சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


படிப்பறிவு திட்டமின்றி
வெடிப்புச் சோதனை செய்து
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை!
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார் மேலும் மரிப்பார் மக்கள்!
நாடு நகரம் வீடு வயல் எங்கணும்
மூடின வெங்கதிர் வீச்சுகள்!
பல்லாயிரம் பேர்,
புலம்கடத்தப் பட்டார்,
கட்டாய மாகக்
கதிர்மழைப் பொழிவால்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த
அணுயுகப் பிரளயத்தின் முதல்
அரங்கேற்றம்!

++++++++++++

“உலகில் ஏவப்படும் நிலையில் உந்துகணை பிணைப்புடன் உள்ள 11,000 அணு ஆயுதங்கள் மனித இனத்தைத் தாக்கப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன! அவற்றில் அமெரிக்கா வைத்திருப்பவை: 6390 அணு ஆயுதங்கள்! ரஷ்யாவிடம் உள்ளவை: 3242! பிரிட்டனிடம் இருப்பவை: 200!”

“ஹிரோஷிமாவில் அரை நூற்றாண்டுக்கு முன் முதல் அணு ஆயுதம் போட்டதிலிருந்து 160,000 பேர் மாண்டு போயினர்! வேலும் எதிர்காலத்தில் அதனால் 77,000 பேர் மரணம் அடைவார் என்று ஊகிக்கப்படுகிறது!”

“தி இண்டிபென்டன்ட்” யுத்தமும், பேரழிவுகளும் (The Independent Aug 5, 2005)

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை என்னும் எனது நூலை வாசிப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்: செர்நோபில் விபத்து உலக நாடுகளைப் பாதித்த ஓர் துன்பமய நிகழ்ச்சி! அது விளைவித்த தீங்குகள் இப்போதும் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன. மில்லியன் கணக்கான மாந்தர் இன்னும் கதிர்த்தீண்டிய தளங்களில் வாழ்ந்து வருகிறார். அவர்கள் யாவரும் மற்ற மக்களின் உதவியையும், பரிவையும் பெரிதளவு நாடுகிறார்.”

கிரிகொரி மெத்வெதேவ் [Author The Truth About Chernobyl (July 8, 1990)]

“அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26] வெடித்ததும் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, நாகரீக முன்னேற்றத்தின் பெயரால் அமைக்கப் பட்ட நிறுவகங்களின் தீவிரக் கோர விளவுகளை மனித இனம் இன்னமும் புரியாமலே உள்ளதை நினைவூட்டுகின்றன.”

மிக்கேயில் கார்பசாவ் [Mikhail Gorbachev (Aug 18, 1986)]

“அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் உறுதிலும் மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும். எப்படிப் பாதுகாப்பாக அணுசக்தி நிலையத்தின் விபத்துகளுடன் மாந்தர் வாழ முடியும் என்பதைத் தவிர, செர்நோபில் போன்ற விபத்துகளை எப்படித் தடுக்கலாம் என்பது முக்கியமான கேள்வியாகத் தெரியவில்லை!”

இயற்கை விஞ்ஞானப் பதிப்பு [Nature]

முன்னுரை: 1986 ஏப்ரல் 26 ஆம் நாள் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பேரின்னல்கள் விளைந்ததில் 190 டன் யுரேனிய எரிக்கோல்களின் கதிரியக்கத் துணுக்குகள் காற்றில் மிதந்து உலகெங்கும் படிந்து விட்டன! செர்நோபிலுக்கு வடக்கே இருக்கும் பெலரஸ் நாட்டில் மட்டும் சுமார் 70% கதிரியக்கப் பொழிவுகள் மேவி விட்டன! அவற்றின் தீவிரத்தை ஒப்பிட்டுக் கூறினால், ஹிரோஷிமா அணு ஆயுத வெடிப்புக் கதிர்வீச்சைப் போல் 90 மடங்கு மிகையானது என்று சொல்லலாம். 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விபத்து நேர்ந்தாலும் செர்நோபிலின் கோர விளவுகளைச் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் தவிர்க்க முடியாது விழுங்கங் கொண்டு விம்மி வேதனைப் பட்டு விடிவை நோக்கி விழித்திருக்கிறார்கள்! கதிர்வீச்சு தீண்டப்பட்ட தளங்களில் அவர் அனுதினம் உண்டு, உலவி, உறங்கி வருகிறார்! கதிர்வீச்சு கலந்த நீரைக் குடிக்கிறார்! கதிர்வீச்சு சூழ்ந்த காற்றைச் சுவாசித்து வருகிறார்! கதிர்த்தீண்டிய நிலத்தில் விளைந்த தானிய உணவை உண்டு, பலர் வயிறு வீக்கநோயில் [Gastritis] வாதிக்கப் படுவாகத் தெரிகிறது! குழந்தைகள் புற்று நோய்கள், தோல் தொல்லைகள், இரத்த நோய் [Leukaemia], தலைவலி, தலைச்சுற்று, மூக்கில் இரத்தக் கசிவு ஆகியவற்றில் துயர்ப்படுகிறார்கள். மேலும் கதிரியக்கம் உடம்பின் நோய்த்தடுப்பு ஏற்பாடுகளைத் [Immune Systems] தகர்த்துப் பிற நோய்கள் தாக்குவதற்கு வழி வகுக்கின்றன.

அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு அடுத்த 30 ஆண்டுகளில் நான்கு பெரிய அணுஉலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 1) சோவியத் ரஷ்யாவில் கிஷ்டிம் [Kyshtym] விபத்து (1957), 2) பிரிட்டனில் வின்ட்ஸ்கேல் [Windscale] விபத்து. 3) அமெரிக்காவில் திரிமை தீவு [Three Mile Island] விபத்து 1979. 4) சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் விபத்து [1986]. எல்லாவற்றிலும் செர்நோபில் விபத்தே உலகலாவிய தீங்குகளை விளைவிக்கும் பேரிடர்ப் பெரு விபத்தாகக் காட்சி தருகிறது! அணுமின்சக்தி நிலையம் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிறுவகக் கூடம் என்பது தற்போது நிலைபெற்று விட்டது. ஆயினும் பெரிய விபத்துக்கள் நேராமல் இயக்கி மின்சாரம் அனுப்ப முடியும் என்பது இன்னும் அழுத்தமாக உறுதி அளிக்கப்படும் வரையில் பொது மக்களின் பூரண வரவேற்பையும், அனுமதியையும் அணுமின் நிலையங்கள் பெறமாட்டா! அணுமின் நிலையங்களில் விபத்துக்களை எதிர்பார்க்க முடியாத ஐயப்பாடு, மேலும் மக்களுக்கு அவற்றின் தீங்குகளின் தீவிரத்தை மிகையாக்குகிறது!

செர்நோபில் விபத்தால் விளைந்த உடல்நல சூழ்வெளிப் பாதிப்புகள்

1. செர்நோபில் விபத்தைப் பற்றி அகிலநாட்டு அணுத்துறைப் பேரவை [IAEA] வெளியிட்ட அறிக்கை: “விபத்து நேர்ந்ததற்கு முக்கியக் காரணம், செர்நோபில் அணுமின் உலை இயக்குநர் திட்டமின்றி நெறி முறைகளைப் பின்பற்றாமல் சோதனை செய்ய முற்பட்டதே!” செர்நோபில் அணுமின் நிலைய ஆணையாளர் மற்றும் பிரதம எஞ்சியர்கள் [Director & Chief Engineers] இருவர் புறக்கணிப்புக் குற்றத்துக்கும், மனிதர் மரணமாகக் காரணமானதற்கும் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப் பட்டனர்!

2. செர்நோபில் அணுமின் உலை வெடிப்பு 50 டன் கதிரியக்க யுரேனிய எரிக்கோலின் அணுப்பிளவுத் துணுக்கு முகிலைப் [Plume of Fission Products] பூமிக்குமேல் 3 மைல் உயரத்தில் [4.8 km] மிதக்க விட்டது. வடமேற்குத் திசைநோக்கி முதலில் குப்பெனக் கிளம்பிய அந்த கதிரியக்கப் பொழிவு ஹிரோஷிமாவின் அளவை விட 10 மடங்கு மிகையானதாகக் கருதப்படுகிறது! பின்பு அந்த கதிர்முகில் மத்திய ஐரோப்பவின் தென்கிழக்குப் பகுதிகளில் பயணம் செய்து, ரஷ்ய விஞ்ஞானிகளின் கணிப்புப்படி 30-50 மில்லியன் கியூரி கதிர்வீச்சுத் தூள்களைப் பரப்பியது! அந்த கதிர்முகில் பரவல் அணு உலைக்கு அருகே வாழும் மனித இனத்துக்கும் பல நூறு மைல்களுக்கு அப்பாலிருக்கும் ஐரோப்பிய மாந்தருக்கும், சூழ்வெளி மண்டலத்துக்கும் பேரிடர்த் தீங்குகளை விளைவிக்கும்.

3. செர்நோபில் விபத்தால் சோவியத் ரஷ்யாவுக்குப் பெருத்த நிதியிழப்பு நேர்ந்திருக்கிறது. நிலையத்தைச் சுற்றியுள்ள தளத்துடைப்பு, பாதிக்கப் பட்டோருக்கு உடல்நலச் சீரமைப்புச் செலவுகள், மக்கள் புலப்பெயர்ச்சி, புதுக் குடியேற்றம், விளைச்சல் நிலங்கள் செம்மைப்பாடு போன்ற பணிகளுக்கு 2003 நாணய மதிப்பின்படிச் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப் பட்டது!

4. விபத்து நடந்த சில தினங்களில் 20 மைல் ஆரத்தில் குடியிருந்த 116,000 நபர்கள் நூற்றுக்கணக்கான் இராணுவ பஸ்களில் கடத்தப்பட்டனர்! பிறகு புலப்பெயர்ச்சி செய்யப்பட்டோர் எண்ணிக்கையும் சேர்த்தால் மொத்தம் 300,000 நபருக்கும் மேற்பட்டது! கதிரடி பட்டோர் விபரம்: 20 மைல் ஆரத்தில் வாழ்ந்தோரில் 20% பேர்கள் [24,000] தீவிரக் கதிரடி பெற்றனர். அணு உலைக்கு அருகில் வாழ்ந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முலைப்பால் கூட கொடுக்க முடியவில்லை! காரணம் தாய்மாரின் முலைப்பாலும் கதிர்த்தீண்டல் பட்டிருந்தது!

5. தீயணைப்புப் பணியாளர், அணு உலை இயக்குநர், மற்றும் புற்றுநோயில் மாய்ந்தவர் எண்ணிகை: 65. அணுமின் உலையைச் சுற்றிலும் வாழ்ந்து வந்தோரில் 7000-10,000 பேர் மரித்திருக்கலாம் என்று மதிப்பிட்டு ரஷ்ய விஞ்ஞான ஆணையாளர், விளாடிமித் செர்நௌசங்கோ [Vladmit Chernousenko, Scientific Director] கூறியிருக்கிறார். ஆனால் சோவியத் அதிகாரிகள் கொடுத்த எண்ணிக்கை: 250-350 மட்டுமே.

6. பழைய சோவியத் ரஷ்யாவிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பிறந்த குழந்தைகள் மனமுறிவு நோயுடன் [Mental Retardation] வளர்ந்து வருகிறார். புற்றுநோயில் மாய்வோர் எண்ணிக்கை சுமார் 5,000-25,000 என்று மற்றுமோர் அறிக்கையில் மதிப்பிடப் படுகிறது! அமெரிக்கன் எரிசக்தித் துறையகம் [American Dept of Energy] உலக ரீதியாக 39,000 பேர் செர்நோபில் விபத்தின் கதிர்வீச்சுப் பொழிவுகளால் உண்டாகும் புற்றுநோயில் மரிப்பர் என்று கூறுகிறது! தற்போது யுக்ரேயினில் வாழும் சுமார் 350,000 நபர்களின் உடல்நலம் சீராக உளவப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது!

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Reprt By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

******************

jayabarat@tnt21.com [May 4, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா