போது விழும் பத்து இருபது பென்ஸ் நாணயங்களில் ஒரு கண்ணும் இங்கே நடக்கும் வர்த்தமானத்தில் மற்றதுமாக இருந்தார்கள்.
ஓ என்று இரைந்து கொண்டு ஒரு பொலீஸ் வேன் என் பக்கத்தில் வந்து நின்றது.
கூட்டம் போடாமல் கலைந்து போங்கள்.
மஞ்சள் ஓவரால் தரித்த பொலீஸ்காரர் என்னைக் குறிப்பாகப் பார்த்துச் சொன்னார்.
இத்தனை பேரையும் விடுத்து எனக்கு மட்டும் அவர் கட்டளையிடக் காரணம் எதுவாக இருக்கும் என்று தெரியவில்லை. மற்றவர்கள் எல்லாம் ஒரு சக வெள்ளையன் மரித்ததற்காக அஞ்சலி செலுத்தியபடி நிற்பவர்கள் என்று அவர் கருதியிருக்கலாம்.
ஆனால் மருந்துக்கடை வாசலில் வாத்திய ஒலியோடு யாசிக்கும் கறுப்பர்கள் ?
போன மாதம் அந்த மருந்துக்கடையில் திருடியதாக ஒரு கருப்பனை இப்படிப் பொலீஸ் வேனில் ஏற்றியபோதும் பக்கத்தில் இருந்து பார்த்தேன். கேவலம் நாலு அட்டை அஜீர்ண நிவாரண மாத்திரை திருடிச் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு நடந்ததாகக் குற்றச்சாட்டு. இருந்தாலும் திருட்டு திருட்டுத்தான் என்பதாக அவனை அழைத்துப் போன பொலீஸ்காரர் மிடுக்காக இட்டுப் போனார்.
என்னை இப்போது விலகிப் போகச் சொல்கிற பொலீஸ்காரருக்கும் பார்வையில் அதே மிடுக்கு.
எல்லாப் பொலீஸ்காரர்களும் ஒரே ஜாடையில் இருக்கிறார்கள். எல்லாக் கருப்பர்களும் கூட.
அந்தப் பொலீஸ்காரர் தானோ இவர் ? அதேபடி, அந்தக் கருப்பனும் இங்கே வாத்தியம் வாசித்தபடி நிற்கிறவர்களில் ஒருவன் தானோ ?
பொலீஸ்காரர் ஒருவராகவே இருக்கலாம். மதுக்கடையில் நடுராத்திரி சண்டையை விலக்கவும், சாவை எதிர்கொள்ளவும், அஜீர்ண மாத்திரை களவாடாமல் கண்காணிக்கவும் என்று பலதரப்பட்ட பயிற்சி பெற்றதால் எல்லாச் சூழ்நிலைக்கும் அவர் பொறுந்தி வருவார்.
ஆனால் கருப்பன் ? நிச்சயம் மாத்திரை களவாடிய கடையின் சுவரில் சாய்ந்து நின்று வாத்தியம் வாசித்துக் கொண்டிருக்க மாட்டான்.
நான் பொலீஸ்காரரின் பார்வையைத் தவிர்த்துக் கொஞ்சம் பின்னால் போய் முடி திருத்தும் கடைக் கதவுப் பக்கம் நின்று கொண்டேன்.
பின்னால் ஸ்ட்ரெச்சரின் நீண்டு நிமிர்ந்து படுத்திருந்தவனின் தலையிலிருந்து சாயத் துளிகள் ஆம்புலன்ஸின் தரையில் சொட்டியபடி இருந்தன. சுத்தமான வெள்ளை உடுத்த தாதிப்பெண் ஒருத்தி அதை ஒரு துணியால் அழுந்தத் துடைத்தபடி இருந்தாள்.
படுத்திருந்தவனுக்கு அந்தத் தாதிப்பெண் வயதில் ஒரு மகள் இருக்கக் கூடும். அல்லது பெண் சிநேகிதி கூட இருக்கலாம். அவள் சொல்லியே இம்மாதிரிப் பகல் பொழுதில் பொன் நிறத்தில் தலைச்சாயம் தேய்த்துக் கொண்டு வர அவன் உடன்பட்டிருக்கலாம்.
அல்லது அவன் ஓரினப் புணர்ச்சியாளனாக இருக்கலாம். மென்மையும் நளினமும் கொண்ட அவனுக்கு அந்தக் கருப்பன் போலவோ, பொலீஸ்காரர் போலவோ வலிமையும் திடகாத்திரமும் வாய்ந்த ஒரு சிநேகிதன் இருக்கக் கூடும். இவனைப் பெண்ணைப் போல் அலங்கரித்துச் சுகிக்க விரும்பி அந்த சிநேகிதன் தலையில் பொன் நிறச் சாயத்தைத் தேய்த்துக் கொண்டு வரும்படி கட்டளை இட்டிருக்கலாம்.
நாற்பது கடந்த ஒருவனை, அவன் ஓரினப் புணர்ச்சியாளனாக இருந்தாலும் கூடி மகிழ்பவன் நிச்சயம் அவனையொத்த வயதுள்ளவனாகவே இருக்கக் கூடும்.
படுத்திருந்தவன் முகம் இப்போது ஒரு வெள்ளைத் துணியால் மூடப்பட்டது.
வெளுத்த உடை அணிந்த தாதி அதைச் செய்து விட்டுக் கையுறைகளைக் கழற்றினாள்.
முன்னாலேயே இதைச் செய்திருக்கலாம்.
என்னருகில் நின்ற மூதாட்டி உரக்கச் சொன்னாள். நிமிர்ந்து பக்கத்தில் என்னைப் பார்த்தாள். நான் பதில் சொல்லி விடுவேன் என்று யூகித்தவளாக உடனே விலகி நகர்ந்து போனாள்.
ஆம்புலன்சின் மேல் கூரையில் வண்ண விளக்கு சுழன்றது. அது தொடர்ந்து தீனமாக ஒலியெழுப்பி வழி தரச் சொன்னபடி இருந்தது. ஆம்புலன்ஸைக் கிளப்ப அதை ஓட்டி வந்தவன் பெரும் பிரயத்தனங்கள் எடுத்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
சூழ்நிலையின் தீவிரம் அந்த இரும்பு யந்திரத்துக்குப் புரியாமல் போனதால் இந்தக் கணத்தில் எல்லோரும் சூழ்ந்து பார்த்திருக்கத் தனக்கு ஏற்பட்ட முக்கியத்துவம் சிதைந்து கொண்டிருப்பதை அவன் விரும்பியிருக்க மாட்டான்.
இந்த ஊர் ஆம்புலன்ஸ் சேவையைப் பற்றி மாலைப் பத்திரிகைகளில் சதா குற்றம் காணுவதும் அவனுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம்.
இரண்டு மாதம் முன் ஒரு வயோதிகனை அவசரமாக மருத்துவ மனையில் சேர்ப்பிக்க ஆம்புலன்ஸ் அகப்படாமல் அடுத்த அரசாங்கக் கட்டிடத்தில் இருந்து ஒரு தீயணைக்கும் வண்டியை அனுப்பி வைத்தார்களாம். கணகணவென்று மணி ஒலித்துக் கொண்டு பிரம்மாண்டமான தீவண்டி ஒன்று வாசலில் வந்து நிற்கும் பெருஞ் சத்தத்தில் நிலைதடுமாறி, இதய நோயாளியான அந்த வயோதிகன் உயிரை விட்டதாகப் படித்திருக்கிறேன்.
தாதிப்பெண் முன் இருக்கையில் இருந்து ஆம்புலன்ஸை ஓட்டுகிறவனிடம் ஏதோ சொன்னாள்.
எல்லாம் சரியாக இருக்கிறது தானே ?
பொலீஸ்காரர் அவளிடம் கேட்டார்.
அவள் பதில் சொல்வதற்குள் வெற்றிகரமாக ஆம்புலன்ஸை இயக்கி நகர்த்திக் கொண்டு போனான் அதை ஓட்டி வந்தவன்.
பின்னால் படுத்திருந்தவன் போல் அவன் முகத்திலும் அலாதியான நிம்மதி தெரிந்தது.
ஆம்புலன்ஸைத் தொடர்ந்து பொலீஸ் வேன் போக, கூட்டம் மெல்லக் கலைந்து கொண்டிருந்தது.
நீங்கள் முடிவெட்டிக் கொள்ளக் காத்திருக்கிறீர்களா ?
கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வந்த பெண் என்னைக் கேட்டாள்.
அவள் அணிந்திருந்த கையுறைகளில் உலராத பொன்னிறத் தலைச் சாயத்தின் நனைவைப் பார்த்தபடி நான் இல்லை என்றேன்.
இரா.முருகன்
( ‘சைக்கிள் முனி ‘ – சிறுகதைத் தொகுப்பு – கிழக்கு பதிப்பகம், சென்னை; ஜூன் 2004)
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- சாயம்
- தென்னையும் பனையும்
- வெற்றுக் காகிதங்கள்
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- தனக்கென்று வரும் போது..!
- மலை (நாடகம்)
- பாசமா ? பாசிசமா ?
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- சித்திரவதை
- டயரி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- அஞ்சலைப் பாட்டி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- நிழல் யுத்தம் பற்றி
- தமிழுக்குப் பெருமை
- என் பொழுதுகளில் இதுவும்..
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
- கடிதம் ஜூன் 17,2004
- தெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்
- பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு
- சேதி கேட்டோ..
- ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘
- தன்னம்பிக்கை
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- கடலைக்கொல்லை
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- உறங்கட்டும் காதல்
- நிகழ்வெளியின் காட்சிகள்
- நிழல் பாரங்கள்
- வீடு திரும்புதல்
- ஆயுட் காவலன்
- கவிதைகள்
- தூரம்
- அவர்கள்
- அப்பாவுக்கு…!!!
- இல்லம்
- தீர்மானம்
- தமிழவன் கவிதைகள்-பத்து
- உடன் பிறப்பு…
- குழந்தை மனது
- நம்பிக்கை
- கவிதைகள்
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- மின்மினி பூச்சிகள்
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- நெய்தல் நிலத்துக்காாி!
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)