சமோசா

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

ஆர் சந்திரா


சமோசாவிற்கு மாவு தயாரிக்கும் முறை:

ஒரு கோப்பை மைதா,

ஒரு கோப்பை கோதுமை மாவு

அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா.

உப்பு கால் தேக்கரண்டி.

வெண்ணெய் 2 மேஜைக் கரண்டி

மாவையும் பெக்கிங் சோடாவையும் உப்பையும் ஒன்றாகக் கலந்து சலித்து, இவற்றுடன் உருக்கிய வெண்ணெயை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு தண்ணீர் சிறிது விட்டுப் பிசைந்து வைக்கவும்.

எலுமிச்சம்பழம் அளவிற்கு மாவை எடுத்து சப்பாத்தி அளவிற்கு வட்ட்மாய்ச் செய்து கொள்ளவும்.

அதை இரண்டு அரை வட்டமாக வெட்டவும்.

ஒரு அரைவட்டத்தின் நடுவில் காய்கறி அல்லது மாமிச நிறைப்பானை வைத்து , அரைவட்டத்தின் இரண்டு முனைகளையும் ஒன்று சேர்த்து நீர் தடவி ஒட்டவும்.விட்டுப் போன முனையையும் ஒட்டினால முக்கோண வடிவில் சமோசா வந்து விடும். இதை எண்ணெயில் வறுக்கவும்.

(நிறைப்பான் செய்யும் வழி கீழே கொடுக்கப் பட்டுள்ளது.)

காய்கறி சமோசாவிற்கான நிறைப்பான்

தேவையான பொருட்கள் :

வெங்காயம்

பச்சைமிளகாய்

இஞ்சி சிறிய துண்டு

கேரட்

கரம் மசாலா

மஞ்சள் தூள்

உப்பு

எலுமிச்சை

கடுகு சிறிது

எண்ணெய் இரண்டு தேக்கரண்டி

கொத்துமல்லித் தழை சிறிது

செய்முறை :

1. உருளைக் கிழங்கை தனியாக வேகவைத்துக் கொள்ளவும்

2. பட்டாணி, கேரட்டை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

3. வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

5. இஞ்சியை சீவி சிறு அளவில் வைத்துக் கொள்ளவும்.

6. எண்ணெயைக் காய வைத்து கடுகைத் தாளித்து , பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

7. பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.

8. உருளைக் கிழங்கை தோலை நீக்கி பொடித்துக் கொண்டு , கேரட் , பட்டாணியைச் சேர்த்து வதக்கிய வெங்காயத்துடன் சேர்க்கவும்.

9. மஞ்சள் பொடி, கரம் மசாலா உப்பு சேர்த்துக் கிளறவும்.

10. கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும்

இதை சமோசா நிறைப்பானாகப் பயன் படுத்தலாம்.

மாமிச சோமாசாவிற்கான நிறைப்பான்.

கோழி – அல்லது ஆட்டுக் கறி (அரைத்த மாமிசம்)

இரண்டு பெரிய வெங்காயம் – பொடியாக நறுக்கியது

பூண்டு – ஐந்து பல்

தேங்காய் – துருவியது சிறிது

பொட்டுக்கடலை – இரண்டு மேஜைக் கரண்டி

கசாகசா – ஒரு தேக்கரண்டி

சோம்பு – ஒரு தேக்கரண்டி

பட்டை – ஒரு துண்டு

ஏலக்காய் – நான்கு

கிராம்பு – ஆறு

முந்திரிப் பருப்பு – ஆறு

கொத்துமல்லி தழை – சிறிது

எலுமிச்சை – ஒன்று

மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி

எண்ணெய் – மூன்று மேஜைக் கரண்டி

உப்பு – சுவைக்குத் தக்க

செய்முறை :

1. தேங்காய் , பட்டை, சோம்பு, கசகசா, ஏலக்காய், கிராம்பு, பொட்டுக் கடலை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.

2. இஞ்சி பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

3. ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

4. அதனுடன் அரைத்த மாமிசத்தைப் போட்டு வதக்கவும். அரைத்த இஞ்சி , பூண்டு கலவையை இத்துடன் சேர்க்கவும்.

4. ஒரு கோப்பை நீர் சேர்த்து சிறிது வேக விடவும்.

5. மாமிசம் வெந்தவுடன் , அதனுடன் அரைத்த தேங்காய் மசாலாவையும், மிளகாய்த் தூளையும் சேர்க்கவும். உடன் சுவைக்கு உப்பைச் சேர்த்துக் கொள்ளவும்.

6. பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பையும் சேர்க்கவும். நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

7. இவை வெந்து முடிந்து, சிவந்து வரும்போது, – தண்ணீர் சுண்டிய பக்குவத்தில் – எலுமிச்சை சாறு , சிறிது பிழிந்து கொத்துமல்லி தழையைத் தூவி இறக்கவும்.

இதை மாமிச சமோசாவிற்கு நிறைப்பானாகப் பயன் படுத்தலாம்.

Series Navigation

ஆர் சந்திரா

ஆர் சந்திரா